`கற்பகதரு’ ` கே.எஸ்.சுதாகர்


தமிழக அரசின் மொழியியல் விருதாளரான திரு. ஜெயராமசர்மா அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரி ஆவார். அத்துடன் கல்வியியல் சமூகவியல் துறைகளில் டிப்ளோமா, கற்பித்தல் நுணுக்கத்தில் முதுதத்துவமானி பட்டங்களைப் பெற்றவர். இவர் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், தமிழ் – இந்து கலாசார விரிவுரையாளர், ஆசிரிய ஆலோசகர், வானொலி அறிவிப்பாளர் எனக் கடமை ஆற்றியுள்ளார்.

இதுவரை இருபத்திரண்டு நூல்கள், இருபது நாட்டியநாடகங்கள், பத்து வில்லுப்பாட்டுகள், பல ஓரங்க நாடகங்கள், கோவில்களுக்கான திருப்பொன்னூஞ்சல்கள் எழுதியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) இவரது


‘கற்பகதரு’ கட்டுரை நூல் வெளியீடு, அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ள ‘சிவா – விஷ்ணு’ ஆலய ‘மயில் மண்டபத்தில்’ திரு சங்கர சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் மத்தியில் இனிதே நடைபெற்ற இப்புத்தக வெளியீட்டின்,  வாழ்த்துரையை மாவை நித்தியானந்தன் அவர்களும், நூல் ஆய்வுரையை திரு சண்முகம் சந்திரனும் நிகழ்த்தினார்கள்.

பனையைப் பற்றிப் பலரும் எழுதிய புத்தகங்கள் - தரவுகள் சார்ந்ததாகவும், ஆராய்ச்சி நிமிர்த்தமும், பிரச்சார நோக்கிலும் அமைந்தவை. திரு.ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `கற்பகதரு என்ற இந்தப் புத்தகம் பனை பற்றிய முழுமையான தகவல்கள் கொண்ட ஒரு பெட்டகமாகும்.

இலக்கியத்தில் ஆரம்பித்து இனிக்கும் பனையுடன் நிறைவு பெறும் இந்நூல் - பனையின் வரலாறு, அதன் பயன்பாடு, அதன் முக்கியத்துவம் எனப் பத்து அத்தியாயங்களில், நாற்பது சுவைகளைக் கொண்டுள்ளது.

இந்தப் புத்தகம், என்னைப் போலவே, பலருக்கும் தமது இளமைக்கால நினைவுகளை மீட்டித்தரும். பனை மரம் பற்றிய இத்தனை தகவல்களையும் எம்மால் மனதிறுத்தி வைத்திருப்பது என்பது மிகச் சிரமமான காரியம் ஆகும். வேண்டும்போது புரட்டிப் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் ஒரு ஆவணமாக, திரு ஜெயராமசர்மா அவர்களின் கடும் முயற்சியினால் உழைப்பினால் உருவாகியிருக்கின்றது இந்தக் `கற்பகதரு நூல். இத்தனை தகவல்களையும் ஒருசேரத் திரட்டித் தருவதற்கு ஆசிரியர் எவ்வளவு தேடல்களைச் செய்திருக்க வேண்டும்! ஆச்சரியமாக இருக்கின்றது. ஆசிரியரின் இந்த முயற்சி பாராட்டுதற்குரியது. நின்று நிலைக்கக்கூடிய புத்தகமாக திகழும் இந்தப் புத்தகம் பலரிடமும் போய்ச் சேர வேண்டும், பலரும் வாசித்துப் பயன் பெற வேண்டும் என்பது எனது விருப்பம். திரு ஜெயராமசர்மா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

 

கற்பகதரு

ஆசிரியர்: மகாதேவஐயர் ஜெயராமசர்மா

பக்கங்கள் ; 232 + xviii

வெளியீடு : 2022

பதிப்பு : மெகா பதிப்பகம், யாழ்ப்பாணம்

ISBN : 978-624-97879-4-0

 


 
No comments: