தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு

 June 8, 2024

தான் ஜனாதிபதியானால் நாட்டின் இறையாண்மைக்கு பாதகமில்லாமல் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்குவேன் – என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்திருகின்றார். அதேவேளை தமிழ், முஸ்லிம் மக்கள் தன்னைத்தான் ஆதரிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். முதலில் நாட்டின் இறையாண்மை என்பதால் சஜித் என்ன புரிந்து கொள்கிறார் என்பது முக்கியம். ஏனெனில், நாட்டின் இறையாண்மை என்னும் பெயரில் பெரும்பாலான விடயங்களை நிராகரிக்க முடியும். உதாரணமாக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரத்தை நிராகரிக்க முடியும் – வடக்கு, கிழக்கு இணைப்பை நிராகரிக்க முடியும் – இவ்வாறு பல விடயங்களை எதிர்க்க முடியும் அல்லது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனையோர் அவ்வாறு எதிர்கின்றபோது அதனை மௌனமாக அங்கீகரிக்க முடியும்.

கடந்த காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமை என்னும் பெயரில்தான் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. யுத்தம் நிறைவுற்று பதினைந்து வருடங்களாகின்றன. இந்தக் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் முயற்சிக்கு மாறாக மேலும் புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும் விடயங்களே நடைபெற்றிருந்தன. வடக்கு, கிழக்கில் பௌத்தமயமாக்கல் தீவிரப் படுத்தப்பட்டன. சிறியசிறிய பிரச்னைகளுக்கு தீர்வை தேடும் நிலைமை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த விடயங்களில் சஜித் பிரேமதாஸவுக்கு நேரடியான தொடர்பு இல்லையென்று கூற முடியுமானாலும் இந்தக் காலத்தில் நடைபெற்ற பல பிரச்னைகளின்போது அதனை கண்டிக்கும் பலமான குரலாக சஜித் இருந்திருக்கவில்லை. இதேபோன்றுதான் ரணில் விக்கிரமசிங்கவும் இருந்தார்.

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக்கு ஆதரவாக பேசுவதும் – அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் எதிர்ப்பை கருத்தில் கொண்டு பின்வாங்குவதும் தென்னிலங்கை அரசியலுக்கு புதிதல்ல. இதன் காரணமாகவே தென்னிலங்கை வேட்பாளர்கள் எவரையும் நம்ப முடியாதென்னும் குரல்கள் தமிழ் மக்கள் மத்தியில் மேலெழுந்திருக்கின்றன. தேர்தல் காலவாக்குறுதிகளை நம்பக்கூடிய நிலையில் தமிழ் மக்கள் இருக்க வேண்டுமென்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் கருதக்கூடாது. ஏனெனில், கடந்த காலங்களில் ஒரு தீர்வை நோக்கி செல்வதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருக்கின்றனர் என்றே கூறப்பட்டு வந்திருக்கின்றது.

ஆனால், யுத்தம் முடிவுற்றதன் பின்னர் எந்தவோர் ஆக்கபூர்வமான தீர்வு முயற்சிகளிலும் தென்னிலங்கை ஈடுபாட்டை காண்பிக்கவில்லை. யுத்தத்தின்போது பயன்படுத்திய தீர்வு தொடர்பான தென்னிலங்கை சொற்களும் – யுத்தத்தை வெற்றிகொண்டதன் பின்னர் தென்னிலங்கை பயன்படுத்திய சொற்களும் முற்றிலும் வித்தியாசமானவை. தமிழ் மக்கள் பேரம் பேசுவதற்கான பலத்துடன் இருந்த போது தென்னிலங்கை அதிகார மையம் தமிழ் மக்களின் நியாயத்தை ஏற்றுக்கொள்வதான தோற்றத்தைக் காண்பித்தது.

ஆனால், பலத்தை இழந்த பின்னர் ஆகக்குறைந்த கோரிக்கைகளைக்கூட ஏற்றுக்கொள்வதற்கு இணங்கவில்லை. உண்மையில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் கடந்த பதினைந்து வருடங்களில் சில பிரச்னைகளை தீர்த்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. காரணம், தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை ஏற்றுக்கொள்வதற்கான மனோநிலையில் தென்னிலங்கை இல்லை என்பதாகும். இந்த நிலையில், சஜித் பிரேமதாஸ தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை, தான் வழங்குவேன் என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?   நன்றி ஈழநாடு 


No comments: