மார்கழி என்றுமே மாண்புடை மாதமே !


 



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா

 

மார்கழி என்பது மாண்புடை மாதம்

தேவர்கள் விரும்பும் சிறப்புடை மாதம்
பூதலம் பூஜைகள் பொலிந்திடும் மாதம்
சீதளம் நிறையும் சிறப்புடை மாதம்  

ஆலயம் அனைத்தும் அடியவர் நிறைவார்

அரனை வணங்குவார் ஐயப்பன் துதிப்பார்
தீப ஒளியில் ஆலயம் யாவுமே
தேவ லோகமாய் பொலிந்துமே நிற்கும்

மக்களின் மனத்தில் மார்கழி மாதம்

மங்கலம் அற்றது என்னும் எண்ணம்
இருப்பது என்பது பொருத்தம் அல்ல
மார்கழி என்றுமே மங்கல மாதமே 

பீடை பிடித்தது மார்கழி அல்ல

பீடுடை மாதமே மார்கழி மாதம்
அறிவைத் தீட்டுவீர் அனைத்தும் தெளியும்
அறிவு தெளிந்தால் ஆன்மீகம் மலரும்

தோடுடை செவியனைப் பாடிய சம்பந்தர்

தோன்றிய மாதம் மார்கழி மாதம்
அசையாச் சிவனின் அழகுத் தேரை
அசையச் சேந்தனார் பாடிய மாதம் 

உருகா மனத்தை உருகிடச் செய்யும்

திரு வாசகத்தில் திரு வெம்பாவையை 
பாடிப் பரவி பரமனைப் போற்றி
பக்தியில் மூழ்கும் பாங்குடை மாதம் 

ஆண்டாள் நாச்சியார் அருளிய பாவையை

அடியார் பாடி அகநிறை வடைவார்
வரங்களை வேண்டி மங்கையர் எல்லாம்
மனமெலாம் ஒன்றிப் பாடியே பரவுவார்

சைவம் வைணவம் சங்கமம் ஆகிடும்

சன்மார்க்க மாதம் மார்கழி ஆகும்
மங்கையர் யாவரும் வரன்களை வேண்டி
மார்கழி மாதத்தில் வேண்டுவார் இறையினை

பகவத் கீதையைப் பகர்ந்தவன் கண்ணன்

அவனே மொழிந்தான் மாதங்களிலே மார்கழியென்று 
கீதைக் கண்ணன் போற்றிய மாதம்
மார்கழி என்பதை மனமெலாம் இருத்துவோம் 

தத்துவம் இருக்கும் சமயமும் இருக்கும்

இத்தரை சிறக்கப் பக்தியும் இருக்கும்
முத்திரை மாதம் மார்கழி ஆகும்
சித்தம் இருத்துவோம் சிறந்திடும் வாழ்வு 

ஐயம் என்பதை அகற்றிட வேண்டும்

அறிவை நிறைத்துத் தெளிந்திட வேண்டும்
மனத்தைச் செம்மை ஆக்கிட  வைக்கும்
மார்கழி என்றுமே மாண்புடை மாதமே ! 

No comments: