களமும் புலமும் ஒரே மாதிரியாய்

 May 8, 2024


முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினைந்தாவது நினைவு கூரல் அண்மித்து வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் கடந்த பதினைந்து வருட காலத்தை திரும்பிப் பார்த்தால் அனைத்திலும், வெறுமையே மேலோங்கி யிருக்கின்றது. தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்துவதாக கூறிக்கொள் ளும் கட்சிகளால் ஒன்றுபட்டு, கருத்தொருமித்து, ஒரு அரசியல் நிலைப்பாட்டுக்காக ஒன்றுபட்டுச் செயல்பட முடியவில்லை. தாயக அரசியல் நிலைமையை ஒரு வரியில் கூறுவதனால், தமிழ்த் தேசிய கட்சிகள் என்றாவது ஒன்றுபட்டுச் செயலாற்றுமா? இந்தக் கேள்வியுடன் நாட்கள் நகர்கின்றன. புலத்தை திரும்பிப் பார்த்தால் அங்கும் இதே நிலைமைதான்.
கனேடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பை கைப்பற்றும் அணியொன்று உருவாகியிருக் கின்றது. அதே வேளை, நாடு கடந்த அரசாங்கத்துக்குள் பதவி மோதல்கள் பேசு பொருளாகியிருக்கின்றன. கடந்த பதினைந்து வருடத்துக்கு பின் னரும் கூட, புலம்பெயர் சூழலில் பதவிக்காக அடிபடுகின்றனர் என்றால் – இந்த சமூகம் உருப்படுவதற்கான வழியிருக்கின்றது என்று எவ்வாறு நம்புவது? ஜனாதிபதித் தேர்தலில், ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று எண்ணுகின்ற போது, அது சாத்தியமா என்னும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதற்குப் பின்னால் யார் இருக்கின்றனர் என்று கேள்வி கேட்கப்படுகின்றது? அவ்வாறாயின் கடந்த பதினைந்து வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் அனைத்துக்கும் பின்னால் யார் இருந்தனர்? அவைகள் எல்லாவற்றுக்கும் பின்னால் தூய நோக்கங்கள் இருந்திருக்கின்றது என்பதற்கு என்ன ஆதாரம்? தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றால் – அதனை நிரூபிப்பதற்கான முயற்சிகளை கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? அந்த அச்சத்தின் பின்னணி என்ன?
அவ்வாறாயின் தமிழ் மக்கள் ஒரு தேசிய சிறுபான்மை என்பதா எதிர்ப்பவர்களின் நிலைப்பாடு? கடந்த பதினைந்து வருடகால அரசியல் முன்னெடுப்புக்கள் எவற்றா லும் எந்தவொரு நன்மையும் தமிழ் மக்களை சேரவில்லை – ஒரு வேளை சில விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழ் அரசியல்வாதிகள் நன்மைகளை பெற்றிருக்கலாம். இந்தப் பின்புலத்தில் தோல்வியடைந்த முயற்சிகளை முன்னெடுப்பதில் என்ன பொருளுண்டு? தோல்வியடைந்த வழிமுறை களிலேயே தமிழ் மக்கள் காலத்தை செலவிட வேண்டும் என்பவர்களின் உண்மையான நோக்கம் என்ன? தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்னுமடிப்படையில் சிறீ லங்காவின் ஆட்சியாளர் சிந்திக்கவில்லை – அதிலும் தமிழர் தாயத்தின் அரசியல் பிரச்னையை – வெறுமனே, வடக்கு பிரச்னையாகவே சிங்கள ஆட்சி யாளர்கள் நோக்குகின்றனர் – அவ்வாறுதான் பேசுகின்றனர். தமிழ் மக் கள் கிழக்கிலங்கையில் இருப்பதான ஒரு கருத்துக் கூட அவர்களிடமிருந்து வருவதில்லை. இவ்வாறானதொரு நிலையில் தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும், ஒரேமாதிரியான அரசியல் உணர்வு நிலையிலும், புரிதலிலும் தான் இருக்கின்றனர் என்பதை எந்த அடிப்படையில் நிரூபிப்பது?
இவ்வாறானதொரு பின்புலத்தில் களத்தில் இயங்கும் தமிழ்த் தேசிய சக்திகளும் புலத்தில் இயங்கும் அரசியல் தரப்புக்களும் ஒரே கோட்டில் பயணித்திருக்கவேண்டும் – ஆனால் இப்போதும் அவர்கள் ஒரே நேர் கோட்டில்தான் பயணிக்கின்றனர் – அதாவது, தங்களுக்குள் பிளவுற்று மோதிக் கொள்வது, தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்வது, தாங்கள் மட்டும்தான் சரியானவர்களென்று அடம்பிடிப்பது, யதார்த்தங்களை புரிந்து கொள்ள மறுப்பது – இவை அனைத்திலும் களமும் புலமும் ஒரே மாதிரி யாகவே இருக்கின்றது. யுத்தம் முடிவுற்று பதினைந்து வருடங்களுக்குப் பின்னரும் கூட, இவ்வாறானதொரு நிலைமை இருக்கின்றதென்றால், தமிழினம் உருப்பட வழியிருக்கப் போவதில்லை.    நன்றி ஈழநாடு No comments: