உலகச் செய்திகள்

சீனா, இத்தாலி, நேபாளம், இலங்கை உட்பட உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து

காசாவில் ஐ.நா. புகலிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40க்கும் மேற்பட்டவர்கள் பலி

சுவிஸ் அமைதி மாநாடு: செலன்ஸ்கி அழைப்பு

மத்திய காசாவில் இஸ்ரேலின் புதிய படை நடவடிக்கையில் 75 பேர் பலி

இஸ்ரேலியருக்கு மாலைதீவு தடை

தாய்வானைச் சூழ சீனாவின் செயற்பாடுகள் அதிகரிப்பு

ஒன்பதாவது மாதத்தைத் தொட்ட காசா போரில் அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் குண்டு மழைசீனா, இத்தாலி, நேபாளம், இலங்கை உட்பட உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து

June 6, 2024 9:50 am 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 3ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நரேந்திர மோடி 3ஆவது முறையாக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எக்ஸ் சமூக வலைதளத்தில், “தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இத்தாலியையும், இந்தியாவையும் இணைக்கும் நட்புறவை வலுப்படுத்தவும் நம்மை பிணைக்கும் பல்வேறு பிரச்சினைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம்தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்பது உறுதி” என பதிவிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடு முன்னேறி வருகிறது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலுவவுதை வெளிப்படுத்துவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. மிக நெருங்கிய பக்கத்து நாடு என்ற வகையில், இந்தியாவுடனான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இலங்கை ஆர்வமாக உள்ளது” என கூறியுள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதி : மாலைத்தீவுகள் ஜனாதிபதி முகமது முய்சு விடுத்துள்ள செய்தியில், “இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ள பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துகள். நம் இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என கூறியுள்ளார்.

இணைந்து பணியாற்ற விருப்பம்: சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். இரு நாடுகள் மற்றும் மக்களின் நலனுக்காகவும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்தவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது” என கூறியுள்ளார்.

இதுபோல நேபாள பிரதமர் பிரசண்டா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் உள்ளிட்ட உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   நன்றி தினகரன் 

காசாவில் ஐ.நா. புகலிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40க்கும் மேற்பட்டவர்கள் பலி

9 மாதங்களை தொட்ட போரில் 36,654 பலஸ்தீனர்கள் பலி

June 7, 2024 9:32 am 

மத்திய காசாவில் இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நிரம்பி வழியும் ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

நுஸைரத் அகதி முகாமில் உள்ள பாடசாலையின் மேல் மாடி வகுப்புகள் மீது இரு ஏவுகணைகள் கொண்டு இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஹமாஸ் நிலை ஒன்றை இலக்கு வைத்தே துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் கொடிய படுகொலை ஒன்றை செய்ததாக ஹமாஸ் ஊடக அலுவலகம் குற்றம்சாட்டியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அம்புலன்ஸ் மற்றும் மீட்புக்குழுவினர்கள் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். வகுப்பறைகள் தகர்க்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் போர்வைகளால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் படங்கள் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளன.

‘இந்தப் போர் போதும்! நாம் பல தடவைகள் இடம்பெயர்ந்து விட்டோம். எமது குழந்தைகளை அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது கொலை செய்கிறார்கள்’ என்று இந்த தாக்குதலில் காயமடைந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.

இந்த பாடசாலை ஹமாஸ் கட்டளையகமாக இருந்தது என்ற இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் ஊடக அலுவலகத்தின் பணிப்பாளர் இஸ்மைல் அல் தவப்தா மறுத்துள்ளார். ‘பல டஜன் இடம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடிய குற்றத்தை நியாயப்படுத்துவதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் இட்டுக்கட்டப்பட்ட கதைகளை குறிப்பிடுகின்றனர்’ என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

மத்திய காசாவில் இஸ்ரேல் புதிய படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இஸ்ரேல் நடத்தும் சரமாரி தாக்குதல்களில் 100 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் நுஸைரத் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனை வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. அந்தப் பகுதியில் புரைஜ் மற்றும் அல் பகாஸி முகாம்களிலும் இஸ்ரேல் உக்கிர செல் தாக்குதல்களை நடத்தி வருவதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மறுபுறம் தெற்கு நகரான ரபாவிலும் இஸ்ரேலின் தாக்குதல் நீடிப்பதோடு அங்கு கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியதாக உள்ளூர் தரப்பினரை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலுடன் ஆரம்பமான இந்தப் போர் இன்றுடன் எட்டு மாதங்களை பூர்த்தி செய்யும் நிலையில் காசா பகுதி முழுவதும் பேரழிவு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 68 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 235 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த எட்டு மாதங்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 36,654 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 83,309 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹமாஸ் உத்தியில் மாற்றம்

எனினும் ஹமாஸ் அமைப்பு தாக்கிவிட்டு மறைந்து செல்லும் உத்தியை கையாண்டு வரும் நிலையில் அங்கு தமது நிலையை தக்கவைப்பதில் இஸ்ரேல் இராணுவம் சிரமத்தை சந்தித்து வருவதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

காசா போருக்கு முன்னர் 20,000 தொடக்கம் 25,000 இருந்த ஹமாஸ் போராளிகளின் எண்ணிக்கை தற்போது 9,000 மற்றும் 12,000 இற்கு இடையே குறைந்திருப்பதாக அமெரிக்க தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில் அந்தப் போராளிகள் தற்போது இஸ்ரேலிய படைகள் மீது திடீர் தாக்குதல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குண்டுகளை வீசி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான உத்தி சுரங்கப்பாதைகள் வழியாக காசாவுக்கு வரும் ஆயுதங்கள் மற்றும் வெடிக்காத ஆயுதங்களை மீள பயன்படுத்தல் அல்லது இஸ்ரேலிய படைகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களைக் கொண்டு ஹமாஸுக்கு தமது போர் நடவடிக்கையை மேலும் பல மாதங்களுக்கு நீடிக்க உதவுகிறது என பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு பின்னர் அந்த இடத்தில் இருந்து உடன் பின்வாங்குவது, மறைந்து கொள்வது, மீண்டும் ஒருங்கிணைவது மற்றும் குறித்த பகுதியில் இருந்து போராளிகளை அகற்றியதாக இஸ்ரேல் நம்பும் பகுதியில் மீண்டும் ஒன்று திரளும் திறனை பலஸ்தீன போராளிகள் வெளியிட்டு வருவதாக அமெரிக்க நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசா குடியிருப்பாளரான வசாம் இப்ராஹிமும் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதனை உறுதி செய்தார். ‘தமது எல்லைக்குள் வரும் இஸ்ரேல் துருப்புகள் மீது உடன் தாக்குதல் தொடுக்கும் உத்தியில் இருந்து ஹமாஸ் விலகியுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார்.

‘அவர்களின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. அவர்கள் படைகளை நிலைநிறுத்தும் வரை காத்திருந்துவிட்டு பின்னர் திடீர் தாக்குதல்களை நடத்துகின்றனர்’ என்றும் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் வெளியிட்டபோதும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிடம் இருந்து இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்று தொடர்பில் கட்டார் தலைநகர் டோஹாவில் அந்நாட்டு பிரதமர் மற்றும் எகிப்து உளவுப் பிரிவுத் தலைவர் ஆகியோர் ஹமாஸுடன் கடந்த புதனன்று பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக அது தொடர்பில் தெரிந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.எனினும் இஸ்ரேல் முடிவற்ற பேச்சுவார்த்தைகளை விரும்புவதாக பெய்ரூட்டில் உள்ள ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் குற்றம்சாட்டி இருப்பதோடு தமது முக்கிய கோரிக்கையை நிறைவேற்றாத எந்த ஒரு திட்டத்தையும் சாதகமாகவும் தீவிரமாகவும் எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்று ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்துள்ளார்.

காசா போர் பிராந்தியத்திலும் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் லெபனானில் இருந்து இரு ஆளில்லா விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காசா போர் தொடக்கம் இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே பரஸ்பரம் தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில் லெபனான் எல்லையில் படை நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 


சுவிஸ் அமைதி மாநாடு: செலன்ஸ்கி அழைப்பு

June 7, 2024 9:30 am 

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவற்காக சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவிருக்கும் அமைதி மாநாட்டில் பங்குபற்ற ஆசிய பசுபிக் பிராந்தியம் முன்வர வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி விளடிமிர் செலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் தலைவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் பங்குபற்றிய இம்மாநாட்டில் நாடுகள், பிராந்தியங்கள் மத்தியில் கூட்டுறவை வளர்ப்பது குறித்தும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன. சர்வதேச அமைதி மாநாடு எதிர்வரும் ஜூன் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

மத்திய காசாவில் இஸ்ரேலின் புதிய படை நடவடிக்கையில் 75 பேர் பலி

- மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றம்

June 6, 2024 8:46 am 

காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான எதிர்பார்ப்பு குறைந்து வரும் நிலையில் மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் 75 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய காசாவில் புரைஜ் மற்றும் மகாசி அகதி முகாம்களை இலக்கு வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இஸ்ரேலியப் படை தரை மற்றும் வான் வழியாக கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்தப் பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது தரைப் படை நடவடிக்கைக்கு மத்தியில் இஸ்ரேல் வான் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் புரைஜ் பகுதியில் உளவு வழிகாட்டலுடன் படை நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய காசாவில் தற்போது மருத்துவ வசதிகளை வழங்கி வரும் ஒரே மருத்துவமனையாக உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனை காயமடைந்தவர்களால் நிரம்பி இருப்பதாகவும், பலரும் தரையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தெற்கு நகரான ரபாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கையால் அங்கிருந்து வெளியேறி அடைக்கலம் பெற்றவர்களாவர்.

ரபா மீதான தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் எச்சரித்திருந்தபோதும் இஸ்ரேலிய டாங்கிகள் அந்த நகரின் மத்திய பகுதியை அடைந்துள்ளன. இதனால் அண்மைக்காலத்தில் அந்த நகரில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புரைஜ் அகதி முகாமில் பாடசாலை வளாகம் ஒன்று உட்பட பல இடங்கள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதலை தீவிரப்படுத்தி இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இங்கும் இஸ்ரேல் இராணுவம் கடந்த டிசம்பர் தொடக்கம் நடத்தும் இரண்டாவது படை நடவடிக்கையாக இது உள்ளது. முன்னதாக புரைஜ் அகதி முகாமை தளமாகக் கொண்ட ஹமாஸ் படைப்பிரிவை ஒழிப்பதாகக் கூறியே இஸ்ரேல் அங்கு தாக்குதலை நடத்தி இருந்தது. இந்நிலையில் அந்த முகாமுக்கு இஸ்ரேல் மீண்டும் திரும்பி இருப்பதன் மூலம் அங்கு பலஸ்தீன போராளிகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றனர் என்பது தெரிகிறது என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘இரவு முழுவதும் குண்டு சத்தம் நிற்கவில்லை’ என்று டெயிர் அல் பலாவில் இருந்து இடம்பெயர்ந்த 30 வயதான ஆயா என்பவர் தெரிவித்தார்.

புரைஜுக்கு டாங்கிகளை அனுப்பிய இஸ்ரேல் இராணுவம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளான அல் மகாசி மற்றும் அல் நுஸைரத் அதேபோன்று டெயிர் அல் பலா நகரங்களில் வான் தாக்குதல்களை நடத்தியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘புதிய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பற்றி பேசும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆக்கிரமிப்பாளர்கள் நகரங்கள் அல்லது அகதி முகாம் ஒன்றை அழுத்தம் கொடுப்பதற்கு பயன்படுத்துகின்றனர். தமது வீடுகள் அல்லது கூடாரங்களில் பாதுகாப்பாக இருக்கும் பொதுமக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? அரபு மற்றும் உலகத்தால் போரை நிறுத்த முடியாதது ஏன்’ என்று ஆயா ரோய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் ‘சாட்’ செயலி வழியாக தெரிவித்தார்.

மத்திய காசாவின் டெயிர் அல் பலா நகரில் உள்ள வீடுகள் மீது இடம்பெற்ற வான் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. மகாசி முகாமில் உள்ள டார்விஷ் குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் 243 ஆவது நாளாக நேற்று நீடித்த இஸ்ரேலின் தாக்குதல்களில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகர் மற்றும் தெற்கின் கான் யூனிஸ் நகரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் பல வாரங்கள் படை நடவடிக்கையை மேற்கொண்டு பயங்கர தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலியப் படை கடந்த வெள்ளிக்கிழமையே அங்கிருந்து வாபஸ் பெற்றது. இந்தப் படை நடவடிக்கையின்போது அந்த நகர் முற்றாக சின்னாபின்னமாக்கப்பட்டது. படைகள் வாபஸ் பெற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட மீட்புப் பணிகளில் அங்கு 360 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு பெரும்பாலானவை பெண்கள் மற்றும் சிறுவர்களுடையது என்று காசா சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 36,500ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் மூன்று கட்ட போர் நிறுத்த திட்டம் ஒன்றை வெளியிட்டபோதும் இஸ்ரேல் அல்லது ஹமாஸ் தரப்பினர் இதுவரை அதற்கு உறுதியான ஒப்புதலை அளிக்கவில்லை.

நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வாபஸ் பெறுவது தொடர்பில் தெளிவாக குறிப்பிடாத இஸ்ரேலுடனான உடன்படிக்கை ஒன்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடந்த செவ்வாய்க்கிழமை (04) பேசிய மூத்த ஹமாஸ் அதிகாரியான ஒசாமா ஹம்தான் குறிப்பிட்டுள்ளார்.

‘முடிவு அல்லது காலக்கெடு இல்லாது பேச்சுவார்த்தை கதவை திறப்பது பற்றி இஸ்ரேல் கூறுகிறது. இது கைதிகளை விடுவிக்கும் வரையான ஒரு கட்டம் பற்றியே இஸ்ரேல் விரும்புவதை உறுதி செய்வதாக உள்ளது. அதன் பின்னர் எமது மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் போரை மீண்டும் ஆரம்பிக்கும்’ என்று ஹம்தான் கூறினார்.

மறுபுறம் பைடனின் போர் நிறுத்த திட்டம் தொடர்பில் இஸ்ரேலிய அரசும் விலகி இருப்பதோடு ஹமாஸை ஒழிக்கும் வரை போரை தொடர்வது பற்றியே கூறி வருகிறது.

எவ்வாறாயினும் இந்த உடன்படிக்கையை ஏற்கும்படி ஹமாஸை வலியுறுத்தி இருக்கும் பைடன், புதிய பேச்சுவார்த்தை முயற்சியாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. வின் தலைவரான பில் பர்ன்ஸை கட்டாருக்கு அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பர்ன்ஸ் மத்தியஸ்தர்களுடன் இணைந்து தொடர்ந்து செயற்படவிருப்பதாக இது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

பைடனின் மத்திய கிழக்குக்கான ஆலோசகர் பிரெட் மக்கர்க்கும் கட்டாருக்கு விரைந்திருப்பதாக அக்சோஸ் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது. ‘போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கும் பொறிமுறை தொடர்பில் பேசுவதற்கு எகிப்து பாதுகாப்பு தூதுக் குழு ஒன்று கட்டார் சென்று கட்டார் மற்றும் அமெரிக்க சகாக்களுடன் பேசவுள்ளது’ என்று எகிப்து அரசுடன் தொடர்புபட்ட அல் கெஹரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இரு தரப்பில் இருந்தும் நம்பிக்கை தரும் அறிவிப்புகளை இன்னும் பார்க்கவில்லை என்று கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்த கட்டார், ஆனால் முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவு தொடர்பில் இரு தரப்புடனும் பணியாற்றி வருவதாக தெரிவித்தது.   நன்றி தினகரன் 

இஸ்ரேலியருக்கு மாலைதீவு தடை

June 4, 2024 11:00 am 

சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடான மாலைதீவு, இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்துள்ளது. பலஸ்தீனர்களுக்கு ஆதரவை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி முஹமது முயிசு தெரிவித்துள்ளார்.

“பலஸ்தீனத்திற்கான மாலைதீவின் ஒருமைப்பாட்டுக்கு” அழைப்பு விடுக்கும் தேசிய நிதி திரட்டும் பிரசாரம் ஒன்றின்போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் சுமார் 11,000 இஸ்ரேலியர்கள் மாலைதீவுக்கு பயணித்திருப்பதோடு அது அந்த நாட்டின் மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 0.6 வீதமாகும். எனினும்; இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் 528 இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளே அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் காசா போருக்கு எதிரான கைச்சாத்து வேட்டையில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும் கூட்டணி கட்சிகள் இஸ்ரேலியர்களுக்கு தடை விதிக்கும்படி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

மாலைதீவு இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளுக்கான முந்தைய தடையை 1990களின் ஆரம்பத்தில் விலக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 

தாய்வானைச் சூழ சீனாவின் செயற்பாடுகள் அதிகரிப்பு

June 4, 2024 1:00 pm 

தாய்வானைச் சூழவுள்ள கடல் மற்றும் ஆகாயப் பிராந்தியங்களில் சீன படையினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள போதிலும் எமது இறையாண்மையையும் ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாப்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்று தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை சீனா, தமது இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணைப் படையினர் கூட்டு படைப் பயிற்சியை தென் பகுதியில் நடாத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், தாய்வானுக்கு உட்பட்ட ஆகாய மற்றும் கடற்பரப்புக்களில் சீனா இரண்டு நாட்கள் கூட்டு படை பயிற்சியை மேற்கொண்டது. தாய்வான் நீரிணைப் பகுதியில் பதற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில் இடம்பெற்றுள்ள இப்படை நடவடிக்கை தாய்வானின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 


ஒன்பதாவது மாதத்தைத் தொட்ட காசா போரில் அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை

June 8, 2024 9:24 am 

காசா போர் நேற்றுடன் (07) ஒன்பதாவது மாதத்தை எட்டிய நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் காசாவெங்கும் நீடிப்பதோடு குறிப்பாக மத்திய காசாவில் குண்டு மழை பொழிந்து வருகிறது. மாத்திய காசாவில் உள்ள ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் அங்கு அடைக்கலம் பெற்றிருந்த பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் நேற்றும் அகதி முகாம்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் கடுமையாக தாக்கின.

இந்தப் போரினால் காசா முழுவதும் சின்னாபின்னமாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லட்டிருப்பதோடு அங்குள்ள 2.4 மில்லியன் மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

கடந்த நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்திற்குப் பின்னரான முதல் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட மூன்று கட்ட போர் நிறுத்தத்தை ஒட்டியே புதிய முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

என்றாலும் கடந்த 2007 தொடக்கம் காசாவில் ஆட்சி புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு பைடனின் திட்டத்திற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் தனது போர் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்திவரும் இஸ்ரேல், பேச்சுவார்த்தைகளுக்கான விருப்பத்தையும் வெளியிட்டு வருகிறது.

காசாவெங்கும் இஸ்ரேலின் தாக்குதல்கள் இடம்பெற்றபோதும் அது மத்திய காசாவில் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக புரைஜ் மற்றும் மகாஸி அகதி முகாம்கள் மற்றும் டெயிர் அல் பலாவிலும் இஸ்ரேல் தரை மற்றும் வான் வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இங்கு கடந்த வியாழக்கிழமை இரவு வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டெயர் அல் பலாஹ்வில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு புரைஜில் இடைவிடாது குண்டுகள் வீசப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக முன்னெச்சரிக்கை இன்றி சனநெரிசல் மிக்க பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இவ்வாறு கடந்த வியாழனன்று நுஸைரத் முகாமில் உள்ள ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதல்களில் 40க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல் மக்கள் எதிர்கொண்டு வரும் பயங்கரத்திற்கு மற்றொரு உதாரணம் என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் முழுமையாக வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும்படி இஸ்ரேலுக்கு வருடாந்தம் 3.8 பில்லியன் டொலருக்கு அதிகமான இராணுவ உதவியை வழங்கும் அமெரிக்கா கேட்டுள்ளது.

‘இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் உட்பட இந்தத் தாக்குதல் தொடர்பில் மேலும் விபரங்களை வெளியிடப்போவதாக இஸ்ரேல் அரசு குறிப்பிட்டுள்ளது. அந்தத் தகவலைப் பகிரங்கப்படுத்துவதில் அவர்கள் முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாடசாலை மீதான தாக்குதலைத் தொடர்ந்தும் நுஸைரத் அகதி முகாமில் இஸ்ரேலின் பீரங்கி மற்றும் வான் தாக்குதல்கள் நீடித்ததாக அங்கிருப்போர் குறிப்பிட்டுள்ளனர்.

புரைஜ் அகதி முகாமில் உள்ள மருத்துவ மையம் ஒன்றுக்கு அருகில் இருக்கு இசா குடும்ப வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்ததாக அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கில் காசா நகரில் உள்ள அல் சலாம் பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் அஷ்ரம் குடும்ப வீட்டின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக அங்குள்ள பப்டிஸ் மருத்துவமனை குறிப்பிட்டது.

மகாசி முகாமில் உள்ள வப்தி வீட்டின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனை வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

மறுபுறம் எகிப்து எல்லையை ஒட்டிய தெற்கு காசாவின் ரபா நகரின் அல் சுல்தான் பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. காசாவில் கடல் மார்க்கமாகவும் இஸ்ரேலின் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. காசா நகரின் மேற்கு மற்றும் ஏனைய பகுதிகளின் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள வீடுகள் மீது இஸ்ரேலிய போர் கப்பல்கள் தாக்குதல் நடத்தின.

போர் நிறுத்த முட்டுக்கட்டை

கடந்த ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 36,731 ஆக அதிகரித்துள்ளது என்று காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகப் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாவர்.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 77 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 221 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போரினால் இஸ்ரேல் மீதான இராஜதந்திர தனிமைப்படுத்தல்கள் அதிகரித்திருப்பதோடு அதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது. பல ஐரோப்பிய நாடுகளும் பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரித்துள்ளன.

இதில் பலஸ்தீனத்தை அங்கீகாரித்த ஸ்பெயின், சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா தொடத்த காசாவில் பலஸ்தீனர்களுக்கு எதிரான ‘இனப்படுகொலை’ வழக்கில் பங்குதாரராக இணைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி உரையாற்றுவதற்கு விடுத்த அழைப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார்.

இஸ்ரேலிய சிறையில் உள்ள பலஸ்தீனர்களுக்கு பகரமாக காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது, காசாவுக்கான உதவிகள் செல்வது மற்றும் காசாவில் ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் திட்டத்தை பைடன் ஒரு வாரத்திற்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.

இந்தத் திட்டத்திற்கு ஜி7 மற்றும் அரபு நாடுகள் ஆதரவு அளித்திருந்தன. இதனை ஏற்கும்படி பைடனுடன் 16 உலக நாட்டுத் தலைவர்கள் ஹமாஸை வலியுறுத்தி இருந்தனர். ‘கால தாமதத்திற்கு நேரமில்லை. உடன்படிக்கையை ஏற்கும்படி நாம் ஹமாஸுக்கு அழைப்பு விடுக்கிறோம்’ என்று வெளியிடப்பட்ட கூட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான எதிர்பார்ப்பை வெளியிடும் வகையில் ஹமாஸ் அமைப்பிடம் இருந்து சாதகமான சமிக்ஞை கிடைத்ததாக எகிப்து உயிர்மட்டத் தரப்புகளை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அல் கஹேரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் பெய்ரூட்டில் இருக்கும் ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவரான ஒசாமா ஹம்தான் இந்த முன்மொழிவை ‘வெறுமனே வார்த்தைகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘அமெரிக்கர்கள் இதுவரையில், பைடன் தனது உரையில் கூறியதை உறுதிப்படுத்தும் ஆவணப்படுத்தப்பட்ட அல்லது எழுதப்பட்ட எதையும் முன்வைக்கவில்லை’ என்று அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

போர் நிறுத்தத் திட்டம் தொடர்பில் ஹமாஸ் இன்னும் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று கட்டார் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தது.

இதில் காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை முழுமையாக வெளியேறி நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் கோரிவரும் அதே நேரம் இஸ்ரேல் அதனை நிராகரித்து வருவதோடு போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் பிரதான முட்டுக்கட்டையாக உள்ளது.      நன்றி தினகரன் No comments: