உலகச் செய்திகள்

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?

பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் - மீண்டும் டிரம்ப்

அமெரிக்காவில் வீடுகள் மீது விழுந்து நொருங்கிய விமானம் !

கொங்கோவின் கிழக்கு பகுதி நகர மோதல்கள் - 775 பேர் பலி


காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை

Published By: Rajeeban

07 Feb, 2025 | 02:08 PM
image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.
காசாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து கருத்துதெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் இனச்சுத்திகரிப்பு குறித்து எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை பயன்படுத்துவது என்பது பாலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் மனிதர்களாக வாழ்வதற்கான உரிமை பற்றியது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்த உரிமைகள் சாத்தியமாவது எட்டாத தூரத்தில் கைநழுவிகொண்டிருப்பதை பார்க்க முடிவதாக தெரிவித்துள்ளார்.
ஒரு இனக்குழுவை  அச்சம்தரும்வகையில் ,திட்டமிட்ட முறையில் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துவதை பூதாகரமானவர்களாக சித்தரிப்பதை நாங்கள் பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காசாவில் போரை ஆரம்பித்துவைத்த ஹமாசின் தாக்குதலை எதுவும் நியாயப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பழிவாங்கும் விதத்தில் இஸ்ரேல் காசாவை இடைவிடாமல் தாக்கியபோது ஏற்பட்டுள்ள அழிவையும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பயங்கரங்களையும் நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டிரம்பின் யோசனை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் மக்களை பலவந்தமாக வெளியேற்றுவது இனச்சுத்திகரிப்பிற்கு ஒப்பானது என குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 




யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?

Published By: Rajeeban

05 Feb, 2025 | 09:43 AM
image

சர்வதேச அளவில் யுஎஸ்எயிட் அமைப்பு நேரடியாக பணிக்கு அமர்த்திய அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் யுஎஸ்எயிட்டிற்காக பணியாற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை மீள அழைக்கப்போவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏழாம் திகதி முதல் யுஎஸ்எயிட் பணிக்கு அமர்த்திய அனைவரும் நிர்வாகவிடுப்பில் வைக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு யுஎஸ்எயிட்டின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

நெருக்கடியா சூழலில் செயற்படுவதற்கு அவசியமானவர்கள்,முக்கிய தலைவர்கள்,சிறப்பாக நியமிக்கப்பட்ட திட்டங்களிற்கு பொறுப்பானவர்களிற்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக யுஎஸ்எயிட்டின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

யுஎஸ்எயிட்டிற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர் இவர்களில் பெருமளவானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.

உலகின் 60நாடுகளில் யுஎஸ்எயிட்டின் அலுவலகங்கள் உள்ளன.

வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்கர்களிற்கான திட்டமொன்றை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ள இணையதளம், அவர்கள் அமெரிக்காவிற்கு மீள பயணித்தமைக்கான செலவீனங்களை30 நாட்களிற்குள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிர்ச்சி நடவடிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான பணியாளர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு உதவி திட்டங்களிற்கு பொறுப்பான யுஎஸ்எயிட் திங்கட்கிழமை முதல் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது.

யுஎஸ்எயிட்டின் பணியாளர்களிற்கு அலுவலகத்தில் நுழைவதற்கும் கணிணிகளை பயன்படுத்துவதற்குமான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.யுஎஸ்எயிட்டின் செயற்பாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதை தொடர்ந்து யுஎஸ்எயிட்டின் சிரேஸ்ட ஊழியர்கள் பலர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.

யுஎஸ்எயி;ட்டின் இயக்குநர் தானே என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிடடின் செயற்பாடுகள் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைக்கு ஏற்ற விதத்தில் அமைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிட் வரலாற்றுரீதியாக அமெரிக்க காங்கிரஸிற்கும் வெள்ளை மாளிகைக்கும் பதிலளிக்காத ஒன்று என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அது ஒரு அமைப்பாகயிருந்தாலும் அது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்தே உத்தரவுகளை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.ஆனால் யுஎஸ்எயிட் அதனை புறக்கணித்து தொண்டு என்பது அமெரிக்காவின் நலன்களில் இருந்து வேறுபட்டதாகயிருக்கவேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிட் வழங்குவது அமெரிக்க மக்களின் வரிப்பணத்தையே நாங்கள் ஒவ்வொரு டொலருக்கும் பதிலளிக்கவேண்டும் ஒவ்வொரு டொலரும் எங்கள் தேசிய நலனை அடிப்படையாக கொண்டது என்ற உத்தரவாதத்தை மக்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 




பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் - மீண்டும் டிரம்ப்

Published By: Rajeeban

03 Feb, 2025 | 11:54 AM
image

பனாமாகால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி மிகப்பெரியதாக ஏதாவது நிகழும் எனவும் தெரிவித்துள்ளார்.

பனாமா கால்வாயில் சீனாவின் பிரசன்னத்தினால் அமெரிக்காவிற்கும் பனாமாவிற்கும் இடையில் பதற்றநிலை அதிகரித்துவருகின்ற சூழ்நிலையிலேயே டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் கையளிக்கப்படாத பனாமா கால்வாயை சீனா நிர்வகிக்கின்றது என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாய் முட்டாள்தனமாக பனாமாவிடம் கையளிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

பனாமா இது குறித்த உடன்படிக்iயை மீறியுள்ளது நாங்கள் பனாமா கால்வாயை மீளபெறப்போகின்றோம் அல்லது பெரிதாக ஏதாவது நடக்கப்போகின்றது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





அமெரிக்காவில் வீடுகள் மீது விழுந்து நொருங்கிய விமானம் !

Published By: Digital Desk 2

01 Feb, 2025 | 11:26 AM
image

ஒரு குழந்தை உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய அம்பியூலன்ஸ் விமானமொன்று அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு மேல் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது, விமானம் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த பல வீடுகளில் தீ பற்றியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேத விபரங்கள் பற்றி இதுவரை செய்திகள் வெளியாவில்லை.

நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை நோயாளி மற்றும் அவரது தாய், விமானி உள்ளிட்ட 3 மருத்துவ பணியாளர்கள் குறித்த விமானத்தில் பயணித்துள்ளதாக ஏர் அம்பியூலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் அம்பியூலன்ஸ் தெரிவித்துள்ளது.

நன்றி வீரகேசரி 





கொங்கோவின் கிழக்கு பகுதி நகர மோதல்கள் - 775 பேர் பலி

Published By: Rajeeban

02 Feb, 2025 | 11:11 AM
image

கொங்கோவின் கிழக்கில் உள்ள கோமா நகரத்தில் ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இடம்பெற்ற மோதல் காரணமாக 775 பேர் உயிரிழந்துள்ளனர் என கொங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நகரம் தற்போது கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ளது.

எனினும் ஏனைய பகுதிகளை நோக்கி கிளர்ச்சியாளர்கள் நகர்வதை கொங்கோ இராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது சில கிராமங்களை கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்டுள்ளது  கொங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோமா நகரின் பிரேத அறைகள் மருத்துவமனைகளில் 773 உடல்கள் உள்ளன ,2800 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர்  என கொங்கோ அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

உயிரிழப்புகள் அதிகமாகயிருக்கலாம் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

கிளர்ச்சியாளர்கள் கோமா நகரத்தின் வீதிகளை சுத்தம் செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்,இதன்காரணமாக உயிரிழப்புகள் குறித்த இந்த எண்ணிக்கை  தற்காலிகமானது என தெரிவித்துள்ள கொங்கோ அரசாங்கத்தின் பேச்சாளர் பாரிய மனித புதைகுழிகள் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை குடிநீர் உட்பட அடிப்படை சேவைகளை வழங்குவதாக கிளர்ச்சியாளர்கள் உறுதியளித்துள்ளதை தொடர்ந்து கோமா நகரமக்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு திரும்பியவண்ணமுள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளை சுத்தம் செய்கின்றனர்.

நான் களைப்படைந்துவிட்டேன்  ,ஒவ்வொரு பக்கத்திலும் யாராவது ஒருவர் உறவினை இழந்துள்ளார் என 25 வயது ஜீன் மார்கஸ் தெரிவித்துள்ளார். இவரும் வன்முறை காரணமாக உறவுகளை இழந்துள்ளார்.

கொங்கோவின் எம் 23 கிளர்ச்சிகுழுவிற்கு  டுட்சி இனக்குழு தலைமைதாங்குகின்றது  அவர்களிற்கு ருவாண்டா ஆதரவளிக்கின்றது.

30வருடங்களிற்கு முன்னர் ருவாண்டாவில் இனப்படுகொலை இடம்பெற்ற காலம் முதல் கொங்கோ இந்த  மோதல்களில் சிக்குண்டுள்ளது.

30 வருடங்களிற்கு முன்னர் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலை உலகை உலுக்கியமை குறிப்பிடத்தக்கது. ஹ_ட்டு தீவிரவாதிகள் டுட்சி இனத்தவர்களை இனப்படுகொலை செய்தனர். இதன் பின்னர் ஹ_ட்டு ஆட்சியாளர்கள் டுட்சிக்கள் தலைமையிலான படையினரால் பதவி கவிழ்க்கப்பட்டனர்.

 இனப்படுகொலையில் ஈடுபட்ட சிலர் இன்னமும் கொங்கோவில் உள்ளனர் என ருவாண்டா குற்றம்சாட்டுகின்றது.

அவர்கள் கொங்கோ அரசபடைகளுடன் இணைந்து ஆயுதகுழுக்களை உருவாக்கியுள்ளனர்  என தெரிவிக்கும் ருவாண்டா கொங்கோவில் உள்ள டுட்சிஇனத்தவர்களிற்கும் ருவாண்டாவிற்கும் அவர்களால் ஆபத்து எனவும் தெரிவிக்கின்றது.

கொங்கோ இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன் ருவாண்டா ஆயுதக்குழுக்களை பயன்படுத்தி கனியவளங்களை கொள்ளையடிக்கின்றது என  குற்றம்சாட்டுகின்றது.   நன்றி வீரகேசரி 





No comments: