ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவின் முன்மொழிவுகள்

 

05 Jan, 2025 | 11:53 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

னாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயம் தொடர்பில் தேசிய அளவில் மாத்திரமன்றி முக்கிய உலக நாடுகள் பலவும் அவதானம் செலுத்தி வருகின்றன. அதேபோன்று தேசிய அரசியலிலும் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்கள் வலுப்பெற்றுள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை கையாள்வதில் ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் நெருக்கடிகளை சந்திக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கைகளாக உள்ளன.

இவ்வாறானதொரு நிலையில் புதிய ஆண்டின் பாராளுமன்ற அமர்வுகள் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (7) ஆரம்பிக்கப்படவுள்ளன. எனவே இனி வரக்கூடிய  நாட்கள் தேசிய அரசியலில் கொந்தளிப்புகளை ஏற்படுத்துவதாகவே இருக்க போகின்றது.

அநுரவின் சீன விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஜனாதிபதி அநுரவின் சீன விஜயம் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. இதற்கு பிரதான காரணம், சீனாவை நோக்கி தற்போதைய அரசாங்கம் நகரும் என்ற ஐயப்பாடுகளாகும்.

இவ்வகையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம்  மாத்திரமன்றி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கமும் கடந்த காலங்களில் வலுவான சீனாவுக்கு ஆதரவான கொள்கையைக் கொண்டிருந்தது. இதன் காரணமாக அப்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியின் பின்னர், தனது தோல்வியின் பின்னணியில் இந்தியா இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்தார். மறுபுறம் கோட்டபாய ராஜபக்ஷவும் சீன சார்பு கொள்கையில் இருந்தார். அதன் இறுதி விளைவு நாட்டுக்குள் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் உருவானது.

இவ்வாறானதொரு புவிசார் அரசியல் முக்கியத்துவம் மிக்க இலங்கையின் உள்ளக அரசியல் சூழலில் ஜனாதிபதி அநுரவின் சீன விஜயத்தை, இந்தியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் தீவிரமாக கவனித்து வருகின்றன.

ரில்வின் சில்வாவுக்கும் சீனா அழைப்பு  

தற்போதைய அரசாங்கத்துடனான சீனாவின் அண்மைய தொடர்புகளை நோக்கும்போது ஜனாதிபதியின் சீன விஜயம் மிகவும் விசேடமான ஒன்று என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் பயணத்தைத் திட்டமிடுவதற்காக அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்திருந்தது. இந்த குழுவானது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையகத்திலிருந்து சந்திப்புகளை முன்னெடுத்திருந்தது. இந்திய விஜயத்தை நிறைவு செய்து வந்தவுடனேயே ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததது.

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய உறவு குறித்து சீன குழுவின் சந்திப்பின் பின்னர் ரில்வின் சில்வா குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜனாதிபதியுடனான சீன விஜயத்தில் ரில்வின் சில்வாவுக்கும் பங்கேற்பதற்கான அழைப்பை சீன தரப்பு விடுத்திருந்தது.

சீன முன்மொழிவுகள்

ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்த சீனக் குழுவினர், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் விசேட செய்தியொன்றை குறிப்பிட்டுள்ளனர். அதாவது ஜனாதிபதி அநுரவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சீன விஜயத்தின்போது முன்வைக்க விரும்பும் எந்தவொரு புதிய திட்டங்களுக்கும், அதனை நடைமுறைப்படுத்த சீன அரசாங்கம் தயாராக உள்ளது என்பதே அந்த செய்தியாகும். இதுவரை எந்தவொரு ஜனாதிபதிக்கும் கிடைக்காத தனித்துவமான வாய்ப்பினை சீனா முன்வைத்துள்ளது.

மேலும், சீன விஜயத்தின்போது, தற்போது தடைப்பட்டுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த மற்றும் மீரிகம பகுதிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. தற்போது, மத்திய அதிவேக நெடுஞ்சாலை பகுதியை பொறுப்பேற்று நடத்தும் சீன நிறுவனத்துக்கு அரசு அதிக அளவில் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக சீன தரப்பிலிருந்து அரசுக்கு மிகவும் சாதகமான செய்தி கிடைத்துள்ளது.

அதாவது, உரிய இழப்பீட்டுத் தொகையை முற்றாக இடைநிறுத்த அல்லது இழப்பீட்டுத் தொகையை பெருமளவு குறைத்து கடவத்தை - மீரிகம பகுதியின் எஞ்சிய பகுதியை நிர்மாணிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும், கைவிடப்பட்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கண்டிப் பகுதியை நிர்மாணிப்பது குறித்து சீனா நம்பிக்கையுடன் உள்ளது. அத்துடன் சீனா தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் பாரிய கைத்தொழில் வலயமொன்றை அமைப்பதற்கான திட்டங்களை ஏற்கனவே சீனா தயாரித்துள்ளது.

கடும் தீர்மானத்தில் ஜனாதிபதி

எவ்வாறாயினும், இம்முறை ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது சீன அரசாங்கத்துக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட ஜனாதிபதி தயாராகவுள்ளார். அதாவது சீனா இலங்கையில் மேற்கொள்ளும் எந்தவொரு முதலீட்டிலும் இந்த நாட்டின் அரசியல்வாதிகளுக்கோ அல்லது இந்நாட்டு அதிகாரிகளுக்கோ அல்லது இந்நாட்டு நிறுவனங்களுக்கோ  தரகு பணமோ இலஞ்சமோ வழங்க கூடாது என்பதாகும்.

ஏனெனில், ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், பெரும் முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கும் போது, இலங்கை அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களுக்கு, பல கோடி ரூபாயில் பல்வேறு தொகைகள் வழங்கப்பட்டன. எனவே தனது நிர்வாகத்தின் போது  இத்தகையை எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் முகங்கொடுக்காமல் தூய்மையான நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு  சீன ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.

சஜித்துக்கு பங்காளிகளின் அழுத்தம்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்று இரு தரப்பிலிருந்தும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தலைமைத்துவங்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதனால் பொதுத் தேர்தலிலும் இரு தரப்புமே படுதோல்வியடைந்தன. எவ்வாறிருப்பினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலிலாவது இருதரப்பும் இணைந்து களமிறங்கினால் ஓரளவேனும் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என சஜித் - ரணில் இணைவை விரும்பும் தரப்பு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல போன்றோர் இதனை நேரடியாகவே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியிருக்கின்றனர். எனினும் சஜித்திடமிருந்து சரியான பதிலொன்று அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஐ.தே.க. தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்க ரணில் தயாராக இல்லை என்றால், இந்த இணைவு சாத்தியப்படாது என்பதே சஜித்தின் நிலைப்பாடாகவுள்ளது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகளும் தற்போது இது குறித்து சஜித்துடன் பேச ஆரம்பித்திருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் மலையகப் பகுதிகளில் சஜித்துக்கு பெற்றுக் கொடுத்த முழுமையான வெற்றியை பொதுத் தேர்தலில் பெற்றுக் கொடுக்க முடியாத நிலைமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஏற்பட்டது. எனவே ஐக்கிய மக்கள் கூட்டணியை மேலும் பலப்படுத்தி மறுசீரமைக்க வேண்டும் என்று மனோ, ரிஷாட், ஹக்கீம் தரப்புக்களும் வலியுறுத்தியிருக்கின்றன. அதனால் தான் அண்மையில் கண்டியில் செய்தியாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இருதரப்பும் இணையவில்லை என்றால் பங்காளிகளின் ஆதரவையும் இழக்க நேரிடும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

நாளை திங்கட்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன் போது இவ்வார பாராளுமன்ற அலுவல்களில் முக்கியத்துவமளிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. பாராளுமன்ற குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற அரசியல் குழு கூட்டத்தில் மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. அத்தோடு மத்திய குழு கூட்டத்தை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிக்கவுள்ள அதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள தொகுதி அமைப்பாளர்களுடன் கூட்டமொன்று தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பதவிகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அதன் இளம் எம்.பி.க்கள் சிலர் கட்சி தலைமைத்துவத்திடம் வலியுறுத்தியிருக்கிறது. களத்தில் நேரடியாக இறங்கி பாடுபடக் கூடியவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாகவுள்ளது. மத்திய குழு கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. எது எவ்வாறிருப்பினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஆரம்பிக்கப்பட முன்னர் இந்த மறுசீரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் சஜித்திடம் குறிப்பிட்டிருக்கின்றனர்.   நன்றி வீரகேசரி 

No comments: