சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய நிலையில் ஜனாதிபதி அநுர குமார

 

12 Jan, 2025 | 05:03 PM
image

வீரகத்தி தனபாலசிங்கம் 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்று சரியாக ஒருமாதம் கடக்கும் நிலையில் இவ்வாரம் சீனாவுக்கு விஜயம் செய்கிறார். வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்  மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமால் இரத்நாயக்க சகிதம் செல்லும்  அவர் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கையும் பிரதமர் லீ கியாங்கையும்  எதிர்வரும் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாகவும்  அவரது விஜயத்தின்போது  பல்வேறு துறைகள் தொடர்பில் சுமார் பத்து புரிந்துணர்வு உடன்படிக்கைகள் பெய்ஜிங்கில் கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.

இலங்கை ஜனாதிபதிகள் பதவியேற்ற பிறகு முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வதை ஒரு சம்பிரதாயமாக கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அதே போன்றே ஜனாதிபதி திசாநாயக்கவும் கடந்த மாதம் புதுடில்லி சென்று இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.  

ஜனாதிபதி டிசம்பர் நடுப்பகுதியில் இந்தியாவுக்கு  செல்வதற்கு முன்னதாகவே ஜனவரியில் சீனாவுக்கு விஜயம் செய்வார் என்று ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டது. இது கடந்த செப்டெம்பரில் அதிகாரத்துக்கு வந்த பிறகு திசாநாயக்க முன்னெடுக்கும் முக்கியமான இரண்டாவது சர்வதேச இரு தரப்பு ஊடாட்டமாகும். 

ஜனாதிபதியின் சீன விஜயத்துக்கு முன்னதாக கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளைப் பற்றி முதலில் குறிப்பிட வேண்டியிருக்கிறது. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 'ஒரு சீனக் கொள்கை' (One China Policy) மீதான அதன் பற்றுறுதியை மீளவும் உறுதிசெய்துகொண்டு மக்கள் சீனக் குடியரசே சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கம் என்று அங்கீகரிப்பதாகவும் தாய்வானை சீனாவின் ஒரு மாகாணமாக கருதுவதாகவும் அறிவித்தது. இது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை அங்கீகரித்ததாக அமைச்சரவை பேச்சாளர் நாளிந்த ஹேரத் கடந்த செவ்வாய்க்கிழமை  செய்தியாளர்கள் மகாநாட்டில் அறிவித்தார்.

அண்மைய தசாப்தங்களில் இலங்கையின் எந்தவொரு ஜனாதிபதியும் சீனாவுக்கு முதன் முதலாக விஜயம் செய்வதற்கு முன்னதாக 'ஒரு சீனக் கொள்கையை' மீண்டும் அங்கீகரிப்பதாக அறிவித்ததாக நாம் அறியவில்லை.

மாவோ சேதுங் தலைமையிலான வெற்றிகரமான புரட்சியை அடுத்து 1949 அக்டோபரில்  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு அமைக்கப்பட்ட  மக்கள் சீனக் குடியரசை அதன் ஆரம்பத்தில்  அங்கீகரித்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. செஞ்சீனாவை 1950 ஜனவரி 6ஆம் திகதி இலங்கை அரசாங்கம் அங்கீகரித்தது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் 1952 ஏப்ரலில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ரப்பர் - அரிசி ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.  கம்யூனிஸ்ட் சீனாவை அங்கீகரித்த முதல் தெற்காசிய நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதற்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவின் அரசாங்க காலத்தில் 1957 ஜனவரியில்  ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு அன்றைய சீனப்பிரதமர் சூ என்லாய் இலங்கைக்கு வந்தார். அவரது  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த விஜயம் அந்த வருடம் பெப்ரவரி 7ஆம்  திகதி இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு வழிவகுத்தது.

இலங்கையில் எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், சகல அரசாங்கங்களுமே சீனாவுடன் சுமுகமானதும் நெருக்கமானதுமான உறவுகளைப் பேணி வந்திருக்கின்றன. இருதரப்பு ஒத்துழைப்பிலும்  ஐக்கிய நாடுகள் அமைப்புக்கள் உட்பட சர்வதேச அரங்குகளிலும் நீண்டகால நேச நாடாக சீனாவை இலங்கையர்கள் நோக்குகிறார்கள். 

' ஒரு சீனக் கொள்கை' தொடர்பிலான இலங்கையின் பற்றுறுதியை சீனா ஒருபோதும் சந்தேகித்ததாகவோ அல்லது இலங்கையின் முன்னைய அரசாங்கத் தலைவர் எவரும் சீனாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக 'ஒரு சீனக்கொள்கை' மீதான இலங்கையின் பற்றுறுதியை மீளவும் உறுதிப்படுத்தும் அறிவிப்பைச் செய்ததாகவோ நாம் அறியவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் வலுவான உறவைக் கொண்டிருந்தது.  அதனால், ஜனாதிபதி திசாநாயக்கவின் விஜயத்துக்கு முன்னதாக 'ஒரு சீனக் கொள்கை' பற்றிய மீள் உறுதிப்பாட்டை எதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது  என்ற கேள்வி எழுந்தது.

ஜனாதிபதியின் சீன விஜயத்துக்கும் 'ஒரு சீனக் கொள்கையை' அரசாங்கம் மீள உறுதிப்படுத்திக் கொண்டதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் கூறினார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் புதிய அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்பட்ட பிறகு முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை புதிய அமைச்சரவை அங்கீகரிக்க வேண்டியிருக்கிறது என்றும் அதன் பிரகாரமே வெளியுறவு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை புதிய அமைச்சரவை அங்கீகரித்தது என்றும் குறிப்பிட்டார்.  ஜனாதிபதி திசாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்யாவிட்டாலும் கூட, 'ஒரு சீனக் கொள்கை' மீதான உறுதிப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கும் என்றும் அவர் கூறினார். உண்மையில் அவரது பதில் நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கவில்லை. 

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனத் தூதுவரின் முன்னிலையில் சீனாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது  'மக்கள் சீனக் குடியரசு (People's Republic of China) என்பதற்கு பதிலாக ' சீனக்குடியரசு' (Republic of China) என்று தவறுதலாகக் குறிப்பிட்டார். சீனக் குடியரசு என்பது தாய்வானையே குறிக்கும். அதனால் சீனாவின் உதவிக்காக தாய்வானுக்கு பிரதமர் நன்றி கூறியதாக சீனத்தூதுவர் அசௌகரியமடைந்தாக கூறப்பட்டது. 

ஆனால், பிரதமரும் கூட, தனது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணராமல்  ஊடகங்களையே குற்றஞ்சாட்டினார். நாட்டின் பிரதமரே மக்கள் சீனக்குடியரசுக்கும் சீனக்குடியரசுக்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக் கொள்ளாதவர் போன்று பேசியதனால்  ஜனாதிபதியின் விஜயத்துக்கு முன்னதாக 'ஒரு சீனக் கொள்கை ' தொடர்பிலான நிலைப்பாட்டை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சீனத்தரப்பினர்  வலியுறுத்தியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.   

அதேவேளை, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பும் முக்கிய கவனத்தைப் பெற்றது. ஜனாதிபதியின் சீன விஜயத்துக்கு முன்னதாக  இந்தியாவுடனான இலங்கையின் உறவுகள் உன்னதமான நிலையில் இருக்கின்றன என்று கூறியதன் மூலமாக அவர் கொழும்புக்கு ஒரு செய்தியைச் சொல்வதற்கு விரும்பியிருக்கக்கூடும் என்று அந்த செய்தியாளர்கள் மகாநாட்டுக்கு சில அவதானிகள் அர்த்தம் கற்பிக்கிறார்கள். 

இலங்கையுடனான கூட்டுப்பங்காண்மையில்  இந்தியா புதிய வருடத்தை நேர்மறையான உணர்வுடனும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் தொடங்கியிருக்கிறது என்றும் ஜனாதிபதி திசாநாயக்கவின் அண்மைய புதுடில்லி விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதிய விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் உயர்ஸ்தானிகர் கூறினார். 

திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கமளித்த அவரிடம் வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்கு வருகை தருவதற்கு முன்னைய அரசாங்கம் விதித்திருந்த ஒரு வருடகால இடைக்காலத்தடை டிசம்பர் 31ஆம் திகதியுடன்  காலாவதியாகியதை தொடர்ந்து சீன ஆய்வுக்கப்பல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா  ஏதாவது பேச்சுவார்த்தையை நடத்தியதா  என்று கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர் இந்தியாவில் திசாநாயக்க செய்த திட்டவட்டமான அறிவிப்பையும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டி, "இலங்கையின் உறுதிமொழியை நாம் கருத்தில் எடுத்துக் கொள்கிறோம். இது விடயத்தில் சரியான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கும் என்று முற்றுமுழுதாக நம்புகிறோம்" என்று சொன்னார். 

இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்திய உறுதிப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கையின் பிராந்தியம் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்ற தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டையே ஜனாதிபதி திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தைகளின்போது மீண்டும் வலியுறுத்திக் கூறினார். அவரின் உறுதிமொழி மீது இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதை செய்தியாளர்கள் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் வெளியிட்ட கருத்துக்களில் இருந்து விளக்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இது ஒன்றும் திசாநாயக்க புதிதாக வழங்கிய உறுதிமொழி அல்ல. முன்னைய ஜனாதிபதிகளும் இதையே கூறினார்கள். ஆனால், அவர்களது அணுகுமுறைகளின் விளைவாக இந்தியா விசனமடைந்த பல சந்தர்ப்பங்களை கடந்த காலத்தில் கண்டிருக்கிறோம். 

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களின் வருகைக்கு   முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஒரு வருட கால இடைக்காலத்தடை விதித்ததற்கு மூன்றாம் தரப்பு ஒன்றின் நெருக்குதலே காரணம் என்றும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடியதாக வெளியாரின் தலையீடு எதுவும் இருக்கமுடியாது என்றும் சீன அதிகாரிகள் பல தடவைகள் கூறினார்கள். தங்களது ஆய்வுக்கப்பல்களை இலங்கை கடற்பரப்பில் அனுமதிக்கக்கூடாது என்று  கொழும்பை இந்தியா நிர்ப்பந்திக்கிறது என்பதே சீனர்களின் மறைமுகமான  குற்றச்சாட்டு. 

ஜனாதிபதி திசாநாயக்க புதுடில்லியில் இருந்து நாடுதிரும்பிய மறுநாள் அவரைச் சந்தித்துப் பேசிய சீன மக்கள் கலந்தாலோசனை மகாநாட்டின் தேசியக்குழுவின் பிரதி தலைவர் கின் போயொங் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு  மற்றும் முதலீடுகள் குறித்து ஆராய்ந்ததுடன் மீண்டும் கடல்சார் ஆய்வு நடவடிக்கைகளை தொடங்கும் திட்டம் தனது நாட்டுக்கு இருப்பதாகவும் கூறினார். 

சீனாவின் ஆய்வுக் கப்பல்களை உளவுக் கப்பல்கள் என்று நம்பும் இந்தியா அவற்றின் இலங்கை வருகை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கும் என்று கூறுகிறது. அது விடயத்தில் தனது  நிலைப்பாட்டுக்கு விரோதமாக இலங்கை செயற்படுவதை இந்தியா ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை.

ஆனால், ஆசியாவின் இரு பெரிய நாடுகளுகளுடனான உறவுகளில் ஒரு சமநிலையைப் பேணுவதில் அக்கறை காட்டும் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு ஆய்வுக்கப்பல் விவகாரம் ஒரு தலையிடியாகவே இருக்கும். அண்மையில் சீனக்கடற்படையின் மருத்துவக் கப்பல் கொழும்புக்கு வருகை தந்தது குறித்து இந்தியாவினால் ஆட்சேபம் தெரிவிக்க முடியவில்லை. ஆனால், மீண்டும் கடல்சார் ஆய்வுகளை ஆரம்பிக்கும் திட்டம் இருப்பதாக சீனா அறிவித்திருப்பதால் அத்தகைய கப்பல்கள் சம்பந்தப்பட்ட  விவகாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தெளிவான நடைமுறையொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டியிருக்கிறது. 

இலங்கையில் தங்களது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பேணிப்பாதுகாப்பதற்கு  போட்டிபோடும் சீனாவையும் இந்தியாவையும் பகைத்துக்கொள்ளாத வகையிலான  அணுகுமுறைகளை கடைப்பிடிப்பது என்பது இலங்கை அரசாங்கத்துக்கு நெடுகவும் இரு பிரச்சினையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையில் தங்களது நலன்களைப் பேணுவதை நியாயப்படுத்துவதற்கு இந்தியாவும் சீனாவும் ஏட்டிக்குப் போட்டியாக வாதங்களை முன்வைக்கின்றன.  இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கையை தனது செல்வாக்குப் பிராந்தியத்துக்கும்   பாதுகாப்பு வளையத்துக்கும் உட்பட்ட  அயல்நாடாக அது பார்க்கிறது. ஆழமான வரலாற்று மற்றும் சமகால கலாசார - மதப் பிணைப்புக்களைக் கொண்ட இயல்பான ஒரு நேச நாடாக இலங்கையை நோக்கும் புதுடில்லி பிரத்தியேகமான உறவுமுறை ஒன்றை கொழும்பிடம் இருந்து  எதிர்பார்க்கிறது. இந்தியாவுக்கு போட்டியான நாடுகளுடனும் அதற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நாடுகளுடனும் இலங்கை நெருக்கமான உறவுகளைப் பேணுவதை இந்தியா  விரும்பாது. 

இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்தாலென்ன, ஆயுதக்கிளர்ச்சிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலென்ன முதலில் உதவிக்கு ஓடோடி வரும் நாடாக இந்தியாவே விளங்குகிறது. முன்னென்றும் இல்லாத வகையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட படுமோசமான பொருளாதார நெருக்கடியின்போது சீனா உட்பட வேறு எந்த நாடும் உடனடியாக கைகொடுக்க முன்வராத நிலையில் 400 கோடி டொலர்கள் அவசர கடனுதவியை இந்தியாவே வழங்கியது. 

இலங்கையில் தனது நலன்களைப் பேணும் நோக்குடனேயே அந்த உதவியைச் செய்ததாக ஒரு தரப்பினரிடம் இருந்து விமர்சனங்கள் வந்தாலும் கூட, இலங்கை மக்களும் அரசாங்கங்களும் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக நன்றி கூறியவண்ணமே இருக்கின்றனர். ஆனால், பொதுவில்  சீனாவின் திட்டங்களைப் போன்று இந்திய முதலீட்டுடனான திட்டங்களுக்கு இலங்கையில் வரவேற்பு இருப்பதில்லை. இது இந்தியாவுக்கு தொடர்ச்சியாக இரு பிரச்சினையாக இருந்து வருகிறது. 

இந்தியாவின் திட்டங்களுக்கு புதுடில்லியில் வைத்து இணக்கத்தை தெரிவிக்கும் இலங்கைத் தலைவர்கள் கொழும்பு திரும்பியதும் உள்நாட்டில் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக தங்களது நிலைப்பாடுகளை மாற்றிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இந்திய உதவியுடன் முன்னெடு்க்க உத்தேசித்திருக்கும் திட்டங்கள்  தொடர்பில் புதுடில்லியில் காணப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு கொழும்பில் வேறுபட்ட விளக்கங்களை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை தலைவர்களுக்கு ஏற்படுகிறது. 

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மார்க்சிய கோட்பாட்டை பின்பற்றிய ஒரு அரசியல் கட்சி என்பதால் தற்போதைய அரசாங்கம்  "கம்யூனிஸ்ட்" சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது என்றும் இலங்கையில் சீனாவின் நலன்களுக்கு அது கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், இன்று சீனா கம்யூனிஸ்ட் நாடு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் இருந்தாலும் சீனா அமெரிக்காவுக்கு அடுத்ததாக பெரிய முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக விளங்குகிறது. அதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இன்று இடதுசாரி அடையாளம் எதையும் காட்டிக் கொள்வதில் ஆர்வம் கொண்டதாக இல்லை என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

இந்தியாவுக்கு மேலாக கூடுதல் அனுகூலத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி திசாநாயக்கவின் விஜயத்தின்போது மேலும் கடன் நிவாரணங்களையும் முதலீட்டு வாய்ப்புகளையும் இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வரக்கூடும் என்று இராஜநந்திர வட்டாரங்கள் ஊகிக்கின்றன. இலங்கையில் முன்னெடுக்கப்படக்கூடிய புதிய அபிவிருத்தி திட்டங்களையும் சீனத் தலைவர்களுடன் சேர்ந்து  திசாநாயக்கவும் அவரது குழுவினரும் அடையாளம் காண்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிபெறுவதற்கு முயற்சிக்கும் இலங்கை தற்போதைய தருணத்தில் எந்தவொரு வல்லாதிக்க நாட்டுடனும் முரண்படக்கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது கட்டுப்படியாகாகாது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டிக்குள் இலங்கை சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யக்கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது ஜனாதிபதி திசாநாயக்கவைப் பொறுத்தவரை கயிற்றில் நடப்பதைப் போன்றதாகும்.

இந்தியாவும் சீனாவும் மாத்திரமல்ல, அமெரிக்காவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளை உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றது.கொழும்புடனான அதன் மூலோபாய நலன்களை பேணுவதில் அமெரிக்கா அக்கறை கொண்டிருக்கிறது.  அண்மைக் காலத்தில் ஜனாதிபதி திசாநாயக்கவையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்களையும் அடிக்கடி சந்தித்த வெளிநாட்டு இராஜதந்திரி என்றால் அது அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் தான். தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் ஜனாதிபதி திசாநாயக்க சிக்கலான புவிசார் அரசியலையும் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவேண்டிய  பாரிய பொறுப்பைக் கொண்டிருக்கிறார்.    நன்றி வீரகேசரி 

No comments: