சிறிலங்கா அரசும் அதன் இராணுவ, போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள், நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள், இடையூறுகள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
கடந்த வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஆலய பூசகரின் கைதும் பக்தர்களின் கைதும் கண்டனத்துக்கு உரியதுடன் இவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் விக்கிரகங்கள் மீள கையளிக்கப்பட்டு அவற்றினை அபகரித்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டிய அரச நிர்வாகம் அதற்கு மாறாக பல்லாண்டு காலமாக வழிபட்டு வரும் தமிழ் மக்களின் மீது அரச படைகளை ஏவி விட்டு அச்சுறுத்த முனைகின்றது. அடக்குமுறைகள்தான் எம் மக்களை போராட நிர்ப்பந்தித்தது என்ற யதார்த்தத்தை சிங்கள தேசம் புறக்கணித்தபடியால்தான் இன்று அது கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறன கைதுகளும், தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளை தடுத்து வழிபாட்டு தளங்களை அபகரிப்பதும், தொல்லியல் திணைக்களம் போன்ற அரச இயந்திரத்தின் அங்கங்களை ஏவி விடுவதும், தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து துண்டம் துண்டமாக்கி அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தொடர்ச்சியான நிலப் பரப்பினை கொண்ட தமிழர் தாயகம் என்ற எம் உரிமை கோரிக்கையை சிதைப்பது சிறிலங்கா அரசின் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பின் திட்டமிட்ட மூலோபாயம் ஆகும்.
நல்லிணக்கம் பற்றிக் கூறி கொள்ளும் ரணில் அரசு, இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது இலங்கை தீவில் நிலையான அமைதி, ஸ்திரத் தன்மை, வளர்ச்சி ஒரு போதும் சாத்தியப்படாது என்பதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சர்வதேச தளத்தில் பன்முனைப்பட்ட
முடிவெடுக்கும் சக்திகளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்பதனை தோழமையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த பல வருடங்களாக தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் இவ்வாறான இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் சர்வதேச சமூகத்திடமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையிலும் எடுத்துரைத்து வருவது போன்று இப்பொழுது இடம்பெறும் ஐ.நா.மனித உரிமைக்கழக (UNHRC) மார்ச் மாதக் கூட்டத் தொடரிலும் தகமை வாய்ந்த முடிவெடுக்கும் மையங்களுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் பதிவு செய்யப்படும்.
இவ்வாறான தொடரும் நில ஆக்கிரமிப்பு, சமூக பொருளாதார அடிப்படைகளில் தமிழர் தேசத்தினை சிதைத்து பலவீனப்படுத்தல், தங்குநிலையில் வைத்திருத்தல், தாயகத்தில் தமிழ் மக்கள் வாழ முடியாத சூழ்நிலைகளை உருவாக்கி அவர்களை மண்ணிலிருந்து வெளியேற்றுவது, தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதும் செயலிழக்கச் செய்வதுமான செயல்பாடுகளை இடைநிறுத்தி தம்மை தாமே நிர்வகிக்கக் கூடிய இடைக்கால நிர்வாகப் பொறிமுறை ஒன்றினை உடனடியாக உருவாக்குமாறு இந்தியா உட்பட சர்வதேச தளப் பரப்பில் முக்கிய உறுப்பு நாடுகளிடம் எமது இக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
Best Wishes
S. Sangeeth
BTF Media Contact
No comments:
Post a Comment