இன்னும் கன்னியாக பாடும் மீன் சு.ஶ்ரீகந்தராஜாவின் சிறுகதைத்தொகுதி வாசிப்பனுபவம் கானா பிரபா

 இன்னும் கன்னியாக

பாடும் மீன் சு.ஶ்ரீகந்தராஜாவின் சிறுகதைத்தொகுதி
வாசிப்பனுபவம் கானா பிரபா 
IMG_4171.JPG
சட்டத்துறையில் இயங்கும் பாடும் மீன் சு.ஶ்ரீகந்தராஜா அவர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாழ்பவர், கவிஞராக அதிகம் அறியப்பட்டாலும் ஆழ்ந்த இலக்கியமும், தமிழ்ப் பற்றும் மிக்க புலமையாளர். மடை திறந்தது போலப் பேச்சாற்றல் மிக்கவர்.
இவருடைய ஆளுமைத் திறத்துக்கு இவர் ஆக்கியளித்த அச்சுவடிவில் வந்த நூல்கள் மிகச் சிலவே.

இன்று அவருடைய இன்னொரு பரிமாணமாக “இன்னும் கன்னியாக” என்ற சிறுகதைத் தொகுதியைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தைப் பகிர வந்துள்ளேன்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் உரையை இந்த நூல் வெளியீட்டு விழாவின் தலைமையுரையில் எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

அதன் நீட்சியாக “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது போலவே இந்தச் சிறுகதைத் தொகுதியின் ஒன்பது கதைகள் அமைந்திருக்கின்றன.

“இன்னும் கன்னியாக”
இந்தப் புத்தகத் தலைப்பே இதற்குள் அடக்கப்பட்டிருக்கும் சிறுகதைகளைப் பற்றிக் கோடிட்டுக் காட்டி விடும்.
அவ்வளவு தூரம் பெண்ணியம் சார்ந்த, பெண்களுக்கு நேரும் பல்வேறு சவால்களை, குறிப்பாகத் திருமணம் முடித்த பெண்களின் கதைகளாக அமைந்திருக்கின்றன.

இவற்றைப் படிக்கும் போது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்த ஒரு தொடர் ஞாபகத்துக்கு வந்தது.
புலம்பெயர்ந்த மண்ணுக்குத் தாயகத்தில் இருந்து  அனுப்பப்படும் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், புலம்பெயர் மண்ணில் இருந்து அழைக்கும் ஆண் வர்க்கம் நிகழ்த்திய மோசமான செயற்பாடுகளைத் தோலுரித்துக் காட்டிய உண்மை நிகழ்வுகளின் பதிவு அது.

ஆகவே ஶ்ரீகந்தராஜா அவர்கள் எழுதிய இந்தக் கதைகள் எங்கோ, யாருக்கோ நடந்தவை தான். அதுவே இவற்றின் யதார்த்த நிலையைக் காட்டுகின்றன.
இவர் ஒரு சட்டத்தரணியாகவும் இருக்கின்ற காரணத்தால் தன்னுடைய அனுபவங்களின் திரட்டுகளாகவும் கொடுத்திருக்கலாம்.

இந்த வேளை நடிகர் மம்முட்டி தான் வழக்கறிஞராக இருந்த போது கண்ட அனுபவங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

“மூன்றாம் பிறை” என்ற பெயரில் தமிழில் வந்திருக்கிறது,
படித்துப் பாருங்கள்,
மனிதம், அன்பு, நேரம், நட்பு, பாடம் என எல்லாவற்றையும் நேர் கோணத்தில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் மம்முட்டி.

எடுத்த எடுப்பிலேயே “காணமல் போனவள்” என்ற ஒரு கதை கலாச்சார அதிர்ச்சியைப் பதிவு செய்கிறது.

மட்டக்களப்புப் பேச்சுவழக்கை சிறுகதைகளின் உரையாடல்களில் இவர் கையாண்டிருப்பதைப் படிப்பது ஒரு புது அனுபவம் எனக்கு.

“எனக்காகவா நான்”, “இன்னும் கன்னியாக”, “முதல் உறவு” போன்றவை பெண்களின் மனச்சிக்கல்களை அவர்களின் கோணத்தில் நின்று காட்சிப்படுத்தியிருக்கின்றார்.

முதல் உறவு மிக வித்தியாசமாக எழுதப்பட்ட கதை. அதில் உண்மைக்கும் பொய்க்குமான சமரத்தை வேண்டிய மனதின் போராட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார்.

பெற்ற மனம் கதையில் சகோதர யுத்தத்தால் எழும் இழப்பை ஒரு அதிர்ச்சியான கதைப்போக்கோடு பதிவு செய்திருக்கின்றார்.

திசை தெரியாத பயணம் கதையில் இந்தியப் பேச்சு வழக்கைப் பின்பற்ற முயன்றிருக்கிறார்.

ஒப்பீடு சிறுகதை புலம்பெயர் வாழ்வில் இருப்பவர்களுக்குப் பழக்கப்பட்டது. தாய் நிலத்தில் இருப்போருக்கு ஒரு கலாச்சார அதிர்ச்சியைக் கொடுக்கும்.

ஒப்பீடு கதைக்கு எதிர்த் திசையில் நான் வரமாட்டேன் அமைகின்றது. அது முழுக்க முழுக்க ஈழத்து வாழ்வியலின் இன்றைய நிலையைப் பிரதிபலிப்பது.

என் வாழ்வில் முதன்முறையாக மட்டக்களப்பு மண்ணுக்குக் கடந்த வருட இறுதியில் போயிருந்தேன். உண்மையிலேயே அந்த உலகத்தின் வெள்ளாந்தி மனிதர்கள், சூழல் இவற்றையெல்லாம் பார்த்த போது ஏதோ புதியதொரு உலகத்தில் வந்தது போன்ற பிரமை.

இவர் தன்னுடைய கதைகளில் இன்னும் ஆழமாக அந்த மண்ணின் மைந்தர்களைப் பற்றிப் பேச வேண்டும், அதற்குரிய மண்வாசனை எழுத்தை இன்னும் மாறாமல் வைத்திருக்கிறார் என்பதை நான் வரமாட்டேன் வழியாக உணர்ந்தேன்.

ஆரம்பத்தில் நான் குறிப்பட்ட ஈழமுரசு அனுபவத் தொடரின் சாட்சியம் போல அமைகின்றது மறுவாழ்வா என்ற கதை.

இதையெல்லாம் படிக்கும் போது ஒருபக்கம் எமது இனம் தன் அடையாளத்துக்காகப் போராடி அழிந்தது போக, இன்னொரு பக்கம் புலம்பெயர் சூழலின் தாக்கங்களால் சிதைக்கப்பட்ட பெண்களின் அவல நிலையை நாம் யதார்த்த நிலையில் நின்று வருந்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இவற்றையெல்லாம் படித்துக் கொண்டு போகும் போது இன்ப அதிர்ச்சியாக ஒரு பதின்ம வயது இளவலின் பாஸ்போர்ட் சைஸ் படம் அது வேறு யாருமல்ல ஶ்ரீ அண்ணா தான். அவருடைய பதினைந்தாவது வயதில் எழுதிய கதை “ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்”

ஒரு திரைப்படத்தைப் பார்த்த பாதிப்பில் எழுதப்பட்ட அந்தக் கதையைப் படித்த போது முன்னர் படித்த தற்கால எழுத்து நடையில் இருந்து விலகிய ஒரு புத்தாக்கமாக, வித்தியாசமான எழுத்து நடையும் வாசிப்பு அனுபவமாகவும் கிடைக்கிறது.

ஈழத்தமிழினத்தின் புலமைச் சொத்துகளில் ஒருவரான மயிலங்கூடலூர் பி.நடராசன் அவரின் மாணவராக இருந்தவர் என்ற செய்தியையும், அவரே இவரின் தமிழ்ப்புலமையை இளம்பிராயத்தில் கண்டு “உயிர்ப்பு” இதழாசிரியராகவும் அமர்த்திக் கொண்டதையும் பார்க்கும் போது அவரின் தீர்க்க சிந்தனை இன்று யதார்த்தமாகியிருக்கிறது.

பாடும் மீன் சு.சிறீகந்தராஜா அவர்களின் சிறுகதை, கட்டுரைப் பகிர்வுகள் மட்டக்களப்பு மண்ணை இன்னும் ஆழமாகத் தோண்டி எடுத்து எமக்கு அவர் தரவேண்டும். கூடவே அவருடைய அச்சுப் பெறாத கட்டுரைகள் நூலுருவில் வரவேண்டும் என்றும் இந்த வேளை வேண்டிக் கொண்டு, வாய்ப்புக்கு நன்றி கூறி நிறைவு செய்கின்றேன்.

09.06.2024 இல் சிட்னியில் நிகழ்ந்த பாடும் மீன் சு.சிறீகந்தராஜா அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வில் பகிர்ந்தது.

கானா பிரபா

No comments: