குடும்ப படங்களில் காவியம் தீட்டிய பீம்சிங் நூற்றாண்டு ! ச . சுந்தரதாஸ் ஆஸ்திரேலியா

 தமிழ் திரை புராண, சரித்திர படங்களில் இருந்து விடுபட்டு சமூக,


குடும்பக் கதைகளில் அக்கறை காட்டத் தொடங்கிய 50ம் ஆண்டுகளின் நடுப் பகுதிகளில் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் நூற்றாண்டு நாயகரான ஏ . பீம்சிங். 1924ம் வருடம் அக்டோபர் 15ம் திகதி பிறந்த பீம்சிங் பிரபல டைரக்டர்களான கிருஷ்ணன், பஞ்சு இருவரிடமும் இயக்கம், படத்தொகுப்பும் இரண்டையும் கற்று விட்டு இயக்கிய முதல் படம் சரித்திர கதையான அம்மையப்பன். கலைஞர் கருணாநிதி கதைவசனம் எழுத , எஸ் எஸ் ஆர் கதாநாயகனாக நடிக்க இவர் இயக்கிய இந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கருணாநிதி, எஸ் எஸ் ஆர் இவர்களோடு சிவாஜி, பத்மினி சேர்ந்து கொண்ட ராஜா ராணி படமும் காலை வாரியது. அதன் பின்னர் பீம்சிங் ஒப்பந்தமான படம் செந்தாமரை. இந்தப் படம் ஆறாண்டுகளாக தயாரிப்பில் இருந்து இழுத்தடித்தது. இடையில் வந்த திருமணம் படமும் மங்களகரமாய் அமையவில்லை. 


தொடர்ந்து ஐந்து படங்களின் தோல்வி, திரையுலகை விட்டே

விரட்டப்படக் கூடிய சூழ்நிலை. ஆனால் பீம்சிங் அசரவில்லை. இதுவரை காலமும் இயக்குனராக மட்டும் இயங்கியவர் இப்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். புத்தா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பீம்சிங், ஜி . என் வேலுமணி, விசுவநாதன் ராமமூர்த்தி கூட்டில் உருவாகி பதிபக்தி படம் தயாரானது. சிவாஜி, ஜெமினி, பாலையா,தங்கவேலு, சந்திரபாபு, சாவித்ரி, எம் என் ராஜம், விஜயகுமாரி, என்று ஒரே நட்சத்திர பட்டியல். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டடிக்க படம் வெற்றி படமாகி பீம்சிங்கின் ப வரிசைப் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது. 

பதிபக்தியின் வெற்றி ஜி .என் . வேலுமணியை தயாரிப்பாளராக்கி, சரவணா பிலிம்ஸ் உருவாக அச்சாரமானது. அவர்களின் முதல் படம் பாகப்பிரிவினை. சிவாஜிக்கு ஜோடி புதுமுக நடிகையாக அடியெடுத்து வைத்துள்ள சரோஜாதேவி. திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த எம் ஆர் ராதா மீண்டும் முழு வீச்சில் திரையில் பவனி வர இந்தப் படம் காரணமானது. இந்தப் படத்தோடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்கை எய்து விட , சிவாஜியை விட்டு சில காலம் விலகி இருந்த கண்ணதாசன் மீண்டும் சிவாஜியுடன் ஐக்கியமானார். பாகப்பிரிவினையென்ற நெகட்டிவ் பெயர் பீம்சிங்கிற்கு பாசிட்டிவ் ஆனது.
 
ஜுபிடர் பிலிம்ஸ் அதிபர் சோமசுந்தரம் கருணாநிதி கதைவசனத்தில் , ஜெமினி நடிப்பில் எல்லாரும் இந்த நாட்டு மன்னர் படத்தை பீம்சிங் இயக்கத்தில் ஆரம்பித்தார். ஏவி எம் அதிபர் மெய்யப்ப செட்டியார் டி . பிரகாஷ்ராவ் டைரக்சனில் அதே ஜெமினி நடிப்பில் களத்தூர் கண்ணம்மா படத்தை ஆரம்பித்தார். சம்பள விஷயத்தில் ஜுபிடர் சோமுவுக்கும் , பீம்சிங்கிற்கும் முரண்பாடு ஏற்படவே பீம்சிங் ஒதுங்கி கொண்டார். டைரக்ட் செய்த வகையில் ஏவி எம்முக்கு திருப்தி இல்லாமல் போகவே களத்தூர் கண்ணம்மா படத்தில் இருந்து பிரகாஷ் ராவ் விலகிக் கொண்டார். ஆனால் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. அதன் பிறகு எல்லாரும் இந்நாட்டு மன்னர் படத்தை பிரகாஷ் ராவ் இயக்கினார். களத்தூர் கண்ணம்மாவை பீம்சிங் இயக்கி படம் வெற்றியடைந்தது.


சிவாஜியின் முதல் படமான பராசக்தியின் உதவி டைரக்டராக பணியாற்றிய காலம் முதல் சிவாஜியுடனான அவரின் நட்பு நாளுக்கு நாள் வலுவடைந்தே வந்தது. இது திரையுலகைத் தாண்டி , சிவாஜியின் தனிப்பட்ட வாழ்விலும் அவருடைய ஈடுபாட்டை எடுத்துக் காட்டியது. அறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகம் சிவாஜியின் புகலிடமாக ஒரு காலத்தில் திகழ்ந்தது. கழகத்தின் முன்னேற்றத்துக்காகக் சிவாஜி தெருத் தெருவாக அலைந்து நிதி திரட்டி கொடுத்தார். ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றவுடன் சிவாஜியின் மனம் வேதனையடைந்தது. நண்பரின் வேதனையை தீர்க்க திருப்பதி சென்று வருவோம் என்று கொட்டும் மழையில் சிவாஜியை அழைத்து சென்றார் பீம்சிங். ஏழுமலையான் தரிசனம் முடிந்து திரும்பியவுடனேயே சிவாஜிக்கு தி மு க தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அத்தோடு தி மு காவுடனான தனது சகவாசத்தை முடித்துக் கொண்டார் சிவாஜி. இந்த திருமலை தந்த திருப்பத்துக்கு காரணமானவர் சிவாஜியின் பீம்பாய்!

1960 ஆண்டுகளின் தொடக்கத்தில் வெளிவந்த படிக்காத மேதை,

பாலும் பழமும் , பாச மலர், பாவ மன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா , பச்சை விளக்கு போன்ற படங்கள் சிவாஜி, பீம்சிங் வெற்றி கூட்டணியை உறுதி செய்தன. தமிழில் சிவாஜி நடிக்கும் படங்களை மட்டுமே பீம்சிங் இயக்கிக் கொண்டிருந்தார். இந்தப் படங்களில் ஜெமினி, எஸ் எஸ் ஆர் ஆகியோரும் இடம் பிடித்து விடுவார்கள். அன்றைய கால கட்டத்தில் எம் ஜி ஆரை தவித்து எல்லா நடிகர்களையும் அவர் டைரக்ட் செய்து கொண்டிருந்தார்.

ஆரம்ப படங்களில் சிவாஜியை அவர் இஷ்டத்துக்கே நடிக்க விட்டிருந்தார் பீம்சிங். பதிபக்தி படத்தில் கொட்டும் மழையில் ஒரு குடிசைக்கு முன் மண்ணில் சிவாஜி அழுது புரண்டு கதறும் காட்சியை மிகை நடிப்பென்று அன்றே விமர்சித்தார்கள். ஆனால் பின்னர் வந்த படங்களில் சிவாஜியை அவர் இலாவகமாக கையாள ஆரம்பித்து விட்டார் என்றே சொல்லலாம். பாகப்பிரிவினை படத்தின் கிராமத்து அப்பாவி கன்னையா, பாலும் பழமும் படத்தின் பண்பட்ட கௌரவமான டாக்டர் ரவி , பாவமன்னிப்பு ரஹீம், பார் மகளே பார் படத்தின் கர்வம் மிக்க, கௌரவம் பார்க்கும் செல்வந்தர் சிவலிங்கம் என்று வெவ்வேறு சிவாஜிகளை வார்த்தெடுத்த பெருமை பீம்சிங்கிற்கு உண்டு. சிவாஜியின் நடிப்பில் இந்த பாத்திரங்களை அற்புதமாக கையாண்டிருந்தார் பீம்சிங். ஆனாலும் அவரால் கையாள முடியாத நடிகராக எம் ஆர் ராதாதான் திகழ்ந்தார் என்று சொல்ல வேண்டும். பீம்சிங்கின் எல்லாப் படங்களிலும் அவர் என்னவோ தன் பாணியிலேயே நடித்துக் கொண்டிருந்தார்.
 

பீம்சிங் இயக்கிய படங்கள் எல்லாம் குடும்பக் கதைகளாக இருந்த போதும் அப் படங்களில் சண்டைக் காட்சிகளுக்கு குறை இருக்காது. தந்தை, மகன், அண்ணன் தம்பி, மாமன் மருமகன் மாமியார் மருமகள் என்று எல்லோரும் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள் ! ஆனாலும் படத்தின் கதையமைப்பு, அதனை அவர் இயக்கிய விதம் என்பன காட்சிகளை ரசிக்கும் படி செய்து விடும்.

குடும்ப பாசம், மனித உணர்வுகள், நட்பின் நெருக்கம் போன்ற விஷயங்களையே தன்னுடைய எல்லா படங்களிலும் பீம்சிங் முதன்மை படுத்தியிருந்தார். அதே சமயம் நகைச்சுவை காட்சிகளுக்கும் அவர் படத்தில் பஞ்சம் இருக்காது. எம் ஆர் ராதா, தங்கவேலு, சந்திரபாபு, சாய்ராம், ஏ. கருணாநிதி, எஸ். ராமராவ், மனோரமா, ஏ. வீரப்பன் என்று அன்றிருந்த எல்லா காமெடி நடிகர்களும் இவர் படங்களில் இடம் பெற்று தங்கள் நகைச்சுவையால் திரையரங்கை அதிர வைப்பார்கள்.

பீம்சிங்கின் வெற்றிக்கு வசனகர்த்தாக்களான எம் எஸ் சோலைமலை,

ஆரூர்தாஸ், பாசுமணி ஆகியோரின் பங்களிப்பு இன்றியமையாதது. அதே போல் கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, டி . எம்.எஸ், சுசிலா, ஸ்ரீனிவாஸ், சீர்காழி, ஈஸ்வரி, ஜானகி ஆகியோரின் இசை பங்களிப்பும் மிக அணுக்கமானது.
 
பீம்சிங்கின் மகனான ஒளிப்பதிவாளர் கண்ணனை தன்னுடைய கண்ணுக்கு கண்ணாக கருதி பயன் படுத்தி வந்தார் இயக்குனர் பாரதிராஜா. அதே போல் பீம்சிங்கின் கண்ணுக்கு கண்ணாகத் திகழ்ந்தவர் ஒளிப்பதிவாளர் ஜி . விட்டல் ராவ். இருவரும் இணைத்து படங்களை கறுப்பு வெள்ளை பிலிம் சுருள்களில் தந்து கொண்டிருந்தார்கள்.

பீம்சிங் தன் படங்களை தானே எடிட் செய்த போதும் அவருடன் இணைந்து பணியாற்றியவர் ஏ. பால்துரைசிங்கம். எஸ் . ராமநாதன், திருமலை மகாலிங்கம், எஸ். எஸ் . தேவதாஸ் என்று பல இயக்குனர்களை பீம்சிங் உருவாக்கியுள்ளார். ஆனால் அவரால் அறிமுகமான நடிகர், நடிகைகள் மிக சொற்பம். குறிப்பிட்டு சொல்வதென்றால் நடிகர் சோ ஒருவர்தான் அவரால் திரைக்கு அறிமுகமானவர் எனலாம்.

பட டைரக்டர் என்றால் பொறுமை மிக அவசியம். அது பீம்சிங்கிடம் ஏராளம் என்கிறார் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காரைக்குடி நாராயணன். மிக சாந்தமாக பேசி, பொறுமையாக காட்சிகளை படமாக்குவார் , எவரிடமும் கோபப்பட மாட்டார்.

வெற்றி படங்களையே தந்து கொண்டிருந்த பீம்சிங் இயக்கிய பழநி , பாலாடை இரண்டு படங்களும் எதிர்பாரத்த வெற்றியை பெறவில்லை. அதே சமயம் ஹிந்தி சினிமா பீம்சிங்கை இரு கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டது. ஹிந்தியில் திலீப்குமார், அசோக்குமார், சுனில்தத், ராஜேந்திரகுமார் போன்ற பிரபலமானவர்கள் பீம்சிங் படங்களில் நடித்து அப் படங்கள் வெற்றி பெற்றன .

பீம்சிங், சிவாஜி இறுதியாக இணைந்தது 1971ம் வருடம் கலரில் வெளிவந்த பாதுகாப்பு படத்தில்தான். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான கதையமைப்பை கொண்ட இப் படத்தில் சிவாஜியின் நடிப்பும் தரமாக அமைந்தது. ஆனாலும் படம் ஏனோ வெற்றி பெறவில்லை. 19 படங்களில் இணைந்து பயணித்த சிவாஜி, பீம்சிங் கூட்டணி அத்தோடு முடிவுக்கு வந்தது.

சில வருடங்கள் ஹிந்தி திரையுலகில் கோலோச்சி விட்டு மீண்டும் தமிழ் திரைக்கு வந்த பீம்சிங்கிற்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இது பற்றி நடிகர் சோ இப்படி குறிப்பிடுகிறார்.
 
ஒரு நாள் எனக்கு போன் பண்ணி கூப்பிட்டார் , போனேன். அவருடைய கண்கள் எல்லாம் கலங்கி இருந்தன. உணர்வு வயப்பட்டவராக இருந்தார். என்ன சார் என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிறீங்க . ஒரு குறிப்பிட்ட நடிகரின் பெயரை சொன்னார் . அவர் கிட்ட போய் ஒரு தமிழ் படம் பண்ணலாம்னு சொன்னேன் , அப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா நீ திரும்பவும் தமிழ் மார்க்கெட்டுக்கு வா, ஒரு சின்னப்ப படம் பண்ணிட்டு அப்புறமா என்கிட்டே வான்னு சொல்லிட்டார் . இந்த மாதிரியான பேச்செல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை . என்ன உலகம் இது !

புகழ் பெற்ற இயக்குநருக்கே இந்த கதி! இதுதான் திரையுலகின் விதி.

தமிழ், ஹிந்தி இரண்டிலும் ஏக காலத்தில் வெற்றி படங்களை கொடுத்த பெருமை பீம்சிங்கை சேரும். தமிழ் திரைக்கு மறுபடியும் வந்த பீம்சிங் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கி அப்படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை லக்ஷ்மிக்கு பெற்று தந்தது. அதன் பின் ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், கணவன் மனைவி, கருணாமூர்த்தி ஆகிய படங்களையும் டைரக்ட் செய்தார். கமல்ஹாசனின் முதல் படமான களத்தூர் கண்ணம்மாவை இயக்கிய பீம்சிங் தனது இறுதி படங்களின் ஒன்றான இறைவன் கொடுத்த வரம் படத்தில் ரஜினிகாந்தையும் டைரக்ட் செய்திருந்தார்.

54 ஆண்டுகள் வாழ்ந்த பீம்சிங் நோய் காரணமாக 1978ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி மறைந்தார். தமிழ் திரையுலகம் இன்று பல மாற்றங்களுக்கு உள்ளான போதும் படத்தின் ஜீவநாடி அதன் திரைக்கதை, அக்கதையை இயக்கும் லயம், படத்தொகுப்பில் காட்டும் நுணுக்கம் இவையே ஒரு படத்தின் வெற்றிக்கு ஆணிவேர் என்பதை பீம்சிங்கின் படங்கள் இன்றும் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன. இதுவே நூற்றாண்டு விழா காணும் பீம்சிங்கின் அடையாளம்!

No comments: