இலங்கைச் செய்திகள்

வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்

மன்னாரில் பனை மரங்களின் மகத்துவத்தை கூறும் நுங்கு விழா

யாழில். அதிகரித்த வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு செப். 17 முதல் ஒக்.16 வரை

தமிழகத்தில் 58,200 இலங்கை அகதிகள்

அகில இலங்கை தமிழ் மொழித் தினம் – 2024; புதிய விதிமுறைகளுடன் இம்முறை போட்டிகள்




வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்

வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து

May 10, 2024 5:31 am 

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு  வடக்கு மாகாணம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

வடக்கு மாகாணத்திலிருந்து தனது கிரிக்கெட் பயிற்சியை பெற்ற இவர் இலங்கைக்கு பெருமிதத்தை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், யாழ் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.பல்வேறுபட்ட சமூக சீர்கேடான செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் இளைய தலைமுறையினருக்கு, விளையாட்டின் மூலம் சாதனை படைக்கும் 22 வயதேயான வியாஸ்காந்த் ஒரு சிறந்த முன்னுதாரணமாவார்.

இவரை முன்மாதிரியாகக் கொண்டு எமது இளைஞர், யுவதிகள் விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. கற்றல் மூலம் மட்டுமல்ல விளையாட்டின் மூலமும் உயரங்களை எட்ட முடியும் என்பதை உணர்த்தியுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு மீண்டும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றேன்.   நன்றி தினகரன் 





மன்னாரில் பனை மரங்களின் மகத்துவத்தை கூறும் நுங்கு விழா

May 10, 2024 2:07 pm 

மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடனும் நுங்கு விழா மன்னாரில் நடைபெற்றது.

இவ்விழாவானது இன்று (10) மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் முன்பாக இடம்பெற்றது.

இது தொடர்பாக உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தின் பாரம்பரியமான பனை மற்றும் தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடையேயாகும்.

அதிலும் அழிந்துபோகும் பனை மரங்களை யாவரும் அக்கறையுடன் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவைகள் தொடர்பான எமது மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் காட்சிப்படுத்தலும், விற்பனை நிலையமும் மன்னார் மாவட்ட செயலகப் பகுதியில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , பிரயோசனம் அடையவும் முக்கிய இடத்தில் இதற்கான அமைக்கப்பட்டுள்ளன.

ஆகவே, பொது மக்களும், பாவனையாளர்களும் எமது உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்குடனும் , எமது மன்னார் வளத்தின் பனை மரங்களின் மகத்துவத்தை எடுத்தியம்பும் ஒரு நோக்குடனேயே இன்று இந்த நுங்கு விழாவை நாங்கள் நடாத்த தீர்மானித்தோம் என என தெரிவித்தனர்.

தலைமன்னார் விஷேட நிருபர் – வாஸ் கூஞ்ஞ - நன்றி தினகரன் 




யாழில். அதிகரித்த வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு

- அண்மைய நாட்களில் ஐவர் மரணம்

May 10, 2024 12:02 pm 

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த 47 வயதான சிவஞானம் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (09) வீட்டில் தனித்திருந்த போது , வீட்டின் பின் பகுதிக்கு சென்ற வேளை திடீரென மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ளார்.

சுமார் 04 மணி நேரத்தின் பின்னர் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பிய வேளை , வீட்டில் இருந்தவரை காணவில்லை என தேடிய போது , வீட்டின் பின் முற்றத்தில் கடும் வெய்யிலுக்குள் விழுந்து கிடந்ததை கண்ணுற்று அவரை மீட்டு , தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

உடலில் வெப்ப கொப்பளங்கள் காணப்பட்டதாகவும் , அவரது உயிரிழப்புக்கு அதிக வெப்பமே காரணம் என உடற்கூற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது , யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் “ஹீட் ஸ்ரோக்” ஏற்பட்டு அண்மைய நாட்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொது வைத்திய நிபுணர் ரி. பேரின்பராஜா தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 




ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு செப். 17 முதல் ஒக்.16 வரை

- தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

May 10, 2024 6:28 am 

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான காலப்பகுதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் திணைக்களம் இது குறித்து நேற்று (09) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் நடத்துவதற்கு ஏற்ப வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் என, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள்  வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இத்தொகையில் 18 வயதை பூர்த்திசெய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளடங்குவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான வாக்காளர் பதிவேடுகள் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை, நேற்று தொடக்கம் ஆரம்பித்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாகவும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.   இதன்படி, வாக்களிக்க தகுதி இருந்தும் வாக்காளர் பதிவேட்டில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள், தங்களின் பெயர்களை உரிய பட்டியலில் சேர்க்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





தமிழகத்தில் 58,200 இலங்கை அகதிகள்

ஒருவருக்ேக வாக்களிக்கும் உரிமை

May 10, 2024 5:12 am 

—இந்திய அரசாங்கத்திடம் 2023 இல், சமர்ப்பிக்கப்பட்ட தகவலின் பிரகாரம் தமிழ் நாடு முழுவதிலுமுள்ள 104 முகாம்களில் 58,200 இலங்கை தமிழ் அகதிகளும் முகாம்களுக்கு  வெளியே 33,200 க்கும் மேற்பட்டோரும் வாழ்வதாக தெரிய வந்துள்ளது.

இவர்களின் சிவில் ஆவணங்களைப் பொறுத்தவரையில் 95 வீதமானோர் இந்திய அடையாள அட்டைகளையும், 78 வீதமானோர் வங்கிக் கணக்குகளையும் ஒரு வீதமானோர் இலங்கைக் கடவுச்சீட்டுகளையும் 03 வீதமானோர் இலங்கை தேசிய அடையாள அட்டைகளையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஒரே ஒரு இலங்கைத் தமிழரான நளினி கிருபாகரனுக்கு மட்டுமே, இந்தியாவின் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை முகாம்களிலுள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.

இருப்பினும், சுகாதார சேவைகள் அல்லது குடியுரிமைகள் கிடைக்காமல் மோசமான அகதி முகாம்களில் தொடர்ந்து சிரமங்களை இவர்கள் எதிர்கொண்டு வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 






அகில இலங்கை தமிழ் மொழித் தினம் – 2024; புதிய விதிமுறைகளுடன் இம்முறை போட்டிகள்

May 9, 2024 4:48 pm 0 comment

ல்வியமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் பிரிவின் தமிழ்மொழி அலகினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டிகள் இம்முறை புதிய விதிமுறைகளையும் இணைத்துக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளன.

நோன்புகால விடுமுறை, முன்னோடிப் பரீட்சைகளின் கால குறிக்கீடு, சாதாரணதரப் பரீட்சையின் ஆரம்பம் முதலியவற்றைக் கருத்திற் கொண்டு பாடசாலை மட்ட மற்றும் கோட்ட மட்டப் போட்டிகளை விரைவாக முன்னெடுக்குமாறு மாகாண தமிழ்மொழி பிரிவினூடாக வலயக் கல்வி தமிழ்மொழித் தினப் பிரிவுகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டிகளுக்கான வலய மட்டத்தை ஜுன் 15 ஆம் திகதிக்கு முன்னரும், மாவட்ட மட்டத்தை ஜுலை 15 இற்கு முன்னரும் நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் எழுத்தாக்கம் தவிர்ந்த மாகாணப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் 2024.07.25 இற்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், மாகாணப் போட்டிகள் யாவும் 2024.08.10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகையில் கிழக்கு மாகாணத்தால் நடத்தப்படவுள்ள மாவட்ட மற்றும் மாகாண நிலை ஒருங்கிணைந்த எழுத்தாக்கப் போட்டிகள் 2024.06.29 அன்று மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளன.

கல்வியமைச்சினால் 2019 தொடக்கம் 2023 ஆம் ஆண்டுகள் வரை வரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகளுக்கான பிரதான சுற்று நிருபம் (35/2018) 2025 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக கல்வியமைச்சின் தமிழ் மொழி அலகினால் ‘தமிழ் மொழித் தினம்-2024’ என்ற சுற்றுநிருப இணைப்பொன்று வெளியாகியுள்ளது.

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள 50 போட்டிகளில் 25 போட்டிகளுக்கு ஒரு பாடசாலை பங்குபற்ற முடியும். ஆரம்பப் பாடசாலைகள் தவிர்ந்த சகல பாடசாலைகளும் போட்டி இலக்கம் 15 அதாவது தமிழறிவு வினாவிடை எழுத்துப் போட்டியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

பேச்சு,பாவோதல், இலக்கிய விமர்சனம், இசையும் அசையும், இசை_- தனி, இசை_ -குழு, நடனம்_ -தனி, நடனம்_ -குழு -1, திறந்த போட்டிகளான நாட்டிய நாடகம், இலக்கிய நாடகம், வில்லுப்பாட்டு, முஸ்லிம் நிகழ்ச்சி என்பவற்றுக்கான விபரங்கள் புதிய இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

நாட்டுக் கூத்துக்கலையினை வளர்த்தெடுக்கும் நோக்கில் கிழக்கு மாகாண தமிழ்மொழிப் பிரிவினால் இப்போட்டி குறித்த மாகாணத்திற்கு மாத்திரம் நடத்தப்படுகின்றமை விஷேட அம்சமாகும். கூத்து, முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கான எழுத்துப் பிரதிகள் பாடசாலை அதிபரினால் உறுதி செய்யப்பட்டு போட்டியின் போது நடுவர்களிடம் வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டிய நாடகத்தில் எடுத்துக் கொள்ளப்படும் இலக்கிய பகுதிகளின் பாடல்வரிகளை அப்படியே பயன்படுத்த முடியாது. முக்கியத்துவம் கருதி சிலவற்றை பயன்படுத்தலாம். நாட்டிய நாடகத்திற்கான பக்கவாத்தியங்கள் பாடசாலை மாணவர் அல்லது ஆசிரியரால் பயன்படுத்தப்பட வேண்டும். வேறு பாடசாலை மாணவர், ஆசிரியர்களையும் பயன்படுத்தலாம். வெளியார்களைப் பயன்படுத்த முடியாது. அதேவேளை பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நடுவர்களாக பயன்படுத்த முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு அதாவது தற்போது க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் திறந்த போட்டிகளில் மாத்திரமே பங்குபற்ற முடியும் என விஷேட அறிவுறுத்தல் தலைப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித் தின தேசிய மட்டப் போட்டிகளை ஒக்டோபர் 12,13,19.20 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது

மாணவர் திறமைகளை இனங்கண்டு, அதனை அரங்கேற்றி அழகுபார்க்கும் இவ்வாறான போட்டிகளில் திறமையான தெரிவுகள் இடம்பெற சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போதே இப் போட்டிகள் அதன் இலக்குகளை அடைய முடியும் என்று வலியுறுத்தப்படுகின்றது.

ஜெஸ்மி எம்.மூஸா 

(பெரியநீலாவணை தினகரன் நிருபர்)  - நன்றி தினகரன் 

No comments: