மாகாண, தேசிய பேதங்களுக்கு அப்பால் சகல பாடசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீர்மானம்
டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி
வடமாகாண ஆளுநரை சந்தித்த அவுஸ்திரேலிய நிபுணர் குழுவினர்
வடக்கில் சுற்றுலா தளங்களை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு
சென்னை, பலாலி விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டம்
சென்னை – பலாலிக்கிடையே Indigo Air சேவை நடத்த தயார்
வெடுக்குநாறி மலை விவகாரம்: கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்க கோரி ஆர்ப்பாட்ட பேரணி
மாகாண, தேசிய பேதங்களுக்கு அப்பால் சகல பாடசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீர்மானம்
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரைவில் நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு
பாராளுமன்றின்
அனுமதியுடன்
முன்னெடுக்கப்படும்
நடவடிக்கையால் அமைச்சர் மாறினாலும் கல்விக்
கொள்கைகளில் மாற்றம்
ஏற்படாது.
அத்துடன் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், கல்வி மறுசீரமைப்பு கொள்கை வரைவில் தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளை ஒரே விதமாக கொண்டு வருவது தொடர்பில் யோசனைகள் காணப்படுகின்றன. பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான தெரிவுக்குழுவில் இது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது. இதனை ஒரே தடவையில் மேற்கொள்வது கடினம். எனினும், படிப்படியாக கட்டம், கட்டமாக இதனை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் போது, கற்பிக்க முடியாது என்று எவரும் கூறமுடியாது. அவ்வாறு தெரிவித்தால் எதிர்பார்க்கும் பெறுபேறுகளை அடைய முடியாது.
அந்த வகையில் ஆசிரியர்களுக்கான அறிவைப் பெருக்கும் வகையில் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அனைத்து கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.
பல்வேறு நாடுகளிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கல்வி மறுசீரமைப்பின் மூலம் காலத்துக்குப் பொருத்தமான மாற்றங்கள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் அனுமதியுடனேயே இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறானால் அமைச்சர் மாறினாலும் கல்விக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். லோரன்ஸ் செல்வநாயகம் நன்றி தினகரன்
டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி
வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு அமைக்கப்பட வேண்டுமென, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்,எட்டுப் பேரை கைது செய்தனர்.தொல் பொருட்கள் சின்னங்களை சேதப்படுத்தியதாக இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
வடமாகாண ஆளுநரை சந்தித்த அவுஸ்திரேலிய நிபுணர் குழுவினர்
வடக்கு மாகாண மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக அம்மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர் கலந்துரையாடினர்.
சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட கள ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினரே நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (12) வடமாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.
வடமாகாண மக்களின் தற்போதைய வாழ்வியல் செயற்பாடுகள், பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு வசதிகள், சமுத்திர பாதுகாப்பு, கடற்றொழில் செயற்பாடுகள், கண்ணிவெடி அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநருடன் அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர் விரிவாக கலந்துரையாடினர். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறையின் முதலாம் நிலை செயலாளரின் தலைமையில் இந்த நிபுணர்கள் குழுவினர் ஆளுநரை சந்தித்துள்ளனர். யாழ். விசேட நிருபர் நன்றி தினகரன்
வடக்கில் சுற்றுலா தளங்களை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு
வடக்கு ஆளுநருடன் இந்திய குழுவினர் கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே உள்ளிட்ட குழுவினருக்கும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த விடயங்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநரை இந்தக் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல், சென்னையிலிருந்து பலாலிக்கு விமான சேவைகளை அதிகரித்தல், யாழ். காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் சார்ள்ஸுடன் இந்தக் குழுவினர் கலந்துரையாடினர்.
இவை தவிர, இயற்கைச் சக்தி வளங்களை பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் வடமாகாண ஆளுநருடன் இந்தக் குழுவினர் கலந்துரையாடினர். யாழ். விசேட நிருபர் நன்றி தினகரன்
சென்னை, பலாலி விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டம்
சென்னை, பலாலிக்கிடையிலான விமான சேவையை அதிகரிப்பது உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்திய அதிகாரிகள் இது குறித்து வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடினர்.ஆளுநரின் செயலகத்தில் இவர்கள் சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிய வருகிறது.
வட மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில்,இவர்கள் கவனம் செலுத்தினர்.
இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே உள்ளிட்ட குழுவினர்,இதன் சாத்தியங்கள் பற்றி வட மாகாண ஆளுநருடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டார்.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல் மற்றும் காங்கேசன்துறை தூத்துக்குடிக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது. நன்றி தினகரன்
சென்னை – பலாலிக்கிடையே Indigo Air சேவை நடத்த தயார்
இந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் புதிய விமான சேவையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்திடம் Indigo Airlines எனும் இந்திய விமான நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
தற்போது இந்தியாவில் உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்கி வரும் Indigo Airlines, இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்தவுடன் சென்னைக்கும் யாழ்ப்பாணத்தின் பலாலிக்கும் இடையே பல ஆய்வு மற்றும் பைலட் விமானங்களை நடத்தவும் நம்புகிறது.
இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட Indigo Airlines விமான நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினர், இலங்கை வந்து அதற்கான அனுமதியை கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை தற்போது யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையேயான விமான சேவைகளை Alliance Air வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
வெடுக்குநாறி மலை விவகாரம்: கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்க கோரி ஆர்ப்பாட்ட பேரணி
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்க கோரியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியா, நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டம் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
நெடுங்கேணி நகர சந்தியில் ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணி, நெடுங்கேணி – புளியங்குளம் வீதி ஊடாக சென்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், உதவிப் பிரதேச செயலாளரிடம் கண்டன மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வனவளத் திணைக்கள அலுவலக வாயிலில் நின்று வனவளத் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், பின்னர் அங்கிருந்து சென்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது பொலிஸ் உயர் அதிகாரிகள் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரருடன் பேச முற்பட்ட போதும், அதற்கு மறுப்பு தெரிவித்து பொலிஸாருக்கு எதிரான கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.
இதன்போது அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பொலிஸ் நிலையம் முன்பாக சுமார் அரை மணிநேரம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்கள் பின்னர் அங்கிருந்து சென்று பஸ் நிலையத்தில் கண்டன ஆர்பாட்டத்தை நிறைவு செய்தனர்.
வவுனியா விசேட நிருபர் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment