இலங்கைச் செய்திகள்

'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்திற்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது

இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்

 “தையிட்டி விகாரை விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திசைதிருப்பியதும், ஏனையவர்கள் அமைதியாக இருந்ததும் வேதனையளிக்கிறது; கஜேந்திரகுமாருக்கு பக்கபலமாக கதைத்திருக்கவேண்டும்”

டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகம் : Govpay திட்டம் 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்

மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 



'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்திற்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது 

Published By: Vishnu

04 Feb, 2025 | 02:16 AM
image

ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் 300 மில்லியன் ஜப்பான் யென் நிதி உதவியை வழங்குவதற்கான ஒரு பரிமாற்றக் ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டது.

இது “கிளீன் ஸ்ரீலங்கா”(Clean Sri Lanka) திட்டத்திற்கான ஜப்பானின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த மானிய உதவிக்கான கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில்தொழில் அமைச்சர்  மற்றும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் ஜப்பானின் வெளியுறவுக்கான நாடாளுமன்ற துணை அமைச்சர் திருமதி அகிகோ இகுயினா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தக் குறிப்புகளில் இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகியோ இசோமாட்டா மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் கே. எம். எம். சிறிவர்தன ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த மானிய உதவியின் கீழ், ஜப்பானிய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் 28 உயர்தர குப்பை அகற்றும் இயந்திரங்கள், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய திடக்கழிவு மேலாண்மை ஆதரவு மையம் (NSWMSC) மூலம் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்படும்.

இந்த இடங்களில் கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்து திறனை மேம்படுத்துவதையும், சுகாதாரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான கழிவு மேலாண்மையை உறுதி செய்வதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கழிவுகள் குவிவதையும், பொது சுகாதாரம் மற்றும் காற்றின் தரத்தில் அதன் தாக்கத்தையும் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஜப்பான், மேல் மாகாண திடக்கழிவு மேலாண்மை பெருந்திட்ட உருவாக்கம் உட்பட கழிவுகளை அகற்றும் உள்ட்கட்டமைப்பை மேம்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

இலங்கையின் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஜப்பானின் நீண்டகால அர்ப்பணிப்பை இந்த சமீபத்திய உதவி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.   நன்றி வீரகேசரி 







இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார் 


Published By: Digital Desk 3

03 Feb, 2025 | 12:36 PM
image

இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான தேசமான்ய கந்தையா பாலேந்திரா (கென்) தனது 85ஆவது வயதில் காலமானார்.

1940 ஆம் ஆண்டு பிறந்த பாலேந்திரா இலங்கையிலும் அதன் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 

மிகப்பெரிய கூட்டு நிறுவனமான John Keells Holdings Ltd இன் முதல் இலங்கைத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

அவர் பிரண்டிக்ஸ் லங்கா லிமிடெட் மற்றும் கொமன்வெல்த் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 








 “தையிட்டி விகாரை விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திசைதிருப்பியதும், ஏனையவர்கள் அமைதியாக இருந்ததும் வேதனையளிக்கிறது; கஜேந்திரகுமாருக்கு பக்கபலமாக கதைத்திருக்கவேண்டும்” 


Published By: Rajeeban

03 Feb, 2025 | 11:26 AM
image

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தலைமையில் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி விகாரை விவகாரம் குறித்து ஜனாதிபதி பதிலளிக்கவிருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் இந்த விடயத்தை திசைதிருப்பியதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் வாய்திறக்காமல் விட்டதும் மிகப் பெரிய பிழையாகும் என தையிட்டி காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த பிரச்சினையை எழுப்பியபோது கட்டாயமாக அவருக்கு பக்கபலமாக கதைத்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

போராட்டம் கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு மாதமும் நடந்து வருகின்றது. நானும் அதில் இணைந்துகொண்டுள்ளேன்.

இதுவரைக்கும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

பாராளுமன்ற தேர்தலிற்கு முன்னர் எமக்கான ஒரு சாதகமான சமிக்ஞை கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம் - கிடைக்கவில்லை.

இம்முறை ஜனாதிபதி  அபிவிருத்தி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வரும்போது ஏதாவது சாதகமான சமிக்ஞை வெளியாகும் என எதிர்பார்த்திருந்தோம்.

இது குறித்து நாங்கள் பல தரப்புடனும் பேசியிருந்தோம்.

ஆளுநரிடம் முறையிட்டிருந்தோம்,ஆளுநர் எங்களை சந்தித்து பேசியவேளை சாதகமான விதத்திலேயே பதில் சொல்லியிருந்தார்.தீர்க்கப்படவேண்டிய விடயம் என தெரிவித்திருந்தார்.

போனமுறை கூட்டத்தில் கூட திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எங்களின் பிரதிநிதியாக எங்களின் பிரச்சினையை அந்த இடத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

அதேபோல சந்திரசேகரன் கூட இது தவறான கட்டிடம் அகற்றப்படவேண்டும் என தெரிவித்திருந்தார்.

அந்த அடிப்படையில் இந்தமுறை கூட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்திருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த பிரச்சினையை ஜனாதிபதியை நோக்கி மிகவும் தாழ்மையான முறையில் முன்வைத்தார்.

அதனை ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாகவே நாங்கள் உன்னிப்பாக அவதானித்;துக்கொண்டிருந்தோம்.அந்த சந்திப்பில் பிரதேச செயலர் -ஆளுநர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்த பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டிய  மிக முக்கியமான நபரான ஜனாதிபதியிருந்தார், எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவதளபதிகள் என அனைவரும் அங்கு கூடியிருந்தனர்

அந்த இடத்தில் ஜனாதிபதி விரும்பியோ விரும்பாமலோ ஒரு தீர்வை அல்லது பதிலைமுன்வைக்கவேண்டிய இக்கட்டான நிலையை நெருங்கிக்கொண்டிருந்தபோது,அதில் திடீரென குறுக்கே புகுந்த இராமநாதன் அர்ச்சுனா,இந்த பிரச்சினையை நஷ்டஈடு வழங்கி தீர்த்துக்கொள்ளலாம் ,இவர்களின் அரசியல் செல்லுபடியாகாது என தெரிவித்தமையானது,மிகுந்த மனவேதனையை தருகின்றது.

மக்களின் பிரதிநிதியாகிய நீங்கள் மக்களின் பிரச்சினையை ஒரு பொதுவெளியில் கதைக்கின்றீர்கள் என்றால்,பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பாடியிருக்கவேண்டும், கதைத்திருக்கவேண்டும்.

எம்முடன் அவர் எந்த வித தொடர்பையும் பேணவில்லை , பாதிக்கப்பட்ட மக்களுடன்  எந்த தொடர்பையும் பேணவில்லை, அவர்களை தொடர்புகொள்ளவில்லை, மேலும் ஜனாதிபதி கருத்துகூறமுற்பட்டவேளை அதில் குறுக்கிட்டு திட்டடமிட்டு திசைதிருப்பியாகவே நான் கருதுகின்றேன்.

அந்த இடத்தில் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீதும் மிகுந்த விரக்தி ஏற்படுகின்றது ஏனென்றால்  நாங்கள் தனித்தனியாக எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கின்றோம் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்திருக்கின்றோம் இராணுவ அதிகாரிகளையும் சந்தித்திருக்கின்றோம்.

அனைவரும் எங்களை தனித்தனியாக சந்திக்கும்போது இது உங்களிற்கு நடந்த மிகப்பெரிய அநீதி என தெரிவித்தார்கள்,பௌத்த மதகுருமார்களையும் சந்தித்திருக்கின்றோம் அவர்களும் இது உங்களிற்கு நடந்த மிகப்பெரிய அநீதி என தெரிவித்துள்ளார்கள்.பௌத்த மதத்தை முறையாக பின்பற்றும் எவரும் இந்த அநீதியை முன்னெடுக்க முடியாது, இது தீர்க்கப்படவேண்டிய விடயம்  ,நாங்கள் ஜனாதிபதியிடம் இது குறித்து அழுத்தங்களை பிரயோகிப்போம் என தனித்தனியாக  தெரிவித்திருந்தார்கள்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட இது தீர்க்கப்படவேண்டிய விடயமே எனகூறியவர்கள்,ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த பிரச்சினையை எழுப்பியபோது கட்டாயமாக அவருக்கு பக்கபலமாக கதைத்திருக்கவேண்டும்.

அர்ச்சுனா இராமநாதன் குறுக்கிட்டபோது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களிற்கான தீர்வு அவசியம் என்ற விடயத்தை ஒருமித்த குரலாக முன்வைத்திருந்தால்,ஜனாதிபதியின் வாயிலிருந்து  உறுதிமொழியோ தீர்வுதிட்டமோ வெளியாகியிருக்கும் நாங்கள் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கலாம்.

ஆளுநரும் ஜனாதிபதிக்கு சந்தர்ப்பமொன்றை கொடுத்திருக்கலாம்,இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்க்கப்போகின்றீர்கள் என்ற கேள்வியை தானும் எழுப்பியிருக்கலாம்.

மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் சார்பாக தான் வாதிடவேண்டும்,மக்களின் உண்மை பிரச்சினையை எழுப்பியிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அரசபக்கம் நின்று செயலாற்றுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது.

அர்ச்சுனா இராமநாதன் இந்த விடயத்தை திசைதிருப்பியதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் வாய்திறக்காமல் விட்டதும் மிகப்பெரிய பிழையாகும்.

இந்த விடயத்தை நீங்கள் ஒரு கட்சி பிரச்சினையாக பார்க்ககூடாது. அரசியல்வாதியென்பவர் மக்களிற்கானவர்.மக்களுக்காக அரசியல்வாதியொருவர் அந்த இடத்தில் வந்து நிற்க்கும்போது அதனை  அரசியல் என தெரிவிப்பதை நான் எந்த இடத்திலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.   நன்றி வீரகேசரி 







டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகம் : Govpay திட்டம் 7 ஆம் திகதி முதல் ஆரம்பம் 

03 Feb, 2025 | 03:34 PM
image

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 







மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 

05 Feb, 2025 | 11:16 AM
image

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை (5) காலை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இணைந்துகொண்டார். 


நன்றி வீரகேசரி 






No comments: