பொங்கல் என்பது மங்கலம் ஆகும் !




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

 

 

மார்கழி மாதம் மனமுறை மாதம்
தேவர் விரும்பும் திருவுறை மாதம்
சைவம் வைணவம் போற்றிடும் மாதம்
மெய்யாம் இறையினைத் துதித்திடும் மாதம் 

இறையினைத் துதித்து எல்லோர் மனமும்
புனிதம் ஆகியே நிற்பது தையிலே
தையிலே வருவதோ தலைநிமிர் பெருவிழா
அதுவே தமிழரின் ஆனந்தப் பெருவிழா

உழவை மதிக்கும் உன்னதப் பெருவிழா
உழைப்பை உவக்கும் உழைப்பவர் திருவிழா
நன்றியை நவிலும் நயப்புடைப் பெருவிழா
நல்லதை நல்கிடும் தைப்பொங்கல் நல்விழா

சமயமும் கலக்கும் சமத்துவம் இருக்கும் 
தமிழர் யாவரும் பொங்கலைப் பொங்குவார்
பொங்கிய பொங்கலைப் பங்கிட்டு மகிழ்வார் 
பொங்கல் என்பதே பூரிப்பைத் தந்திடும் 

நீராடி யாவரும் புத்துடை அணிவார்
மாவிலை தோரணம் வாசலில் அமைப்பார்
கோலம் போடுவார் கும்பம் வைப்பார்
குத்து விளக்கினை ஒளிர்ந்திடச் செய்வார் 

அப்பா அம்மா தாத்தா பாட்டி 
அனைவரும் மகிழ்வாய் அங்கே வருவார்
பொங்கற் பானையை அலங்காரம் செய்து
மங்கலம் பொங்கென அடுப்பினில் வைப்பார்

பாலினை யாவரும் பகிர்ந்துமே விடுவார் 
பொங்கும் பாலினை பொறுமையாய்ப் பார்ப்பார்
வெண்ணுரை தள்ளிடப் பாலுமே பொங்கும்
யாவரும் அரிசியைப் பானையில் இடுவார்

சர்க்கரை தேனைப் பொங்கலில் சேர்ப்பார்
சந்தோஷம் அங்கே நிறைந்துமே பொங்கும்
அத்தனை பேரும் பொங்கலைப் படைத்து
ஆதவன் நோக்கி அர்ப்பணம் செய்வர் 

ஆலயம் நோக்கி அனைவரும் செல்வார்
ஆனந்தம் மகிழ்வு அமைந்திட வேண்டுவார்
எண்ணிய காரியம் ஏற்றமாய் அமைந்திட
இறையின் திருவடி வீழ்ந்தே வேண்டுவார்

உறவுகள் வருவார் உவகை கொள்ளுவார்
பெற்றும் கொடுத்தும் பெருமகிழ் வெய்துவார்
பெரியவர் ஆசியைப் பெற்றிட யாவரும்
அருகினில் சென்று ஆவலாய் நிற்பார்

ஆசிகள் பெற்றவர் அனைத்தையும் பெற்றதாய்
அக மகிழ்வுடனே ஆனந்தம் அடைவார்
பெருநாள் திருநாள் பெறுமதி என்பதை
உணரும் போது உள்ளம் உவக்கும்

பொங்கற் பண்டிகை பூரிப்பை ஊட்டும்
எங்கும் பட்டாசு மத்தாப்பும் இருக்கும்
பாடலும் இருக்கும் பட்டிமன்றமும் இருக்கும்
யாவரும் மகிழும் கோலமும் பெருகும் 

இல்லார் இருப்பார் யாவரும் பொங்குவார்
இல்லம் அனைத்தும் பொங்கல் இருக்கும்
பொங்கல் என்பது மங்கலம் ஆகும்
பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை 

No comments: