இன்றுநீயும்
புரிகின்ற வினைதனுக்கே ஓர்நாள்
இருவினைக்கும் ஏற்றதொரு எதிர்வினையும் உண்டே!
தொன்றுதொட்டு
முன்னோர்கள் உணர்த்திவரும் உண்மை,
தொய்வதில்லை; தவிர்த்திடுவாய் தீச்செயல்கள்
தன்னை;
நன்றுநன்று
நீசெய்யும் நற்செயல்கள் என்றும்
நல்வினையைக் கூட்டியுன்னை வாழ்விக்கும்,
உறுதி!
என்றுமுன்றன்
ஊழ்வினைதான் உருத்துவந்தே ஊட்டும்
என்றுணர்ந்து நற்செயலே செய்திடுவாய் நீயே! (1)
நற்செயலைப்
பெருக்கித்தீச் செயல்தவிர்த்தே வாழ
நலம்பெறுவாய் நீயுமிந்த நானிலத்தில் என்றும்;
பெற்றசெல்வம்
பகிர்ந்தளித்து வாழ்ந்திட்டால் இந்தப்
பெருநிலத்தில் உன்வாழ்வும் சிறப்புடனே
அமையும்;
பற்றுதனைப்
பொருள்மீதில் வைக்காது வாழ்ந்தால்
பயனடைவாய்ப் பேரின்பப்
பெருவாழ்வால் நீயும்;
பெற்றிட்ட
பிறப்பெல்லாம் பேரின்பம் தனையே
பெற்றுவாழப் பிறைசூடன் அளித்திட்ட
கொடையே! (2)
No comments:
Post a Comment