முரடன் முத்து - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், இயக்குனர் பி ஆர் பந்துலுவும்


திரையுலகில் மிக நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தவர்கள். சிவாஜிக்கு முன்பே சினிமாத் துறைக்குள் நடிகராக நுழைந்து விட்ட பந்துலு கால வெள்ளத்தில் தயாரிப்பாளராகவும் , இயக்குனராக மாறினார். அப்படி மாறியவர் உருவாக்கிய கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, தங்கமலை ரகசியம் போன்ற படங்களில் சிவாஜி முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது நடித்து கொடுத்து அப் படங்கள் வெற்றி பெற துணை நின்றார். தனது நீண்ட கால ஆசையான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை தயாரித்து இயக்கும் வாய்ப்பை பந்துலுவுக்கு கொடுத்த சிவாஜி பின்னர் கப்பலோட்டியத் தமிழன் பாடதில் நடித்து , அந்தப் படம் வெற்றி பெறாமல் போகவே உடனடியாக குறுகிய காலத் தயாரிப்பாக பலே பாண்டியாவில் இலவசமாக நடித்து கொடுத்தும் உதவினார்.


தொடர்ந்து இருவரும் இணைந்த கர்ணன் படம் வசூல் ரீதியில்

பின்னடைவை சந்திக்கவே உடனடியாக மற்றும் ஒரு படத்தில் நடித்தது கொடுக்க முன் வந்தார். அப்படி உருவான படம் தான் 1964ல் வெளிவந்த முரடன் முத்து. ஆனால் இந்தப் படம்தான் சிவாஜிக்கும், பந்துலுவுக்கும் இடையில் இருந்த நட்புக்கு உலை வைத்தது.

முரடன் முத்து படத்தை தயாரித்து இயக்கத் தொடங்கிய பந்துலு அதே படத்தை ஒரே நேரத்தில் கன்னடத்திலும் சின்னடா கொம்பே ( தங்க பொம்மை ) என்ற பெயரில் உருவாக்கலானார். இந்தப் படத்தின் கதாநாயகியாக அவரால் புதுமுகமாக அறிமுகம் செய்ய்யப் பட்டவர் தான் தங்க பொம்மை போல் தோற்றமளித்த ஜெயலலிதா. இதுதான் அவரின் முதல் படமுமாகும். ஆனால் தமிழில் முரடன் முத்துவின் காதலியாக நடித்தவர் தேவிகா. கன்னடத்தில் ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு கொடுத்த பந்துலு தமிழில் எனோ அதனை வழங்கவில்லை. இல்லை என்றால் ஜெயலலிதாவின் முதல் படமாகவும், அவரின் முதல் ஜோடியாக சிவாஜியும் நடித்திருப்பார். ஆனாலும் அவ்வாறு நடக்காமல் அதே பந்துலுவால் பின்னர் எம் ஜி ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜோடி சேரும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு கிடைத்தது. பின்னர் நடந்தவை வரலாறு!


கிராமத்தில் பெற்றோரை இழந்து அண்ணன் , அண்ணியின் பராமரிப்பில் வாழ்கிறான் முத்து. நல்லவனாக போதும் கல்வியறிவின்றி முரடனாக ஊரை வலம் வரும் அவனை கட்டுப் படுத்தும் சக்தி அவன் அண்ணிக்கு மட்டும்தான் உண்டு. கிராமத்துக்கு தன் தாயுடன் வரும் அவனின் முறைப் பெண் சீதா முத்துவை காதலித்து எப்படியாவது அவனின் முரட்டுத் தனத்துக்கு முடிவு கட்ட கங்கணம் கட்டுகிறாள். மோதலில் தொடங்கும் உறவு பின்னர் காதலாகிறது. இதனை விரும்பாத சீதாவின் தாய் சதி செய்து முத்துவையும் , அவன் தங்கையையும் வீட்டை விட்டே துரத்துகிறாள். அப்பாவியான முத்துவின் அண்ணண் மருதமுத்துவும், அவன் மனைவியும் முத்து வீட்டை விட்டு வெளியேறியதை நினைத்து கலங்குகிறார்கள். ஆனால் முத்துவோ தன் முரட்டுத் தனத்தை எல்லாம் விட்டு விட்டு, தொழில் செய்து தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க உறுதி எடுக்கிறான். அதில் அவன் வெற்றி பெற்றானா என்பதே மீதி கதை.

முரடன் முத்துவாக வரும் சிவாஜி பாத்திரமாகவே மாறி விட்டார்.

முரட்டுத்தனம், பிடிவாதம், அலட்சியம், வெகுளித்தனம், அண்ணியின் கட்டளைக்கு மட்டும் அடங்குவது என்று எல்லாவித குணச்சித்திரங்களையும் தன் நடிப்பின் மூலம் கொண்டு நிறுத்துகிறார் அவர். அவருக்கு குறை வைக்காமல் உணர்ச்சிகரமாக நடிக்கிறார் அண்ணனாக வரும் பி ஆர் பந்துலு. அண்ணியாக வரும் எம் வி ராஜம்மா உணர்ச்சிகளை கொட்டுகிறார். வி கே ராமசாமி, நாகேஷ் இருவரும் படத்தின் கலகப்புக்கு உதவுகிறார்கள். தேவிகாவின் நடிப்பில் குறையில்லை. பிரேம் நஸிர் வந்து போகிறார். ஜமீன்தாராக வரும் அசோகன் காட்டும் முக பாவங்கள் மர்மமானவை! இவர்களுடன் பேபி ஷகிலா, சந்திரகாந்தா, ஏ கருணாநிதி, சி கே சரஸ்வதி, ஓ ஏ கே தேவர், ஆகியோரும் நடித்திருந்தனர்.


படத்துக்கான திரைக்கதை வசனத்தை எம் எஸ் சோலைமலை எழுதினார். வசனங்களில் அவரின் திறமை வெளிப்பட்டது. கண்ணதாசனின் பாடல்களுக்கு இசையமைத்தவர் டி ஜி லிங்கப்பா. தாமரை பூ குளத்திலே, பொன் ஆசை கொண்டோருக்கு உள்ளம் இல்லை, கோட்டையிலே ஒரு ஆலமரம் பாடல்கள் பிரபலமாகின. வி ராமமூர்த்தி படத்தை ஒளிப்பதிவு செய்ய, ஆர் தேவராஜன் எடிட்டிங்கை கவனித்துக் கொண்டார்.

படத்தின் பெயர் முரடன் முத்து என்ற போதும் படத்தில் பெரியளவில் அடிதடி, சண்டைக் காட்சிகள் இல்லை. ஆனால் படம் தயாரிக்கப் பட்டு முடியும் தறுவாயில் சிவாஜிக்கும், பந்துலுவுக்கும் இடையில் தகராறு வந்து விட்டது. தீபாவளி வெளியீடாக வரவிருந்த முரடன் முத்து சிவாஜியின் நூறாவது படமாக வெளிவர வேண்டும் என்பதில் பந்துலு தீவிரமாக இருந்தார். ஆனால் அதே கால கட்டத்தில் உருவகிக் கொண்டிருந்த ஏ பி நாகராஜனின் நவராத்திரி படம் தான் நூறாவது படமாக வெளிவர வேண்டும் என்பதில் சிவாஜி தரப்பினர் தீவிரமாக இருந்தார்கள். சிவாஜியும் அதற்கு பச்சை கொடி காட்டியது பந்துலுவுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய முரடன் முத்துதான் நூறாவது படமாக வெளிவர வேண்டும் என்று தீர்மானித்த பந்துலு அவ்வாறே சிவாஜியின் நூறாவது படம் என்று விளம்பரம் செய்து முரடன் முத்துவை வெளியிட்டார். அதே சமயம் சிவாஜியின் நூறாவது படம் என்று உத்தியோக பூர்வமாக நவராத்திரி அதே நாளில் வெளியானது. பின்னர் முரடன் முத்து சிவாஜியின் தொண்ணூற்று ஒன்பதாவது படமானது. ஒரே நாளில் வெளியான இரு படங்களில் நவராத்திரி நூறு நாட்கள் ஓட, முரடன் முத்து சுமாராக ஓடியது.

இந்தப் படத்தில் நடித்ததற்கு சிவாஜிக்கு கொடுக்க வேண்டிய பணத்தின் ஒரு பகுதி நிலுவையாக இருந்தது. அதனை வசூலிக்க சிவாஜியின் கொடுக்கல், வாங்களுக்கு பொறுப்பான அவரின் தம்பி சண்முகம் பந்துலு மீது வழக்கு தொடர முனைந்த போது சிவாஜி தலையிட்டு அதனை தடுத்தார். ஆனால் இந்தப் படத்தோடு சிவாஜி, பந்துலு நட்பு முடிவுக்கு வந்தது. அதன் பின் எம் ஜி ஆரிடம் சென்ற பந்துலு ஆயிரத்தில் ஒருவனை உருவாக்கி எம் ஜி ஆரின் குட் புக்சில் இடம் பிடித்தார்.

No comments: