செப்டெம்பர் முதல் தொடர்ந்து சென்னை – பலாலிக்கிடையே இண்டிகோ விமான சேவை
புதிய அம்சம் கொண்டதாக 3 நிறங்களில் கடவுச்சீட்டு
மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!
நாட்டில் முதலிட முன்வருமாறு புலம்பெயர் இளைய தலைமுறையினருக்கு அழைப்பு
இன்று முதல் Online புகையிரத ஆசன முன்பதிவு
நாட்டில் வேகமாகப் பரவும் இன்ஃப்ளூவன்ஸா வைரஸ்
செப்டெம்பர் முதல் தொடர்ந்து சென்னை – பலாலிக்கிடையே இண்டிகோ விமான சேவை
ஆசன முன்பதிவு ஓகஸ்ட் 01 முதல் ஆரம்பம்
குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை மேற்கொள்ளக்கூடிய வசதி கொண்ட இந்திய நிறுவனமான இண்டிகோ, அதன் சர்வதேச வழித்தட வலையமைப்பில் யாழ். பலாலிக்கு புதிதாக மேலதிக விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையே தொடர்ந்து நாளாந்தம் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, அந்த விமான நிறுவனம் தெரிவித்தது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் விமான சேவையில் இலங்கையில் கொழும்புக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடமாக யாழ். பலாலி விமான நிலையம் அமைந்துள்ளதுடன், சர்வதேச விமான சேவையில் இது 34ஆவது இடத்தை பெற்றுள்ளது.
விமானப் பயணத்துக்கான முன்பதிவு நேற்று முன்தினம் முதலாம் திகதி ஆரம்பமாகியது. இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையத்தளமான www.goIndiGo.in அல்லது விமான நிறுவனத்தின் Mobile App மூலம் வாடிக்கையாளர்கள் பயண சீட்டுக்களுக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
புதிய அம்சம் கொண்டதாக 3 நிறங்களில் கடவுச்சீட்டு
ஒக்டோபர் முதல் வழங்க ஏற்பாடு
புதிய அம்சங்களை கொண்ட கடவுச்சீட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படுமென, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். இதற்கமைய சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர
கடவுச்சீட்டுகள் 3 வெவ்வேறு நிறங்களுடன் வழங்கப்படுமென்றும், அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் முதலாவது மின்னணு கடவுச்சீட்டு வழங்குவதற்கு தயாராகும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் மின்னணு கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த முன்னர் பல தொழில்நுட்ப மற்றும் சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
நாள் தோறும் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அவசர பயண தேவைகளை கொண்டவர்களுக்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டுகளை வழங்கி வருவதாகவும், அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார். நன்றி தினகரன்
மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!
- கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாடு
– இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்வுகள்
– இந்தியா, ஜேர்மனி பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்பு
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் (02) ஆரம்பமானது.
உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்றும் நாளையும் மட்டக்களப்பில் இடம்பெறும்.
இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் கலைஞர்களின் பங்குபற்றலுடன் ஊர்தி பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் வெபர் மைதானத்தை நோக்கி விழாவில் பங்குபற்றுவோரும், பொது மக்களும் நடைபவணியாக வந்தடைந்தனர்.
வெபர் மைதானத்தில் இலங்கை, இந்தியா மற்றும் ஜேர்மனியை சேர்ந்த பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் கலைஞர்களின் வருகையுடன் மங்கள விளக்கேற்றப்பட்டு கலைவிழா ஆரம்பமானது.
விழாவில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இலங்கையில் நடைபெற்றத்தை நினைவூட்டும் முத்திரையும் வெளியிடப்பட்டு அதன் முதல் பிரதி ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணனுக்கும் ஏனைய அழைப்பாளர்களுக்கும் முத்திரை வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், இந்நிகழ்வு தொடர்பான விசேட மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து கருத்தரங்குகள் இடம்பெற்றது முதல் நாளுக்கான தமிழ் கலை விழா நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இரண்டாம் நாளுக்கான கலை நிகழ்வுகளும் கருத்தரங்குகளும் நாளை சனிக்கிழமை கிழக்கு பல்கலைகழகத்தில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
நாட்டில் முதலிட முன்வருமாறு புலம்பெயர் இளைய தலைமுறையினருக்கு அழைப்பு
-தந்தையர் நாடென்ற பேச்சிலேயே சக்தி பிறக்கும்
சுவிஸ்சர்லாந்தில் வாழும் புலம்பெயர் மக்களின் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளையோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே.., ஒரு சக்தி பிறக்கிது மூச்சினிலே” என்ற மகாகவி பாரதியாரின் பாடலையும் சுட்டிக்காட்டினார். சுவிஸ்லாந்தில் வாழும் இளையோருக்கும் இலங்கைக்கும் இடையிலான உணர்வு ரீதியான பிணைப்பினையும் தனது அழைப்பில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
புலம்பெயர் இளையோர் தமக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி, பல்வேறு துறைகளிலும் தம்மை தகவமைத்துள்ளதாக பெருமையுடன் சுட்டிக்காட்டிய அமைச்சர், பொருளாதார முதலீடுகளை மாத்திரமன்றி நவீன தொழில்நுட்ப அறிவுசார் முதலீடுகளையும் புலம்பெயர் இளையோரிடம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுவிஸ்லாந்து தூதரகத்தினால் நேற்று முன்தினம் (31) ஏற்பாடு செய்யப்பட்ட சுவிஸ்லாந்தின் 733 ஆவது சுதந்திர தின நிகழ்வில், இலங்கை அரசின் சார்பாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“சுவிஸ்லாந்தின் சுதந்திர தின நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பாகவும், எமது அரசாங்கத்தின் சாரபாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் கலந்து கொள்ள கிடைத்த பெருமைமிகு தருணத்தில், சுவிஸ்லாந்தின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது இரண்டு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவு என்பது, நீண்ட வரலாற்றைக் கொண்டது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோது அதனை உடனடியாக அங்கீகரித்த நாடுகளுள் சுவிஸ்லாந்தும் ஒன்று இதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
தற்போது சுவிஸ்லாந்தை சேர்ந்த பல நிறுவனங்கள் தமது முதலீடுகளை இலங்கையில் மேற்கொண்டுள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறை, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், அதேபோன்று வர்த்த ரீதியான முதலீடுகள் என பலவேறு துறைசார் முதலீடுகளாக அவை அமைந்துள்ளன. இவை இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பதுடன் வேலை வாய்ப்புக்களையும் வழங்குகின்றன.
இலங்கையின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான விடயங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் காணப்படும் புரிந்துணர்வையிட்டு பெருமையடைகின்றோம்.
இலங்கையின் பிரதான வருமான மார்க்கங்களில் ஒன்றான சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதற்கு சுவிஸ்லாந்து தொடர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சுவிஸ்லாந்தின் ஒத்துழைப்பானது, பொருளாதார அபிவிருத்தி என்பதற்கு அப்பால், இலங்கை மக்களின் வாழ்கைத்தரம், வாழ்வாதாரம், நிலையான சமாதானத்தினை உறுதிப்படுத்தல் போன்றவற்றிலும் அவதானம் செலுத்த வேண்டும் என்றார். நன்றி தினகரன்
இன்று முதல் Online புகையிரத ஆசன முன்பதிவு
- மு.ப. 10.00 மணி முதல் சேவை ஆரம்பம்
புகையிரத பயணத்துக்கான ஆசனங்களை Online மூலம் முன்பதிவு செய்யும் செயற்பாடுகளை இன்று (01) முதல் ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஆசன முன்பதிவுகள் தற்போது இரவு 7.00 மணி முதல் இடம்பெற்று வருகின்றன.
ஆயினும், 2024 மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு முன் இருந்தது போன்று இன்று முதல் மு.ப. 10.00 மணியிலிருந்து ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. நன்றி தினகரன்
நாட்டில் வேகமாகப் பரவும் இன்ஃப்ளூவன்ஸா வைரஸ்
எச்சரிக்கை விடுக்கிறார் டொக்கர் லக்குமார்
நாட்டில் இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் கொவிட் -19 தொற்றின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் மத்தியில் இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துக் காணப்படுவதாக குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் வயதானவர் முகக் கவசங்களை அணிய வேண்டுமெனவும் தங்களது கைகளை சுகாதார முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பாக பொதுப் போக்குவரத்து மற்றும் சமூக கூட்டங்களின் போது சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டுமெனவும் அவர் கூறினார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment