உலகச் செய்திகள்

காசாவின் கான் யூனிஸ் நகரத்தில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ்: சடலங்கள் மீட்பு

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர்கள் 

காசா போரில் தலையிட வாய்ப்பு; எர்துவான் எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவினால் மக்கள் மீண்டும் ‘ஓட்டம்’

கலாசார சொத்து ஒப்பந்தத்தில் அமெரிக்கா–இந்தியா கைச்சாத்து


காசாவின் கான் யூனிஸ் நகரத்தில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ்: சடலங்கள் மீட்பு 

காசாவில் 'போலியோ தொற்று' பிரகடனம்

July 31, 2024 6:00 am 

மத்திய காசாவில் புதிய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்த இஸ்ரேலியப் படை தெற்கு நகரான கான் யூனிஸில் இருந்து திடீரென்று வாபஸ் பெற்ற நிலையில் இடிபாடுகளுக்கு மத்தியில் பலஸ்தீனர்கள் அங்கு திரும்பியுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டு இரண்டு இலட்சம் வரையானோர் வெளியேற்றப்பட்ட நிலையிலேயே படையினார் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் வாபஸ் பெற்ற பகுதிகளில் இருந்த பல டஜன் உடல்களை மீட்க முடிந்திருப்பதாக காசா மருத்துவ பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இங்கு தொடர்ந்து 200 பேர் வரை காணாமல்போயிருப்பதாக காசா சிவில் சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களால் கான் யூனிஸின் கிழக்குப் பகுதி மேலும் அழிவுகளை சந்தித்திருக்கும் நிலையில் மக்கள் கால் நடையாக அங்கு திரும்பும் வீடியோ காட்சிகளை அங்குள்ள ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். கான் யூனிஸில் இருந்து வெளியேறிய இஸ்ரேலியப் படையினர் மத்திய காசாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

‘இறைவனிடம் நம்பிக்கை வைத்து நான் திரும்பி வந்திருக்கிறேன். எனது பூமிக்காக நான் உயிர் வாழ்வேனா அல்லது இறப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை’ என்று சுமார் ஐந்து கிலோமீற்றர் நடந்து கான் யூனிஸ் திரும்பிய அல் மஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய இராணுவம் நகரின் பிரதான அடக்கஸ்தலமான பானி சுஹைலாவை அழித்திருப்பதாகவும், அருகில் இருக்கும் வீடுகள் மற்றும் வீதிகளை தகர்த்திருப்பதாகவும் அங்கு திரும்பியவர்கள் விபரித்துள்ளனர்.

பத்து மாதங்களை நெருங்கும் போரில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த காசா பகுதியையும் இஸ்ரேலியப் படை கைப்பற்றியபோதும் அண்மைய வாரங்களில் முன்னர் கட்டுப்பாட்டை கொண்டுவந்ததாகக் கூறிய பகுதிகளில் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதோடு பலஸ்தீன போராளிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மத்திய காசாவின் சிறு நகர் ஒன்றான டெயர் அல் பலாஹ்வில் இருந்து கடந்த திங்கட்கிழமை தொடக்கம் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். இங்கிருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் கடந்த ஞாயிறன்று உத்தரவிட்டிருந்தது.

காசாவின் தென் முனை நகரான ரபா, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நேற்று இஸ்ரேலின் செல் தாக்குதல்கள் இடம்பெறதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவின் வெறும் 14 வீதமான பகுதியே இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவுக்கு உட்படாத பகுதிகளாக உள்ளன என்று பலஸ்தீனர்களுக்கான ஐ.நா. நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி குறிப்பிட்டுள்ளது. காசாவில் உள்ள மக்கள் ஒருசில மணி நேர அவகாசத்தில் பல தடவைகள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் பொது சுகாதார நெருக்கடி மோசமடைந்து வரும் சூழலில், அங்குள்ள கழிவு நீரில் போலியோ தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காசா சுகாதார அமைச்சு, போலியோ தொற்று பதிப்புக் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அமைச்சு கடந்த திங்கட்கிழமை டெலிகிராமில் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்த நிலைமை காசா குடிருப்பாளர்கள் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு கடந்த ஒக்டோபர் தொடக்கம் இஸ்ரேலின் இனப்படுகொலை காரணமாக பொது சுகாதார அவசர நிலை மோசமடைவதற்கான சமிக்ஞையாக இது உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மலம் – வாய் வழியாக ஏற்படும் இந்தத் தொற்று நரம்பு மண்டலத்தில் ஊடுருவி பக்கவாதத்தை ஏற்படுத்தும். தடுப்புசி காரணமாக 1988 தொடக்கம் போலியோ சம்பவங்கள் உலகெங்கும் 99 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பு காசாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்பவுள்ளது. எனினும் தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர் நிறுத்தம் தேவை’ என்றார்.

எனினும் சர்வதேச மத்தியஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய சுற்றுப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் நீடித்து வரும் முன்மொழிவு ஒன்றில் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகுவின் இஸ்ரேலிய அரசு புதிய நிபந்தைகளை நுழைத்து போர் நிறுத்தம் ஒன்றை தடுத்து வருவதாக காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தத்தில் தொடர்ந்து முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. காசாவில் தொடர்ந்து 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களை மீட்டுவர அழுத்தும் கொடுக்கும் வகையில் இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகு அரசுக்கு எதிராக வாராந்தம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோமில் புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் இஸ்ரேலிய அதிகாரிகள் அங்கிருந்து திரும்பியபோதும் அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. உடன்பாடு ஒன்றை நெருங்கி இருப்பதாக இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கும் அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மே மாதம் முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

எனினும் இஸ்ரேல் அளித்த பதில்களும் இதில் புதிய நிபந்தனைகளாக உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

‘புதிய நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளை அமைப்பதன் மூலம் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதை தள்ளிப்போடுவது, ஏமாற்றுவது மற்றும் தவிர்க்கும் மூலோபாயத்திற்கு நெதன்யாகு திரும்பி இருப்பதையே மத்தியஸ்தர்கள் வழங்கிய செய்தி தெளிவாகக் காட்டுகிறது’ என்று ஹமாஸ் அமைப்பு திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா மக்கள் போர் நிறுத்தம் ஒன்று பற்றிய எதிர்பார்ப்பை இழந்துவிட்டார்கள் என்று டெயிர் நகரில் அடைக்கலம் பெற்றிருக்கும் காசா நகர குடியிருப்பாளரான 30 வயது அயா முஹமது குறிப்பிட்டுள்ளார். ‘இது அனைத்தும் பொய்யானது. இங்கேயே இறந்து விடுவேன் என்று நான் நினைக்கிறேன். இங்கே முதலில் இறப்பது யார் என்று யாருக்கும் தெரியாது’ என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 37 பேர் கொல்லப்பட்டு 73 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,400 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 90,996 பேர் காயமடைந்துள்ளனர்.

காசா போரை ஒட்டி பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வரும் சூழலில் இஸ்ரேலின் லெபனான் எல்லையிலும் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் கட்டுப்பாட்டு கோலன் குன்றில் லெபனானில் இருந்து விழுந்த ரொக்கெட் குண்டினால் 12 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு அது பதில் தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தெற்கு லெபனானில் ஏழு இடங்கள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒரு ஹிஸ்புல்லா போராளி கொல்லப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை தொடக்கம் இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் சுமார் 10 ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 




படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர்கள் 

August 1, 2024 12:16 pm 

1996 ஜனவரி: ஹமாஸ் ஆயுதப் பிரிவின் தலைவரான யஹ்யா அய்யாஷை காசாவின் பெயித் லஹியாவில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது.

2004 மார்ச்: காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆன்மீகத் தலைவர் மற்றும் நிறுவனர் ஷெய்க் அஹமது யாஸின் படுகொலை செய்யப்பட்டார்.

2004 எப்ரல்: யாஸினுக்கு அடுத்து நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் ஹமாஸ் இணை நிறுவனரான அப்தல் அஸீஸ் அல் ரன்டிசி காசா நகரில் வைத்து இஸ்ரேலிய ஹெலி நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2024 ஜனவரி: ஹமாஸ் சிரேஷ்ட அதிகாரி சலாஹ் அல் அரூரி, பெய்ரூட்டில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2024 ஜூலை: ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.  நன்றி தினகரன் 





காசா போரில் தலையிட வாய்ப்பு; எர்துவான் எச்சரிக்கை

July 30, 2024 5:38 pm 

துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் தனது கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசும்போது, தமது நாடு காசாவில் இஸ்ரேலின் போரில் தலையிடக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

‘நாம் வலுவாக இருந்திருக்க வேண்டும் அப்போது பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலின் இந்த மோசமான செயல்களை செய்ய முடியாதிருந்திருக்கும். கர்பக்கில் நாம் நுழைந்தது போன்று, லிபியாவில் நாம் நுழைந்தது போன்று அங்கும் நாம் அதனை செய்யக் கூடும்’ என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) ஆற்றிய உரையில் எர்துவான் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 2020 இல் ஐ.நா. அங்கீகரித்த அரசுக்கு ஆதரவாக துருக்கி படை லிபியாவுக்கு அனுப்பப்பட்டது மற்றும் அசர்பைஜானுக்கு ஆதரவாக கர்பக்கில் துருக்கி இராணுவ பயிற்சிகளை வழங்கியது தொடர்பிலேயே எர்துவான் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

காசா போரில் எர்துவான் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

 




காசாவில் இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவினால் மக்கள் மீண்டும் ‘ஓட்டம்’

- பதில் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகும் லெபனான்

July 30, 2024 9:31 am 

மத்திய காசாவில் புரைஜ் மற்றும் நுஸைரத் அகதி முகாம்களில் இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவை அடுத்து அங்கிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் மீண்டும் ஒருமுறை வெளியேறி வருவதோடு, லெபனானிலும் போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் இஸ்ரேலின் பதில் தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்று பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் விழுந்த ரொக்கெட் குண்டில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என்று 12 பேர் கொல்லப்பட்ட நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கடந்த ஞாயிறு பின்னேரம் கூடிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை, லெபனான் மீதான பதில் தாக்குதல் முறை மற்றும் நேரத்தை தீர்மானிக்க, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்தியதாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியபோதும் அந்த அமைப்பு அதனை நிராகரித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் எவ்வாறான நடவடிக்கையை எடுக்கும் என்பது உறுதியாகாதபோதும், அது ‘மட்டுப்படுத்தப்பட்ட ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் அமையும்’ என்று பெயர் குறிப்பிடாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி இஸ்ரேலின் மிகப்பெரிய பத்திரிகையான யெடியொத் அஹ்ரனோத் குறிப்பிட்டுள்ளது.

இதில் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் தொடக்கம் ஹிஸ்புல்லா ஆயுதக் கிடங்குகள் அல்லது உயர்மட்ட ஹிஸ்புல்லா தளபதிகள் வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று அந்தப் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு லெபனான் நகர் ஷக்ராவுக்கு வெளியில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்திருப்பதாக லெபனான் சிவில் சேவை தெரிவித்துள்ளது. கோலன் குன்று தாக்குதலுக்குப் பின்னர் லெபனானில் இடம்பெற்ற முதல் உயிரிழப்புகளாக இவை உள்ளன.

லெபனானில் இருந்து வந்த ஆளில்லா விமானம் ஒன்றை மேற்கு கலீலி பகுதியில் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் பதில் தாக்குதல் பற்றிய அச்சம் காரணமாக பெய்ரூட் சர்வதேச விமானநிலையத்தில் விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டு அல்லது தாமதமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் பதில் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள தமது நிலைகளை மாற்றி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ‘இஸ்ரேலின் இலக்காகக் கூடும் என்று நம்பும் தெற்கு மற்றும் (கிழக்கில்) பெகா பள்ளத்தாக்கில் உள்ள சில நிலைகளில் இருந்து ஹிஸ்புல்லா விலகியுள்ளது’ என்று அந்த அமைப்பின் நெருக்கமான வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

இதேநேரம் இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்பார்த்து சிரியத் தலைநகர் டமஸ்கஸின் தெற்கு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், அதேபோன்று சிரிய கட்டுப்பாட்டு கோலன் குன்று பகுதிகளில் இருந்து ஈரான் ஆதரவுக் குழுக்கள் மற்றும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புபட்ட போராளிகள் வெளியேறி வருவதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றபோதும் முழு அளவில் போர் ஓன்றில் ஈடுபடுவதை தவிர்த்து வருகின்றன.

இஸ்ரேலின் வடக்கு எல்லையில் போர் ஒன்றை விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் மீண்டும் வெளியேற்றம்
இதேவேளை காசாவின் தெற்கு நகரங்களான கான் யூனிஸ் மற்றும் ரபாவில் வான் தாக்குதல்களின் உதவியோடு இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் டாங்கிகள் முன்னேறி வரும் நிலையில் பலஸ்தீன போராளிகளுடன் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

குறிப்பாக கான் யூனிஸில் இருந்து பொதுமக்களை வெளியேறும்படி ஒரு வாரத்திற்கு முன் உத்தரவிட்ட இஸ்ரேலிய இராணுவம் அங்கு உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. கான் யூனிஸின் கிழக்காக அல் கரார், அல் சன்னா மற்றும் பானி சுஹைலா பகுதிகளில் டாங்கிகள் முன்னேறி வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் இன்னும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்கு வராத கிழக்குப் பகுதியை நோக்கி இஸ்ரேலியப் படை முன்னேறி வருகிறது. ரபாவின் பிரதான குடிநீர் தொட்டியை இஸ்ரேலியப் படை வெடிவைத்து தகர்க்கும் வீடியோ வெளியான நிலையில் அது தொடர்பில் விசாரணை நடத்துவதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய காசாவின் இரு அகதி முகாம்களில் உள்ள மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் கடந்த ஞாயிறன்று உத்தரவிட்டதை அடுத்து சிறுவர்கள் உட்பட அங்குள்ள மக்கள் உடைமைகளை சுமந்தபடி கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

காசாவில் 86 வீதமான பகுதி தற்போது இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவுக்கு உட்பட்ட இடங்களாக உள்ளன என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் வெளியேறும் பெரும்பாலான மக்கள் கடந்த ஒக்டோபரில் போர் வெடித்தது தொடக்கம் பல தடவைகள் வெளியேற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெளியேற்ற உத்தரவுகள் பலஸ்தீனர்களின் துன்பத்தை அதிகரிப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி தெரிவித்துள்ளார்.

‘மக்கள் அடிக்கடி தம்மால் சேகரிக்க முடியுமானவைகளை பொதியிட்டு சில மணி நேரத்திற்குள் மீண்டும் வெளியேற ஆரம்பிக்கிறார்கள். அது பெரும்பாலும் நடைபாதையாக அல்லது தம்மால் செலவு செய்ய முடியுமான அதிகமானவர்களை நிரப்பிய கழுதை வண்டிகளாக இருக்கும்’ என்று அவர் எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் குறைந்து 39 பேர் கொல்லப்பட்டு மேலும் 93 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,363 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 90,923 பேர் காயமடைந்துள்ளனர்.   நன்றி தினகரன் 






கலாசார சொத்து ஒப்பந்தத்தில் அமெரிக்கா–இந்தியா கைச்சாத்து

August 3, 2024 6:00 am 

உலக மரபுரிமை குழுவின் 46ஆவது கூட்டத் தொடர் புதுடில்லியில் நடைபெற்ற போது அமெரிக்காவும் இந்தியாவும் கலாசார சொத்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

அமெரிக்காவிடமுள்ள இந்தியாவின் கலாசார சொத்துக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியும் கலாசார அமைச்சின் செயலாளர் கோவிந்த் மோகனும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நிகழ்வில் மத்திய கலாசார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்து கொண்டார்.

இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிடுகையில், ‘அமெரிக்காவிலுள்ள எமது விலை மதிக்க முடியாத மரபுரிமை சொத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் கலாசார உறவுகளை விரிவுபடுத்தவும் இந்த ஒப்பந்தம் வகை செய்யும். இரு நாடுகளையும் சேர்ந்த நிபுணர்கள் சுமார் இரு வருடங்கள் மேற்கொண்ட விடாமுயற்சியின் உச்சக்கட்ட பிரதிபலனே இந்த உடன்படிக்கை’ என்றுள்ளார்.   நன்றி தினகரன் 


No comments: