மேணாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …… அவுஸ்திரேலியா
வெட்டு கொல்லு வேட்டை ஆடு
கொன்ற விலங்கை சுவைத்து நில்லு
அம்பும் வில்லும் கத்தியும் ரத்தமும்
அங்கு அவர்க்கு நிரந்தர மாகும்
காடே வீடு கறியோ விலங்கு
நாடோ அறியார் நற்செயல் விளங்கார்
ஏடும் அறியார் எழுத்தும் அறியார்
வாழும் காடே வரமாய் நினைப்பார்
வேடர் நினைப்பே வேட்டை ஆகும்
விலங்கை எண்ணியே கனவும் காண்பார்
உடலும் உரமே உளமும் உரமே
பிடித்ததைக் கொல்லுவார் பிடித்ததைத் தின்னுவார்
குடிப்பார் வெறிப்பார் கூத்தும் ஆடுவார்
தத்துவம் அறியார் சமயமும் அறியார்
நித்தமும் ரத்தமும் தசையுமே அறிவார்
அவர்க்குத் தலைவன் நாகன் என்பான்
அவனே அரசன் அவனே அனைத்தும்
வாரிசு இல்லா வாடியே நின்றான்
வடிவுடை முருகனை நாடியே நின்றான்
அவனும் மனைவியும் அனுதினம் வேண்டினர்
முருகனும் இரங்கி முத்தாய் அருளினார்
பிறந்த குழந்தை திண்மையாய் இருந்ததால்
திண்ணன் பெயரென மொழிந்தான் நாகன்
திண்ணன் வளர்ந்தான் நாகன் மகிழ்ந்தான்
வேடர் குலத்து விளக்கென வியந்தான்
தனக்குப் பின்னே தலைவன் வந்தான்
என்றே எண்ணியே இன்பம் எய்தினான்
கன்னி வேட்டைக்கு மைந்தனை அனுப்பினான்
நாணனும் காடனும் துணையாய் சென்றனர்
வேடர் கூட்டமும் கூடவே சென்றது
விலங்குகள் யாவுமே வெருண்டுமே ஓடின
பன்றி ஒன்று ஏய்த்துமே நின்றது
திண்ணனும் நண்பரும் துரத்தியே சென்றனர்
முடிவில் பன்றியை கொன்றான் திண்ணனும்
களைப்பினால் திண்ணன் நீரினைக் கேட்டான்
தாகம் தீர்க்க ஆற்றினை அடைந்தனர்
பொன்முகலி ஆறு தாகம் தீர்த்தது
நண்பனாம் நாணன் மலைபற்றிச் சொன்னான்
சொன்னதும் திண்ணன் துடிப்புடன் எழுந்தான்
திண்ணன் கோவிலை மலையில் கண்டான்
தன்னை மறந்து அங்குமே சென்றான்
கண்டான் அங்கே காளத்தி நாதரை
நின்றான் சிலையாய் அனைத்தும் மறந்தான்
பசியும் தாகமும் பஞ்சாய்ப் பறந்தது
பாரம் குறைந்ததாய் திண்ணன் உணர்ந்தான்
நாணன் அழைத்தான் மறுத்தான் திண்ணன்
காளத்தி நாதரின் காந்தத்தால் கவர்ந்தான்
தனியே இருக்கிறார் பசிக்கும் என்றான்
பன்றியின் இறைச்சி நினைவில் வந்தது
கடித்து நல்லதை எடுத்து வந்தான்
படைத்து வைத்து புசித்திடச் சொன்னான்
தந்தையை மறந்தான் தாயை மறந்தான்
சொந்தம் மறந்தான் சுகத்தை மறந்தான்
காளத்தி நாதரைக் கட்டியே கொண்டான்
காளத்தி நாதரே கண்ணில் தெரிந்தார்
வாயினால் நீரினை மொண்டுமே சென்றான்
மொண்ட நீரினை அபிசேகம் செய்தான்
இறைச்சியைப் படைத்தான் இலைகளை வைத்தான்
தலைக்கனம் இன்றியே அனைத்தும் செய்தான்
கோயிற் பூசகர் கண்டார் இறைச்சியை
பதறினார் பயந்தார் அபசாரம் என்றார்
காளத்தி நாதரை வேண்டியே நின்றார்
கலங்கிய மனத்துடன் சுத்தம் செய்தார்
பூசகர் கனவில் இறைவன் தோன்றினார்
காலையில் அதிசயம் காண்பாய் என்றார்
மறைவாய் இருந்து பார்ப்பாய் என்று
மறைந்தார் இறைவன் கனவில் இருந்து
காலையில் பூசகர் வந்தார் மலைக்கு
மறைவாய் இருந்து பார்த்துமே நின்றார்
வேடன் திண்ணன் வந்தான் அங்கு
இரத்தம் வழிந்திட கண்ணைக் கண்டான்
பதறினான் துடித்தான் பற்களைக் கடித்தான்
கண்ணுக்கு மருந்து கண்ணென எண்ணினான்
ஈட்டியை எடுத்தான் தன்கண்ணைப் பிடிங்கினான்
பிடிங்கிய கண்ணை அப்பியே நின்றான்
அப்பிய உடனே ஆனந்தம் அடைந்தான்
ஆனந்தம் உடனே அடங்கியே போனது
அடுத்த கண்ணிலும் இரத்தம் வடிந்தது
திண்ணம் மனமே துள்ளிக் குதித்தது
கண்டேன் மருந்தை என்றே சொல்லி
அடுத்த கண்ணையும் பிடுங்க முனைந்தான்
நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப
அசரீரீ ஒலித்தது பூசகர் அதிர்ந்தார்
கண்ணைப் பிடிங்கி கண்ணப்பன் ஆகினான்
நடக்குமா என்று யாவரும் விழிக்கிறோம்
அன்பின் உயர்வாய் அவனும் நின்றான்
ஆண்டவன் அருளுக்கு ஆளாகி நின்றான்
எப்படி இருந்தவன் எப்படி மாறினான்
இரக்கம் அறியான் இரங்கியே நின்றான்
உருக்கம் அறியான் உருகியே நின்றான்
அன்பின் உருவாய் கண்ணப்பன் ஆகினான்
வேடன் முரடன் மென்மை ஆகினான்
மேதினி வியக்கும் செயலும் ஆற்றினான்
கண்ணப்பன் செயலை விளக்கிடல் இயலா
கடவுளின் அன்பில் கலந்தான் அவனும்
கண்ணப்பன் அன்பை கணக்கிடல் அரிது
கண்ணப்பன் நிலையோ உன்னத ஞானம்
தன்னை மறந்தான் தன்நாமம் இழந்தான்
தலைவனாம் இறைவனை மனமதில் கொண்டான்
No comments:
Post a Comment