மூத்த கவிஞரும், ஈழத்தின் தேசியவிநாயகம் பிள்ளை என தமிழக சுபமங்களா இதழினால் வர்ணிக்கப்பட்டவரும், தமிழ் மருத்துவ முன்னோடி சாமுவேல் கிறீன் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிவான நூல்கள் எழுதியவரும், பல இலக்கிய விருதுகளை தாயகத்திலும் தமிழர் புகலிட தேசங்களிலும் பெற்றவருமான இராமலிங்கம் அம்பிகை பாகர் என்ற இயற்பெயரைக்கொண்டிருந்த அம்பி அவர்கள் கடந்த ஏப்ரில் மாதம் 27 ஆம் திகதி அவுஸ்திரேலியா சிட்னியில் தமது 95 ஆவது வயதில் மறைந்தார்.
கவிஞர் அம்பி,
எமது இலக்கிய குடும்பத்தில் பலருக்கும் ஞானத் தந்தையாகவும் விளங்கியவர்.
அம்பிக்கு
2004 ஆம் ஆண்டு 75 வயது பவளவிழா நடந்த காலத்தில்,
ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனின் வேண்டுகோளை ஏற்று, ஞானம் இதழில் பிரசுரிப்பதற்காக அட்டைப்ட அதிதி கட்டுரை
எழுதியிருந்தேன்.
இலங்கை வடபுலத்தில்
நாவற்குழியில் 1929 ஆம் ஆண்டு பிறந்திருக்கும்
அம்பியும், அதே வடபுலத்தில் 1941 இல் புன்னாலைக்கட்டுவனில்
பிறந்த தி. ஞானசேகரனும், தமது தாயகத்தில் நெருங்கிப்
பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைந்திருந்தாலும், இவர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் நெருக்கமாகி உறவாடியதனால் பல
விடயங்கள் சாத்தியமானது என்பதற்கு நானும் ஒரு
சாட்சி.
அம்பி மறைந்த செய்தி அறிந்ததும், என்னைத் தொடர்புகொண்டவர் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன். இதற்கு முன்னர் மூத்த எழுத்தாளர்கள் எஸ். பொ., காவலூர் ராஜதுரை, பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், கலாநிதி ஆ. கந்தையா, திருமதி ஞானம் இரத்தினம், வானொலி மாமா மகேசன் ஆகியோர் சிட்னியிலும், எழுத்தாளர்கள் நித்தியகீர்த்தி, அருண். விஜயராணி ஆகியோர் மெல்பனிலும் மறைந்த வேளையிலும் தொடர்புகொண்டு தனது துயரத்தை பகிர்ந்துகொண்டவர்தான் ஞானசேகரன்.
இவருக்கு அவுஸ்திரேலியா
மிகவும் நெருக்கமானது 1999 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான்.
அக்காலப்பகுதியில்,
இவர் ஞானம் மாத இதழை ஆரம்பித்திருக்கவில்லை.
சிட்னியில் வதியும்
இவரது மகன் ராஜசேகரனிடம் அவ்வேளையில் வருகை தந்திருந்த ஞானசேகரன் மெல்பனுக்கும் வந்தார்.
திரும்பிச்சென்று அடுத்தடுத்த வருடங்களில், தனது அவுஸ்திரேலியா பயணக்கதையை எழுதி நூலாக்கினார்.
2001 ஆம் ஆண்டு
நாம் மெல்பனில் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை இரண்டு நாட்கள் ஏற்பாடு செய்திருந்தபோது, ஞானம் ஆசிரியர், தமது துணைவியார் திருமதி ஞானலக்ஷ்மியையும் புதல்வன்
பாலச்சந்திரனையும் அழைத்து வந்தார்.
இவர்கள் அருண். விஜயராணியின் இல்லத்திலும், கவிஞர் அம்பி
மற்றும் மருத்துவர் வாமதேவனும் ( கலை, இலக்கிய
ஆர்வலர் சட்டத்தரணி ஜெயந்தி விநோதனின் தந்தையார் ) அருண். விஜயராணியின் அண்ணன் கலை, இலக்கிய ஆர்வலர்
சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் அவர்களின் இல்லத்திலும் தங்கினர்.
குறிப்பிட்ட
விழாவில் வெளியிடப்பட்ட மல்லிகை அவுஸ்திரேலியா
சிறப்பு மலரை எழுத்தாளர் தி. ஞானசேகரன் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
மறுநாள் மெல்பன் பண்டுரா பூங்காவில் கவிஞர் அம்பியின்
தலைமையில் நடந்த கவியரங்கு நிகழ்விலும், இலக்கிய கலந்துரையாடலிலும் ஞானசேகரன் தம்பதியரும் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் தம்பதியினரும் கலந்துகொண்டனர்.
ஞானம் ஆசிரியரின்
துணைவியார் திருமதி ஞானலக்ஷ்மி, பேராசிரியரின் மாணவி என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
இவ்வாறு இலக்கிய
உறவுகளை பேணுவதற்காகவும், அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்வதற்காகவும்தான்
குறிப்பிட்ட தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம் தொடர்ந்தும் அவுஸ்திரேலியா கண்டத்தில் கடந்த
இரண்டு தசாப்த காலமாக நடந்து வருகின்றது.
2004 ஆம் ஆண்டு
கவிஞர் அம்பிக்கு 75 வயது பிறந்ததும், கன்பராவில்
அந்த ஆண்டு நடந்த நான்காவது தமிழ் எழுத்தாளர் விழாவில் அன்னாரின் பவளவிழாவையும் நாம் நடத்தினோம்.
ஞானசேகரன், ஞானம் இதழின் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழா
சிறப்பிதழை அவ்வேளையில் வெளியிட்டதுடன், அந்த நிகழ்வில் கவிஞர் அம்பியை வாழ்த்தி உரையாற்றினார்.
பின்னர், சிட்னியில்
எழுத்தாளர் எஸ்.பொ.வும், அவரது மூத்த புதல்வன் மருத்துவர் அநுராவும் இணைந்து நடத்திய
அம்பி பவளவிழாவிலும் ஞானசேகரன் தம்பதியர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில்
அம்பியின் கவிதை நாடகங்களின் தொகுப்பான அந்தச்சிரிப்பு நூலும், எஸ்.பொ., நடேசன், தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் ஆகியோரின் நூல்களும்
வெளியிடப்பட்டன.
2005 ஆம் ஆண்டில்
நீர்கொழும்பில் எனது இரண்டாவது புதல்வி பிரியாதேவிக்கு
திருமணம் நடந்தவேளையில் கவிஞர் அம்பியும் கலந்து
சிறப்பித்தார். இந்நிகழ்விலும் ஞானம் தம்பதியினர்
அம்பியை மீண்டும் சந்தித்தனர்.
அக்காலப்பகுதியில்
கொழும்பில் சுகவீனமுற்றிருந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களைப் பார்ப்பதற்காக
என்னையும் அம்பியையும் அழைத்துச்சென்றவர்தான் தி. ஞானசேகரன்.
அன்று அந்த மாடிக்கட்டித்திற்கு
அம்பியை நானும் ஞானசேகரனும் கைத்தாங்கலாக அழைத்துச்சென்றோம்.
நடக்க இயலாதிருந்தபோதிலும்
தன்னைப்பார்க்க அம்பி வந்ததைக்கண்டு, பேராசிரியர்
நெகிழ்ந்துவிட்டார்.
பிறிதொரு சந்தர்ப்பத்தில்
சிட்னியில் ஞானேசேகரனின் மகன் ராஜேஸ்வரன் இல்லத்தில் நடந்த இலக்கிய சந்திப்பிலும் அம்பி
கலந்துகொண்டார்.
இவ்வாறு ஞானம்
ஆசிரியருடன் பயணித்த அம்பி அவர்களின் மறைவு எனக்கும் ஞானம் ஆசிரியருக்கும் இலக்கிய
ரீதியில் பெரிய இழப்புத்தான்.
மாந்தர்களின்
பிறப்பும் – மறைவும் இயல்பானதுதான். இரண்டுக்கும்
இடைப்பட்ட காலப்பகுதிதான் நினைவுகளாக நெஞ்சில் நிறைந்திருப்பது.
அந்த நினைவுகளுக்கு
மரணமில்லை.
அம்பி – ஞானசேகரன்
உறவுக்கு நானும் ஒரு பாலமாக இருந்திருக்கின்றேன் என்பது மனதிற்கு நிறைவானது.
---0---
letchumananm@gmail.com - முருகபூபதி
No comments:
Post a Comment