தாயின் மடியில் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 

1963ம் வருடம் எம் ஜி ஆர் நடிப்பில் கடவுளைக் கண்டேன் என்ற படத்தை தயாரிக்கத் தொடங்கினார் பாலன் பிக்சர்ஸ் அதிபர் கே ஆர் பாலன். படத் துவக்க விழாவிலே அவருக்கும் , எம் ஜி ஆருக்கும் ஒத்துப் போகாமல் போகவே படத்தில் இருந்து எம் ஜி ஆர் கழன்று கொண்டார். அதனைத் தொடர்ந்து கல்யாணகுமாரை கதாநாயகனாக நடிக்க வைத்து படத்தை தயாரித்து வெளியிட்டார் பாலன். தி மு க வின் அனுதாபியான இவர் எதோ ஒரு விதத்தில் கலைஞர் கருணாநிதிக்கு உறவினரும் கூட. இதன் காரணமாக மீண்டும் பாலனுக்கும் , எம் ஜி ஆருக்கும் இடையில் சுமுக உறவு ஏற்றப்பட்டு மீண்டும் இணைந்து படம் தயாரிப்பது என்று முடிவானது. இதற்கென அன்னை பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் உருவாகி அதன் மூலம் தயாரான படம் தான் தாயின் மடியில்.


ஒருவனுக்கு எத்தனை செல்வங்கள் இருந்தாலும் , பெற்ற தாயின் அன்பும் , அரவணைப்பும் இல்லாவிட்டால் அவன் அனைத்தையும் இழந்தவனாகிறான் என்பதை கருவாகக் கொண்டு படத்தின் கதை உருவானது.


செல்லச் செழிப்புடன் பெற்றோர்கள் இன்றி வளரும் ராஜா பந்தயக் குதிரையை செலுத்தும் ஜாக்கியாக பணியாற்றுகிறான். அவனுக்கும் செல்வந்தர் பூபதியின் மகள் ஜீவாவுக்கு இடையில் கண்டதும் காதல் ஏற்றப்படுகிறது. ஜீவாவை தன் மகன் ஜம்புவுக்கு மணமுடித்து தர சதித் திட்டம் தீட்டும் சிகாமணி குதிரை ரேஸில் ராஜாவுக்கு விபத்து ஏற்றப்பட சதி செய்கிறான். காலில் அடிபட்டு ஓய்வில் இருக்கும் ராஜாவுக்கு தன் தாய் யார் என்ற உண்மை தெரிய வருகிறது. அது மற்றுமன்றி தன்னுடைய தாயை கெடுத்து வஞ்சித்தவன் யார் அதிர்ச்சியான என்ற தகவலும் கிடைக்கிறது. அத் தகவல் அவனும் ஜீவாவும் சகோதரர்கள் என்று பேரிடியாக செய்தியை சொல்கிறது. தன்னுடைய பிறப்பின் உண்மை இரகசியத்தை ராஜா தெரிந்து கொண்டானா என்பதே கதையின் மீதி.
படத்தில் இளமையாகவும் அழகாகவும் எம் ஜி ஆர் , சரோஜாதேவி இருவரும் தோன்றுகிறார்கள். காதல் காட்சியில் ஜோராக நடிக்கும் எம் ஜி ஆர் தாயை நினைந்து உருகும் காட்சியில் உருக்கத்தைக் காட்டுகிறார். சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் நம்பியாருடன் அவர் போடும் சண்டைக் காட்சி சூப்பர். ஸ்டண்ட் மாஸ்டர் ஆர். என் . நம்பியாருக்கு பலே. அதே போல் ராஜாத்தி காத்திருந்தாள் ரோஜா போலே பூத்திருந்தாள் பாடலுக்கு பொய்க் கால் நடனம் ஆடும் எம் ஜி ஆர், சரோஜாதேவி இருவரும் பாராட்டும் படி செய்திருந்தார்கள். நாகேஷ் , மனோரமா நகைச்சுவையை சகிக்கலாம் . மனோரமா
இளமையாகவும் சிக் என்றும் காட்சியளிக்கிறார். இதிலும் எம் ஆர் ராதாதான் வில்லன். அவர் சொல்வதை எல்லாம் செய்யும் அவரின் மகன் நம்பியார். தாயாக வரும் பண்டரிபாய் பரிதாபத்துக்குரியவராக வருகிறார். இவர்களுடன் ஜி சகுந்தலா, டீ எஸ் முத்தையா, கீதாஞ்சலி,ஏ. வீரப்பன் , லட்சுமிபிரபா ,திருப்பதிசாமி ஆகியோரும் நடித்தனர்.

படத்தை ஒளிப்பதிவு செய்தவர் ஆர் ஆர் சந்திரன். கதை வசனத்தை

சொர்ணம் எழுதினார். எம் ஜி ஆரின் ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய சொர்ணத்துக்கு இப் படமே எம் ஜி ஆருடனான முதல் படமாகப் அமைந்தது. ஆனாலும் படத்தின் திரைக் கதை சரியாக அமைக்கப்படவில்லை. திடீர் திடீர் என்று சம்பவங்கள் இடம் பெறுகின்றது. அவற்றுக்கு விடை தேடும் பொறுப்பை ரசிகர்களிடம் விட்டு விட்டார்கள்!


பாடல்களை வாலியும், கண்ணதாசனும் எழுதினார்கள். கண்ணதாசனுடன் எம் ஜி ஆர் நல்லுறவில் இல்லாத நேரத்திலும் கூட எப்படியோ கண்ணதாசன் பாடலை படத்தில் புகுத்தி விட்டார் பாலன். தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை , என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும் பாடல்கள் கேட்கும் படி அமைந்தன . இசையமைத்தவர் எஸ் எம் சுப்பையா நாயுடு.

படத்தை டைரக்ட் செய்தவர் ஆதுர்த்தி சுப்பாராவ். எங்க வீட்டு

மஹாலஷ்மி, மஞ்சள் மகிமை, குமுதம் போன்ற குடும்பப் பாங்கான வெற்றி படங்களை இயக்கிய இவர் எப்படியோ எம் ஜி ஆரிடம் மாட்டிக் கொண்டு எதோ விதமாக படத்தை இயக்கி ஒப்பேற்றி விட்டார் போல் தோன்றுகிறது. இந்தப் படத்துக்கு பிறகு அவர் வேறு தமிழ் படங்கள் எதையும் இயக்கவும் இல்லை, கே ஆர் பாலன் என் ஜி ஆர் நடிப்பில் படம் ஏதும் தயாரிக்கவும் இல்லை !

No comments: