இலங்கைச் செய்திகள்

யாழில் மோடியின் வெற்றியை கொண்டாடிய சிவசேனை அமைப்பு

முல்லைத்தீவுக்கான விஜயம் மேற்கொண்ட மார்க் என்ட்ரோ பிரஞ்ச்

செய்மதி மூலம் இணையம்: எலொன் மஸ்க்கின் Starlink நிறுவனத்திற்கு அனுமதி

சனத் ஜயசூரியவின் தாயின் இறுதிக்கிரியை

5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளிகள் அடையாளம்; 9 பேர் உயிரிழப்பு

ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் நியமனம்

வெளி நாடுகளிலிருந்து வருவோர் வீசாக்கள் இருப்பதாக பெரும் மோசடி


யாழில் மோடியின் வெற்றியை கொண்டாடிய சிவசேனை அமைப்பு

June 5, 2024 9:59 am 0 comment

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிப் பெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ். நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டன.

பின்னர் பொதுமக்களுக்கு மோதகம் ,லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர்.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 
முல்லைத்தீவுக்கான விஜயம் மேற்கொண்ட மார்க் என்ட்ரோ பிரஞ்ச்

- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியை நேரில் சென்று பார்வை

June 6, 2024 2:05 pm 

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc-André Franche) முல்லைத்தீவுக்கான விஜயம் ஒன்றை இன்று (06) மேற்கொண்ட நிலையில் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்துள்ளார்.

அந்தவகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழியையும் இன்று காலை அவர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதி உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் சட்டத்தரணி க.கனேஸ்வரன் ஆகியோரிடம் குறித்த புதைக்குழி விவகாரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கெண்டனர்.

மாங்குளம் குரூப் நிருபர் - நன்றி தினகரன் 

செய்மதி மூலம் இணையம்: எலொன் மஸ்க்கின் Starlink நிறுவனத்திற்கு அனுமதி

- கல்வி, கடற்றொழில் துறைகளுக்கு சலுகை பொதிகளை வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

June 6, 2024 5:34 pm 

இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க “Starlink” நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆரம்ப அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

இந்த இணைய சேவை வசதிக்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னர் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னரே தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இந்த இணைய சேவையை இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வி, ஆராய்ச்சி மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு வேகமான இணையச் சேவையை இதன் ஊடாக வழங்க முடியும் என்றும், உலகில் எங்கிருந்தும் இந்த இணைய வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்ற 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலோன் மஸ்கை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது “Starlink” வலையமைப்புடன் இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய, செய்மதி தொழில்நுட்பம் மூலம் இணைய வசதி சேவையை வழங்க “Starlink” நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் சுமார் 2000 Starlink (ஸ்டார்லிங்க்) வலையமைப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 32 நாடுகளில் ஏற்கனவே அதிவேக இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேலும் குறிப்பிட்டதாவது,

”இன்று முதல் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்து செய்மதி தொழில்நுட்பம் மூலம் இணைய வசதிகளைப் பெற்று, தொழில்நுட்பத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறோம்.

இதுவரை கோபுரங்கள் ஊடாக வழங்கப்பட்ட குறைந்த அளவிலான இணைய வசதிகளுக்குப் பதிலாக, இந்த செய்மதி தொழில்நுட்ப இணைய வசதி மூலம் எங்கிருந்தும் இணைய வசதியைப் பெற முடியும். இதன் ஊடாக தொழில்நுட்பத் துறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள், ஆய்வாளர்கள், மீனவர்கள் ஆகியோருக்கு இந்த இணையதள வசதி பெரும் வசதியாக உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணைய வசதியை பெற முடியும். ஸ்டெர்லிங்கிற்கு செய்மதி தொழில்நுட்ப இணைய வசதியை வழங்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 14 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழ், செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு இணைய வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள், மீனவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இணைய சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக நிவாரணப் பொதியை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டும்” என அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுசங்க திஸாநாயக்க,

“starlink” நிறுவனம் இலங்கையில் ஒரு தொலைபேசி வலையமைப்பு நிறுவனமாக நிறுவப்படவில்லை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 17 மற்றும் 22 ஆவது பிரிவின்படி இந்த நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டது. எனவே, தற்போதுள்ள தொலைத்தொடர்பு பரிவர்த்தனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, எதிர்காலத்தில் சேவை அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

இந்த இணைப்பைப் பெற 400 – 600 அமெரிக்க டொலர்கள் வரை செலவாகும். மாதாந்த கட்டணம் 99 அமெரிக்க டொலர்களாகும். செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படும் இணைய வசதி மூலம் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் இணையத்தை அணுக முடியும். இந்த இணைய சேவை இலங்கையில் தற்போதுள்ள பைபர் தொழில்நுட்ப இணைய சேவையை விட பல மடங்கு வேகமானது. எனவே, எதிர்காலத்தில் தொழில்நுட்பத் துறைக்கு சிறந்த சூழல் உருவாகும் என எதிர்பார்க்கலாம்” என அவர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் கலாநிதி தர்ம ஸ்ரீ குமாரதுங்கவும் கலந்துகொண்டார்.   நன்றி தினகரன் 

சனத் ஜயசூரியவின் தாயின் இறுதிக்கிரியை

June 5, 2024 9:24 pm 

சனத் ஜயசூரியவின் தாயாரான பிரீதா ஜயசூரிய தனது 80ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (03) காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (05) மாத்தறை பொது மயானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, அவரது மகன்களான சந்தன ஜயசூரிய மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் தனது தாயாரின் பூதவுடலை சுமந்து சென்றனர்.

நன்றி தினகரன் 

5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளிகள் அடையாளம்; 9 பேர் உயிரிழப்பு

- மே மாதத்தில் 2,647 நோயாளிகள் பதிவு

June 6, 2024 7:19 pm 

– வெள்ளத்துடன் தொற்றுநோயாக மாறக்கூடிய அபாயம்
– டெங்கைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஆதரவு அவசியம்
– வாரம் ஒருமுறை சூழலைச் சுத்தம் செய்யுங்கள்

டெங்கு நோய் சுகாதாரப் பிரச்சினை மட்டுமன்றி, அது ஒரு பொருளாதார, சமூகப் பிரச்சினையாக உள்ளதாகவும், பொதுமக்களின் பூரண ஆதரவின்றி சுகாதார அமைச்சினால் மட்டும் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு ஒன்பது பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் கலாநிதி சுதத் சமரவீர இதனைக் குறிப்பிட்டார்.தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைமையுடன் டெங்கு, தொற்றுநோய் மட்டத்திற்கு அதிகரிக்கக் கூடும் என்பதால் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் கலாநிதி சுதத் சமரவீர மேலும் கூறியதாவது,

டெங்கு என்பது வயது மற்றும் அந்தஸ்தைப் பார்க்காமல் தொற்றக்கூடிய ஒரு நோயாகும். மேலும், பலர் இந்த நோயிலிருந்து மீண்டாலும், உயிரிழப்பு அபாயம் உள்ள ஒரு நோய் இது. இந்த அபாயம் காரணமாகத்தான் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து மக்களுக்கு எடுத்துரைக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காலப்பகுதியில் பருவமழை வருவதால் டெங்கு பற்றி அதிகம் பேச வேண்டியுள்ளது.

அதன்படி, 2023 இன் இறுதியில் ஏற்பட்ட தொற்றுநோய் நிலைமையுடன் ஒப்பிடுகையில் 2024 ஜனவரி இல் 10,000 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.ஆனால் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து ஏப்ரல் மாதமளவில் 2234 நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளனர். ஆனால் மே மாதத்தில் 2647 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதன்படி, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

டெங்கு என்பது உடல்நலப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு பொருளாதார மற்றும் சமூக பிரச்சினையாகும். எனவே, பொதுமக்களின் பூரண ஆதரவின்றி சுகாதார அமைச்சினால் மாத்திரம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியாது. நாடென்ற வகையில் அரசாங்கத்தின் அனைத்து துறைகள், தனியார் துறைகள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே டெங்கு நோயைத் தடுக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய அதிகாரி, விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க,

2024ஆம் ஆண்டு இலங்கையில் 25 417 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்குவைத் தடுப்பதற்கான மிக அடிப்படையான வழி, நுளம்பு பரவலைத் தடுப்பதாகும். அதற்கு வீடுகள், பாடசாலைகள், பணியிடங்களில் நுளம்புகள்உருவாகும் இடங்களை அகற்றுவது பொது மக்களின் பொறுப்பாகும்.

மேலும், காய்ச்சல் ஏற்பட்டால், இரண்டு நாட்களுக்குள் அருகில் உள்ள மருத்துவமனை அல்லது தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி, உரிய ஆலோசனை பெற வேண்டும். நோயறிதலை மருத்துவரிடம் விடுங்கள். இங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ‘பெரசிட்டமோல்’ மாத்திரையை மாத்திரம் உட்கொள்ள வேண்டு” என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபைத் தலைவரும் தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் விசேட வைத்தியருமான ஆனந்த விஜேவிக்ரம,

இந்தக் காலகட்டத்தில் அதிக காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதை டெங்கு நோயாகக் கருதுவது மிகவும் அவசியம். இந்த அறிகுறிகள் இருந்தால், முதலில் உடல் ரீதியாக ஓய்வெடுப்பது அவசியம். வலி ​​நிவாரணி அல்லது ‘பெரசிட்டமோல்’ தவிர ஏனைய மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. மற்ற மருந்துகளை உட்கொள்வது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், முழுமையான இரத்த எண்ணிக்கைப் பரிசோதனை (FBC) செய்து, அரச மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அதன் பின்னர் தேவையிருப்பின் மருத்துவமனைக்குச் செல்லலாம்.

இதற்கிடையில், நீங்கள் நீர் மற்றும் கஞ்சி வகைகள், ஜீவனி, இளநீர் மற்றும் எலுமிச்சை போன்ற பானங்களைப் பருக வேண்டும். சிவப்பு நிறத்தில் அல்லது செயற்கை இரசாயனங்கள் கொண்ட பானங்களைத் தவிர்ப்பதும் முக்கியம். நீங்கள் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினால் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தவும், நிலைமையின் தீவிரத்தை குறைக்கவும் முடியும். குறிப்பாக, காய்ச்சல் குறைவதால் டெங்கு நோய் குணமாகிவிட்டதாக அர்த்தம் இல்லை.

மிகவும் சிறிய குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பருமனானவர்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்” என்று தெரிவித்தார்.

கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக ஆலோசகரும் பிராந்திய தொற்றுநோயியல் விசேட வைத்தியருமான புத்திக மகேஷ்,

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு மிகவும் முக்கியமானது. தற்போது பெய்து வரும் மழையால், அதற்கான கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.நுளம்பின் வாழ்க்கைச் சுழற்சியின் படி, குடம்பி நிலையிலிருந்து நுளம்பாக மாற 07 நாட்கள் ஆகும் என்பதால், வாரத்திற்கு ஒருமுறை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதன் மூலம் டெங்கு பரவுவதை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக நிவாரண முகாம்களை சுற்றியுள்ள பகுதிகளை முற்றிலும் நுளம்புகள் இல்லாத பகுதிகளாக மாற்ற வேண்டும்.

டெங்கு மற்றும் பிற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த பிரதேச சுகாதார அலுவலர் அலுவலகம் இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறது. ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் போது, ​​மேல் மாகாணத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு. மக்களின் ஆதரவுடன் அந்த நிலையை மேலும் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது. மேல்மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள டெங்கு கட்டுப்பாட்டு குழு ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நுளம்பு குடம்பிகளை இனங்கண்டு அதன் மூலம் குடம்பி அழிப்பு மருந்துகளைத் தெளித்து வருகின்றது” என்றும் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வைத்தியர் என். ஆரிப், வைத்தியர் சுனித் குமாரப்பெரும, ஆர். கே. எஸ். ஈ.ரணவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 


ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் நியமனம்

- பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி

June 8, 2024 1:02 pm 

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாகஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பின் பேரில் இந்த மீள்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2387/43 எனும் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு ஜூன் 01ஆம் திகதி முதல் 2024 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி தொடர்பான சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பதவிக் காலத்துக்கான நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 23ஆவது தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி பதவியை நிறைவு செய்ததையடுத்து, ​ 2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்      நன்றி தினகரன் 
வெளி நாடுகளிலிருந்து வருவோர் வீசாக்கள் இருப்பதாக பெரும் மோசடி

எச்சரிக்கை விடுக்கிறார் யாழ்.SSP ஜெகத் நிஷாந்த

June 8, 2024 5:48 pm 

வெளிநாடுகளிலிருந்து வரும் யாழ். நபர்கள், கிராமப் புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும், நுழைவிசா மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.வெளிநாடுகளிலிருந்து வருவோரே இத்தகைய மோசடியில் அதிகம் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கிராமப்புற இளைஞர்களை இலக்கு வைத்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபா வரையிலான பணமோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் இவர்களின் போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர்.

இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, இந்த மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும், விழிப்பாகவும் இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(யாழ்.விசேட நிருபர்)      நன்றி தினகரன் 


No comments: