தமிழர்களின் தேவை

 June 4, 2024

விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியலை தீர்மானித்த காலத்தில் தமிழர்களின் அரசியல் உலகால் உற்றுநோக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவ பலமே அதற்கான காரணமாகும்.
2009இல் அந்தப் பலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
ஒட்டு மொத்த உலக ஆதரவையும் விடுதலைப் புலிகள் இழந்திருந்த சூழலில்தான் இலங்கையால் இராணுவ வெற்றியை பெற முடிந்தது.
ராஜபக்ஷக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடித்தார்கள் என்பது சிங்கள மக்களால் நம்பப்பட்ட ஒரு கதையாக இருப்பினும்கூட உலகின் ஆதரவில்லாது இருந்திருந்தால் அவ்வாறான ஒரு வெற்றியை ராஜபக்ஷக்கள் பெற்றிருக்கவே முடியாது.
விடுதலைப் புலிகள் ஜனநாயக நீரோட்டத்துக்குள் வரவேண்டும் என்பதே மேற்குலகின் எதிர்பார்ப்பாக இருந்தது.
எனினும், மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியானது மேற்குலகின் சமாதான முன்னெடுப்புகளை சீர்குலைத்தது.
இவ்வாறானதொரு நிலையில் அனைவரின் கோபமும் விடுதலைப் புலிகள் மீதே திரும்பியது.
இந்தப் பின்புலத்தில்தான் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் விடுதலை புலிகள் இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டன.
புலம்பெயர் சமூகத்தால் எதனையும் செய்ய முடியவில்லை.
யுத்தம் முடிவுற்று பதினைந்து வருடங்கள் கழிந்த பின்னர்கூட விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படவில்லை.
மேற்குலக நாடுகளில் தமிழ் மக்கள் உரிமைகள் சார்ந்து சுதந்திரமாக செயல்பட முடிந்தாலும்கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் மேற்குலகம் ஒன்றாக நோக்கவில்லை.
இரண்டும் வேறு என்றே கருதுகின்றது.
இதனை புலம்பெயர் சமூகம் எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கின்றது – அவற்றால் புரிந்துகொள்ள முடிந்ததா என்பது இப்போதும்கூட ஒரு கேள்வியாகவே தொடர்கின்றது.
இது ஒரு வகையில் துரதிர்ஷ்டவசமானது.
கடந்த பதினைந்து வருடகால அரசியல் அனுபவங்களை தொகுத்து நோக்கினால், தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கைகளும் சரி – புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கைகளும் சரி – ஒரு சிறிய முன்னேற்றத்தைக்கூட ஏற்படுத்தவில்லை.
சர்வதேச அழுத்தங்கள் என்னும் சொற்கள் உச்சரிக்கப்பட்டனவே தவிர, அதனால் இலங்கை அரசாங்கம் சிறிதும் இறங்கி வரவில்லை.
இது எதனைக் காட்டுகின்றது? ஒன்று சர்வதேச கட்டமைப்புகள் எவையும் சம்பூரண நிவாரணிகள் அல்ல – அவற்றால் அவ்வாறு செயல்படவும் முடியாது.
அடிப்படையில் அவைகள் மிகவும் பலவீனமானவை.
இது ஒன்று என்றால் பலம் பொருந்திய நாடுகளைப் பொறுத்தவரையில் இலங்கையில் சிங்கள பெரும்பான்மையை ஓர் எல்லைக்கு மேல் விரோதித்துக் கொள்ளக்கூடாது என்னும் அடிப்படையில்தான் அவர்களின் அணுகுமுறைகள் இருக்கின்றன.
தமிழ் மக்களை ஒரு தேவையான மக்கள் கூட்டமாக எவருமே கருதவில்லை.
அவ்வாறு கருதியிருந்தால் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இந்தளவுக்கு புறந்தளப்பட்டிருக்காது.
எனவே, முதலில் தமிழ் மக்கள் தேவையுள்ள மக்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
அதனை எவ்வாறு நிரூபிப்பது? நிரூபிக்கும் ஆற்றல் தமிழரிடம் உண்டா? இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவின் தமிழ் மக்கள் ஒரு தவிர்க்க முடியாத மக்கள் கூட்டம் என்பதை ஜனநாயக தளத்தில் நிறுவ வேண்டியிருக்கின்றது.    நன்றி ஈழநாடு 


No comments: