நல்வினைகள் ஆற்றிடுவாய் அன்பு ஜெயா (எழு சீர் குறள்வெண் செந்துறை)

  

பெற்றதில் சிறிதுமே பகிர்ந்துநீ அளித்திடில்

    பெரிதுமே மகிழ்வரே பயனடைவோர்,

உற்றவர் என்றிலை உறவினர் என்றிலை

    உவந்துடன் எவர்க்குமே பகிர்வாயே!

 

உண்பதில் ஓர்பிடி மற்றவர் மகிழ்ந்திட

    உள்ளமும் நிறைந்திட அளித்திடுவாய்

உண்ணநீ வைத்தவர் உள்ளமும் மலர்வதை

    உணர்வினால் காண்பதும் உறுதியன்றோ!

 

பசியினால் வாடுவோர் பக்கமே இருக்கையில்

    பகிர்ந்துமே அளித்திடே உன்னுணவே!

பசித்தவர் அறிவரே பசிதனின் கொடுமையை

    பசிப்பிணி நீக்குதல் நல்வினையே!

 

என்னுடை உழைப்பினால் பெற்றயென் செல்வமும்

    என்னிடம் இருந்திடும் ஏனையோர்க்கேன்

என்றுநீ எண்ணிடில் கணக்கினில் தீவினை

     ஏறியே உன்னையும் வாட்டிடுமே!

 

உன்றனின் ஊதியம் சிறிதுதான் எனினுமே

    உவந்தொரு பகுதியை அளித்துவாழ்வாய்!

பின்னரே உணருவாய் அளித்ததோ சிறிதுதான்

    பெற்றதோர் நல்வினைப் பெரிதென்றே!

 

No comments: