நல்லூரான் கொடிபார்ப்போம் எல்லோரும் வாருங்கள் !














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... ஆஸ்திரேலியா  




நாம்வணங்கும் வேலவனார் நல்லூரில் இருக்கின்றார்
நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை ஈகின்றார்
ஆடியிலே கொடியேற்றம் அருளொழுகும் வேலவர்க்கு
அனைவருமே வாருங்கள் அகநிறைவாய் ஆகிவிடும்

ஞானியரும் யோகிகளும் நல்லறிஞர் பலபேரும்
நாவலரும் பாவலரும் நடந்தவிடம் நல்லூரே 
காவலென வேலவனார் கோவில்கொண் டிருக்கின்றார்
கந்தனது கொடியேற்றம் கண்டிடுவோம் வாருங்கள் 

புண்ணியர்கள் பலபேரின் கால்பட்ட மண்ணாக
நல்லூரான் உறையும்மண் நமக்குவர மாயிருக்கு
வல்வினைகள் போக்குதற்கு நல்லூரைக் காணுங்கள்
நல்லூரான் கொடிகாண எல்லோரும் வாருங்கள்

வேதமொடு நாதம் வேலவர்க்கு வழங்கிடுவார்
காதலுடன் பண்பாடி கைகூப்பி வணங்கிடுவார்
ஆதவனும் எழுந்தங்கே அழகொளியை அளித்திடுவான்
அத்தருணம் நல்லூரான் கொடியேற்றம் நடந்துவிடும் 

பக்தியொடு   அடியார்கள்  பாடிடுவார்  ஓர்பக்கம்
பசியுடனே   வேலவனை எண்ணிடுவார்  ஓர்பக்கம்
சித்தமெலாம் வேலவனை இருத்திடுவார் ஓர்பக்கம்
அத்தனைபேர் முன்னிலையில் கொடியேற்றம் நடந்துவிடும் 

மண்ணகத்து நல்லூரின் கொடியேற்றம் காண்பதற்கு
விண்ணகத்தார் மண்ணகத்தைப் பார்த்தபடி நிற்பார்கள்
வேலவனின் கொடியேற்றம் கண்டுவிட்ட வேளையிலே
மலர்மாரி பொழிந்தவர்கள் வாழ்த்தியே மகிழ்ந்திடுவார் 

சாதிபேதம் நல்லூரில் தவிடுபொடி யாகிவிடும்
பேதமின்றி அடியவராய் வேலவனை வணங்கிடுவார்
கொடியேற்ற வேளையிலே அனைவருமே தமைமறந்து
வேலவனின் திருமுகத்தை மெய்மறந்து பார்ப்பார்கள் 

நல்லூரான் கொடிபார்த்தால் நன்மைபல நமக்குவரும்
நல்லூரான் அருள்கிடைக்கும் நாளெல்லாம் மலர்ந்திடுமே
நாம்சேர்த்த வினையனைத்தும் நமைவிட்டே அகன்றிடுமே
நல்லூரான் கொடிபார்ப்போம் எல்லோரும் வாருங்கள் 






No comments: