வருஷம் 1958
State School Arts கேரளாவின் மாநில இளையோர் இசை நிகழ்வில் இரண்டு இளையோர் மேடைக் கச்சேரியை அலங்கரிக்கிறார்கள்.
ஒருவர் 18
வயசு நிரம்பியவர், Palluruthy பள்ளியில் இருந்து
கே.ஜே.ஜேசுதாஸ் பாடகராகவும்,
இன்னொருவர் இரிஞ்சாலக்குடா தேசியப் பள்ளியில் இருந்து, 14 வயது நிரம்பிய P.ஜெயச்சந்திரன் மிருதங்க வாத்தியக் கலைஞராகவும் அந்தக் கச்சேரி அமைகின்றது.
மலையாள சினிமாவின் அடுத்த யுகத்தின் முன்னணி இசை நட்சத்திரங்களாக ஒளிவீசுவார்கள் என்று அப்போது நினைத்திருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் காலம் அப்போது கணக்கு வைத்துக் கொண்டது.
பாடகராக வருவதற்கு முன்பே ஜெயசந்திரன் சகோதரர் அமரர்
சுதாகரனின் நண்பராக விளங்கியவர் கே.ஜே.ஜேசுதாஸ். ஜெயச்சந்திரனின் இளைய சகோதரர் கிருஷ்ணகுமாருக்கு ஹிந்திப் பாடகர்களில் கிஷோர் குமார் என்றால் இஷ்டம், ஜேசுதாஸுக்கோ மொஹமெட் ரஃபி என்றால் கொள்ளைப் பிரியம். இருவரும் சேர்ந்து பாடி மகிழ்வார்களாம்.
ஜெயசந்திரனை மலையாளத்தின் மகோன்னத இசைமைப்பாளர்
தேவராஜன் மாஸ்டரிடம் அறிமுகம் செய்து
வைத்தவர் கே.ஜே.ஜேசுதாஸ் தான்.
காட்டுப்பூக்கள் படத்துக்காக தேவராஜன் மாஆடர் இசையில் ஜேசுதாஸ் பாடிய
மாணிக்க வீணையுமாய்
https://www.youtube.com/watch?v=Li18fB13CPQ
பாடலைப் பாடிக் காட்டுகிறார்
ஜெயச்சந்திரன்.
களித்தோழன் (1966) என்ற படத்துக்காக, கே.ஜே.ஜேசுதாஸுக்காக ட்ராக் பாட வேண்டும் என்று அழைக்கப்படுகிறார்.
முதலாவது, இரண்டாவது
என்று மீளப் பாடுகிறார், தேவராஜன் மாஸ்டருக்குத் திருப்தியே
இல்லை. மூன்றாவதாகப் பிராவகம் எடுக்கிறது பாடல்.
அதுதான்
மஞ்ஞலையில் முங்கிதோர்த்தி
https://www.youtube.com/watch?v=FtjykWLrC8w
எந்தவித முடிவும் சொல்லாமல் பாடலுக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று 50 ரூபா இயக்கு நர் கிருஷ்ணன் நாயரால் ஜெயசந்திரனிடம் கொடுக்கப்படுகிறது.
ஜேசுதாஸுக்கான ட்ராக் பாடல் தானே என்ற ஒரு குழப்ப நிலையில் இருந்த ஜெயச்சந்திரன்,
பாடல் ஓகேயா?
என்று தயங்கிக் கேட்க,
“ஆமாம் நீங்கள் பாடிய பாடல் தான்
அப்படியே இருக்கப் போகிறது”
பலமாகச் சிரித்தவாறே கிருஷ்ணன் நாயர்
சொன்னாராம்.
அப்போது தான் தேவராஜன் மாஸ்டர்
குறும்புத்தனமாக ஏமாற்றியது புரிந்தது அந்த 21
வயசு வாலிபன் ஜெயச்சந்திரனுக்கு.
அதன் பின் மலையாளம், தமிழ் என்று சங்கீதச் சிற்றரசனாகக் கோலோச்சினார் என்பது வரலாறு.
தேவராஜன் மாஸ்டரிடம் உதவி
இசையமைப்பாளராக அப்போது இருந்த ஆர்.கே.சேகரின் மகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கூடப் பாடி
விடுங்கள் என்று எழுதி வைத்ததும் காலதேவன் கணக்கு.
ஜெயச்சந்திரன் நம்மை விட்டுப் பிரிந்த ஜனவரி 9 ஆம் திகதி பின்னிரவோடு,
ஜனவரி கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் 85 பிறந்த தினமாக அமைந்திருக்கிறது.
“The natural flow of the Tamil language gives a musical touch to Tamil,
which makes its songs much more musical”
இது பாடகர் ஜெயச்சந்திரனின் கூற்று.
தமிழ்த் திரையுலக வாய்ப்புக்காக தமிழை இன்னோரன்ன வார்த்தை ஜாலமிட்டுப் புகழ்ந்து
பேசும் பலரை நாம் கண்டிருப்போம். ஆனால் உள்ளார்ந்த நேசத்தோடு தமிழ் மொழியின்
சிறப்பைத் தன் மேடைகளில் சொல்லி வரும் பாட்டுக்காரர் தான் இந்த ஜெயசந்திரன்.
மலையாள உலகத்தில் இருந்து பெருவாரியான பாடகர்கள் தமிழுக்கு வந்து ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அவர்களில் ஆனானப்பட்ட ஜேசுதாஸுக்கே ஆரம்பத்தில் தமிழ் உச்சரிப்பு பேதம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் ஜெயச்சந்திரனைப் பொறுத்தவரை அவ்வாறானதொரு நிலை இருந்ததாக எனக்குப் படவில்லை.
பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட
பாடல்களை மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம்,
ஹிந்தி என்று பரந்து விரிந்து சிறகடித்துப் பாடியவர்.
“உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை” பாடலைக் கேட்கும் ஆனானப்பட்ட இளையராஜா பாடல்களைத் தின்று கொட்டை போட்டவர்களே
இன்னும் அதைப் பாடியது ஜெயச்சந்திரன்
என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
“ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு”
பாடலை நினைத்தால் கேப்டன் வருவார்
கேப்டனை நினைத்தால்
“ராசாத்தி
உன்னை காணாத நெஞ்சு”
பாடல் வரும்.
றேடியோ சிலோன் காலத்து நினைவுகளில் மட்டுமல்ல, பலரின் கிடுகுவேலிக் காதல் கதைகளுக்கும் பாலமாக அமைந்தது இந்த “பொன்னென்ன பூவென்ன கண்ணே”
இயக்குநர் ஶ்ரீதர் “அலைகள்” படத்தை இயக்கிய போது அப்போது தான்
கன்னடத்தில் ஒரு தேசிய விருதுப் படத்தில் அறிமுகமான விஷ்ணுவர்த்தனை நாயகனாக்கிக்
கொண்டார். “சாகச சிம்ஹா” என்று
சந்தன சினிமா உலகம், அதாங்க கன்னடத் திரையுலகில் மறைந்தும்
மறையாப் புகழ் கொண்டவர் ஒரு அழுத்தமான கதையம்சம் கொண்ட தமிழ்ப்பட வாய்ப்பைத் தன்
ஆரம்ப காலத்தில் பெற்றது தமிழ்த் திரையுலகுக்கும் பெருமை. பின்னாளில் ஈட்டி,
விடுதலை என்று நடித்த போதும் அலைகள் தான் அவருக்கு அடையாளம்.
அலைகள் படத்தைப் பலர் மறந்தாலும் அதை நினைப்பூட்டுவது இந்த “பொன்னென்ன பூவென்ன கண்ணே”. மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் அமைந்த பாட்டு தமிழுக்கு ஜெயச்சந்திரனைச் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றது. இதற்கு முன்பே “மணிப்பயல்” படத்தில் “தங்கச் சிமிழ் போல்” என்ற பாடல் வழியாக இதே ஆண்டு மெல்லிசை மன்னரால் அழைத்து வரப்பட்டவர் ஜெயச்சந்திரன்.
ஆனால் “பொன்னென்ன
பூவென்ன கண்ணே” அவருக்குப் பரவலான அறிமுகத்தைக்
கொடுத்தது.
“களித் தோழன்” என்ற மலையாளப்படத்தில் அறிமுகமானவர் (பாருங்கள் முதல் படத் தலைப்பே எவ்வளவு பொருத்தம் ஜெயச்சந்திரன் எங்கள் களிப்பில் பங்கெடுக்கும் தோழன் தானே?)
தமிழுக்கு வருவதற்கு முன்பே மெல்லிசை
மன்னரின் “பனிதீராத வீடு” படத்தில்
“நீலகிரியுடே” சுப்ரபாதம்
பாடி கேரளத்தின் சிறந்த பாடகர் விருதைப்
பெற்றவர் அதே மெல்லிசை மன்னர் வழியாகத் தமிழுக்கும் விருந்து வைத்தார்.
கன்னடத்தின் மிகப்பெரிய நட்சத்திரம் விஷ்ணுவர்த்தன், மலையாளத்தின் வழி உயர் பாடகர் ஜெயச்சந்திரன் இருவரையும் “அலைகள்” இணைத்தது பொன்னென்ன பூவென்ன கண்ணே” வழியாக.
“பொன்னென்ன பூவென்ன கண்ணே” பாடலைக் கேட்கும் தினமெல்லாம் அசரீரியாக ஒரு காதல் ஜோடிப் பாடல் போல உணர்வெழும். ஆனால் தனித்து நின்று ஜாலம் புரிவார் ஜெயச்சந்திரன். அடிப்படையில் மலையாளியாக இருந்தாலும் தமிழென்று வந்து விட்டால் கண்டிப்பான வாத்தியாராக ஆகி விடும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன், தமிழ் மேல் காதல் கொண்ட இளைஞன் ஜெயச்சந்திரன் தனது 29 வது வயதில் பாடிய பாடலைக் கேட்டுப் பாருங்கள். ஒரு பிசிறு இருக்காது மொழி உச்சரிப்பில். பாடலைக் கேட்கும் போது ஊஞ்சலில் அமர்த்தித் தள்ளி விடும் உணர்வெழும். பாட்டின் சந்தத்தோடு மிக நெருக்கமாகத் தனக்கே உரித்தான தணிந்த குரலில் உருக்கம் காட்டுவார் நம் ஜெயச்சந்திரன்.
மார்ச் 3, 1944 ஆம் ஆண்டு ரவிவர்மா கொச்சினியன் தம்புரானுக்கும், சுபத்ரா குஞ்சம்மாவுக்கும் மகனாகப் பிறந்தவர் ஜெயச்சந்திரன்.
தனது
எண்பதாவது அகவையில் ஜனவரி 9, 2025 காலமானவர், நம்மை விட்டுப் பாடல்களோடு
பிரியாதிருப்பார்.
செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா
போய் வாருங்கள் ஜெயேட்டன்
கானா பிரபா
No comments:
Post a Comment