உலகச் செய்திகள்

 எகிப்துடனான உதவிகள் வரும் ரபா எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல்

ரபா எல்லைக் கடவை

போர் நிறுத்த பேச்சுக்கு மத்தியில் காசாவில் தொடர்ந்தும் தாக்குதல்

ரபா மீதான படையெடுப்பு திட்டம் இஸ்ரேலுக்கான ஆயுதங்களை இடைநிறுத்த பைடன் எச்சரிக்கை: தொடர்ந்தும் தாக்குதல்

ரஷ்ய ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற விளாடிமிர் புடின்

கொவிட் தடுப்பு மருந்தை மீளப் பெற்றது அஸ்ட்ராசெனகா

காசா போர் நிறுத்தப் பேச்சு உடன்பாடு இன்றி முடிவு: ரபாவில் கடும் தாக்குதல்எகிப்துடனான உதவிகள் வரும் ரபா எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல்

ஹமாஸ் இணங்கிய போர் நிறுத்தத்திலும் இழுபறி

May 8, 2024 6:00 am 

காசாவின் தெற்கு நகரான ரபா மீது இரவு முழுவதும் சரமாரித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள எகிப்து மற்றும் காசாவுக்கு இடையிலான ரபா எல்லை கடவையை நேற்று (07) கைப்பற்றியதோடு இஸ்ரேலிய டாங்கிகள் ரபாவுக்குள் மேலும் முன்னேறி வருகின்றன.

காசா போர் நேற்றுடன் 8 ஆவது மாதத்தை எட்டியதோடு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் போராடி வரும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றுக்கு இணங்குவதாக பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் கடந்த திங்களன்று அறிவித்தபோதும், அந்தப் போர் நிறுத்த விதிகள் தமது கோரிக்கையை பூர்த்தி செய்வதாக இல்லை என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் பொதுமக்கள் நிரம்பி வழியும் ரபா தொடர்பில் சர்வதேச அளவில் கவலை அதிகரித்திருக்கும் சூழலில், அங்கு பல இடங்கள் மற்றும் வீடுகள் மீது இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

நேற்று அதிகாலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ரபாவில் 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது. குறிப்பாக அங்குள்ள வீடுகளை இலக்கு வைத்தே இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்தியுள்ளது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 54 பேர் கொல்லப்பட்டு மேலும் 96 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த இந்தப் போரில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,789 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 78,204 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரபாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதோடு அவர்கள் கூடாரங்கள் மற்றும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டிருக்கும் நிலையில் பலரும் அங்கிருந்து வெளியேற முயன்று வருகின்றபோதும், காசாவின் பெரும்பகுதி இஸ்ரேலின் தாக்குதல்களில் ஏற்கனவே இடிபாடுகளாக மாறியுள்ளன. இதனால் செல்வதற்கு பாதுகாப்பான இடங்கள் இல்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

ரபாவில் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை ஒன்றில் காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு பயன்படுத்தும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டது.

பிரசல்ஸில் நேற்று பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான தலைவர் ஜோசப் பொரல், ‘ரபா மீதான தாக்குதல் பொதுமக்களுக்கு உயிராபத்துக் கொண்டது’ என்று எச்சரித்தார்.

‘அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அனைவரும் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று (இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்) நெதன்யாகுவை கேட்டுக்கொண்டபோதும், சர்வதேச சமூகத்தின் அனைத்துக் கோரிக்கைகளையும் மீறி ரபா தாக்குதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை’ என்று பொரல் குறிப்பிட்டுள்ளார்.

ரபா மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் இஸ்ரேல் பல வாரங்களாக எச்சரித்து வந்தது. அங்கு ஆயிரக்கணக்காக ஹமாஸ் போராளிகள் நிலைகொண்டிருப்பதாகவும் பல டஜன் பணயக்கைதிகள் இருக்கக் கூடும் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டது. ரபாவை கைப்பற்றாது ஹமாஸுக்கு எதிரான வெற்றி சாத்தியமில்லை என்றும் அது குறிப்பிட்டிருந்தது.

ரபா எல்லைக் கடவை மூடல்

இந்நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள் நிலைகொண்டிருப்பதால் காசாவுக்கு உதவிகள் வருவதற்கான பிரதான வழியாக இருக்கும் ரபா எல்லைக் கடலை மூடப்பட்டிருப்பதாக காசா எல்லை நிர்வாகத்தை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளிட்டுள்ளது.

படைகள் அங்கு நுழைந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவ வானொலி முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

ரபா மற்றும் இஸ்ரேல் கட்டுப்பாட்டு கெரம் ஷலோம் எல்லை கடவையில் காசாவுக்கான உதவிகள் முற்றாக நிறுத்தப்பட்டிருப்பதாக எகிப்தில் உள்ள செம்பிறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரபாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான திட்டம் ஒன்று வகுக்கப்படும் வரை ரபா படை நடவடிக்கையை ஆரம்பிக்கக் கூடாது என்று அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வந்தன.

‘ரபா எல்லைக் கடவை மூடப்பட்டதை அடுத்து காசா குடிமக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மரண தண்டனையை விதித்துள்ளனர்’ என்று காசா எல்லைக் கடவை நிர்வாகத்திற்காக பேசவல்ல ஹிஷாம் எத்வான் தெரிவித்தார்.

ரபா எல்லையை இஸ்ரேல் கட்டுப்படுத்துவது குறித்து பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. ‘கடந்த 24 முதல் 48 மணி நேரத்தில் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை, எல்லையை கடப்பதும், போதிய உதவி பொருட்கள் வராததும் ஆகும்’ என்று அந்த ஐ.நா. நிறுவனத்தின் பேச்சாளர் லுயிஸ் வட்ரிட்ஜ் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். நிலைமை பெரும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காசாவின் ரபா நகரில் இஸ்ரேலின் படை நடவடிக்கை மற்றும் ரபா எல்லைக் கடவையில் பலஸ்தீன பக்கத்தை இஸ்ரேல் கைப்பற்றியதை எகிப்து வெளியுறவு அமைச்சு கண்டித்துள்ளது. ரபா மீதான தாக்குதல் போர் நிறுத்த முயற்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கும் பகுதிகளில் உள்ள பெரும் எண்ணிக்கையான மக்கள் வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. அந்த மக்களை 20 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் ‘நீடிக்கப்பட்ட மனிதாபிமான வலயம்’ என்று அழைக்கும் பகுதிக்கு செல்வதற்கு இஸ்ரேல் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.

சில பலஸ்தீன குடும்பங்கள் மீண்டும் ஒருமுறை கழுதை வண்டிகள் மற்றும் ட்ரக் வண்டிகளில் தமது குழந்தைகள் மற்றும் உடைமைகளை ஏற்றியபடி மீண்டும் ஒருமுறை வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

சிலர் சேறும் சகதியுமான வீதிகள் வழியே நடைபாதையாகவே வேளியேற ஆரம்பித்துள்ளனர்.

ஒக்டோபரில் போர் வெடித்தது தொடக்கம் வெளியேறிச் செல்வது இது நான்காவது முறை என்று அப்துல்லா அல் நஜர் என்ற பலஸ்தீனர் தெரிவித்துள்ளார். ‘எங்கே செல்வது என்று இறைவனுக்குத் தான் தெரியும். இன்னும் அது பற்றி நாம் தீர்மானிக்கவில்லை’ என்றார்.

கெய்ரோவில் போர் நிறுத்த பேச்சு

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் பொருட்டு, தமது தூதுக்குழு நேற்று கெய்ரோ பயணித்ததாக மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பு கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், போர் நிறுத்தம் ஒன்றுக்கான முன்மொழிவை ஏற்பதாக தமது அமைப்பின் தலைவர் இஸ்மைல் ஹனியோ கட்டார் மற்றும் எகிப்திடம் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த முன்மொழிவு இஸ்ரேலிய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் ஆனால் உடன்பாடு ஒன்றை எட்டும் முயற்சியாக பேச்சுவார்த்தையாளர்களுடனான சந்திப்புக்கு இஸ்ரேல் தூதுக்குழு ஒன்றை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளது.

மறுபுறம் ரபாவில் தொடர்ந்து படை நடவடிக்கையை முன்னெடுக்க நெதயாகுவின் போர் கால அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அந்த அலுவலகம் கூறியது.

இதில் ஹமாஸ் ஏற்றுக்கொண்டிருக்கும் முன்மொழிவு எகிப்தினால் வழங்கப்பட்ட பலவீனமான ஒன்று என்றும் அதில் இஸ்ரேல் ஏற்காத கூறுகள் உள்ளடங்கி இருப்பதாகவும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஹமாஸ் அமைப்பு மூன்று கட்டங்களைக் கொண்ட போர் நிறுத்தம் ஒன்றுக்கே இணங்கி உள்ளது. ஒவ்வொன்று 42 நாட்களைக் கொண்டதான இந்த போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதோடு இரண்டாவது கட்டத்தில் எஞ்சிய பணயக்கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேல் காசாவில் இருந்து முழுமையாக வெளியேறவுள்ளது. மூன்றாவது கட்டத்தில் காசாவில் மூன்று தொடக்கம் ஐந்து ஆண்டுகள் கொண்ட மீள்கட்டமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்படும்.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பில் பேசுவதற்கு ஹமாஸ் பிரதிநிதிகள் இன்றைக்குள் கெய்ரோ செல்லவிருந்ததாக பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட பலஸ்தீனர் தரப்பை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எட்டப்படும் எந்த ஒரு உடன்படிக்கையும் கடந்த நவம்பரில் பாதி எண்ணிக்கையான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட ஒரு வாரம் போர் நிறுத்தத்திற்கு பின்னரான முதலாவது போர் நிறுத்தமாக அமையும்.

ஆனால் அது தொடக்கம் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்று இன்றி பணயக்கைதிகளை விடுவிப்பதை ஹமாஸ் அமைப்பு மறுத்து வருவதோடு தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று தொடர்பில் மாத்திரமே பேச்சுவார்த்தை நடத்துவதாக இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

நன்றி தினகரன் 

ரபா எல்லைக் கடவை

May 8, 2024 7:00 am 

* ரபா எல்லைக் கடவை காசா மற்றும் எகிப்து எல்லையில் அமைந்துள்ளது. அது காசாவில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே எல்லைக் கடவையாகவே இருந்து வந்தது.

* 2007 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை ஒன்றின்படி, எகிப்து இந்த எல்லைக் கடவையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் ரபா வழியாக காசாவுக்குள் பொருட்கள் செல்ல இஸ்ரேலின் ஒப்புதல் தேவையாக உள்ளது.* ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவுடனான எல்லைகளை இஸ்ரேல் மூடியதை அடுத்து ரபா எல்லைக் கடவையே காசாவுக்கு உதவிகள் செல்வதற்கான உயிர் நாடியாக இருந்து வந்தது.   நன்றி தினகரன் 

போர் நிறுத்த பேச்சுக்கு மத்தியில் காசாவில் தொடர்ந்தும் தாக்குதல்

May 9, 2024 8:06 am 

எகிப்துடனான காசா எல்லைக் கடவையை கைப்பற்றி அங்கு உதவிகள் செல்வதை மேலும் முடக்கி இருக்கும் இஸ்ரேல் இராணுவம் காசாவில் நேற்றும் (08) அதிரடித் தாக்குதல்களை நடத்தியதோடு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் கடைசிக் கட்ட முயற்சியில் பேச்சுவார்த்தையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காசாவில் இடம்பெயர்ந்த மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபாவில் சர்வதேசத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை கைப்பற்றி இஸ்ரேல் இராணுவம் கிழக்கு ரபாவில் இருந்து பொதுமக்களை வெளியேற்றி வருகிறது.

இந்த நெருக்கடியான சூழலில் பேச்சுவார்த்தையாளர்கள் மற்றும் மத்தியஸ்தர்கள் போர் நிறுத்தம் ஒன்றுக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீன போராளிகளின் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் எட்டு மாதங்களை தொட்டிருக்கும் போரை நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு இஸ்ரேலுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இதுவென்று பெயர் குறிப்பிடாத ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்க மத்தியஸ்தர்கள் கெய்ரோவில் ஹமாஸ் பிரதிநிதிகள் குழுவை சந்தித்து பேசியதாக எகிப்து அரசுடன் தொடர்புபட்ட அல் ஹகெரி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பும் இணங்கி இருப்பதோடு இஸ்ரேல் தனது பிரதிநிதிகளை கெய்ரோவுக்கு அனுப்பியுள்ளது.

இரு தரப்பும் பிளவுகள் தொடர்பில் தீர்வு காணும் என்று நம்புவதாக இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ‘அனைவரும் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்துள்ளனர்’ என்று குறிப்பிட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு கௌன்சில் பேச்சாளர் ஜோன் கிர்பி, ‘இது முக்கியமானதாகும்’ என்றார்.

முன்னதாக ஹமாஸ் இணங்கிய போர் நிறுத்த முன்மொழிவை இஸ்ரேல் நிராகரித்திருந்தது. ‘ஹமாஸின் முன்மொழிவு இஸ்ரேலுக்கு அவசியமான தேவைகளில் இருந்து மிகத் தொலைவில் உள்ளது. காசாவில் ஹமாஸ் கொடிய ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கு இஸ்ரேல் இடம் அளிக்காது’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கும் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. தலைவர் பில் பர்ன்ஸ், இஸ்ரேல் சென்று நெதன்யாகுவை சந்திக்கவிருப்பதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ரபாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கை ஒன்றுக்கான திட்டம் மற்றும் அதனால் போர் நிறுத்தப் பேச்சுகள் முறியும் அபாயம் இருக்கும் சூழலிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

 

தொடரும் தாக்குதல்கள்

கெய்ரோ பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் ரபா உட்பட இஸ்ரேல் காசா எங்கும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடக்கம் சரமாரித் தாக்குதல்களை நடத்தியதாக பார்த்தவர்கள் மற்றும் உள்ளூர் மருத்துவமனையை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசா நகரில் உள்ள தொடர்மாடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் ஒரே குடும்பத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்ததாக அல் அஹலி மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.

இதில் ரபா மீது கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் 35 பேர் கொல்லப்பட்டு மேலும் 129 பேர் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா நேற்று தெரிவித்தது. மத்திய காசாவின் அல் கிஷ்டா கோபுரத்தின் கடைசி மாடி மீது இஸ்ரேல் நடத்திய பீரங்கித்தாக்குலில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக அங்குள்ள வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் தெற்கு நகரான கான் யூனிஸின் குசா பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலின் பீரங்கி தாக்குதல்களில் இரு பெண்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். காசாவில் 215 நாட்களுக்கு மேலாக இஸ்ரேல் இடைவிடாமல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் உத்தரவை அடுத்து ரபாவில் இருந்து வெளியேறிய மக்கள் மத்திய காசாவின் டெயிர் அல் பலாவில் உள்ள அல் அக்ஸா மருத்துவமனையின் முற்றவெளிப் பகுதி மற்றும் அதற்கு அருகில் கூடியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

‘சுஜெய்யாவில் இருந்து நுசைரத்துக்கும், பின்னர் டெயிர் அல் பலாவுக்கும் தொடர்ந்து ரபாவுக்கு நான் இடம்பெயர்ந்தேன். இது நான் இடம்பெயர்வது ஐந்தாவது முறையாகும்’ என்று முஹமது அல் குல் என்பவர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு கூறினார்.

‘நாம் எங்கே போவது என்று எமக்கு தெரியவில்லை. நிலைமை மோசமாக உள்ளது. தலைக்கு மேலால் செல்லும் செல் குண்டுகளுக்கு மத்தியில் இரவு முழுவதும் நாம் உறங்கவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மற்றுமொரு பலஸ்தீனரான இமாத், ‘மக்களின் எதிர்காலம் தெளிவாக இல்லை’ என்றார். ‘எனது குடும்பம் நான்கு பேரைக் கொண்டது, அதேபோன்று எனது சகோதரரின் குடும்பம் நான்கு பேரைக் கொண்டது. மொத்தம் எட்டுப் பேர் உள்ளனர். எம்மால் எங்கே போக முடியும்?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.

 

உதவிகள் முடக்கம்

ரபா எல்லைக் கடவையின் பலஸ்தீன பக்கமாக இஸ்ரேலிய டாங்கிகள் கட்டுப்படுத்தி வரும் காட்சிகள் கடந்த செவ்வாயன்று (07) வெளியாகின.

இந்த எல்லைக் கடவையை கட்டுப்படுத்துவது ஹமாஸின் பயங்கரவாத ஆட்சியை நிறுவுவதற்கு அவசியமாக இருந்த வழி ஒன்றை மறுப்பதில் முக்கிய படியாக உள்ளது என்று நெதன்யாகு விபரித்துள்ளார்.

எனினும் காசாவுக்கான உதவிகள் செல்லும் மற்றொரு எல்லைக் கடவையான கெரம் ஷலோம் மற்றும் ரபா இரண்டையும் அணுகுவதை இஸ்ரேல் மறுத்து வருவதாக ஐ.நா. மனிதாபிமான அலுவலக பேச்சாளர் ஜேன்ஸ் லேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த எல்லைக் கடவைகளை உடன் திறக்கும்படி வலியுறுத்திய ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், இவை மூடப்படுவது ஏற்கனவே மோசமடைந்திருக்கும் மனிதாபிமான நிலைமை மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று எச்சரித்தார். வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் ஜேன் பீரேவும் இதே நிலைப்பாட்டை வெளியிட்டதோடு, இவ்வாறு மூடப்பட்டிருப்பது ‘ஏற்க முடியாதது’ என்றார்.‘இஸ்ரேல் நிர்வாகம் உயிர் காக்கும் உதவிகளை முடக்கும் ஒவ்வொரு நாளிலும், மேலும் பலஸ்தீனர்கள் உயிரிழக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக’ மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.   நன்றி தினகரன் 

ரபா மீதான படையெடுப்பு திட்டம் இஸ்ரேலுக்கான ஆயுதங்களை இடைநிறுத்த பைடன் எச்சரிக்கை: தொடர்ந்தும் தாக்குதல்

May 10, 2024 7:34 am 0 comment

தெற்கு காசா நகரான ரபா மீது இஸ்ரேல் படையெடுப்பு ஒன்றை மேற்கொண்டால், இஸ்ரேலுக்கான ஆயுதங்கள் இடைநிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதல் முறையாக வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் ரபா உட்பட காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்ததோடு எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்றும் (09) போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நிடித்தன.

‘அவர்கள் ரபாவுக்குள் சென்றால் நான் ஆயுதங்களை வழங்க மாட்டேன் என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்’ என்று சி.என்.என். தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பைடன் குறிப்பிட்டார். ரபா மீதான இஸ்ரேலின் திட்டத்தில் பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க குண்டுகள் ஹமாஸை அழிப்பதற்காக ஏழு மாதங்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் காசா பொதுமக்கள் கொல்லப்பட்டதை பைடன் ஒப்புக்கொண்டார்.

காசாவில் தொடரும் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றுள்ள ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு இஸ்ரேல் தீவிரமாக முயன்று வரும் நிலையில் அதற்கு எதிராக சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. இதில் பைடனின் கருத்து இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலுக்கு விடுக்கும் வெளிப்படையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

பைடனின் இந்தக் கருத்துக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து உடன் எந்த பதிலும் வெளியிடாதபோதும் ரபா மீதான படை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ரபா மீது தாக்குதல் நடத்தி அங்கிருப்பதாகக் கூறும் ஆயிரக்கணக்கான ஹமாஸ் போராளிகளை தோற்கடிப்பதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை கைப்பற்றி பிரதான உதவிப் பாதையை துண்டித்த இஸ்ரேல், ரபா மீது தொடர்ந்து வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசாவில் தொடரும் போருக்கு சக ஜனநாய கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டு வருவது மற்றும் பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் பைடன் நிர்வாகம் உள்நாட்டில் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக இஸ்ரேலுக்கு ஆதரவை அளித்து வரும் பைடன் இந்த ஆண்டில் இரண்டாவது தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

எனினும் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆயுத உதவிகளை வழங்கும் நாடாக இருக்கும் அமெரிக்கா, ஒக்டோபர் 7 இல் போர் வெடித்த பின்னர் அந்த உதவிகளை மேலும் அதிகரித்தது.

ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான அயர்ன் டோம் போன்ற இஸ்ரேலிய தற்காப்புக்கான ஆயுதங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் பைடன் குறிப்பிட்டார்.

முன்னதாக இஸ்ரேலுக்கு வெடிகுண்டுகளை வழங்குவதை அமெரிக்கா நிறுத்தி வைத்திருப்பதாக வெளியான செய்தியை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். காசா பொதுமக்கள் மீதான அச்சுறுத்தல் காரணமாகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை தருவதாக குறிப்பிட்டிருக்கும் ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேலிய தூதுவர் கிளார்ட் ஏர்டன், இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்தும் என்று நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

ரபாவில் குண்டு மழை

ரபாவில் நேற்றுக் காலையும் கடுமையான செல் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அங்கிருக்கும் ஏ.எப்.பி. செய்தியாளர் குறிப்பிட்டதோடு, காசாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

கடந்த இரண்டு நாட்களில் இல்லாத அளவுக்கு ரபாவில் கடுமையான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அங்குள்ள உதவிப் பணியாளர் ஒருவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். ரபாவில் நேற்று (09) காலை குண்டு சந்தங்கள் தொடர்ந்து கேட்டு வந்தன என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. உதவி நிறுவனத்தின் தொலைத்தொடர்பு அதிகாரி லுவிஸ் வோட்டரிட் குறிப்பிட்டார்.

மேற்கு ரபாவில் தாம் இருக்கும் கட்டடம் அருகில் விழும் குண்டுகளால் அதிர்ந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரபாவில் இடைவிடாது குண்டு விழுந்ததாக அங்கிருக்கும் பிரிட்டன் நாட்டு மருத்துவர் ஜேம்ஸ் ஸ்மித் விபரித்துள்ளார். ‘பத்து விநாடிக்கு ஒருமுறை குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டேன்’ என்றார்.

மறுபுறம் வடக்கு காசாவின் செய்தூன் பகுதியில் நேற்று கடுமையான வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்றதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பல டஜன் பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

ஹசன் அல் பன்னா பள்ளிவாசல் மற்றும் காசா பல்கலைக்கழகத்தை சூழ பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. பல கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன என்று அந்த செய்தி நிறுவனம் கூறியது.

இந்நிலையில் காசாவில் கடந்த எட்டு மாதங்களாக தொடரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,904 ஆக அதிகரித்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மேலும் 78,514 பேர் காயமடைந்துள்ளனர்.

ரபாவின் கிழக்கு பக்கமாக இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் துருப்புகள் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் முன்னேறி வரும் நிலையில் அங்கிருந்து இதுவரை சுமார் 80,000 பேர் வெளியேறி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரபாவில் இயல்பு வாழ்வு முழுமையாக நின்றுவிட்டது என்று இடம்பெயர்ந்த பலஸ்தீனர் ஒருவரான மர்வான் அல் மஸ்ரி குறிப்பிட்டார். ‘நகரின் மேற்குப் பகுதியில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன’ என்று 35 வயதான அந்த ஆடவர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

‘நாம் கடுமையான அச்சத்திலும் முடிவில்லாத கவலையிலும் இருக்கிறோம்’ என்று 29 வயதான முஹனத் அஹமது கிஷ்தா என்பவர் தெரிவித்தார். ‘இஸ்ரேல் இராணுவம் பாதுகாப்பானது என்று கூறும் இடங்களிலும் குண்டு தாக்குதல்கள் இடம்பெறுகின்றன’ என்றும் குறிப்பிட்டார்.

எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் தெற்கு காசா மருத்துவமனைகளில் வெறும் மூன்று நாட்களுக்கு மாத்திரமே எரிபொருள் எஞ்சி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் குறிப்பிட்டுள்ளார். ‘எரிபொருள் இல்லாவிட்டால் அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளும் நின்றுவிடும்’ என்றும் அவர் கூறினார்.

 

தொடரும் பேச்சு

இழுபறி நீடித்து வரும் போர் நிறுத்த முயற்சியில் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் நீடித்தன. எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இடம்பெறும் இந்த பேச்சில் ஹமாஸ் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஹமாஸுடன் இணைந்து போரிட்டு வரும் இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பலஸ்தீன விடுதலை அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருப்பதாக எகிப்து உளவுப் பிரிவுடன் தொடர்புபட்ட அல் கெஹெரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் பிராந்திய ஊடகங்களில் முரண்பாடான செய்திகள் வெளியாகி வருகின்றன. இடைவெளி குறைந்து வருவதாக கெய்ரோவில் இருந்து வரும் செய்திகள் கூறும் அதேநேரம் பிரதான இடைவெளிகள் தொடர்ந்து நீடிப்பதாக இஸ்ரேல் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை ஒப்புக்கொண்ட போர் நிறுத்த முன்மொழிவுக்கு அப்பால் தமது அமைப்பு செல்லப்போவதில்லை என்று கட்டாரில் உள்ள ஹமாஸ் அரசியல் அலுவலக உறுப்பினரான இஸ்ஸத் எல் ரெஷிக் குறிப்பிட்டுள்ளார்.

‘இஸ்ரேல் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் தீவிரம் காட்டுவதில்லை. அது ரபா மற்றும் எல்லைக் கடவை மீதான ஆக்கிரமிப்பு பேச்சுவார்த்தைகளை ஒரு மறைப்பாக பயன்படுத்துகிறது’ என்று ரெஷிக் தெரிவித்துள்ளார்.

மத்தியஸ்தர்களின் மூன்று கட்ட போர் நிறுத்த முன்மொழிவொன்றுக்கே ஹமாஸ் கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்தபோதும் ஹமாஸ் அதனை நிராகரித்தது.

இந்நிலையில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. வின் தலைவர் பில் பர்ன்ஸ் கடந்த புதன்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமது பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு கெய்ரோ பேச்சுவார்த்தையே இஸ்ரேலுக்கான கடைசி வாய்ப்பு என்று ஹமாஸ் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.   நன்றி தினகரன் 

ரஷ்ய ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற விளாடிமிர் புடின்

- அதிக முறை ரஷ்ய ஜனாதிபதியாக இருந்தவர் என்றும் சாதனை

May 8, 2024 11:14 am 

ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) 5ஆவது முறையாக மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாகியுள்ளார்.

ரஷ்யாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அந்நாட்டு அதிபராக புதின் நேற்று (07) பதவியேற்றுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று 5ஆவது முறையாக புதின் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாகியுள்ளார்.

இதன் மூலம் அதிக முறை ரஷ்ய ஜனாதிபதியாக இருந்தவர் என்ற சாதனையையும் புதின் படைத்துள்ளார்.

1999ஆம் ஆண்டில் பதில் அதிபராக பதவியேற்ற புதின், 2007ஆம் ஆண்டில் ரஷ்ய ஜனாதிபதியாக முதல் முறையாக பெறுப்பேற்றார்.

மீண்டும் 2012இல் அதிபராக பொறுப்பேற்ற புதின் அதன் பின்னர் தற்போது வரை அவரே ரஷ்ய ஜனாதிபதியாக தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன்  


கொவிட் தடுப்பு மருந்தை மீளப் பெற்றது அஸ்ட்ராசெனகா

May 9, 2024 6:18 am 

அஸ்ட்ராசெனகா நிறுவனம் அதன் வக்ஸ்செவ்ரியா கொவிட்–19     தடுப்புமருந்தை உலக அளவில் மீட்டுக்கொண்டுள்ளது.

அந்தத் தடுப்புமருந்து அரிதான, ஆபத்தான பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதை நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ஒப்புக்கொண்டது. தடுப்புமருந்தை மீட்டுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை நிறுவனம் மார்ச் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பித்தது. அது நேற்று (08) நடப்பிற்கு வந்தது. அந்தத் தடுப்புமருந்து உற்பத்தி செய்யப்படவோ விநியோகிக்கப்படவோ இல்லை என்று நிறுவனம் குறிப்பிட்டது. வக்ஸ்செவ்ரியா தடுப்புமருந்தால் சில பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்று அண்மைய மாதங்களில் கூறப்பட்டது. இரத்தம் கட்டிக்கொள்ளக்கூடும், இரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று கூறப்பட்டது.

ஆனால் வர்த்தகக் காரணத்திற்காகவே தடுப்புமருந்தை மீட்டுக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 
காசா போர் நிறுத்தப் பேச்சு உடன்பாடு இன்றி முடிவு: ரபாவில் கடும் தாக்குதல்

இஸ்ரேலிய முன்னேற்றத்தால் 110,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

May 11, 2024 8:24 am 

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது தொடர்பில் இழுபறியுடன் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஒன்று இல்லாமல் முடிவடைந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் நேற்றும் (10) தனது தாக்குதல்களை தொடர்ந்தது.

எகிப்துடனான எல்லையில் இருக்கும் தெற்கு நகரான ரபாவில் நேற்று பீரங்கி தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய இராணுவம், மேலும் வடக்காக காசா நகரில் வான் தாக்குதல்களை நடத்தியதோடு அங்கு கடும் மோதல்களும் இடம்பெற்றதாக அங்குள்ள ஏ.எப்.பி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாட்கள் இடம்பெற்ற மறைமுக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுக்கள் கடந்த வியாழக்கிழமை (09) கெய்ரோவை விட்டு வெளியேறியதாக எகிப்து உளவுப் பிரிவுடன் தொடர்புபட்ட அல் கெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமை உள்ள கட்டாருக்கு தமது பேச்சுவார்த்தைக் குழுவினர் சென்றிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

‘பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதிகள் கெய்ரோவில் இருந்து டோஹா சென்றுள்ளனர். மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவை ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல்) நிராகரித்ததோடு பல முக்கிய விடயங்களில் அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்’ என்று ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அதன்படி பந்து இப்போது முழுமையாக ஆக்கிரமிப்பாளர்கள் கையிலேயே உள்ளது’ என்றும் அது கூறியது.

மத்தியஸ்தர்கள் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றுக்கு ஹமாஸ் அமைப்பு கடந்த திங்கட்கிழமை இணங்கியபோதும் அந்த முன்மொழிவு தமது நிபந்தனைகளுக்கு அப்பால் இருப்பதாக இஸ்ரேல் நிராகரித்திருந்தது.

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் வலியுறுத்தும் நிலையில் அதனை நிராகரிக்கும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாக கூறி வருகிறது.

இந்நிலையில் உடன்படிக்கை ஒன்றுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கௌன்சில் பேச்சாளர் ஜோன் கிர்பி, ஆனால் அது இரு தரப்பினதும் ‘தலைமைத்துவம்’ மற்றும் ‘தார்மீக துணிச்சலிலேயே’ தங்கியுள்ளது என்றார்.

காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றை எட்ட வேண்டுமானால், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ‘நெகழ்வு போக்கை’ காண்பிக்க வேண்டும் என்று எகிப்து வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

போர் நிறுத்த முயற்சியில் பங்கேற்றிருந்த அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. தலைவர் வில்லியம் பர்னும் நேற்று மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா திரும்பியதாக வெள்ளை மாளிகை கூறியது.

‘இதனால் பேச்சுவார்த்தை தொடராது என்று அர்த்தம் கொள்ள முடியாது’ என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கௌன்சில் பேச்சாளர் ஜோன் கிர்பி கூறினார்.

ரபாவில் அவதானம்

கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் காசா போரில் அண்மைய வாரங்களாக ரபா மீதான அவதானம் அதிகரித்துள்ளது. காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இந்த பகுதி மீதான தரைவழி நடவடிக்கைக்கு இஸ்ரேல் தயாராகி வரும் சூழலில் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.

ரபா மீது படையெடுத்தால் இஸ்ரேலுக்கான ஆயுதங்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்தபோதும், இஸ்ரேல் தனியாக நின்று செயற்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.

‘எமக்குத் தேவையென்றால் நாம் தனியாக நிற்போம். அவசியம் என்றால் எமது விரல் நகத்தால் கூட போராடுவோம்’ என்று நெதன்யாகு கூறினார்.

ரபா மீதான படையெடுப்பு பாரிய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் இருந்தபோதும், இஸ்ரேல் அங்கு கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த மட்டுப்படுத்தப்பட்டது என்று குறிப்பிடும் படை நடவடிக்கை காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறியுள்ளனர்.

ரபாவின் கிழக்கு பகுதியை நோக்கி இஸ்ரேலிய துருப்புகள் முன்னேற ஆரம்பித்தது தொடக்கம் அந்த நகர் மீதான உக்கிர தாக்குதல்களுக்கு மத்தியில் இதுவரை 110,000 பலஸ்தீனர்கள் வெளியேறி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அந்த மக்கள் எங்கு போனாலும் தொடர்ந்து இஸ்ரேலிய தாக்குதல் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘காசாவில் எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதோடு வாழ்க்கை நிலை கொடூரமாக உள்ளது’ என்று குறிப்பிட்ட ஐ.நா நிறுவனம், அவசர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் டெயிர் அல் பலா உட்பட இஸ்ரேல் பாதுகாப்பு வலயங்களாக புதிதாக அறிவித்திருக்கும் இடங்களில் தப்பி வரும் மக்கள் நிரம்பி வருகின்றனர். அங்கு மக்கள் தாம் தங்குவதற்கு வசதியாக கூடாரங்களை அமைத்து வருகின்றனர்.

இதனால் டெயிர் அல் பலாவில் மக்கள் தங்குவதற்கு இடங்கள் தீர்ந்து வருவதோடு அங்கு நீர் உட்பட வசதிகளும் தீர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிப்பதால் ரபா எங்கும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற முடியாத நிலையில் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களும் வெளியேறி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

‘எம்மிடம் படுக்கைகள் இல்லை. குறிப்பாக ஆபத்தான நோயாளர்களுக்கு பரிந்துரைக்க மருத்துவமனைகளும் இல்லை’ என்று பலஸ்தீன மருத்துவரான முஹமது சகூத், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டார்.

ரபாவில் உள்ள எகிப்துடனான எல்லைக் கடவையை கைப்பற்றிய இஸ்ரேல் காசாவுக்கு உதவிகள் செல்வதற்கான அந்த பிரதான வழியையும் மூடியுள்ளது. இந்நிலையில் ரபா நகரில் உணவு மற்றும் எரிபொருட்கள் தீர்ந்து வருவதாக ஐ.நா. அமைப்பு எச்சரித்துள்ளது.

‘ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் எந்த உதவியும் காசாவுக்குள் வருவதில்லை. உதவி, எரிபொருள், விநியோகங்கள் எதுவும் இல்லை. எமது கடைசி கையிருப்புகளும் இறுதிக் கட்டத்தில் உள்ளன. நாம் வழங்கி வரும் மாவு சிறிது நாட்களுக்கே உள்ளது. எரிபொருள், நீர் இன்றி மிக விரைவில் அனைத்தும் முடங்கிவிடும். நிலைமை மிக மோசமாக உள்ளது.’ என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் சாம் ரோஸ், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

ஐ.நா. நிறுவனம் மீது தீ

கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைமையகம் இருக்கும் வளாகத்தின் மீது இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் நேற்று முன்தினம் இரு தடவைகள் தீ வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்த வளாகத்தின் வெளிப் பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இந்த நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி ‘எக்ஸ்’ சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘மீண்டும் ஒருமுறை ஐ.நா. பணியாளர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது’ என்று சுட்டிக்காட்டிய அவர், பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை அந்த வளாகத்தை மூடுவதற்கு தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த வளாகத்திற்கு வெளியில் கூடிய ஆயுதம் ஏந்திய இஸ்ரேலிய குடியேறிகள் ‘ஐக்கிய நாடுகளை தீயில் பொசுக்கு’ என்று கோசம் எழுப்பியே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பலஸ்தீன அகதிகளுக்கான உதவிகளை வழங்கி வரும் இந்த நிறுவனத்தை கலைப்பதற்கு இஸ்ரேல் அரசு அழைப்பு விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையில் கான் யூனிஸின் புறநகர் பகுதி ஒன்றான அபசான் அல் கபிர் சிறு நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தின் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் அல் ஜசீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ரபாவில் இருந்து பலஸ்தீனர்கள் தப்பி வரும் பகுதியாக இருக்கும் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மத்திய காசா நகரில் உள்ள யார்புக் வீதியில் அப்தல் ஆல் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது நேற்று அதிகாலை நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டு மேலும் ஐவர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன உத்தியோகபூர் செய்தி நிறுவனமான வபா கூறியது.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை இரவு மேற்கு தால் அல் சுல்தான் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு வயது குழந்தையும் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் காசாவின் கிழக்கு புறநகர் பகுதியில் இஸ்ரேல் படைகளை இலக்கு வைத்து மோட்டார் குண்டுகள் மற்றும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் மற்றும் பலஸ்தீன இஸ்லாமி ஜிஹாத் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. ரபாவின் கிழக்கில் இஸ்ரேலிய இராணுவ வாகனங்களுக்கு கீழால் கண்ணி வெடி வைத்து சுரங்கப்பாதை ஒன்றை வெடிக்கச் செய்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பில் மூன்று வீரர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நன்றி தினகரன்No comments: