மகாலிங்கம் பத்மநாபன் : வன்னி மண்ணின் மூன்று கிராமங்களின் வரலாற்றை எழுதி வரலாறாய் ஆனார்


பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானினும்

நனி சிறந்தனவே…”

தன் சொந்த ஊரிலேயே வாழ்ந்து கழித்த எங்கள் அப்பா தன் இறுதிக்காலம் வரை மந்திரம் போலச் சொல்லிக் கொண்டிருப்பார்.

 “அது ஒரு அழகிய நிலாக்காலம்”

மகாலிங்கம் பத்மநாபன் எழுதி வழங்கிய

வன்னி மண்ணின் மூன்று கிராமங்களின் கதை

என்ற இந்த நூலைப் படித்து முடித்த போது அப்பேர்ப்பட்ட உணர்வு தான் எழுந்தது. தன் மண்ணை, தன் மக்களை நேசித்த மண்ணின் மைந்தனின் மன உணர்வுகளை அச்சொட்டாக எழுத்தில் கவர்ந்தால் எழும் வரலாற்றுப் பெரு நூல் இது.



 அதனால் தான் 432 பக்கங்களோடு பின்னிணைப்பாக அந்த மூன்று கிராமங்களின் கதையின் நாயகர்கள் வாழ்ந்து கழித்த தலங்கள், கோயில்கள் எல்லாம் நிழற்படங்களாக அந்த வரலாற்றோட்டத்தில் நம் மனக் கண்ணில் உருவகித்தவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகின்றது.


பெரிய பரந்தன், குஞ்சுப் பரந்தன், செருக்கன் ஆகிய மூன்று கிராமங்களின் தோற்றமும் வாழ்வியலுமாக நிஜ கதைமாந்தர்களோடு பயணிக்கிறது இந்த நூல்.

 தன் மண்ணின் மீது தீராக் காதல் கொண்ட ஒருவரால் தான் இத்துணை தரவுகளோடு, காட்டாறு போன்றதொரு பெருகிய எழுத்துப் படைப்பைக் கொடுக்க முடியும்.

 எழுத்தாளர் தாமரைச் செல்வியின் இளைய சகோதரியின் கணவரான இந்த நூலாசிரியர் பற்றிக் குறிப்பிடுகையில் அதையே கோடிட்டுக் காட்டுகின்றார் இப்படி

 “திரு ம.பத்மநாபன் அவர்கள் தனது மண்ணை, அதன் சூழலை, அங்கு வாழும் மனிதர்களை நேசிப்பவர். தனது மூதாதையரதின் வாழ்க்கையை உண்மைத் தன்மை எங்கும் மாறி விடாமல் பதிவு செய்திருக்கிறார்.

 மேலும்,

இது மூன்று கிராமங்களின் கதை மட்டுமல்ல மூன்று தலைமுறையின்


கதையும் கூட. 1900 ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரையான வாழ்வு இங்கே சொல்லப்பட்டிருக்கின்றது.

என்ற முன்னுரையே இந்த நூலின் உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கின்றது.

 “தென்மராட்சியில், குறிப்பாக மீசாலையில் இருந்து காலத்திற்குக் காலம் இம்மூன்று கிராமங்களில் குடியேறிய மக்களின் வரலாற்றையும், அவர்களின் பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி நிலைகளையும் முதன்மைப்படுத்திக் கூறுவது இந்நூலின் முக்கிய கருப்பொருளாக இருந்தாலும், அவ்வரலாற்றின் ஊடாக இன்று மறைக்கப்பட்டு மற்றும் மறைந்து வரும் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களையும் நூலாசிரியர் முறையாகப் பதிவு செய்திருப்பது பலதுறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு பயனுள்ள ஒரு பதிவாகக் காணப்படுகிறது"

என்று மூத்த பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களின் அணிந்துரையே, இப்புத்தகத்தைப் படித்து முடித்ததும் மனதில் எழும் உணர்வாகவும் பிரதிபலிக்கின்றது.

 யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் தெற்குக் கரையோரமாக


அமைந்திருக்கும் பரட்டைக்காடுகளும், களப்புகளும், இவற்றின் தெற்கே அமைந்துள்ள வயலும் வயல் சார்ந்த இடங்களாக வன்னிப் பெரு நிலப்பரப்பின் வடக்கே, கண்டி வீதியின் மேற்குப்பக்கமாக அமைந்திருக்கும் இம்மூன்று ஊர்களுக்கும், விவசாயம் செய்யவெண்ணி வள்ளத்தில் ஏறி, யாழ்ப்பாணக் கடல் நீரேரி ஊடாகச் சுட்டதீவுத் துறையில் இறங்கிக் கால் நடையாகவும், மாட்டு வண்டில்களிலும் பயணம் செய்த மாந்தர்களின் வரலாற்றைப் படைத்ததற்கு வாழ்த்துரையில் சிறு வரலாற்றையும் பதிந்து வைத்திருக்கிறார் மகாலிங்கம் பத்மநாதன் (ஓய்வு நிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்).

 

 ஈழத்தில் இது போலப் புதையுண்டு போன தமிழர் பூர்வீக நிலங்களை அந்தந்தப் பிரதேசத்து மக்கள் அவ்வப்போது கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வடித்த போதும் இந்த நூல் கொடுக்கும் அனுபவம் தனித்துவமானது. இங்கே ஆசிரியர் அங்கு வாழ்ந்து கழித்த, வரலாறாய்ப் போன மனிதர்களை உயிர்ப்பித்து அவர்களை நூல் முழுக்க வாழ வைத்து விடுகிறார். அதனால் ஒரு நீண்ட நெடிய வன்னி மண்ணின் நாவலாகவும், ஆவணத் தொகுப்பாகவும் இரு பரிமாணங்களில் விளங்கி நிற்கின்றது.

 தம்பையர், முத்தர், ஆறுமுகம் ஆகிய மண்ணின் மைந்தர்கள் காடு


திருத்திக் கழனியாக்கிய வரலாற்றை ஆரம்ப அத்தியாயங்களில் படிக்கும் போது தீரச்செயலைச் செய்யப் புறப்பட்ட்ட நாயகர்களாகக் கண் முன்னே நிற்கின்றார்கள்.

 வரலாற்றுக்கு உசாத்துணையாக வழித்தடங்களையும் கைப்பட எழுதிப் பகிர்ந்திருக்கின்றார்.

கதைப் போக்கிலே வரலாற்றில் நாம் மறந்து போன, புழக்கத்தில் இருந்த பல சொற்களை மீட்டெடுத்து விளக்கமும் கொடுக்கிறார்.

 வன்னிமண்ணுக்கே உரிய வேட்டையாடும் மரபையும், வேள்வி விழாக்களையும் கூட விடாமல் பதித்திருக்கின்றார்.

 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து மாறி வந்த நிர்வாக முறைமைகளையும் வெகு திருத்தமாகக் கண்முன் நிறுத்துகின்றார்.

வரலாற்றில் பயணிக்கும் கதை மாந்தர்களின் இழப்பை நம்முடைய சொந்த இழப்பாகவே நினைக்குமளவுக்குத் தாக்கத்தை உண்டுபண்ணும் உணர்வோட்டத்தோடு இந்தப் படைப்பை நிறுவுகின்றார்.

 


ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரலாற்றுத் துணுக்குகள், சம்பிரதாயங்கள், உலக நடப்புகள் போன்றவற்றை முத்தாய்ப்பாகக் கொடுத்தே தொடங்குவார்.அவ்விதம் 50 வது அத்தியாயத்தில், ஒரு அரச அலுவலகர் எப்படி மக்களோடு கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், நிறைவான 51 வது அத்தியாயத்தில் இறப்பின் சிறப்பை வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்எனத்தொடங்கும் திருவள்ளுவத்தோடும், டாக்டர் அப்துல் கலாமின் பொன்மொழியான

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்

என்று குறிப்பிட்டு இந்த வரலாற்று நூலின் அத்தியாயத்தை நிறைவு செய்ததை இப்போது நினைத்துப் பார்த்தால் இவருக்காகவே எழுதி வைத்து விட்டது போல மனதில் சுமையொன்று எழுகின்றது.

 இந்த நூலாசிரியர் மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய பரந்தனில் பிறந்தார். தந்தை மகாலிங்கம், தாய் பொன்னம்மா. பத்மநாபன் ஆசிரியராக மன்னார் பிரதேசத்தில் ஆசிரியத் தொழிலைத் தொடங்கி, கிளிநொச்சியில் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றி, ஈற்றில் பரந்தன் இந்து மகாவித்தியாலத்தில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் அலகினால் சிறந்த நூலாக 2023 ஆம் ஆண்டில் “அது ஒரு அழகிய நிலாக்காலம்” பரிசினைப் பெற்றது.

 அது ஒரு அழகிய நிலாக்காலம்மூன்று கிராமங்களின் கதை நூலைத் தன் கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பி வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த நூலைப் படித்து முடித்த பரவசத்தில் அவரோடு பேசவேண்டும் என்று அவாக் கொண்டிருந்தேன்.

ஆனால் காலன் முந்திக் கொண்டான்.

 மகாலிங்கம் பத்மநாபன் கடந்த டிசெம்பர் 27 அன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்து இறையடி சேர்ந்து விட்டார்.

அன்னாரின் நினைவுகளை இந்த மூன்று கிராமங்களின் கதை உயிர்பித்து வைத்திருக்கும்.

 

கானா பிரபா

28.12.2024

No comments: