மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலையம் கவி அரங்கமும், கதை கூறலும் – சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வு - பரமபுத்திரன்

 

மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலைய நிர்வாகத்தினர்  கடந்த 04/05/2024 சனிக்கிழமை சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வாக கவி அரங்கமும், கதை கூறலும் எனும் நிகழ்வினை ஒழுங்கு செய்து நடாத்தி இருந்தனர். அன்றைய நாள் மாலை நான்கு மணிக்கு மவுண்ட் றூயிட் தமிழ்க்கல்வி நிலையம் இயங்கும் கொலிற்றன் அரசுப்பள்ளி மண்டபத்தில் இந்நிகழ்வு தொடங்கியது. பள்ளியின் நிர்வாக இணை உறுப்பினர் சிங்கநாயகம் சிவசங்கர், மற்றும் ஆசிரியர் செல்வராஜி இரங்கநாதன் ஆகியோர்   மங்கள விளக்கினை ஏற்றி நிகழ்வினைத் தொடக்கி வைத்தனர். இந்நிகழ்வில் கவிபாடல், கதை கூறல் என்பவற்றுடன் தலைவர் உரை, அதிபர் உரை, கருத்துரை, நன்றியுரை என்பனவும் இடம்பெற்றன. நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். 

 


மாணவர்களின் கற்றல் மட்டுமன்றி, கற்றவற்றைப் பயிற்சியும் செய்ய வேண்டும். தமிழர் பழக்கவழக்கங்கள், கொண்டாட்ட நிகழ்வுகள்  என்பவற்றை அறியவேண்டும் என்பதற்காக பொங்கல், குடும்ப குதுகல நாள், பேச்சுப்போட்டி, வாணிவிழா, புத்தாண்டு சிறப்பு நிகழ்வு போன்ற பல நிகழ்வுகளை செய்வது மவுண்ட் றூயிட் தமிழ்  கல்வி நிலையத்தின் வழமை.  அந்தவகையில் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வும்  நடைபெற்றது. பள்ளியின் நிர்வாக உபதலைவர் கௌரீஸ்வரன் கந்தசாமி தொடக்க நிகழ்வுகளை நடத்திச் சென்றார். மங்கள விளக்கேற்றல், அதனைத்தொடர்ந்து தமிழ்மக்களின் மண்ணுக்காக உயிர் ஈந்த மக்களுக்கான  அகவணக்கம் செலுத்தி உரைகள் தொடங்கின.

 




 




பள்ளியின் நிர்வாகத்தலைவர் பேரின்பமூர்த்தி ஆறுமுகசாமி அவர்கள் முதலில் தனது தலைமை உரையினை வழங்கினார். மிகவும் சுருக்கமாக ஆனால் தெளிவாக, “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’  என்பதுபோல பரீட்சைப் பெறுபேறுகள், விருதுகள் எல்லாம் பெற்றாலும் பிள்ளைகள் சிறப்பாக தமிழ் பேசினால் மட்டுமே அவை சிறப்புப் பெறும், உங்களுக்குப் பெருமை சேர்க்கும் என்று சுட்டிக்காட்டினார். அத்துடன் மாணவர்கள் இது போன்ற நிகழ்வுகள் மூலமாக உங்கள் தமிழ் திறமைகளை காட்டவேண்டும். எதிர்காலத்தில் சிறப்பாகத் தமிழ பேசவேண்டும் என்றும், குறிப்பிட்டு, இங்கு கவிபாட வந்திருக்கும் ஆண்டு 10 மாணவர்கள் முதன்முறையாகக் கவியரங்கத்தில் பங்கு பற்றுகின்றனர். எனவே சிறப்பாக செயற்பட தனது வாழ்த்துக்களையும் கூறினார். அத்துடன் எங்கள் கல்வி நிலைய மாணவர்கள் ஏற்கனவே பட்டிமன்றங்களில் பேசுபவர்கள் என்றும் குறிப்பிட்டார். நீங்கள் சிறப்பாகத் தமிழ்  பேசினால் எதிர்காலத்தில் எங்கள் பள்ளி மாணவர்கள் தங்களை  மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தில் கல்விகற்ற மாணவர்கள் என்று பெருமையுடன் கூறலாம் என்றும் கூறி, இதனால் பள்ளியும், பள்ளியின் ஆசிரியர்களும் பெருமை பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அதிபர் உரை இடம்பெற்றது.

  

பள்ளியின் அதிபர் தேவராசா சதீஸ்கரன்  அவர்கள் அதிபர்


உரையினை ஆற்றினார். “அவைக்கு வணக்கத்தினை தெரிவித்து,   “நீரளவே ஆகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நூற்கல்வி” என்று தனது  உரையினைத் தொடக்கினார்.  மவுண்ட் கல்வி நிலையம் வகுப்பறைக் கற்றல் மட்டுமன்றி வகுப்பறைக்கு வெளியிலும் நிகழ்வுகளை செய்வது மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என்று கூறினார். இந்த வகையில் சென்ற தவணை நடைபெற்ற குடும்ப குதுகல நாளில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் பலவற்றை மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தார்கள் என்றும் சுட்டிக்காட்டினர். அத்துடன் கவிபாடி “நல்லது நடக்கட்டும், நானிலம் சிறக்கட்டும்” என்று கூறி  தனது உரையினை நிறைவு செய்தார். தொடர்ந்து கவியரங்கமும் கதை கூறலும் நிகழ்வு தொடங்கியது.  


 


ஆண்டு 10,11,12 மாணவர்கள் இணைந்து கவியரங்கமும், கதை கூறலும் நிகழ்வினை வழங்கினார்கள்.  ஆண்டு 10 மாணவர்கள் கவி பாடினார்கள் ஆண்டு 11,12 மாணவர்கள் கதைகள் கூறினார்கள்.  வந்திருந்த அனைவரையும் கவருமுகமாக கவிதை ஒன்று பாடுதல், பின்பு கதை ஒன்று கூறுதல் என்ற வகையில் நிகழ்வினை நடாத்தினர்.  கவிதைகள் யாவும் புத்தாண்டு  தொடர்பாகப் பாடப்பட்ட அதேவேளை, கதைகள் யாவும் மாணவர்களை மையப்படுத்தி சிறுவர் கதைகளாகக் கூறப்பட்டது.  கதைகள் குரங்கும் ஆமையும், முதலையும் குரங்கும், முயலும் ஆமையும், காக்கையும் கூகையும்  என்ற வகையில் அமைந்திருந்தது. இதேவேளை ஒரு மாணவி காளமேகப் புலவரின் “ககர” வரிசைப் பாடலினைக் கூறி காலம் அறிந்து வெல்லும் கதையைக் கூறினார்.  தொடர்ந்து மாணவர்களின் நிகழ்வு தொடர்பான கருத்துரை இடம்பெற்றது.


பள்ளி ஆசிரியர் சாந்தினி ஜெயதேவன் அவர்கள் மாணவர்களின்


நிகழ்வுகள் தொடர்பாகக் கருத்துரை வழங்கினார். கவிபாடிய மாணவர்கள் எம்மைக் கவர்ந்து, புத்தாண்டைக் கண்முன் நிறுத்தி கவி பாடியது நன்றாக அமைந்திருந்ததாகச் சுட்டிக்காட்டினார். இங்கு அமர்ந்திருந்த  அனைவரையும் தங்களுடன் இணைத்து, தாங்கள் பாடிய கவிகளுடன் எங்களையும் கூட்டிச் சென்றமை சிறப்பு என்பதனையும் குறிப்பிட்டார்.  இன்று முதன்முதலாகக்  கவிபாடும் மாணவர்கள் இவர்கள், ஆனால் சிறப்பாக உச்சரித்து ஏற்ற இறக்கத்துடன் கவி பாடியமை மிகவும் நன்றாக இருந்தது என்றும் தெரிவித்தார். அதேபோன்று கதைகள்  கூறிய மாணவர்கள் சிறுவர்களை மட்டுமல்ல,  பெரியோர்களையும் கவர்ந்தார்கள். கேட்பவரை ஈர்த்து நல்ல விழுமியக் கருத்துகளையும் கூறியுள்ளார்கள்.  இதன்மூலம் பேராசை பெருநட்டம், வெற்றி பெற நிதானம் பொறுமை தேவை, கெட்ட நண்பர்களை தவிர்ப்பது எப்படி, என்ற வாழ்க்கைப் பாடங்களை எடுத்துக்காட்டி எமக்கு விளக்கினார்கள். எதிர்காலத்தில் மாணவர்கள் ஆங்கிலக் கதைகளை தமிழுக்கு மாற்றிச் சொல்லவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்து மாணவர்களை வாழ்த்தி உரையாற்றி நிறைவு செய்தார்.  தொடர்ந்து நன்றியுரை இடம்பெற்றது.

 


 


பள்ளியின் நிர்வாகச் செயலாளர் சிவா சிவசங்கர் நிகழ்வுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்தார்.  

நிகழ்வின்   படப்பிடிப்பு ஜனனி நிசாகரன்.

ஒளிப்பதிவு சிவரத்தினம் சுதாகரன்.

வலையொளி இணைப்பு கார்த்திகா  சிவசங்கர்.

நிகழ்வினை முழுமையாகக் கண்டுகளிக்க:

 

https://www.youtube.com/watch?v=VJ_M6A5leoo&ab_channel=TamilschoolMTSC

https://www.youtube.com/watch?v=aCSWESk7xU8&ab_channel=SuthaSivaratnam

 



 


No comments: