'அசோகனின் வைத்தியசாலை' என்ற நாவல் மூலமே நொயல் நடேசன் என்கிற படைப்பாளர் எனக்கு அறிமுகமாகிறார். ஒஸ்ரேலியா மெல்போனில் இயங்கும் ஒரு மிருக வைத்தியசாலையை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை அது. ஆசிரியரும் ஒரு மிருக வைத்தியர் என்பதால் அவரால் சிறப்பாக எழுத முடிந்துள்ளது. உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றில் மேம்பட்டு நின்ற அந்நாவல் என்னைக் கவர்ந்திருந்தது. ஆகையால் மிகுந்த எதிர்பார்ப்போடு அவரின் 'கானல் தேசம்' நாவலைப் படித்த போது ஏமாற்றமே எஞ்சியது. உருவத்தில் நன்றாக இருக்கும் இந்நாவல் உள்ளடக்கத்தில் மிகவும் பலவீனமாக உள்ளது. ஆசிரியர் தனது சுய அரசியல் நிலைப்பாட்டின் மீது அடையாளப்பட்டதன் விளைவாக பிரதியானது விடுதலைப்புலிகள் மீதான காழ்ப்பாக வெளிப்பட்டுள்ளது.
01. கதைச்சுருக்கம்
இந்தியா ராஜஸ்தானிலுள்ள ஜெய்சல்மீர் கோட்டைக்கு முன்னால் கதை ஆரம்பிக்கிறது. அசோகன் ஒஸ்ரேலியாவிலிருந்து உல்லாசப் பயணியாக அங்கு வந்திருக்கிறான். ஜெனி என்றழைக்கப்படும் ஜெனிபர் என்ற ஜிப்சிப் பெண்ணை அங்கு சந்திக்கிறான். காமலீலைகளில் இருவரும் ஈடுபடுகிறார்கள். மறுநாள் அசோகன் சென்னை செல்கிறான் . பின்னோக்கு உத்தியில் அவனது சிறுபிராயம் கதையில் வருகிறது. யாழ் கொக்குவிலில் பிறந்தவன் 1987ல் அமைதி காக்கும் படையினரால் பெற்றோர்கள் கொல்லப்பட, சிறுவனான அசோகன் அம்மாச்சியுடன் வாழ்ந்து வந்து, 1995இல் வலிகாம இடப்பெயர்வின் போது சாவகச்சேரிக்கு வருகிறான். அங்கு அம்மாச்சி சாவடைய, பெரிய தந்தை தாயின் அரவணைப்பில் வன்னி வந்து, வவுனியா வருகிறான். பெரிய தந்தையின் மகள் கார்த்திகா தங்கைக்குரிய பாசத்தோடு இருக்கிறாள். அவன் கல்வியில் மிகவும் திறமைசாலியாக விளங்குகிறான். அதனை அடையாளங்கண்ட அருட்தந்தை அகஸ்ரின் அவனை வளப்படுத்திவிடுவதாகக் கூறி பெரியதந்தையிடம் (சதாசிவம்) அனுமதி பெற்று மலேசியாவிலிருக்கும் சிற்றம்பலத்திடம் அனுப்பி வைக்கிறார். அந்த சிற்றம்பலம் அவனை ஒஸ்ரேலியாவிலிருக்கும் டொக்ரர் ஒருவரிடம் அனுப்பி வைக்கிறார்.
அசோகன்
அங்கு கற்றுத்தேறி வங்கி ஒன்றில் பணி புரிகிறான். தற்போது
சிற்றம்பலத்தின் பணிப்பின் பேரில் சென்னைக்கு வந்திருக்கிறான். தென்கிழக்கு ஆசியாவில் ஆயுதக்கடத்தலில் முக்கிய புள்ளியான சிற்றம்பலத்தை ஒஸ்ரேலிய உளவு நிறுவனம் ஒன்று
கண்காணித்து விருகின்றது. அவர் மெல்போனில் இருக்கும்
அசோகனோடு தொடர்பில் இருப்பதனால் இவனும் கண்காணிப்பு வளையத்துக்குள் வருகிறான். இந்தியா செல்லும் அசோகனைக் கண்காணிக்க ஜெனியை அனுப்புகிறது அந்த உளவு நிறுவனம்.
அவளே அவனை ராஜஸ்தானில் உறவாடி
மயக்குகிறாள். அசோகன் சென்னையில் சாந்தன் என்ற விடுதலைப் புலிப்
பொறுப்பாளனை சந்திக்க வைக்கப்படுகிறான். புலிகளின் செயற்பாடுகளில் அவன் இழுத்துவரப்படு கிறான்.
அருட்தந்தை அகஸ்ரின், சிற்றம்பலம், டொக்ரர் என அனைவரும் புலிகளின்
ஆள்கள் எனவும் திட்டமிட்டே அவனைப் புலிகளுக்காக வளர்க்கப் பட்டதாகக் காட்டப்படுகிறது. அவனுக்கோ புலி களோடு இயங்குவதில்
துளியும் விருப்பமில்லை.
'தமிழர் ஒருங்கிணைப்புக்குழு' என்ற புலிகளின் கிளை
நிறுவனம் ஒன்று ஒஸ்ரேலியாவில் இயங்கி வருகின்றது. அந்நிறுவன உறுப்பினர்கள் ஊழல் புரிவ தாகவும்,
அவர்களைக் கண்காணித்து தகவல் வழங்கும் பொறுப்பை அசோகனிடம் சாந்தன் ஒப்படைக்கிறான். வேறு வழியின்றி அசோகன்
உடன்படுகிறான். கதையானது நோர்வே மத்தியஸ்த சமாதான காலத்தில் நிகழ்கிறது. அதேவேளை கார்த்திகா இயக்கத்திற்கு சென்று விடுகிறாள். அசோகனை உளவு பார்க்க வந்த
ஜெனிக்கு அவன் மீது உண்மையான
காதல் ஏற்படு கிறது. புதிய பறவை என்ற திரைப்படத்தில்
வருவது போல் 2004 இல் சுனாமி ஏற்படுகிறது.
வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒஸ்ரேலியாவில் நிதி சேகரிக்கப்படுகின்றது. அது புலிகளுக்கே
செல்கிறது. மக்களுக்கு உதவும் சாக்கில் அசோகன் வன்னிக்கு அழைக்கப்படுகிறான். அங்கு சாந்தனைச் சந்திக்கிறான். கார்த்திகாவையும் சந்தித்து அவளோடு ஊடாடுகிறான்.
இராணுவ
அதிகாரியான கேணல் மஹிந்த தயாரத்ன இராணுவத்திலிருந்து விலகி, புலனாய்வாளனாக மாறி, விடுதலைப் புலிகளுக்கான ஆயுத விநியோகத்தைக் கட்டுப்படுத்த
கான்பரா வருகிறான். அங்கு ஜெனியைச் சந்திக்கிறான். அமெரிக்கா ஒஸ் ரேலியா போன்றவற்றின்
ஆதரவோடு விடுதலைப்புலிகளின் வலையமைப்பு முடக்கப்படுகின்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் கைது செய்யப்படுகின்றனர். சிற்றம்பலமும் மலேசியாவில்
கைது செய்யப் படுகின்றார். சாந்தனும் கார்த்திகாவும் வன்னியில் காதல் புரிகின்றனர். கார்த்திகா கர்ப்பமாகிறாள். போர் முடிந்த பிறகு
அவளை செட்டிக்குளம் நலன்புரி நிலையத்திலிருந்து ஜெனி மீட்டெடுக்கிறாள். சாந்தன் இராணுவ
புலனாய்வாளரோடு இணைந்து செயற்படுகிறான். அசோகனும் ஜெனியும் சேர்வதோடு கதை முடிகிறது.
02. நாவலிலுள்ளள
பாத்திரப் படைப்புகள்.
அசோகன்,
ஜெனிபர், சாந்தன், கார்த்திகா என்ற நான்கு பாத்திரங்கள்
பிரதானமானவை. செல்வி, சதா சிவம், மஹிந்த
தயாரத்ன போன்ற பாத்திரங்கள் நூலின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தாலும் அவை கதைக்கு அத்தனை
விரிவாகத் தேவையற்றவை. புலிகளை இழிவுபடுத்த மாத்திரமே இவை பயன்பட்ட தோடு,
கதைக்கு வெளியே துரத்தியபடியும் தெரிகின்றன.
1. அசோகன்
பெற்றோரை
இழந்து நிற்கும் அசோகன் கல்வியில் சிறந்து விளங்குகிறான். சிறந்த வாழ்வு பெற்றுத் தருவதாகக் கூறி அருட்தந்தை அகஸ்ரின்
(புலிகளின் பிரதிநிதி) அவனை ஏமாற்றி ஒஸ்ரேலியா
அனுப்பி வைக்கிறார். பிறகு புலிகள் சார்பாகச் செயற்படும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறான். இது நிகழச் சாத்திய
மில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில், முதலில் விசுவாசம்| பின்னர் திறமை என்ற தத்துவத்தில் இயங்குவார்கள்.
கதையில் அசோகனின் விசுவாசமற்ற திறமையை உபயோகிப்பதாகக் காட்டுவது முரண்நகை. மேலும் இயக்கத்தின் மீது அதிக விசுவாசம்
கொண்டவர்களையே முக்கிய வேலைக்காக தூரத்திற்கு அனுப்புவர். கதையில் அசோகனை வைத்து தங்களுடைய ஆள்களையே உளவு பார்ப்பது யதார்த்தமல்ல.
ஒரு போதும் நடக்காது!
02. சாந்தன்
சாந்தன்
இந்தியாவில் அசோகனைச் சந்திக்கும் போது, தலைவரின் உள்வட்டப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர் (பக் 65) எனக் கூறுப்படுகிறது. தலைவரின்
உள்வட்ட பாதுகாப்புப் பிரிவில் இருப்பவர் வெளியில் அனுப்பப்படுவதில்லை. பின்னர் அரசியல் துறையிலும், புலனாய்வுத்துறையிலும் இயங்குவதாகக் காட்டப்படுகிறான். சாந்தன்
என்ற பாத்திரம் நாவல் பூராகவும் தளம்பல் நிலையிலேயே இருக்கிறது. உரிய முறையில் வரையறை
செய்யப்படவில்லை.
03. மஹிந்த தயாரத்ன
மஹிந்த
தயாரத்ன ஆரம்பத்தில் சிப்பாயாகச் சேர்ந்து வடகிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் போர்
புரிந்தான் ஃஃ (பக் 215). பிறகு
35 வது வயதில் கேணலாக பதவி உயர்வு பெற்று
இராணுவத்திலிருந்து விலகி, புலனாய்வுப் பிரிவிற்கு வருகிறான். கேணல் என்பது Non-Commissioned officer) வரிசையில்
வரும்| அது உயர் பதவி.
சிப்பாயாக இணைபவரால் இந்நிலையை ஒரு போதும் எய்த இயலாது. ஒரு
சிப்பாயால் அதி உச்சமாக Sergent major ஆக மட்டுமே
வர இயலும். நாவலில் துணைப்பாத்திரமாக வரும் மஹிந்த தயாரத்ன என்ற பாத்திரம் நிராகரிக்கத்தக்கது.
நாவலில் ஜெனிபர் பாத்திரம் சிறப்பாக உள்ளது. அது தவிர்ந்த ஏனைய
முக்கிய பாத்திரங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. ஆசிரியர் தனக்குப் பிடித்தமான கதையை எழுதுவதன் பொருட்டு கதா மாந்தர்களை வழிநடத்தியுள்ளார்.
பெரும்பாலான பாத்திரப் படைப்புகளில் ஆசிரியரே வெளிப்பட்டுள்ளார்.
4. சிவப்பு
டயறி புலிகளின் மீதான காழ்ப்பு
இது
17ம் அத்தியாயம். விடுதலைப் புலிகளைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்
திற்காகவே இவ் அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
அத்தியாயம் 17 முதல் 20 வரை (பக் 261 முதல்
பக் 320 வரை) நீண்டு செல்கிறது.
இவ்விடத்தில் கதை நகராது தேங்கியுள்ளது:நாவலில் துருத்தியபடி தெரிகிறது.
அசோகனின்
பெரிய தந்தை சதாசிவம் ஒரு கம்யூனிஸ்ட்// புலிகளை
இராணுவ ரீதியான ஒரு பாசிஸ்ட் அமைப்பு//.
அதனை மனித மலத்தைப் போல்
அருவருப்புடன் நோக்கும் அவரால்... ஃஃ (பக் 95) இதுவே
அவரின் நிலைப்பாடு. அவரால் எழுதப்பட்டதே இந்தச் சிவப்பு டயறி. இதில் வெளிப்படையாகத் தெரியும் சில முரண்களை மாத்திரம்
கவனிக்கலாம். ஏனெனில் அவற்றிற்குச் சாட்சி உண்டு. ஏனையவற்றில் 'இது நாவல் தானே'
எனக் கூறித் தப்பித்து விடும் வாய்ப்பு உண்டு அல்லவா.
வடபகுதி
முஸ்லீம்கள் வெளியேற்றம் - புலி எதிர்ப்பு இலக்கியம்
படைப்பவரால் தவிர்த்துவிட முடியாத நிகழ்வு அது. இந்நாவலிலும் வருகிறது.
யாழ் முஸ்லீமான நியாஸ் தன் அனுபவத்தை சதாசிவத்திடம்
கூறுவது போல் அமைந்திரு க்கிறது.
அவனையும் மேலும் சில முஸ்லீம்களையும் புலிகள்
காரணமின்றி வதை முகாமில் அடைத்து
வைக்கின்றனர். ஒழுங்கான உணவு கொடுக்காது, நிர்வாணமாக்கிச்
சித்திரவதை செய்கின்றனர். காதால் கேட்க முடியாத வசவு மொழியில் ஏசுகின்றனர்.
பின்னர் வன்னியிலுள்ள துணுக்காய் முகாமிற்கு அனுப்புவதற்குக் கிளாலிக் கடற்கரைக்குக் கொண்டு வருகின்றனர். படகில் இடம் போதாது இருக்கிறது.
//டேய் எல்லாரையும் ஏற்ற முடியாது. சோனகத்
தெருவில் எடுத்த நகைகளை ஏற்றிவிட்டுத்தான் ஆட்கள்... கீழே நகை மூட்டை
தான் அதன் மேல் இருங்கள்//
(பக்
311). சம்பவம் 1990 இன் இறுதியில் நிகழ்வதாக
வருகிறது. உண்மையில் அப்போது கிளாலி படகுப்பாதை பயன்படுத்தப்படுவதில்லை. கேரதீவு சங்குப்பிட்டியே அப்போது பயணப்பாதை. யாழ்ப்பாணமே புலிகளின் நிர்வாகத் தலைமையகம். அப்படி வன்னிக்கு நகைகள் அனுப்பப்படவில்லை. மேலும் யாழ் முஸ்லீம் வர்த்தகர்கள்
ஒரு போதும் வன்னிக்கு அனுப்பப் படவில்லை. அவர்கள் தனியாகவே வைக்கப் பட்டிருந்தார்கள். உணவு வழங்கலில் எவ்வித
குறையுமிருக்கவில்லை. கதையில் காட்டப்படுவது போல் வேறு தமிழ்
கைதிகளோடு வைக்கப்படவில்லை. துணுக்காய் வதை முகாமில் கிணறு
போன்றதொரு குழியில் நியாஸ் உட்பட ஐவர் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த
ஐவரில் ஒருவன் பிரணவன். அவனின் கைவிரல் நகங்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டிருக்கின்றன. //வன்னிப் படையணியில் மாத்தையாவின் பாதுகாப்பில் நியமிக்கப்பட்டேன். மாத்தைய பிடிபட்டதும் அவரோடு நெருங்கியிருந்த ஏராளமானவர் பிடிபட்டு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். நானும்
சித்திரவதை செய்யப் பட்டேன்// (பக்
315) கதை 1990 இன் பிற்பகுதியில் நிகழ்கிறது.
அப்போது மாத்தையா விடுதலைப் புலிகளின் பிரதித்தலைவர். மாத்தையாவின் சம்பவம் நடந்தது 1993 இன் பிற்பகுதி. இவ்வாறான
கால முரண்கள் நாவல் பூராகவும் விரவிக் கிடக்கின்றன. பின்னர் புலிகளுக்கு தென்பகுதியில் உதவுவதற்கு உடன் பட்டு நியாஸ்
வெளியேறுகிறான். முஸ்லீம்களுக்கு ஐந்து வேளை தொழுகைக்கும் தடுப்பு
முகாமில் அனுமதி வழங்கப்படுகின்றது. இது மட்டுமே ஆசிரியர்
புலிகள் மீது காட்டிய தயவு.
05. நாவலில்
வீம்புக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சாத்தியமற்றதும், வன்மம் கொண்டதுமான காட்சிகள்.
மாணவரைப்
போராளியாக இணைத்தல். கார்த்திகாவும் செல்வியும் அரசியல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலை முன்றலில் ஆயுதங்களைப் பரப்பி வைத்து மாணவரின் கற்றல் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கின்றனர் . புலி ஆதரவாளரான பாடசாலையின் அதிபர் இயக்கத்திற்கு
செல்ல விரும்பும் மாணவரின் பட்டியலை வழங்குகிறார். //கார்த்திகாவும் செல்வியும் வரிசையாக நின்ற அந்த பிள்ளைகளை பார்த்தபோது
பலர் துப்பாக்கி தூக்குவதற்கு உடல் பலமானவர்களாகத் தெரியவில்லை.
ஊட்டச்சத்து குறைந்து மெலிந்திருந்தனர். முகாமில் உணவும் பயிற்சியும் கொடுத்தபின் பிரயோசனப்படாதவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும். இயக்கத்தில் பிள்ளைகள் சேர்வதால் செல்வாக்கு ஏற்படுகிறதென விரும்பிய குடும்பங்களும் இருந்தன. செல்வி சிறிதாக இருந்த பெண் பிள்ளைகள் பருவமடைந்து
விட்டார்களா என்பதை அவர்களின் அருகில் சென்று விசாரித்து பெயர் பதிந்து கொண்டாள் //. (பக்கம் 199) இயக்கத்திற்கு
சேர்ந்த மாணவரை ஏற்றி செல்ல சாந்தன் வருகிறான். ( சாந்தன் எவ்வாறு இங்கு வருகிறான்? அவன் அரசியல் துறையா?
எப்ப
இவனால் சகல துறைகளிலும் இயங்க
முடிகிறது? அறவே வாய்ப்பில்லை.) பஞ்சப்பட்ட
சிறார்களை இயக்கத்தில் இணைப்பதாக இங்கு காட்டப்படு கின்றது. அதுவும் அதிபரின் ஒத்துழைப்போடு, பாட சாலைக்குள் நுழைந்து
கூட்டிச் செல்கின்றனர். கதை 2005இல் நிகழ்கிறது. சமாதான
காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை என உறுதியாக கூறமுடியும்.
வன்னியில்
பல சிறுவர் இல்லங்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கீழ் இருந்தன. குருகுலம்,
பாரதி இல்லம், இனிய வாழ்வு இல்லம்,
புனித பூமி, காந்தி இல்லம் போன்றன ஆதரவற்ற சிறுவர்களுக்காக இயக்கப்பட்டன. தம் பிள்ளைகளை சரியாகக்
கவனிக்க முடியாத பெற்றோர்கள் அந்த இல்லங்களின் பராமரிப்
பில் அவர்களை ஒப்படைத்த வரலாறும் உண்டு. மந்தபோசனம் அங்கு கிடையாது. மலேரியாவில் பெரிதும் பாதிக்கப்பட்டதும் வன்னி. இலங்கையில் முதன் முதலாக மலேரியா ஒழிக்கப்பட்டதும் வன்னியில்தான். அந்த அளவிற்கு அங்கு
சமூகச் செயற்பாடுகள் இருந்தன. மேலும் சமாதான காலத்தில் தமழீழ கல்விக் கழகம் சிறப்பாக இயங்கியிருந்தது. வன்னிப் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்களுக்கு பெருந்தட்டுப்பாடு நிலவியது. கல்விக் கழகம் தாமே சம்பளங் கொடுத்து தொண்டர்
ஆசிரியர் களை நியமித்து சேவை
வழங்கியது. மாணவரின் கல்வியில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வந்தது.
2. கரும்புலியைக் கர்ப்பாக்கல்
விடுதலைப்
புலிகள் கர்ப்பிணியான
பெண்ணைத் தொடர்ச்சியாக இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி, பின்னர் இராணுவத் தளபதிக்கு எதிராக தற்கொலைக் குண்டுதாரியாக பாவித்தது போன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை வேறு வரலாறுகளில் நான்
படித்திருக்கவில்லை. மனித சமூகத்தில் மட்டுமல்ல
மிருகங்கள் மத்தியிலும் நம்மால் பேசப் படும் தாய்மை என்ற கருத்தாக்கத்தை அத்தகைய
செயல் தகர்கிறது. இத்தகைய செயலை எப்படிப் புரிந்து கொள்வது? (பக் 8) - இது என்னுரையில் ஆசிரியர்
கூறுவது.
இச்சம்பவம்
உண்மையா
பொய்யா என ஆசிரியர் ஆராயவில்லை.
அதை உண்மை என அவர் நம்ப
விரும்புகிறார். அதுவே நாவலாக்கத்தில் நெருக் கடியை ஏற்படுத்துகிறது.
அந்த விடுதலைப் புலி யுவதி எவ்வாறு
கர்ப்பமானாள்? அதற்காக ஆசிரியர் கற்பனை செய்த விதம் மிக வன்மமாகவும், வக்கிரமாகவும்,
கேவலமாகவும் உள்ளது. எந்தவொரு தார்மீக எழுத்தாளனாலும் இப்படியான செயலைச் செய்ய இயலாது. மன சாட்சியைத் துறந்து
விட்டே இதனைச் செய்யமுடியும்.
அத்தியாயம்
22 விடைகொடு செல்வி (பக் 337 348) அத்தியாயம் 23 தற்கொடைப் போராளி (பக் 349 - 364) மேற்படி இரு அத்தியாயங்கள் பூராகவும்
பொருட்பிழை, தர்க்க முரண், காலமுரண் விரவிக் காணப்படுவதோடு வக்கிரமாகவும் உள்ளது. கார்த்திகா, செல்வி ஆகியோரை புலனாய்வுத் துறை கூட்டிச் செல்கிறது
//சிவப்பு நிறத்தில் உயரமாக மீசையுடன் இராணுவ உடுப்பில் சுவரில் சாய்ந்த படி நின்றார்// (பக்
342). அவரோடு சாந்தனும் நிற்கிறான். அந்த உயரமானவர் யாரென
எல்லோருக்கும் தெரியும். (அவர் இராணுவ உடை
அணிவதில்லை என்பது வேறு கதை) கொழும்பு
நடவடிக்கைக்கு ஒரு கரும்புலி தேவைப்படுவ
தாகக் கூறி, ஏற்கனவே போய் ஃபிறண்ட் இருந்த
செல்வியே அதற்குத் தகுந்தவள் என்கிறார். செல்வி சிறப்பு முகாமிற்கு அனுப்பப்படுகிறார். கார்த்திகாவை சாந்தன் மோட்டார் சைக்கிளில் கூட்டிச் செல்கிறான்.//கிளிநொச்சிக்குப் போகும் வழியில் ஊடுருவித் தாக்கும் அரச படையின் கிளைமோர்
ஒன்று வெடித்திருக்கிறது.//(பக் 345) என்ற
தகவல் வர சாந்தனும் கார்த்திகாவும்
ஓரிடத்தில் இரவைக் கழிக்கின்றனர். அவர்களிடையே காதல் அரும்புவது போலவும் காட்டப்படுகின்றது.
மேற்படி
காட்சிகளின் முரண்கள் சில :
அ. புலிகள் இயக்கத்தில் மகளிர் தனிப்பிரிவாக, மகளிர் தலைமையின் கீழ் இயங்கும். நாவலில்
கார்த்திகாவும் செல்வியும் அவர்களது பொறுப்பாளினி இல்லாது தனியாக செல்ல இயலாது. தனியே ஆணுடன் மோட்டார் சைக்கிளில் செல்ல முடியாது, அரசியல் துறையில் இருப்பவர்
புலனாய்வுத்துறை வாகனத்தில் சாதாரணமாக ஏறிச் செல்வதாகக் காட்டப்படுகின்றது. நிர்வாகக் குழறுபடி வாய்ப்பில்லை.
ஆ. எந்தவொரு போராளியையும் கரும்புலியாக மாறும்படி பொறுப்பாளர் முன்மொழிய முடியாது. பலருக்குத் தெரிந்த வரை மறைமுகக் கரும்புலியாக
மாற்றமுடியாது. ஆனால் நாவலில் காட்டப்படு கின்றது. வாய்ப்பில்லை.
இ. கதையில் கிளிநொச்சியில் கிளைமோர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. 2002 இல் சமாதான ஒப்பந்தம்
ஏற்பட்ட பிறகு, 2006 ஓகஸ்டின் பின்னரே அரச ஆழ ஊடுருவும்
படையணியின் கிளைமோர் தாக்குதல் இடம் பெற்றது. கதையை
தன் விருப்பப்படி நகர்த்துவதற்காக, சமாதான காலத்திலும் கிளைமோர் வெடிப்பதாகக் காட்டுவது முரண் நகை.
ஈ. சாந்தனும் கார்த்திகாவும் இரவைக் கழிக்ப்பயன்படுத்திய வீடு கடற் புலிகளுக்குச்
சொந்தமானது. அது ஒரு களஞ்சியசாலை
அங்கு காவலுக்கு யாருமில்லை. வாய்ப்பில்லை.
பின்னர்
கொழும்பிலிருந்து செல்வி கார்த்திகாவின் வீட்டு முகவரிக்கு கடிதம் அனுப்புகிறாள். பெரியம்மா அதனை அசோகனுக்கு அனுப்பி
வைக்கிறார். அது செல்வியின் சுய
வரலாறு. விக்னேஸ் என்ற போராளிக்கும் செல்விக்கும்
தலைவர் முன்னிலையில் திருமணம் நடக்கிறது. பிறகு அந்தச் சோடியை கொழும்பிற்கு அனுப்பி வைக்கின்றனர். வத்தளையில் ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள்.
அது ஒரு பொய்த் திருமணமாம்//செல்வியை விக்னேஸ் கர்ப்பமாக்க வேண்டுமாம். ஆறு மாதமாகியும் செல்வி
கர்ப்பமாக வில்லை என்பதால் விக்னேஸ் வீசும் வசவு வார்த்தைகள் சகிக்க
முடியாதவை// வக்கிரமாக உள்ளது. ஒரு கட்டத்தில் செல்வி
முரண்படுகிறாள். அப்போது வன்னியி லிருந்து தொலைபேசி அழைப்பு செல்விக்கு வருகிறது.
//தலைவர்
உங்கள் மீது நம்பிக்கை வைத்து முக்கிய விடயத்திற் காக அனுப்பினார். எம்மைப் பொறுத்த வரை அதுவே இலக்கு... விக்னேஸ் எங்களுக்கு பொருட்டல்ல. சந்தேகம் வராமலிருக்க ஒரு ஆண் உங்களருகே இருக்க வேண்டும். எந்த ஆணும் எங்களுக்கு சரி, உங்களுக்கு அவனைப் பிடிக்காத போது வேறு யாராவது ஒருவரை அனுப்பட்டுமா?// (பக் 357) இதைப் படித்த போது இது எந்த
இயக்கம்? இது எந்தத் தலைவர்?
என்று தோன்றியது பிறகு செல்வி ஒருவாறு கர்ப்பமாகிக் கரும் புலியாகிறாள். வேறொரு திருப்பமும் கதையில் வரு கிறது. அன்று
சாந்தனையும் கார்த்திகா வையும் ஒன்றாக அனுப்பியதன் காரணத்தை பொறுப்பாளர் கூறுகிறார். //அன்றைக்கு அவளை கர்ப்பிணியாக்க அந்த இரவில் உனக்கொரு சந்தர்ப்பம் தந்தேன். அப்படியாக நடந்திருந்தால் பெரியவரிடம் அனுமதி பெற்றிருப்பேன். அன்று அந்தக் கட்டளையை மீறியதற்கு உன்னை அவர் தண்டிக்காது விட்டது பெரிய விடயம். நீ என்றதால் தப்பியிருக்கிறாய்// (பக் 360)
அது
அவ்வாறு இருக்கட்டும்! உண்மையில் நடந்த விடயம் என்னவெனில், 2006 ஏப்ரலில் இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடாத்திய
யுவதி கர்ப்பிணி அல்ல! இராணுவ வைத்தியசாலைக்குள் சென்று வருவதற்கான அனுமதி அட்டை (gate pass) மாத்திரம் அவளிடமிருந்தது. நோயாளி ஒருவரைப் பார்வையிடும் சாக்கில் உள்ளே சென்று வந்து கொண்டிருந்தாள். வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த நாள் கர்ப்பிணி களுக்குரிய
கிளினிக் நாள் என்பதால் சம்பவத்தில்
கர்ப்பிணி ஒருவரும் இறக்க நேரிட்டது. அது நடவடிக்கை ஒருங்கிணைப்பில்
ஏற்படும் நெருக்கடி. அதை வேறொரு சந்தரப்பத்தில்
பார்க்கலாம். இறந்து போன கர்ப்பிணியே குண்டுதாரியாக
இருந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் ஆரம்பகட்ட
விசாரணையில் கூறப்பட்டது. பின்பு துப்புத் துலங்கி, குண்டுதாரியும் கர்ப்பிணியும் வெவ்வேறு பெண்கள் என்ற உண்மை வெளியாகியது.
அந்த உண்மையை ஏன் நாவலாசிரியர் கருத்திலெடுக்க
விரும்பவில்லை? குண்டுதாரி கர்ப்பமாக இருப்பதனையே ஆசிரியர் விரும்புகிறார். அதுவே அவரின் குறிக்கோளுக்கு சௌகரியமாக அமையும்
மேற்படி
நாவலானது இந்திய வாசகர்களையே மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. கேர்ணல், ஏர்போட், ஆர்மி, பாதிரியார், கைலி போன்ற சொற்கள்
இந்திய மொழி வழக்கு ஆகும்.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. எவ்வாறேனும் விடுதலைப்புலிகளை இழிவு படுத்திவிட வேண்டும் என்ற நோக்கில் மேற்படி
உண்மைக்குப் புறம்பான விடயங்களை எழுதும் போது ஈழத்தமிழரின் வாழ்வியலும்
தரந்தாழ்ந்து போகும் வாய்ப்பும் உள்ளது என அஞ்சுகிறேன். ஏனெனில்
விடுதலைப் புலிகள் வேற்று நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்லர்: ஈழமக்களிடையே இருந்து தான் வந்தவர்கள்.
06. முடிவுரை.
1. அரசியல்
நோக்கிற்காகவும் விடுதலைப் புலிகளின் புனிதப் படிமத்தைச் சிதைப்பதற்காகவும் எழுதப்பட்ட 'தூய கற்பனை' நாவல்
இது. கதை வன்னி மண்ணில்
நிகழ்ந்தாலும் வன்னி மண் வாசனையை உணர
முடியாதுள்ளது. நாவலிலுள்ள பாத்திரங் களோடு ஒன்ற முடியவில்லை. ஜெனிபர்
தவிர்ந்த சகல பாத்திரங்களும், தலைவர்
உட்பட, நொயல் நடேசனின் பிறதிருப்பம் போலவே தெரிகின்றன. //விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட ஆயிரக்
கணக்கான இளைஞர்களுக்கும் (இதில் பலர் எனது நண்பர்கள்)
பிரதானமாக நான் மிகவும் நேசித்த
பத்மநாபாவுக்கும் இந்த நாவலைச் சமர்ப்பிப்பதன்
மூலம் ஏதோ சிறிய ஆறுதலை
அடையமுடியும் என நினைக்கிறேன். //
(பக்
11) என்னுரை. மேலும், 'கரையில் மோதும் நினைவலை நொயல் நடேசன் எழுதிய தொடரில், அவரின் புலி எதிர்ப்பு நிலைப்பாடும்,
அவர் சார்பு இயக்கத்தின் நிலைப்பாடும் புலனாகின்றன. அதன்படி அவர் புலிகளை விரும்பமுடியாதது
சரியானதே. அதில் தவறுகாண முடியாது! அதற்காக பொய்மைப் புனைவு செய்வது முறையாகாது. அது அவரின் எழுத்தின்
அறம் குறித்து கேள்வி எழுப்பிவிடும்.
2. ஆசிரியர்
என்னுரையில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிடுகிறார். //இதுவரையும் போரைப் பற்றி எழுதியவர்கள் போரில் பங்கு கொண்டவர்கள். நான் போரை நேரடியாகப் பார்த்தவனில்லை என்பதால், நான் உருவாக்கிய பாத்திரங்கள் புனைவானவை. அவர்கள் சென்ற வழியே இந்த நாவல் செல்கிறது. இது போர் நாவலல்ல. போரால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சிலரது கதையே. இதில் வருபவர்கள் எவரேனும் கற்பனைப் பாத்திரங்கள் அல்லர் என வாசகர் தீர்மானித்தால் அது வாசகரின் அனுபவம் அல்லது வாழ்க்கை நோக்கு. அதற்கு நான் பாத்திரவாளியல்ல. //(பக் 9)
இதற்கு
மேல் நாம் என்ன கூற
முடியும்?
No comments:
Post a Comment