August 1, 2024
ரணிலின் தேர்தல் வியூகம் அனைவரையும் நெருக்கடிக்குள் தள்ளி யுள்ளது. சஜித் பிரேமதாஸ முன்னணியில் இருக்கின்றார் – அநுரகுமார திஸநாயக்கா முன்னணியில் இருக்கின்றார் என்னும் கதைகள் ஓய்ந்து ரணிலுடன் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைகின்றனர் – ரணிலை எந்தக் கட்சிகள் ஆதரிக்கின்றன – என்றவாறு தென்னிலங்கையின் தேர்தல் களம் மாறியிருக்கின்றது.
இது எவருமே எதிர்பாராத விவாதம். ரணில் எந்த அடிப்படையில் போட்டியிட போகின்றார் என்னும் கேள்விக்கு பெரும்பாலானவர்களின் பதில் – அவர் ராஜபக்ஷக்களோடுதான் இணைந் திருப்பார் – அவருக்கு வேறு தெரிவுகள் இல்லை என்றே இதுவரையில் இருந்தது. ஆனால் அவரோ, சுயேச்சை வேட்பாளராக தன்னை அறிவித்தி ருக்கின்றார். அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் அடையாளத்துடன்தான் மீண்டும் அதிகார அரசியலுக்குள் நுழைந்தார். காணாமல் போய்விட்டார் –
இனி அரசியலில் அவரை ஒருபோதுமே காணமுடியாது என்னும் ஆருடங்களின் மத்தியில்தான் ரணில் அவரின் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார். ஒருவேளை சஜித் அன்றைய சூழலில் சரியாக ஆடியிருந்தால் ஒருவேளை ரணில் காணாமலும் போயிருக்கலாம். சஜித்தோ மேடை சரியில்லை என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால், எந்த மேடை கிடைக்கின்றதோ அதில் ஆடிக் காட்டுபவனே சாணக்கியன் என்பதே ரணிலின் கணக்காக இருந்தது. ரணிலை பலரும் நரி என்பதுண்டு. அரசியலில் நரியாக இருப்பது தேவை யானதுதான். ஏனெனில், அதிகாரத்துக்கான ஆட்டத்தில் நரிகள்தான் இருக்கின்றன என்றால் நரியாக இருப்பது மட்டும்தான் ஒரேயொரு புத்திசாதுர்ய மான நகர்வாகும். ஆனால், இந்த விடயத்தை தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் மட்டும் ஒருபோதும் கற்றுக்கொள்ள முயற்சிப்பதில்லை – கற்றுக் கொள்ள மாட்டோம் என்று அடம்பிடிக்கின்றனர். ஒரு தேர்தல் களம் திறக்கப்பட்டுவிட்டது.
ஆனால், இதனை வெளிப்படையாக செய்ய வேண்டுமாயின், அவர்களை ஆதரிப்பதற்கான காரணத்தை பொது வெளியில் முன்வைக்க வேண்டும். ஆனால், எந்தவொரு தென்னிலங்கை வேட்பாளரும் இதுவரையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் முன்னேற்றகரமான பதில்களை வழங்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தமிழ் பொது வேட்பாளர் ஒரே யொரு தெரிவாக தமிழ் மக்கள் முன்னால் இருக்கின்றது. ஆனால், இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. தனிநபர்கள் ஆதரவு என்னும் நிலையிலேயே தமிழ் அரசுக் கட்சியின் நகர்வு அமைந்திருக்கின்றது.
அவ்வாறாயின், தமிழ் அரசுக் கட்சி ரணிலின் வியூகத்துக்குள் சிக்கிவிட்டதா? தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருந்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் தற்போது ஓர் உடன்பாட்டுக்குள் இருக் கின்றன. இவ்வாறான கட்சிகள் தொடர்ந்தும் பயணிக்கும் உறுதிப்பாட்டுடன் இருக்கின்றன. ஒருவேளை இவ்வாறான கட்சிகளில் ஒரு கட்சியோ அல்லது சில கட்சிகளோ தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டிலிருந்து வெளியேறு மாயின் அவர்களும் ரணிலின் வியூகத்துக்குள் சிக்கிவிட்டனரா என்னும் கேள்வியே மேலோங்கும் அல்லது அவர்கள் சஜித்தின் வியூகத்துக்குள் சிக்கியிருக்க வேண்டும்.
தமிழ் பொது வேட்பளார் நிலைப்பாட்டை எதிர்ப்பதற்கான தர்க்க நியாயங்கள் எவரிடமும் இல்லை. இந்தப் பின்புலத்தில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை தமிழ் அரசுக் கட்சி தொடர்ந்தும் எதிர்க்குமாயின், அது நிச்சயமாக தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரின் வியூகத்துக்குள் சிக்கிவிட்டதாகவே நோக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment