கவிதை உலகினிலே கந்தவனம் வாழுவார் !

 கவி மன்னனுக்கு கவிதையால் அஞ்சலி 









மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



எங்கள் கந்தவனத்தை இறைவன் அழைத்திட்டான்
தங்கமகன் கந்தவனம் தமிழ்க்கவிதை கேட்பதற்கு
நிறைவாழ்வு வாழ்ந்திட்டார் நீள்துயில் கொண்டிட்டார் 
அவரிடத்தை நிரப்புதற்கு ஆர்வருவருவார் அவனியிலே 

அன்புநெறி அணைத்தார் அதற்குத் துணையானார்
விசுவலிங்கம் நட்பை விருப்புடனே அவரேற்றார் 
சைவத்தை மனமிருத்தி சன்மார்க்க வழிநடந்தார்
தமிழ்க்கவிதை வாகனத்தில் தரணியெங்கும் வலம்வந்தார் 

ஆசானாய்ப் பணிசெய்த ஆளுமையே கந்தவனம்
ஆங்கிலமும் செந்தமிழும் அறிந்தவரே கந்தவனம் 
ஆன்மீகம் அவரகத்தில் ஆழமாய் பதிந்ததனால்
அன்புநெறி பயணித்து ஆண்டவன் அடிசேர்ந்தார் 

கட்டுரைகள் எழுதினார் கதையும் எழுதினார்
இஷ்டமுடன் நாடகத்தை எழுதியும் இயக்கினார்
வரலாறும் எழுதினார் வண்ணக் கவிபுனைந்தார்
வகைவகையாய் நூல்தந்து வானுலகம் ஏகிவிட்டார்

கந்தவனம் என்றால் கவிதைதான் முன்னிற்கும்
எந்தவொரு மேடையிலும் கந்தவனம் கவிசொல்வார் 
சந்தமுடன் தமிழ்க்கவிதை தானாக வந்துநிற்கும்
கந்தவனம் கவிகேட்க காலனுமே கவர்ந்திட்டான்  

கவிபாடும் கந்தவனம் காலமெலாம் இருப்பார்
கன்னித் தமிழென்னாலும் கட்டியே அணைத்திருக்கும்
கவிதை உலகினிலே கந்தவனம் வாழுவார் 
கண்ணீரை அவருக்குக் காணிக்கை ஆக்கிடுவோம்








    No comments: