மனமுருகி மனமுருகி மன்றாடி நின்று
தினமுமே தனைவருத்தி விரதமெலா மிருந்து
அனுதினமும் ஆண்டவனை அகமார எண்ணி
அவனியிலே நாம்பிறக்கக் காரணமே அம்மா
பாசமே அம்மா பக்குவமே அம்மா
நேசமே அம்மா நிறைவுமே அம்மா
வாசமே அம்மா மலருமே அம்மா
ஆசையாய் எம்மை அரவணைப்பாள் அம்மா
மழையிலே குடையாவாள் வெயிலியே நிழலாவாள்
மனத்திலே எமைத்தாங்கி வாழ்வுக்கும் துணையாவாள்
தினையளவு துன்பமும் தீண்டாதெமைக் காப்பாள்
படியென்பாள் படியென்பாள் பலகதைகள் சொல்லிடுவாள்
பிடியென்பாள் பிடியென்பாள் பெருந்துணையைப் பிடியென்பாள்
களையென்பாள் களையென்பாள் கசடனைத்தும் களையென்பாள்
உளமமர உண்மைகளை ஒவ்வொன்றாய் இருத்தென்பாள்
நோய்கண்டால் நொந்திடுவாள் நோய்க்கும் மருந்தாவாள்
பாய்படுக்கா வண்ணமே பக்குவமாய் காத்திடுவாள்
தூக்கத்தைத் தொலைப்பாள் துயரினை எதிர்த்திடுவாள்
ஆக்கமாய் யோசித்து அனைத்தையும் ஆற்றிடுவாள்
தனக்காக வாழாள் எமக்காக வாழுவாள்
இமைப்பொழுதும் துஞ்சாமல் எம்மையே நோக்குவாள்
தனக்குவமை இல்லாள் தாங்கியே நிற்பாள்
நினைத்துமே பார்த்தால் நிற்கிறாள் தெய்வமாய்
உண்ணாமல் உறங்காமல் ஓயாது உழைப்பாள்
உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியே மகிழ்வாள்
கண்ணுக்குள் மணியாக காத்துமே நிற்பாள்
கண்கண்ட தெய்வமாய் நிற்கிறாள் அம்மா
தன்னாசை துறப்பாள் எம்மாசை ஏற்பாள்
தன்னழகைப் பாராள் எம்மழகை ரசிப்பாள்
கைபிடித்துக் கையணைத்துக் கருணையைக் காட்டும்
கண்கண்ட தெய்வமாய் நிற்கிறாள் அம்மா
No comments:
Post a Comment