கொங்கோவில் மீண்டும் படகு விபத்து 38 பேர் பலி
ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தைக்குள் காரை செலுத்திய சவுதி வைத்தியர் : இருவர் உயிரிழப்பு, 60 பேர் காயம் !
கிறிஸ்மஸ் தினத்தில் ரஸ்யா உக்கிரம் - உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பு மீது தாக்குதல்
காசாவில் ஓயாத போரால் பெத்லகேமில் 2ம் ஆண்டாக களையிழந்த கிறிஸ்துமஸ்: வெறிச்சோடி கிடக்கிறது மேங்கர் சதுக்கம்
தென்கொரிய விமான விபத்து - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு
திடீரென தீப்பற்றி தரையிறங்கிய ஏர் கனடா விமானம்
கொங்கோவில் மீண்டும் படகு விபத்து 38 பேர் பலி
22 Dec, 2024 | 10:59 AM
கொங்கோவில் படகுவிபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர்.
கிறிஸ்மஸ் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக்கொடிருந்தவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியுள்ளது.
வடகிழக்கு கொங்கோவின் புசிரா ஆற்றுப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.38 பேர் உயிரிழந்துள்ளனர் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகளும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் தெரிவித்துள்ளனர்.
20பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை கொங்கோவில் இடம்பெற்ற படகு விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு துறைமுகங்களில் 400க்கும் அதிகமானவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகே விபத்திற்குள்ளாகியுள்ளது என உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தைக்குள் காரை செலுத்திய சவுதி வைத்தியர் : இருவர் உயிரிழப்பு, 60 பேர் காயம் !
21 Dec, 2024 | 08:05 AM
ஜேர்மனியிலுள்ள கிறிஸ்மஸ் சந்தையொன்றுக்குள் வைத்தியர் ஒருவர் காரைச் செலுத்தி தாக்குதலை ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஜேர்மனியின் மக்டிபேர்க்கில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய 50 வயதுடைய வைத்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்து வைத்தியர் சவுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு குடிபெயர்நதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தைக்குள் காரை செலுத்தி விபத்து இடம்பெறும் போது சந்தைக்குள் சனக்கூட்டம் காணப்பட்டுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்திய கார் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதாகவும் அந்தக் கார் ஜேர்மனியின் முனிச் நகரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜேர்மனியின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவொரு திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாமெனவும் காருக்குள் வெடிபொருட்கள் உள்ளதாகவும் ஜேர்மனிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
கிறிஸ்மஸ் தினத்தில் ரஸ்யா உக்கிரம் - உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பு மீது தாக்குதல்
25 Dec, 2024 | 12:58 PM
உக்ரைன் மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் ரஸ்யாவின் உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ரஸ்யா உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து பாரிய வலுசக்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
கார்கிவ் நகரத்தின் மீது கடும் தாக்குதல் இடம்பெறுவதாக அதன் மேயர் தெரிவித்துள்ளார்.
டிரோன் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் மெட்ரோ புகையிரத நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தலைநகர் உட்பட பல பகுதிகளில் வலுச்சக்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தினத்தன்று அதிகாலையில் ரஷ்யா உக்ரைனை இருளில் மூழ்கடிக்க முயற்சிக்கின்றது என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
காசாவில் ஓயாத போரால் பெத்லகேமில் 2ம் ஆண்டாக களையிழந்த கிறிஸ்துமஸ்: வெறிச்சோடி கிடக்கிறது மேங்கர் சதுக்கம்
25 Dec, 2024 | 12:45 PM
காசாவில் ஓயாத போரால் தொடர்ந்து 2வது ஆண்டாக பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் யாருமின்றி மேங்கர் சதுக்கம் வெறிச்சோடி காணப்படுகிறது. இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உலகமே தயார் நிலையில் உள்ளது. ஆனால், பெத்லகேம் மட்டும் எந்த கொண்டாட்டத்திற்கான அறிகுறியின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நகரம் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.
காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடக்கும் போரால் கடந்த ஆண்டே பெத்லகேமுக்கு எந்த சுற்றுலா பயணிகளும் வரவில்லை. இதனால் கடந்த ஆண்டே பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. ஆனால் அடுத்த ஆண்டாவது தங்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என காத்திருந்த பாலஸ்தீன மக்களின் எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் நிறைவேறவில்லை. காசா போர் 15 மாதங்களுக்கும் மேலாக நீடிப்பதால் இந்த ஆண்டும் பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏதுவுமின்றி களையிழந்து காணப்படுகிறது. இங்குள்ள மேங்கர் சதுக்கத்தில் பெரிய கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்படவில்லை.
நினைவுப் பரிசுகள், பாரம்பரிய கைவினைப் பொருட்களை வாங்க ஆளில்லை. சதுக்கத்தை சுற்றி உள்ள கடைகள் காற்று வாங்குகின்றன.
கொரோனாவுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பெத்லகேமுக்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் உலகின் பல இடங்களில் இருந்து வருவது வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு 1 லட்சத்திற்கும் குறைவான மக்களே வந்துள்ளனர். இந்த ஆண்டும் எந்த முன்னேற்றமும் இல்லை என அங்குள்ள மக்கள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். பெத்லகேம் நகரில் 5,500 ஓட்டல்கள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட அனைத்துமே காலியாக இருப்பதாக அதன் உரிமையாளர்கள் கூறி உள்ளனர். ஓட்டல்களில் தங்குபவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகி விட்டது.
* பாலஸ்தீனர்கள் வெளியேற கூடாது
நேட்டிவிட்டி தேவாலய பாதிரியார் இசா தால்ஜி கூறுகையில், ‘‘இங்கு பல குடும்பங்கள் நிதி ரீதியாக சிரமப்படுகின்றனர். வாடகை, பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை. யாருக்கும் வருமானம் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் கிறிஸ்துமஸ் பரிசுகளை வாங்குவது அல்லது விடுமுறையை கொண்டாடுவது மிகவும் குறைவு. அவர்களுக்கு தேவாலயம் சார்பில் நாங்கள் உதவுகிறோம். ஆனாலும், தேவைகள் நிறைய உள்ளன. பலர் பெத்லகேமை விட்டு வெளியேறிவிட்டனர். இப்படிப்பட்ட சவால்கள் இருந்த போதிலும், பாலஸ்தீனர்கள் தொடர்ந்து பெத்லகேமில் வசிப்பதை ஊக்குவிப்பதே இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தின செய்தியாக வைக்க விரும்புகிறோம். இயேசு பிறந்த போது இருள் மறைந்து ஒளி பிறந்தது. எனவே நாம் காத்திருக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். நம் வேர்களுடன் நாம் இருக்க வேண்டும். நம் வேர்கள் பெத்லகேமில் உள்ளன’’ என்றார். நன்றி வீரகேசரி
தென்கொரிய விமான விபத்து - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு
29 Dec, 2024 | 03:20 PM
தென்கொரிய விமான விபத்தில் 176 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்குள்ளான விமானத்தில் ஆறு பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர்.
இரண்டு பணியாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் 22 பேரின் உடல்களை அடையாளம் கண்டுள்ளோம் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
திடீரென தீப்பற்றி தரையிறங்கிய ஏர் கனடா விமானம்
29 Dec, 2024 | 06:56 PM
கனடாவின் ஏர் கனடா (Air Canada) விமானம் ஒன்று தீ பிடித்த நிலையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ஏர் கனடா விமானத்தின் கியர் செயலிழந்ததால் விமானத்தின் இறக்கை ஓடுதளத்தில் உரசி திடீரென தீப்பிடித்துள்ளது.
இந்நிலையில், ஹாலிஃபாக்ஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment