கொண்டாடி மகிழ வேண்டிய அன்னையர் தினம்

                                               சிவஞானச் சுடர் பல் வைத்திய கலாநிதி   

                                         பாரதி இளமுருகனார்

                                          (வாழ்நாள் சாதனையாளர்)


மூத்த பிரசைகள் பார்த்து மகிழ்ந்திட

முத்தமிழ்க் கும்மி அடித்திடுவோம்

முத்தமிழ்க் கும்மி அடித்திடுவோம்- கையைக்

கோத்துநாம் ஆடியே அன்னையர் தினமதிற்

கூடிக் குலவி மகிழ்ந்திடுவோம்!

கூடிக் குலவி மகிழ்ந்திடுவோம்!

                                          (மூத்தபிரசைகள்)

வேற்றின  மக்களும் வாழுமிந் நாட்டிலே

விரும்புநல் ஒற்றுமை காத்திடுவோம்

விரும்புநல் ஒற்றுமை காத்திடுவோம் - என்றும்

கூறுபோட் டேஎமை இனமதம் பிரித்திடாக்

கொள்கை வளர்த்திடக் கும்மியடி

கொள்கை வளர்த்திடக் கும்மியடி

                                            (மூத்தபிரசைகள்)

சங்கஅங் கத்தவர் தனித்துவம் காத்துநாம்

சரித்திரம் படைத்திடக் கும்மியடி

சரித்திரம் படைத்திடக் கும்மியடி - என்றும்

மங்காப் புகழ்கொண்ட தங்கத் தமிழ்தனை

மறந்துவா ழோமெனக் கும்மியடி

மறந்துவா ழோமெனக் கும்மியடி


(மூத்தபிரசைகள்)


ஆங்கிலம் கலந்து எழுது வோர்களை

அன்பாகப் பேசிநாம் மாற்றிடுவோம்

அன்பாகப் பேசிநாம் மாற்றிடுவோம் - என்றும்

தீங்கனி போன்ற செந்தமிழ் சிதைத்திடும்

செய்கையை எதிர்த்திடக் கும்மியடி

செய்கையை எதிர்த்திடக் கும்மியடி

    

அன்பொடு அறமும் அருளும் வளர்த்துநாம்

அடுத்தவர் துன்பந் துடைத்திடுவோம்

அடுத்தவர் துன்பந்; துடைத்திடுவோம் - தினம்

மன்பதை வாழநற் சேவை புரிந்திட

மகளிர் தினத்தினிற் கும்மியடி


மகளிர் தினத்தினிற் கும்மியடி

 

உலகத்து நாடுகள்; மகிழ்வுடன் கூடியே

ஒப்பற்ற பெண்களைப் போற்றுகின்றார்

ஒப்பற்ற பெண்களைப் போற்றுகின்றார் - குடும்பத்

திலகங் களாய்;வாழும் எம்முயிர் மாதரின்

சீரினைப் பாடியே கும்மியடி


சீரினைப் பாடியே கும்மியடி

 

மூத்த பிரசைகள் பார்த்து மகிழ்ந்திட

முத்தமிழ்க் கும்மி அடித்திடுவோம்

முத்தமிழ்க் கும்மி அடித்திடுவோம் - கையைக்

கோத்துநாம் ஆடியே அன்னையர் தினமதிற்

கூடிக் குலவி மகிழ்ந்திடுவோம்!

கூடிக் குலவி மகிழ்ந்திடுவோம்!


No comments: