03 Feb, 2025 | 01:28 PM
ரி. இராமகிருஷ்ணன்
யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு தெய்வப்புலவர் வள்ளுவரின் பெயரைச் சூட்டுவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை இலங்கையுடனான பிரிக்கமுடியாத பிணைப்பை வலுப்படுத்துவதற்கான அடையாளபூர்வமான ஒரு சைகையாகும். மையத்தின் பெயரில் இருந்து 'யாழ்ப்பாணம்' என்ற சொல் நீக்கப்பட்டது தொடர்பாக இலங்கை தமிழர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியபோது உடனடியாகவே அதில் திருத்தத்தைச் செய்தார்கள். மையம் இப்போது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவான வரலாற்றையும் கலாசாரத்தையும் கொண்ட இரு தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை எவரும் வலியுறுத்திக் கூறவேண்டிய தேவையில்லை.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட 1983 ஜூலை இன வன்செயலுக்கு பின்னரான நாற்பது வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் அரசியல் உறவுகளின் தன்மை பெருமளவுக்கு மாறியிருக்கிறது. அந்த இன வன்செயல் இலங்கையில் முதலில் ஒரு மத்தியஸ்தர் பாத்திரத்தையும் பிறகு சிக்கலான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் தீவிரமான பாத்திரத்தையும் வகிக்கும் நிலையை இந்தியாவுக்கு ஏற்படுத்தியது. அத்தகைய சிக்கலான ஒரு உறவுமுறையே 1987 ஜூலை 29 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கும் அதைத் தொடர்ந்து இலங்கையின் அரசியலமைப்புக்கு 13வது திருத்தம் கொண்டுவரப்படுவதற்கும் வழிவகுத்தது. அதன் மூலமாக புதியதோர் அரசாங்க அடுக்காக மாகாண சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அதிகாரம் வழங்கப்பட்டது.
அந்த நேரத்தில், இன்றைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவும் (ஜே.வி.பி.) வேறு பல கட்சிகளும் சமாதான உடன்படிக்கையையும் அந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தையும் கடுமையாக எதிர்த்தன. அந்த இரண்டும் இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்டதாகவே எதிர்ப்பாளர்களினால் கருதப்பட்டது.
அன்று முக்கியமான தமிழ்ச் சக்தியாக விளங்கிய விடுதலை புலிகள் இயக்கமும் அவற்றை எதிர்த்தது. அந்த இணக்கத்தீர்வு முறை தொடர்பில் விடுதலை புலிகள் அதிருப்தி கொண்டவர்களாக இருந்தார்கள். இலங்கையைப் பிரித்து தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதாக தனியான ஒரு நாட்டை உருவாக்குவதே விடுதலை புலிகளின் இலட்சியமாக இருந்தது. அதை இந்தியாவினால் ஒருபோதும் இணங்கிக் கொள்ள முடியாது.
இந்தியாவின் வலியுறுத்தல்
13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு 35 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது மாத்திரமல்ல, 1989ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாகாண சபைகள் இயங்கிய போதிலும் கூட, தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் அந்த திருத்தம் நியாயமான முறையில் பரீட்சிக்கப்படவில்லை.
13வது திருத்தத்தை விரைவாக முழுமையாக அல்லது பயனுறுதியுடைய முறையில் நடைமுறைப்படுத்துமாறு இந்திய தலைவர்கள் இலங்கை தலைவர்களை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி திசாநாயக்கவை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுப்பதற்காக கடந்த வருடம் அக்டோபரில் அவரைச் சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அவ்வாறு வலியுறுத்தினார்.
ஆனால், 2024 டிசம்பரில் திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட கருத்துக்களில் 13 வது திருத்தத்தைப் பற்றி வெளிப்படையாக எதையும் குறிப்பிடவில்லை. அதையடுத்து அந்த திருத்தம் தொடர்பான பிரச்சினையில் இருந்து இந்தியா தன்னை தூரவிலக்கத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பில் தற்போதைக்கு எந்த முடிவுக்கும் வரமுடியாது என்ற போதிலும், "இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு" மோடி கோரிக்கை விடுத்த நிலையில் 2017 பெப்ரவரியில் வெளியுறவு செயலாளர் என்ற வகையில் ஜெய்சங்கர் (தற்போது செயலிழந்திருக்கும்) தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு அப்பால் சிந்தித்து நகருமாறு தெரிவித்த யோசனையே நினைவுக்கு வருகிறது. 2006 அக்டோபரில் இரு மாகாணங்களின் இணைப்பை இரத்துச் செய்து இலங்கை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை இருபது வருடங்களாக அவை இணைந்தே இருந்தன.
13வது திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி.யின் பாரம்பரியமான நிலைப்பாட்டின் பின்னணியிலேயே மோடியின் மௌனத்தை நோக்கவேண்டும். ஜே.வி.பி. தலைமையிலான ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அந்த திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று இப்போதும் விரும்புகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
"13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாம் (தேசிய மக்கள் சக்தி) நம்புகிறோம். ஆனால், அது தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான ஒரு தீர்வாக அமையுமா என்பது குறித்து எம்மத்தியில் விவாதம் ஒன்று இருக்கிறது" என்று இன்றைய இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய 2023 பெப்ரவரியில் ' த ஐலண்ட்' பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கூறிய அதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது யாழ்பாணத்தில் திசாநாயக்க கூடுதல் அதிகாரப்பரவலாக்கம் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் இணக்கத்தீர்வு ஒன்று குறித்து ஒரு வார்த்தையேனும் கூறவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் அதிகாரப் பரவலாக்கம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும் சகல குடிமக்களினதும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் புதியதொரு அரசியலமைப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவரும் என்று அந்த விஞ்ஞாபனத்தில் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.
உள்ளூராட்சி ஒரு பதிலீடு அல்ல
2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து சுட்டிக்காட்டிய அதேவேளை தேர்தல் விஞ்ஞாபனம் ஒவ்வொரு உள்ளூராட்சிக்கும் மாவட்டத்துக்கும் மாகாணத்துக்கும் அரசியல் மற்றும் நிருவாக அதிகாரங்களை பரவலாக்குவது குறித்தும் ஒரு வருடத்திற்குள் மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல்களை நடத்துவது குறித்தும் விஞ்ஞாபனம் கூறியது. இரு தேர்தல்களும் தற்போது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது இலங்கையில் நடைபெறும் அரசியல் விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது உள்ளூராட்சி தேர்தல்கள் மிக விரைவில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
இலங்கையில் மாகாண சபைகளை விடவும் மிகவும் நீண்டதொரு வரலாற்றைக் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவது ஒன்றும் தவறில்லை. ஆனால், உள்ளூராட்சி சபைகள் எவ்வளவுதான் பயனுறுதியுடையவையாக இருந்தாலும், அவை மாகாண சபைகளுக்கு பதிலீடாக அமையாது என்பதில் இலங்கை ஆட்சியாளர்கள் எந்தவிதமான மாயையும் கொண்டிருத்தலாகாது.
பல நாடுகளில் உள்ளதைப் போன்று, இலங்கையிலும் உள்ளூராட்சி அரசாங்கங்கள் ஒரு புறத்தில் அதாகரிக்கும் நகரமயமாக்கல் தோற்றுவிக்கும் சகல பிரச்சினைகளையும் மறுபுறத்தில் மடடுப்படுத்தப்ட்ட வருவாயின் விளைவான பிரச்சினைகளையும் கையாளுவதற்கான வசதிகளைக் கொண்டவை அல்ல. இதன் காரணத்தினால் தான் இந்த பிரச்சினைகளில் பலவற்றை கையாளுவதற்கு மாகாண சபைகள் அவசியமாகின்றன.
2017 செப்டெம்பரில் வெளியான அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை மாகாண சபைகளை பிரதானமான அதிகாரப்பரவலாக்க அலகுகளாக அங்கீகரிப்பதில் முதலமைச்சர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசாயலமைப்புச் சபையின் பல்வேறு குழுக்கள் மத்தியில் பரந்தளவிலான கருத்தொருமிப்பு அவசியம் என்று சுட்டிக்காட்டியது.
எல்லாவற்றுக்கும் மேலாக, மாகாண சபைகள் இந்தியாவின் ஒரு உருவாக்கம் என்று நோக்குவதை ஜே.வி.பி. தலைவர்கள் நிறுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனென்றால், தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு அரசியலமைப்புக் கோட்பாடும் முன்னையதொன்றை அழித்து திருப்பி எழுதிய செயன்முறைகளின் விளைவேயாகும். இது சமாதான உடன்படிக்கைக்கும் 13வது திருத்தத்துக்கும் கூட பொருத்தமானதே. 1983 - 87 காலப்பகுதியில் இரு நாடுகளினதும் பல்வேறு மட்டங்களில் பெருவாரியான யோசனைகளை ஆராய்ந்த ஒரு படிமுறையான செயற்பாடுகளின் ஊடாக கொண்டுவரப்பட்டவையே அந்த உடன்படிக்கையும் திருத்தமும்.
இலங்கையின் மூன்று அரசியலமைப்புக்களும் (1948 சோல்பரி அரசியலமைப்பு, 1972, 1978 குடியரசு அரசியலமைப்புகள்) பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அரசாங்க முறைமைகளை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவையே. ஜனநாயக உணர்வுக்காகவும் பெரும்பாலும் வாக்குகள் மூலம் அதிகார மாற்றத்தை உறுதிப்படுத்துவதில் கொண்டிருக்கும் ஆற்றலுக்காகவும் பெயர்போன இலங்கை மக்கள் அவர்களது குணாதிசயத்துக்கு ஏற்ற முறையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு அருகதை உடையவர்கள் என்பதை இலங்கையின் ஆளும் கூட்டணி மனதிற்கொள்வது நல்லது.
மிகுந்த மக்கள் செல்வாக்கைக் கொண்ட ஜனாதிபதியுடன் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளின் சேர்க்கையினால் தோற்றுவிக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வொன்றை காண்பதற்கு இப்போது பொன்னான வாய்ப்பு ஒன்றைக் கொண்டிருக்கிறது.
(தி இந்து) - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment