அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு உதவி


இலங்கையில் முன்னர் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 36 வருடங்களாக உதவி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையில் இந்த வாரம் அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு நிதியுதவி  வழங்கப்பட்டது.

 இந்நிகழ்வு  கல்வி நிதியத்தின் அம்பாறை மாவட்ட தொடர்பாளர் அமைப்பான  பாண்டிருப்பு மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் தலைவர் திரு. ந. கமலநாதன்( ஓய்வு நிலை அதிபர் ) அவர்களின் தலைமையில்  இருதினங்கள் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் உதவி பெறும் மாணவர்களும் அவர்களின் தாய்மாரும் நிறுவகத்தின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 ஒவ்வொரு மாணவருக்கும் ஆறு மாதங்களுக்கான ( 2024 ஜூலை முதல் டிசம்பர் வரைக்குமானது )  நிதிக் கொடுப்பனவாக ரூபா 24 000/- வழங்கப்பட்டது.

 அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில் இணைந்துள்ள அன்பர்களின் ஆதரவினால்,  இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 இந்த வாரம்  அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பில் நடந்த


இந்நிகழ்வில்   மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் உப தலைவர் திரு.பி வசந்தன் , பொருளாளர் திரு. த. ரவிச்சந்திரன்         ( ஆசிரிய ஆலோசகர் ),  உப செயலாளர் திரு. வே.நகுலேஸ்வரன் ( ஆசிரியர் ) , செயற்குழு உறுப்பினர்களான செல்வி. ஞா. தர்மிகா, திரு.  சி. புனிதன் ( ஓய்வு நிலை அதிபர் ), திரு . க. யனார்த்தன்   ( முகாமைத்துவ உத்தியோகத்தர் ) ஆகியோர் மாணவர்களுக்கு  நிதியுதவிகளை  வழங்கி வைத்தனர். 

 அத்துடன் அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உறுப்பினர் திருமதி வள்ளி ஶ்ரீகாந்தா அவர்கள் அனுப்பிவைத்த மாணவர்களின் தாய்மாருக்கான உடு புடவைகளும வழங்கப்பட்டது.

 


தமது  பிரதேச மாணவர்களின் கல்வி விருத்தியில் அக்கறை கொண்டு தொடர்ந்து உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி  நிதியத்திற்கும் அதன் நிருவாகிகளுக்கும்  பாண்டிருப்பு  மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் திரு.

ந.கமலநாதன்  நிகழ்ச்சியின் இறுதியில் நன்றி தெரிவித்தார்.

 இனிவரும் நாட்களில்,  வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,  கம்பகா, மலையகத்தில் நுவரேலியா மாவட்ட மாணவர்களுக்கும்  இந்த ஆண்டின் இறுதி ஆறுமாதங்களுக்கான மாணவர் நிதிக்கொடுப்பனவு வழங்கப்படும்.

 














No comments: