யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு நடாத்துவது குறித்து தீர்மானம்
ரோகிங்ய முஸ்லிம்களில் கைதான 12 நபர்களும் விடுவிக்கப்பட்டு முல்லைத்தீவு பகுதிக்கு அனுப்பி வைப்பு
ரணிலும் சஜித்தும் சந்திப்பு - ஐ.தே.கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைய வேண்டும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி, தொழில்நுட்ப உதவி - "Clean Sri Lanka" வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக JICA உறுதி
ஞானசார தேரருக்கு 9 மாத சிறை
யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு நடாத்துவது குறித்து தீர்மானம்
Published By: Digital Desk 7
08 Jan, 2025 | 11:16 AM
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை எதிர்வரும் 25ம், 26ம் திகதிகளில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடானது மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது.
செயற்படல், நிலைமாற்றம் , நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு மாநாட்டின் தொனிப்பொருளை சார்ந்ததான பல்வேறு விடயப்பரப்புக்கள் பற்றி உரையாடவுள்ளனர்.
மாநாட்டின் ஓரங்கமாக மாற்றுப் பிணக்குத் தீர்வு முறைகள் பற்றிய குறிப்பாக மத்தியஸ்தம் தொடர்பான சிறப்பு அமர்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது தை மாதம் 24ம் திகதி பிற்பகல் 4.30 மணி முதல் 6.30 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இந்தியாவினைச் சேரந்த நிபுணர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன்பெற்றுக்கொள்ளுமாறு மாநாட்டு ஒழுங்கமைப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
ரோகிங்ய முஸ்லிம்களில் கைதான 12 நபர்களும் விடுவிக்கப்பட்டு முல்லைத்தீவு பகுதிக்கு அனுப்பி வைப்பு
Published By: Digital Desk 7
08 Jan, 2025 | 11:07 AM
கடந்த மாதம் இலங்கைக்குள் வந்திருந்த ரோகிங்ய முஸ்லிம் மக்களில் 12 நபர்கள் சட்ட விரோத குடியேற்றவாதிகளை ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த வருடம் 31ஆம் திகதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் அவர்களை 14 நாட்கள் விளக்கமறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
எனினும், இன்று புதன்கிழமை (08) அவர்கள் மீதான குற்றச்சாட்டை சிஐடியினர் வாபஸ் பெற்ற நிலையில் அவர்களும் அந்த 12 நபர்களும் விசா இன்றி உள்ளே இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு முல்லைதீவில் வைக்கப்பட்டிருந்த 103 நபர்களுடன் இணைக்கும் நோக்கில் திருகோணமலையில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர்களையும் முல்லைதீவு நோக்கி பொலிஸார் அழைத்து சென்று உள்ளனர். நன்றி வீரகேசரி
ரணிலும் சஜித்தும் சந்திப்பு - ஐ.தே.கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைய வேண்டும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்
Published By: Digital Desk 2
07 Jan, 2025 | 04:49 PM
(நமது நிருபர்)
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அது தொடர்பில் நாம் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். எதிர்காலத்தில் அந்த செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை போதிருக்காராம விகாரையின் விகாராதிபதி பெல்பத்த தம்மராம தேரரின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் சிநேகபூர்வமாக கலந்துரையாடி இருந்தனர்.இந்நிலையில் இரு பிரதான அரசியல் கட்சியின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளமை தற்போதைய அரசியல் களத்தில் பேசும் பொருளாகி உள்ளது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒன்றிணையுமா என எதிர்க்கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டராவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அது தொடர்பில் நாம் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.எதிர்காலத்தில் அந்த செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும்.
கேள்வி ; முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளீர்களா?
பதில் ; இல்லை.அவ்வாறான எந்தவொரு கலந்துரையாடல்களும் இன்னும் இடம்பெறவில்லை என்றார்.
இந்நிலையில் எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியிடம் அது தொபில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் எம்முடைய தாய் கட்சியாகும்.ஆனால் நாம் ஐக்கிய மக்கள் சக்தியின் போட்டியிட்டு இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளோம்.தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டோம்.ஐக்கிய தேசியக்கட்சி எம்முடையது.ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களே ஐக்கிய மக்கள் சக்தியிலும் உள்ளனர்.நாம் இரண்டு பிரிவினர் அல்ல.நாம் தற்போது செய்ய வேண்டியது எல்லாம் நெருங்கி பழகுவது மாத்திரம்.எதிர்காலத்தில் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றார். நன்றி வீரகேசரி
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி, தொழில்நுட்ப உதவி - "Clean Sri Lanka" வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக JICA உறுதி
07 Jan, 2025 | 03:18 PM
இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
ஜப்பான் உதவியில் முன்னெடுக்கப்படும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாக அபிவிருத்தி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஜயிக்கா உதவியில் முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்களையும் விரைவில் நிறைவு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய உதவி மற்றும் எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க ஜயிக்கா நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் ஹாரா சொஹெய் மேலும் தெரிவித்தார்.
இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் முன்னணி வேலைத்திட்டமான "Clean Sri Lanka" திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த சிரேஷ்ட உப தலைவர், அந்த வேலைத்திட்டத்திற்கு அவசியமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இந்நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் நகர தூய்மையாக்கல் பணிகளுக்கு ஜயிக்கா நிறுவனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிதி மற்றும் பௌதீக உதவிகள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜனப்பான் தூதுவர் இசோமதா அகியோ, ஜப்பான் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் கென்ஜி ஒஹாஷி,ஜயிக்கா நிறுவனத்தின் இலங்கைக்கான முதன்மைப் பிரதிநிதி டெட்சுயா யமடா, சிரேஷ்ட பிரதிநிதி யூரி இடே உள்ளிட்ட ஜப்பான் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நன்றி வீரகேசரி
ஞானசார தேரருக்கு 9 மாத சிறை
Published By: Digital Desk 3
09 Jan, 2025 | 11:44 AM
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை இன்று வியாழக்கிழமை (09) கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.
அத்துடன் , 1,500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பை அறிவித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமையால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment