அனைத்துலக பெண்கள் தினம் : பெண்கள் எழுச்சியினை அணைந்து விடாது காத்து, அடுத்த தலைமுறையினருக்கு கைமாற்றுவோம். பிரான்ஸிலிருந்து சந்திரிக்கா


இப்போது நூறு ஆண்டுகளைக் கடந்து சர்வதேச ரீதியாக ஒவ்வொரு  மார்ச் மாதமும்  08 ஆம்  திகதியில் கொண்டாடப் பட்டுவரும் "பெண்கள் தின" மானது, அதன் அர்த்த கனபரிமாணம் பற்றி அறியப்படாமலேயே, காதலர் தினம், வேறு களியாட்ட தின நிகழ்வுகள் போல கொண்டாடப்படுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல இது.

  பெண்கள் தம்மீதான சகல ஒடுக்குமுறை மற்றும்  வன்முறைகளிலிருந்து விடுபடவும், தங்கள் உடலையும் தங்கள் வாழ்க்கையையும் சுதந்திரமாக அனுபவிக்கவும், பலாத்காரமற்ற, ஆண் - பெண் பாகுபாடு இல்லாமல்


சமமாக  வாழும் உரிமையும், உடல் மற்றும் மனோ ஆரோக்கியத்தின் மிக உயர்ந்த தரத்திற்கான கல்வி கற்கும் உரிமை , சொத்துரிமை, வாக்குரிமை மற்றும் சம ஊதியத்தில் உரிமை ஆகியவற்றை பெறுவதற்காகவும், சுதந்திர உணர்வு பெற்று விழித்தெழுந்த பெண்களின் வீரம் செறிந்த தொடர் போராட்டங்களினால் உருவாகியதாகும். 

எழுத்துக்கள், வாதங்கள் என நீண்ட நெடிய இப்போராட்டத்தில் இரத்தமும் சதையுமாக தம்மை அர்ப்பணித்த பெண்களின் தியாகம் பற்றிய எந்தவித எண்ணமும், உணர்வும் இல்லாமல், வெறுமனே பரஸ்பரம் பூச்செண்டுகள் , பரிசுப் பொருட்கள் பரிமாறி வாழ்த்துகள் சொல்வதுமாக இத்தினத்தை பெரும்பான்மையானவர்கள் கொண்டாடும் நிலைதான் இன்றைய யதார்த்தம்.

 ஜேர்மன் நாட்டைச்சேர்ந்த  கிளாரா ஜெட்கின் (Clara zetkin ) எனும் மாபெரும் பெண் புரட்சியாளரை இன்று எத்தனை பெண்கள் அறிந்துள்ளார்கள் ?  எனும் கேள்வி எழுகிறது.

"சர்வதேசப் பெண்கள் தினம் " நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற யோசனையை முன்மொழிந்து அதன் ஆணிவேராக செயற்பட்டவர் கிளாரா ஜெட்கின்.

பெண்ணானவள் , மனைவியாகவோ , தாயாகவோ, பிறரைச்சார்ந்து வாழ்க்கை நடத்துபவள் என்னும் நிலைமை மாறவேண்டும் என்றார்  கிளாரா,

" தனமும் இன்பமும் வேண்டும் 
தரணியிலே பெருமை வேண்டும் 
கண் திறந்திட வேண்டும் 
பெண் விடுதலை வேண்டும் "
என்ற  மகாகவி பாரதியாரின்  கூற்றை , நூறாண்டுகளுக்கு முன்பே  கண்ட எமது  சமூகம் இன்று எந்தளவுக்கு  பெண்கள் முன்னேற்றத்தினை கண்டிருக்க வேண்டும்! ?


ஆனால்,
 ஊதிப் பெருத்த சந்தைப் பொருளாதாரத்தின் நுகர்வோராகவும், நுகர் பண்டங்களாகவும் பெண்கள் மாற்றப்பட்டு முதலாளித்துவ வெற்றிகளுக்காக அவர்கள்  பயன்படுத்தப்படுவதைத்தான் காண்கிறோம்.

 உலக அளவில் உழைக்கும் வயதிலுள்ள பெண்களில் பாதிப்பேர் மட்டுமே வேலைக்குச் செல்கின்றனர். உழைப்புக்கான உடல்தகுதி , திறன், அறிவுக்கூர்மை இருந்தும் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதற்கு என்ன காரணம்?

பல நாடுகளில் பெண்கள் கல்வி கற்கவும் , வேலை செய்யவும் சட்டரீதியான அனுமதிகள் இருந்தாலும்,  ஆணதிகார பிற்போக்கு கலாச்சார பாலின சமத்துவமற்ற நிலை அதனை அனுமதிப்பதில்லை.

  ஆப்கானிஸ்தான் இதற்கு  சிறந்த உதாரணம்!  அங்கே பெண்கள்


கல்வி மறுப்பு சட்டமாகவே உள்ளது.  நம் தேசங்களில் அது வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது.

   ஆசிய நாடுகளில்தான் பெண்கள் அனைத்திலுமாக ஒடுக்கப்படுகிறார்கள் என எண்ணிக்கொண்டிருந்தோம்.  ஆனால்,  ஐரோப்பிய  மற்றும் மேலைத் தேசங்களில் நடைபெற்ற, நடைபெறும் பெண்களுக்கெதிரான ஆணாதிக்க ஒடுக்குமுறைகளை வரலாற்றுக் காலத்திலிருந்து இன்று வரையானவற்றையும் அறியும் போது அதிர்ச்சியளிக்கிறது.

 முதலாளித்துவ ஐனநாயகம் என்பது பெண்களை விடுதலை செய்திருக்கிறது எனும் கூற்று, அதன் அர்த்தத்தில் முதலாளித்துவத்தின் 'நலன்' சார்ந்தது என்பதனை புரிந்து கொள்வதற்கு அதீத ஆராய்ச்சி தேவையில்லை.

  இதன் காரணமே மற்றெல்லா நாடுகளை விடவும் ஐரோப்பாவில்


பெண்ணெழுச்சிக்கான ஆழமான விதைகள் ஊன்றப்பட்டு போராட்டங்களாக  அவை வெடித்தன.

  1944 ஆம் ஆண்டில்தான் பிரான்சில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.  அதுவும் பெரும் போராட்டங்களுக்குப் பின்னராகத்தான்.  ஆனால்,  இலங்கையில் இதற்கு பதின் மூன்று வருடங்களுக்கு முன்னரேயே பெண்களுக்கான வாக்குரிமை கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

  பிரான்சில் பெண்களின் வாக்குரிமைக்கான போராட்டத்தின் மிகப் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர் லூயிஸ் வெயிஸ்                     ( Louise Weiss  ) எனும் பெண்மணி.

  பெண்விடுதலைக்கு ஆதாரமான இரண்டாம் பால் இனம் (The Second Sex)  எனும் மிகப் பெரும் புகழ் பெற்ற நூல்  சிமோன் தி பூவார் ( Simone de Beauvoir )   எனும் பிரெஞ்சு பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டது. 

பிரெஞ்சு மொழியில் இது வெளியாகியிருந்தாலும்,  பல ஐரோப்பிய மொழிகளில் மாற்றம் பெற்று,  இன்றும் பெண்களின் அரசியல், சமூக விடுதலைக்கான கைநூலாக விளங்குகின்றது.

 

 பிரெஞ்சு தத்துவவாதி ஜீன் போல் சாத்தர்  ( Jean-Paul Sartre )

 இவர் காலத்தவர்தான்.  இவர்கள் இருவரும் இணைந்து நிறைய


தத்துவ நடைமுறைப் போராட்டங்களை முன்னெடுத்தமை  மறக்கமுடியாத வரலாற்று நிகழ்வுகள்.  

  பெண்கள் தமது  தாயாகும் உரிமையை தாமே தீர்மானிக்க முடியாத கால கட்டமொன்று இங்கிருந்தது.  அதாவது தவறுதலாக ஏற்பட்ட ' வேண்டாத கர்ப்பமாக ' இருந்தால்,  அவர்கள் அதனை கலைத்து விடுதல் சுலபமானதாக இல்லாமல்,  அது தண்டனைக்குரிய குற்றமாகவுமிருந்தது.

 எல்லாமே ஒரு  மதத்தின் பிடியில் இருந்தது.  பிரான்சில் இதற்கெதிராக கடுமையான தொடர் போராட்டத்தை மேற்கொண்டு பெண்களின் 'கருக்கலைப்பு ' உரிமையை கடுமையான எதிர்ப்புகளுக்கும் தடைகளுக்கும் மத்தியில் விடாது போராடி தன் வாதத் திறமையால் சட்டரீதியாக அதனை நிறைவேற்றி சாதித்த பெண் போராளி சிமோன்வில் (Simon veil) என்பவர்.

 பிரான்சில் அதிகளவிலான பாடசாலைகளுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  ஆனால்,  இங்கு பிறந்து வளர்ந்து கல்விகற்கும் எமது பிள்ளைகளிடம் இவர்களைப்பற்றிக் கேட்டால்,  பெரும்பாலும்   “ தெரியாது   “ என்றே பதில்வரும்.  இது, யாழ்.  பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று  இங்குவந்த பலரிடம்  “ ரஜனி திராணகமவை  தெரியுமா ?   எனக்கேட்டபோது  “ தெரியாது  “ என அவர்கள்  சொல்லி வியக்கவைத்ததற்கு சமம்!

 தேடலில்லாத சமூகம் எப்படி தனது எல்லாவிதமான ஒடுக்கு முறைகளிலுமிருந்தும் விடுதலையைச் சாத்தியமாக்கும்?

  கட்டாயத் திருமணம்,  பால்யகாலத் திருமணம் யாவும் எதோ வளர்ச்சியடையாத நாடுகளில் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  

 ஆனால்,  அது தவறு. சில வளர்ச்சியடைந்த நாடுகளில்  சட்டரீதியாக கருக்கலைப்பு அங்கீகரிக்கப் பட்டிருந்தாலும் இன்று வரை இதனை,  மதச்சார்பானவர்கள் நேரடி எதிர்ப்பில்லாமல், உள்ளார்ந்த - மறைமுக எதிர்ப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய நேர்ந்தபோது அதிர்ச்சியடைந்தேன்.

 அண்மையில் பாரிஸில்  நடந்த எனது ஓவியக் கண்காட்சியில் பெண்ணின் 'வலி' யை உணர்த்தும் ஒரு ஓவியத்தை காட்சிப்படுத்தினேன்.  அந்த இடம் தேவாலயத்தை சார்ந்திருந்தது.  அங்கே ஒரு பிரெஞ்சுப் பெண்மணி என் அருகில் வந்து,  “ நீ  மிகவும் தைரியசாலிதான்.  இங்கு வரும் அதிகமானோர் பெண்களின் கருக்கலைப்பை இன்றும் ஏற்காதவர்களாகவே இருக்கிறார்கள்.  ஆனால்,  நீ இங்கேயே , இப்படியொரு ஓவியத்தை வரைந்து வைத்துள்ளாய்   என்றார்.  அவரது கூற்றை என்னால்  நம்பமுடியாமல் இருந்தது.

 அமெரிக்கா  கலிபோர்னியாவில் சிறு பிள்ளைத் திருமணங்கள், வலுக்கட்டாயமாக செய்யப்படுகிறது என்று செய்திகளில் இடம்பிடித்த சம்பந்தப்பட்ட பெண்களின் பதிவுகள் ஈரல்குலையையே நடுங்க வைக்கும் அளவில் இருக்கிறது.

  பெண்கள் மீதான வன்கொடுமைகள் ஆங்காங்கே கொடிகட்டிப் பறந்து கொண்டுதான் இருக்கிறது.  பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை  அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகெங்குமே வசை பாடுவதில் போட்டி போட்டு தம் வல்லமையைக் காட்டுவார்கள்.

 படித்தவர்கள் மத்தியிலும் கூட,  பெண் என்பவள் ஆண்களுக்கான தனித்தனி பாத்திரங்களாகவே தாய், சகோதரி , மனைவி என அடுப்படிக்கு, படுக்கைக்கு மாத்திரமேயான 'வார்ப்பு' களாகவே பார்க்கப்படுவதை அவதானிக்கலாம்.

  வெளிநாடுகளில் வாழும் எம் இளைஞர்கள் தமக்கு திருமணம் என்றவுடனே ஊரில் இருந்து பெண் எடுக்கவே விரும்புவர்.   “அது கற்பு'க்கு உத்தரவாதம்  “ என்பது அவர்களது கருத்து. 

தமது சாதிக்குள் பெண் வேண்டும், அதுவும் கற்போடு வேண்டும்.  திருமணம் முடித்து பெண் இங்கு வந்தால் மணமகனின் நண்பர்கள் சொல்லும் முதல் வார்த்தை,                             “ இனியென்ன  உனக்கு காப்புக்கை சாப்பாடு  “ தான் என்பது.

   இதன் ஆழக்கருத்தில் ஆண்களுக்குள் புரையோடிப்போயிருக்கும்,

 “பெண்ணானவள் சமையலறைக்கும்,
படுக்கையறைக்கும் உரியவள்   தானென்கின்ற ஆணாதிக்க பொருளினை நம்மில் படித்த ஆண்கள் கூட உணருவதில்லை.  

படித்தால் மட்டும் ஆணாதிக்க மனோபாவம் மறைந்து விடுமா என்ன? !
ஐரோப்பாவில் பாசிசத்தை தீரத்துடன் எதிர்த்து பாசிஸ்டுக்களாலேயே சுட்டுக் கொல்லலப்பட்ட ரோசா லுக்ஸம்போர்க் , இதே பாசிசக் கூறுகளை இனங்கண்டு அதைக் கேள்விக்குட்படுத்தி எழுத்தில் பதிவு செய்தமைக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியரான ரஜனி திராணகம , பல்கலைக்கழக மாணவி செல்வி போன்றோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையும் பாசிச ஆணாதிக்க வெறியன்றி வேறென்ன?

இந்து சமய தெய்வங்களில் ஏராளமானவை பெண் தெய்வங்கள்.  ஆனால்,  கோயில் மூலஸ்தானத்துள் ஆண்கள் மட்டும்தான்.  அதுவும் பிராமணர் மட்டும்தான்  நுழையமுடியும்.

 பிராமண பெண்களுக்குக்  கூட அனுமதியில்லை.  பெண் என்பவள் தீட்டானவள் என புறக்கணிக்கப்படுகிறாள்.

எனவே வருடந்தோறும் வரும் மார்ச் எட்டாம் திகதியில் வலிசுமந்து , ஒடுக்குமுறைக்குள்ளாகி உயிர் நீத்த பெண்களையும் , பெண்விடுதலையைச் சாத்தியமாக்க பெரும் எழுச்சியுடன் தெருவில் இறங்கிப் போராடியவர்களையும், பெண்களின் போராட்டத்திற்கான சட்ட, தத்துவப் போரை எழுத்தில் -  வாதத்தில் நிகழ்த்திய பெண்ணிலை வாதிகளையும் அதன் முழுஅர்த்தத்தில் நினைவு கூர்ந்து, பெண் எழுச்சியினை அணைந்து விடாது காத்து,  அடுத்த தலைமுறையினருக்கு கைமாற்றும் எமது வரலாற்றுக் கடமையினை சாத்தியப்படுத்த முயற்சிப்போம். 

 

---0---

No comments: