தங்கம்மா அப்பாக்குட்டி (07 /01/1925 – 15 /06 /2008)
தங்கம்மா அப்பாக்குட்டி சிவபதம் எய்தி இப்பொழுது 16 வருடங்கள் ஆகின்றன. சிவஞானச் செல்வியாய் - செஞ்சொல்லரசியாய் தன்னலமற்ற சேவையில் சிகரமாய் விளங்கித் திருத்தக வாழ்ந்து சிவனடி காலும் சிவசோதியிற் கலந்தவளை நினைவுகூர்வதில் மனநிறைவடைகிறோம்.
அஞ்சாத நெஞ்சுடனே வீராங் கனையாய்
அற்புதநற்
சிந்தனையைச் செயலில் வடித்துத்
தஞ்சமென உனையடைந்தோர் தன்மானத்துடன்
தருமமென வாழவைக்க
இரவு பகலாய்த்
துஞ்சாது உழைத்துயர்ந்தாய்! தூமணி துர்க்கா
துரந்தரியே
உன்பணியை நீவளர்த் ததொண்டன்
விஞ்சுபுகழ் ஆறுதிரு முருகனெ னுமந்தணன்
வெகுசிறப்பாய்
ஆற்றுகிறான் வெற்றி உனதே!
குணம்படைத்தோர் நற்செயல்கள் ஆற்றி நிற்கக்
கொற்றவையே
உன்வாழ்க்கை பாடஞ் செப்பும்!
பணம்படைத்தோர் மனிதநேயம் கொண்டு சேவை
பலசெய்ய உன்தியாகம்
உந்து சக்தி!
எணங்கொண்டோய்!; எம்மீசன் பொன்னார் திருவடி ;
இணைந்திருந்து
நல்லாசி அருள்வாய் தாயே!
கணப்பொழுதும் மறவோம்நாம் காலங் காலம்
கண்ணிமைபோல்
உன்னினைவைக் காத்து வாழ்வோம்!
எண்ணத்தைச் சீராக்கி ஈர உணர்வை
எல்லோர்நெஞ்
சங்களிலும் ஊற்றாய் நிறைத்தாய்;!
கண்பனிக்க நீர்துடைக்கும் அபலைகள் அந்தோ
கசிந்துருகி
உனைநினைந்து தொழுவர் அன்றோ?
தண்மைமிகு முழுநிலவாய்ப் பவனி வந்து
தவித்திடுவோர்
நெஞ்சக்கனல் அவித்தாய் செல்வீ!
உண்மையம்மா! தாயினன்புக்(கு) உதாரணம் நீயே!
உளம்மகிழ்ந்து
நினைவுகூர்வோம் உத்தமி உன்னை!
வாழ்க்கைதனை முழுமையாக அர்ப்ப ணித்து
வல்வினையால் வாழ்விழந்த அபலைகள் வாழத்
தோள்கொடுத்து அரவணைத்துத் துயரைத் தீர்க்கத்
தூயவில்லம் தோற்றுவித்தாய்! துர்க்கை
அம்மன்
தாள்வணங்கத் திருத்தளியை அமைத்த தேவீ
தணியாத வேட்கையொடு ஆற்றும் பணிக்கு
ஏழ்பிறப்பும் வாழ்த்திநல் லாசி அருள்வர்
என்றென்றும்
தேசுமங்காத் தங்கம் மாவே!
வில்தொடுத்து நாணேற்றும் அர்ச்சுனன் போலே
விலைமதிக்க
முடியாத விருந்தாய் அமையச்
சொல்தெடுத்து உரைநிகழ்த்திப் பலரைக் கவர்ந்தாய்
சுடர்விளக்காய்
நெஞ்சங்கள் பலதில் ஒளியை
வல்தொடுத்து ஏற்றிவைத்தாய்! தோன்றாத் துணையாய்
வழிநடத்தி
வாழ்வழித்து உயர வைத்தாய்!
ஒல்தொடுத்து நான்பாடும் கவிதை எல்லாம்
உன்றன்செவிக்
கெட்டிடுமோ ஏற்பீர் அம்மா!
அம்மனின் திருத்தளிக்கு ராசகோ புரத்தொடு
அழகியசித்
திரத்தேரும் அணியாக் கினாயே!
செம்மையாய்க் கல்யாண மண்டபம் மட்டுமா?
தினம்பசித்தோர்
துயர்தீர்த்துச்; சீருஞ் செய்தாய்!
எம்மாதவம் ஈழச்சைவர் இயற்றி னாரோ?
இணையிலா மகளிரில்லம்
அமைத்த தாயே!
கைம்மாறாய் உனைநினைந்து கரங்கள் கூப்பிக்
காதலொடு செல்வியுனைப்
போற்று கின்றோம்!
---------------------
சிவஞானச் சுடர் பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
(வாழ்நாள் சாதனையாளர்)
No comments:
Post a Comment