இலங்கைச் செய்திகள்

வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படை பாதுகாப்பு இன்றிலிருந்து நீக்கம்

வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் - சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு !

இலங்கைத் தமிழரசுக் கட்சி மாவையின் தலைமையில் நீடிப்பதில் கட்சிக்குள் இருவேறுபட்ட நிலைப்பாடு  



வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்  

23 Dec, 2024 | 04:46 PM
image

வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாண மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச் சவாலான விடயமாகவே இருக்கிறது என வட மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும் “கரைஎழில்” நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (22) கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதிக்கட்டப் போர் ஆரம்பமானது. 

இந்த மாவட்ட மக்களுடன் நானும் இடம்பெயர்ந்து செல்லவேண்டியிருந்தது. அப்படியானதொரு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன். 

எந்த வசதிகளும் இல்லாமல் அன்றைய எமது பணிக்காலம் இருந்தது. ஆனாலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கியிருந்தோம்.

உங்களுடைய தற்போதைய மாவட்டச் செயலர் சு.முரளிதரன் நேர்மையானவர். மக்களின் துன்பங்களை அறிந்து அவர்கள் துயர் துடைக்கக்கூடிய ஒருவர். அவர் உங்களுக்கு மாவட்டச் செயலராக கிடைத்தமை சிறப்பானது.

இன்றைய இளையோர்களிடம் மற்றவர்களை மதிக்கும், உதவி செய்யும் பண்புகளைக் காண முடியவில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருக்கிறது. வீதிகளில் குப்பை போடுகிறோம். வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டுகின்றோம். ஒழுக்கமில்லாத சமுதாயமாக நாங்கள் மாறிக்கொண்டு போகின்றோம். மிகக் கவலையாக இருக்கிறது.

விழா மண்டபத்தை இந்தப் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக நிரப்பிக்கொண்டிருப்பதாக பிரதேச செயலரும், மாவட்டச் செயலரும் என்னிடம் சொன்னார்கள். உண்மையில் வேதனையாக இருக்கிறது. 

எமது பிரதேசத்தின் பண்பாட்டு விழாவுக்கு பெருமளவினர் வருவதில்லை. ஆனால் குத்துப்பாட்டுக்களுடன் நடக்கும் நிகழ்வுகளுக்கு அள்ளுகொள்ளையாக செல்கிறார்கள்.

ஏனையவர்களுக்கு உதவி செய்வதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது. ஆனால், இன்று எம்மில் பலர் பணம்தான் சந்தோஷம் என்று நினைக்கிறார்கள். பணம் சந்தோஷத்தை தராது. ஒருவனுக்கு நாங்கள் உதவி செய்தால் எங்களுக்கு பல மடங்கு பல்வேறு வழிகளில் திருப்பி உதவி கிடைக்கும். 

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறருக்கு உதவி செய்யவேண்டும். அதேபோல எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றையவர்களிடத்தில் நாம் அன்பு செலுத்தவேண்டும்.

இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கூறிவிட்டு அவர்களை அவரிடம் அனுப்பினேன். அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கிறார். இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. 

எங்களுக்கு பதவிகள் தரப்பட்டமை மக்களுக்கு சேவை செய்யவே. அதை சகல அலுவலர்களும் மனதில் இருத்துங்கள்.

உங்களிடம் சேவைக்காக பொதுமக்கள் வரும்போது, அந்தப் பொதுமகனாக நீங்கள் இருந்தால் எப்படி நடந்துகொள்வீர்கள்? அப்போது உங்களுக்கு பேசுவதற்கு அல்லது மனிதநேயமற்று நடப்பதற்கு மனம் வருமா? எனவே, தற்போதுள்ள சகல வசதிகள், ஆளணிகளை வைத்துக்கொண்டு  மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க சகலரும் முன்வரவேண்டும் என்றார்.   நன்றி வீரகேசரி 







முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படை பாதுகாப்பு இன்றிலிருந்து நீக்கம்  


Published By: Digital Desk 3

23 Dec, 2024 | 03:41 PM
image

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படை பாதுகாப்பு இன்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  பொலிஸார் மாத்திரம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 







வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் - சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்  

23 Dec, 2024 | 01:59 PM
image

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பிரதேச செயலகத்தின் முன்பாக உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 20ஆம் திகதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் கிராம உத்தியோகத்தர் கடமை நிமித்தம் தனது பிரதேசத்துக்குச் சென்று வரும்போது சிலரால் தாக்கப்பட்டார். 

இந்த தாக்குதலில் காயமடைந்தவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை. 

இந்த தாக்குதலை கண்டித்தும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்தின் முன்பாக ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“கைது செய் கைது செய் தாக்கியவரை”, “அரச உத்தியோகஸ்தரின் பாதுகாப்பை உறுதி செய்”, “கடமையை செய்தால் உயிருக்கு அச்சுறுத்தலா”, “அரச பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு எப்போது தீர்வு” என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

அதையடுத்து, போராட்ட களத்துக்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். 


நன்றி வீரகேசரி 






திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு !  

27 Dec, 2024 | 07:35 AM
image

திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மிதப்பதை நேற்று வியாழக்கிழமை (26) அதிகாலை அவதானித்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினர் குறித்த விமானத்தை மீட்டு அதனை கரைக்கு கொண்டுவந்ததாக  விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார்.

திருகோணமலை கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது கடலில் சிறிய ரக விமானம் மிதப்பதை கண்ட மீனவர்கள் அதனை கைப்பற்றி தமது படகில் இணைத்து கொண்ட பின்னர் கடற்படையினருக்கு தகவல் வழங்கினர் இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற கடற்படையினர் விமானத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

இந்த விமானம் ஆளில்லா விமானம் என்பதுடன் இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுமார் 40 கிலோ எடையுடையது என்றும் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில்  தெரியவந்துள்ளது.

இருந்தபோதும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விமானம் எப்படி வந்தது, ஏன் வந்தது  தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி 





இலங்கைத் தமிழரசுக் கட்சி மாவையின் தலைமையில் நீடிப்பதில் கட்சிக்குள் இருவேறுபட்ட நிலைப்பாடு  

26 Dec, 2024 | 10:25 PM
image

(ஆர்.ராம்)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவியில் மாவை.சோ.சேனாதிராஜா தொடர்வதில் கட்சிக்குள் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரை மட்டுமல்ல கட்சியின் எந்தவொரு மத்தியகுழு உறுப்பினரையும் பொதுச்சபையின் அனுமதியின்றி நீக்கமுடியாது என்று அக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் ஊடகப்பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து பதவி விலகுவதாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பைச் செய்தபின்னர் எந்தவொரு அனுமதியையும் யாரிடமும் பெற வேண்டுமென்று யாப்பில் கூறப்பவில்லை என்று தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஞானமுத்து சிறிநேசன் எம்.பி தெரிவிக்கையில்,

மாவை.சோ.சேனாதிராஜா மட்டுமல்ல கட்சியின் எந்தவொரு மத்திய குழு உறுப்பினரையும் பதவி நீக்குவதற்கு பொதுச்சபையின் அனுமதி அவசியமாகும். 

ஆகவே பொதுச்சபையின் அனுமதியின்றி மாவை.சோ.சேனாதிராஜாவை கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து நீக்கிவிட முடியாது.

முன்பு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த கி.துரைரெட்ணசிங்கம் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை தன்னிச்சையாக வழங்கினார் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்து அவரை பதவி விலக்க வேண்டும் என்று கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்தில் குறிப்பிட்டபோது, அவரைப் பதவி நீக்கம் செய்வதாக இருந்தால் கட்சியின் பொதுச்சபையின் அனுமதி தேவையென்றும் அவ்வாறு அனுமதியின்றி பதவி நீக்கினால் நீதிமன்றத்தினை நாட வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆகவே, துரைரெட்ணசிங்கம் விடயத்தின் பொதுச்சபையின் அனுமதி தேவiயாக இருக்கின்றபோது மாவை.சோ.சேனாதிராஜாவின் விடயத்தில் அவ்விதமான அனுமதி தேவையில்லை என்று கூறுவது எவ்வாறு நியாயமாகும். ஆகவே மாவை.சேனாதிராஜாவை பதவி நீக்கம் செய்ய முடியாது. அவர் தலைமைப் பதவியில் நீடிப்பார் என்றார்.

இதேவேளை, எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், மாவை.சோ.சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளருக்கு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியே எழுத்துமூலமாக அறிவித்துவிட்டார். அக்காலம் தேர்தலுக்குரியதாக இருந்தமையால் கட்சியால் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்க முடியவில்லை. 

தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் எழுத்துமூலமாக மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் அவர் ஏற்கனவே அறிவித்த பதவி விலகல் நிலைப்பாட்டிலா உள்ளார் என்ற கேள்வியை எழுப்பி எழுத்துமூலமாக கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

ஆனால் அதற்குரிய பதவிலை கட்சியின் தலைவர் அனுப்பி வைக்கவில்லை. ஆகவே அவர் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து நீங்கும் தீர்மானத்தில் உறுதியாக இருக்கின்றார் என்று தான் கருதும் நிலைமை ஏற்பட்டது. 

இவ்வாறான நிலையில் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து நீங்குவதாக தானாகவே அவர் அறிவித்த பின்னர் அப்பதவி வெற்றிடமாகிறது. இந்த விடயத்தில் மத்தியசெயற்குழு யாரையும் பதவி நீக்கம் செய்யவில்லை. உறுப்புரிமையை இழக்கவும் செய்யவில்லை. 

அறிவித்த முடிவொன்றையே அமுலாக்குவதற்கு முனைகின்றது. எனவே இந்த விடயத்தில் பொதுச்சபையின் அனுமதி அவசியமற்றது. உண்மையில் மத்திய குழுவின் தெளிவான நிலைப்பாட்டிற்காகவே வாக்கெடுப்புக் கூட அவசியமாகின்றது. 

கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து நீங்குவதாக அறிவித்து ஒன்றரை மாதம் நிறைவடைந்திருக்கின்றது என்பதும் இங்கே முக்கியமான விடயமாகின்றது என்றார்.    நன்றி வீரகேசரி 




No comments: