“ எழுத்தாளராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர்
எழுத்தாளராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். ஆனால், எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும், படிப்பறிவும், அனுபவங்களும், சந்திக்கும் மனிதர்களும், மோதிக்கொள்ளும் கருத்தாடல் நிகழ்வுகளும் எழுத்தாளர் ஒருவரை உருவாக்க உதவும் என்பது எனது படைப்பு அனுபவத்தில் நான் தெரிந்து கொண்ட விடயங்களில் சிலவாகும். “
எனச்சொல்லியிருப்பவர்தான் இங்கிலாந்தில் நீண்டகாலம் வதியும் புகலிட தமிழ்
இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள்.
இவருக்கு ஜனவரி 01
ஆம் திகதி பிறந்த தினம். எங்களால் ராஜேஸ் அக்கா
என அன்புடன் அழைக்கப்படும் இவரை வாழ்த்துகின்றோம்.
சில வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு
திருப்பூர் கனவு இலக்கியப்பேராவை மெய்நிகரில் நடத்திய நிகழ்வில், ராஜேஸ் அக்கா நிகழ்த்திய
உரையின் தொடக்கத்தையே இந்த பதிவின் ஆரம்பத்தில் பார்த்தீர்கள்.
ராஜேஸ் அக்கா மேலும் இவ்வாறு சொல்கிறார்.
“ எனது இளவயதில் எங்கள் வீட்டில் எனது தகப்பனார் திரு
குழந்தைவேல் நூற்றுக்கணக்கில் பல தரப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார். சிறுவயதில்,எங்களுக்குத் தெரிந்த தேவார திருவாசக புத்தகங்களில் எனது 'புத்தகப்படிப்பு' ஆரம்பித்தது. அக்.காலகட்டத்தில அப்பா வாங்கி வரும் கல்கி கலைமகளுடனும் வாசிப்பு தொடர்ந்தது. அந்த அனுபவங்கள், பல விதமான எழுத்துக்களைப்; படிக்கும் உணர்வையும் எழுத்தை ரசிக்கும், பூசிக்கும் உணர்வையும் எனது இளவயதில் எனக்குத் தந்தது என்று நினைக்கிறேன்..அந்த அனுபவங்களால்,எனது அடிமனதில் எழுத்தாளராக வரவேண்டுமென்ற உந்துதல் பிறந்திருக்கும். “
இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு
இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.
பெண்கள் எப்பொழுதும் வீட்டுக்குள் இருந்து குடும்பக் கடமைகளைப்
பார்த்தால் போதும் என்றும் – அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றும்
சொல்லப்பட்டு, அவர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு
காலம் முன்பிருந்தது.
சமையல்கட்டு வேலை , பிள்ளைப் பராமரிப்புடன் கணவனின் தேவைகளை பூர்த்திசெய்யும் இயந்திரமாகவும் பெண்ணின் வாழ்வு முடக்கப்பட்டிருந்த காலம் மலையேறிவிட்டது என்று இன்னமும் சொல்ல முடியாதிருக்கிறது.
இத்தகைய பின்புலத்தில் எமது இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் இயற்கை எழில் கொஞ்சிய அழகிய கிராமத்திலிருந்து – அதேவேளை கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியிருந்தாலும், கூத்துக்கலைகளில் முன்னிலை வகித்த தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் மக்களாக வாழ்ந்த அக்கரைப்பற்று கோளாவில் கிராமத்திலிருந்து – பல நாடுகளை தனது ஆளுகைக்குள் கட்டிவைத்திருந்த முடிக்குரிய அரசாட்சி நீடித்த வல்லரசுக்கு புலம்பெயர்ந்து சென்ற சகோதரி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களைப்பற்றி நினைக்கும்தோறும் எனக்கு வியப்பு மேலிடுகிறது.
புலம்பெயர் இலக்கியத்தின் முன்னோடியான இவரது எழுத்துக்களை
இலங்கையில் 1980 களில் படிக்கநேர்ந்தபொழுது, இவர் பற்றிய எந்த அறிமுகமும் எனக்கு இருக்கவில்லை. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இராஜேஸ்வரி எழுதி, அலை வெளியீடாக வந்திருந்த ஒரு கோடை விடுமுறை நாவல் வெளியீட்டு விமர்சன அரங்கிற்கு சென்றிருந்தேன்.
அன்று அந்த நாவலை வாங்கிச்சென்று உடனடியாகவே படித்து முடித்து நண்பர்களுக்கும் கொடுத்திருந்தேன். தற்பொழுது என்வசம் அந்த நாவல் இல்லை. அதுவும் என்னைப்போன்று எங்கெங்கோ இடம்பெயர்ந்திருக்கலாம். ஆனால், இன்றும் கோடை விடுமுறை லண்டன், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கும் வருடாந்தம் வந்துகொண்டிருக்கிறது.
இராஜேஸ்வரியின் வாழ்வையும் பணிகளையும் கவனித்தால் அவர்
நான்கு தளங்களில் ஒரேசமயத்தில் இயங்கியிருப்பதை அவதானிக்கலாம்.
படைப்பிலக்கியம், பெண்ணிய மனித உரிமைச்செயற்பாடு, ஆவணத்திரைப்படம்,
இவற்றுக்கு மத்தியில் தொழில்முறையில் தேர்ச்சிபெற்ற மருத்துவதாதி. ஒரு பெண்
இவ்வாறு நான்கு தளங்களில் இயங்கியவாறு தனது பிள்ளைகளின் பெறுமதியான தாயாகவும்
பேரக்குழந்தைகளின் பாசமுள்ள பாட்டியாகவும் தமது வாழ்வைத் தொடர்ந்து வருகிறார்.
இவருடைய தந்தையார் குழந்தைவேல்தான் இவரது ஆதர்சம். அவர் வைத்தியராகவும் கூத்துக்கட்டும் கலைஞராகவும் பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தவராகவும் விளங்கியவர். அத்துடன் வேளாண்மை வயல்களை பராமரிக்கும் வட்டைவிதானையாராகவும் வாழ்ந்தவர்.
அவரது கிராம வாழ்க்கை, யாழ்ப்பாணத்தில் பெற்ற தாதியர் பயிற்சி, எழுதத் தொடங்கிய பருவம் – முதல் கவிதை வெளியான வீரகேசரி பத்திரிகையில் தாயார் யாருக்கோ வீட்டுத்தோட்டத்தில் வளர்ந்த கீரையை பறித்து சுற்றிக்கொடுத்ததினால் அந்தக்கன்னிப்படைப்பை தொலைத்துவிட்ட சோகம், யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பு முறையையும் அதன்கொடுமையையும் நேரில் பார்த்து கொதித்தெழுந்த தர்மாவேசம், இடதுசாரி சிந்தனையுள்ள கணவருடன் அவரது நண்பர்கள் மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் பற்றி உரையாடும்பொழுது , அவர்கள் கொழும்பில் வசிக்கும் கணவரின் நல்ல நண்பர்கள் போலும் என்று நம்பிக்கொண்டிருந்த அப்பாவித்தனம் – இலண்டனுக்கு புலம்பெயர்ந்த பின்னர் ஈடுபட்ட பெண்ணிய மற்றும் மனித உரிமைச்செயற்பாடுகள், திரைப்படத்துறையில் முன்னேற எடுத்துக்கொண்ட முயற்சிகள், அரசியல் செயற்பாட்டாளராக
மாறியதும் பலரதும் அவதூறுகளை எதிர்கொண்டு அவற்றை வெற்றிகொண்ட ஆளுமை முதலான பல்வேறு விடயங்களையும் அவர் மனம் திறந்து பகிர்ந்துகொண்ட விரிவான நேர்காணலை நண்பர் ஷோபா சக்தி தமது தோழர்களுடன் இணைந்து பதிப்பித்த கனதியான இலக்கியத்தொகுப்பு குவர்னிகாவில் படித்திருக்கின்றேன்.
யாழ்ப்பாணத்தில் நடந்த 41 ஆவது இலக்கியச்சந்திப்பில் இத்தொகுப்பு
வெளியிடப்பட்டது பலரும் அறிந்த செய்தியே. ஆனால், இதில் இடம்பெற்றுள்ள ஷோபா
சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு இராஜேஸ்வரி வழங்கியிருக்கும்
பதில்களில் பல தகவல்கள் எனக்கும் மாற்றவர்களுக்கும் புதியனவே.
நான் அவரது தீவிர வாசகனாகியதும் கடிதத் தொடர்புகளை மேற்கொண்டிருந்தேன். என்னையும் ஒரு வாசகனாக மதித்து தொடர்ந்து என்னுடன் கடிதத்தொடர்புகளை அவர் மேற்கொண்டார். அவரது நாவல்களை விரும்பிப்படித்தேன். தினக்குரலிலும் அவர் பற்றிய கட்டுரையை எழுதினேன்.
ஆனால் – இராஜேஸ்வரி அந்தக்கொடுமைகளை யாழ்ப்பாணத்தில்
தாதியாக பணியாற்றிய காலத்திலே நேரிலே கண்டு கொதித்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த பெண்ணொருத்தி உயர் ஆதிக்க சாதி இளைஞனை காதலித்து திருமணம் செய்து அவனாலும் அவனது குடும்பத்தினாலும் வஞ்சிக்கப்பட்டு தீக்குளித்து இறந்தபொழுது அவளுக்கு சிகிச்சையளித்தவர் இராஜேஸ்வரி. ஆனால், அவளைக்காப்பாற்ற முடியாமல் போன அவலத்தை சொல்கிறார்:
நான் அறிந்தவரையில் எமது சமூகம் மட்டுமல்ல, கீழைத்தேய மற்றும்
மத்திய கிழக்கு நாடுகளின் சமூகங்களும் பெண்களை அடக்கியாள்வதில்தான் பெருமை பெற்றன.
பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவும் சமையல்கட்டுக்குரியவளாகவும் ஆண்களின்
தேவைக்கு ஏற்ப போகப்பொருளாகவும் இருந்தால் மாத்திரம் அதுவே பெண்மைக்கு இலக்கணம்
என்று கருதிய ஆணாதிக்க சமுதாயத்தில் – ஒரு பெண் துணிந்து கற்று ஆசிரியராக,
மருத்துவ தாதியாக, மருத்துவராக வந்துவிட்டால் ஓரளவு பொறுத்துக்கொள்கிறது.
தப்பித்தவறி நாட்டியத்தாரகையாக மிளிர்ந்தாலும் ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் – அறிவுஜீவியாக பெண்ணியவாதியாக அதற்கும் மேல் ஆளுமையுள்ள படைப்பாளியாகவோ ஊடாகவியலாளராகவோ மாறிவிட்டால் அவளது பெண்மைக்கே களங்கம் விளைவிக்கும் அளவுக்கு தயங்காமல் அவதூறுகளை அள்ளிச்சொரியும். உயிருக்கும் உலை வைத்துவிடும். நானறிந்த பல பெண் படைப்பாளிகள் எதிர்கொண்ட இன்னல்கள் அறிவேன்.
ஸர்மிலா ஸய்யத், தஸ்லீமா நஸ்ரின், அருந்ததி ராய், கமலா தாஸ்,
வாசந்தி, திலகவதி, சிவகாமி, தாமரை, மாலதி மைத்ரி, கருக்கு பாமா, லீனா மணிமேகலை….
சல்மா . இவர்களின் வரிசையில் இராஜேஸ்வரி.
ஏற்கனவே நிம்மதியாகவிருந்த அக்கரைப்பற்று இனமோதல்களினால் உருக்குலைந்த அவலம் நன்கறிந்தவர் இராஜேஸ்வரி. தமது ஒரு உடன்பிறப்பை ஆயுதப்படைகளிடம் பறிகொடுத்தவர். அந்தத்துயரத்தால் சடுதியாக மரணித்த தாயாரின் இழப்பை சந்தித்தவர். மற்றும் ஒரு தம்பியான விமல் குழந்தைவேலை ஆயுதப் படை கைதுசெய்து பின்னர் விட்டது.
அனுபவிக்காமல் எமது மக்களின் குரலாக இயங்கினார். இலங்கையில் நிகழ்ந்த இனவாத வன்செயல்களை அம்பலப்படுத்தி – மூவின மக்களின் ஒற்றுமையையும் வலியுறுத்தி இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் முதல் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வரையில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகித்தவர். இலங்கையின் மனித அவலங்களை சித்திரிக்கும் ஆவணப்படங்கள் இயக்கினார். தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்து அகதிகளின் முகாம்களுக்குச்சென்று படங்களுடன் திரும்பி லண்டனில் கண்காட்சி வைத்தார். கருத்தரங்குகள், கண்டன ஊர்வலங்களில் பங்கேற்றார்.
மட்டும் பலர் பின்னிற்கவில்லை. அவர் ஆயுதம் கேட்டுச் செல்லவில்லை. பணம் கேட்டுச்செல்லவில்லை.
ஆனால் , அவர் தமது பணிகளை எமது தேசத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம், குறிப்பாக பெண்கள்
பக்கம் தொடர்ந்தார். உண்மையான படைப்பாளி – பத்திரிகையாளர் எப்பொழுதும்
பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்பார். அதற்கு சிறந்த முன்னுதாரணம் இராஜேஸ்வரி.
பொதுவாகவே Activist களுடன் நேர்காணல் செய்பவர்கள், அவர்களை குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தியே கேள்வி கேட்பது வழக்கமாகிவிட்டது. இது கேள்வி கேட்பவர்களுக்கான
திருப்தியா…? அல்லது அவதூறு பரப்புபவர்களை திருப்திப்படுத்தும் முயற்சியா…?
அவரது சில படைப்புகள் ஆங்கிலத்திலும் வௌிவந்துகொண்டிருக்கின்றன.
சமீபத்தில் இந்தியாவில் வெப் சீரிஸில் ளெியான அயலி திரைப்படம் தனது தில்லையாற்றங்கரை நாவலை தழுவி
எடுக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக ஊடகங்களில் குரல் எழுப்பியிருந்தார்
இராஜேஸ்வரி.
இந்நாவல்
ஆங்கிலத்திலும் ( Banks of the River Thillai ) வெளியாகியிருக்கிறது !
அவரது கருத்துக்களுக்கு எதிர்வினையாக நானும் “
சினிமாவில் சாயலும் தழுவலும் – திருட்டும் எதிர்வினைகளும் ! ரசிகர்களும்
வாசகர்களும சந்திக்கும் புள்ளி “. என்ற
விரிவான ஆக்கத்தை எழுதியிருந்தேன். இக்கட்டுரை, எனது சினிமா: பார்த்ததும்
கேட்டதும் நூலிலும் இடம்பெற்றுள்ளது.
இதனையெல்லாம் நன்கு தெரிந்துகொண்டிருந்த இராஜேஸ்வரி அக்கா, கடந்த 2023 ஆம் ஆண்டு நான் இங்கிலாந்து
சென்றிருந்தவேளையில், எனது எதிர்வினைக் கருத்துக்களை பொருட்படுத்தாமலேயே, என்னை
நன்கு உபசரித்து லண்டன் பயணங்களில் உடன் வந்து வழிகாட்டினார்.
கருத்தை – கருத்தாலும் தனிப்பட்ட நேசத்தை – அக்கருத்துக்கள்
பாதிக்காமலும் பார்த்துக்கொள்வதில் அவர் முன்மாதிரியானவர்.
ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தனது பிறந்த
தினத்தை கொண்டாடும் இராஜேஸ்வரி அக்காவுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
---0---
No comments:
Post a Comment