கட்டுரை - வெடுக்குநாறி

 March 17, 2024


வெடுக்குநாறி மலை சிவன் ஆலய விவகாரம் தமிழ் சூழலின் அரசியலை சூடாக்கியிருக்கின்றது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ்தேசிய மக்கள் முன்னணி) வெடுக்கு நாறி விவகாரத்தை முன்வைத்து, அதன் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்துவருகின்றது. ஏனைய கட்சி களோ, ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவித்திருக்கின்றன.
இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் நாங்கள் ஒன்றிணைந்து ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தி, எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் நிர்ப்பந்தம் உருவாகுமென்று, ஜனாதிபதியிடம் வலியுறுத்தும் துணிவு தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு இருந்தால் அது வரவேற்கத்தக்கது – ஆனால், நமது தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் இதனை எதிர்பார்கலாமா?
ஆனால், இதற்கு முன்னரும், இந்து ஆலயங்கள் தொடர்பிலும், புத்த விகாரைகள் தொடர்பிலும் சில சர்ச்சைகள் எழுந்திருந்தன. அவற்றை முன்னிறுத்தியும் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு ஊர்வலங்களும் இடம்பெற்றிருந்தன.
அந்த பிரச்னைகள் தீர்ந்துவிட்டனவா அல்லது ஒவ்வொரு புதிய பிரச்னை வருகின்ற போதும், முன்னைய பிரச்னைகள் கைவிடப்படுகின்றனவா? குருந்தூர் மலை பிரச்னைக்கு என்ன நடந்தது? மயிலிட்டி பிரச்னைக்கு என்ன நடந்தது? இவைகள் தொடர்பில் எல்லாம் ஏராளம் பேசப்பட்டது.
முன்னணி எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் கைவிடப்பட்டுவிட்டது.
திருகோணமலை கன்னியா வெந்நீருற்று விவகாரத்திலும் எதிர்ப்புகள் காண்பிக்கப்பட்டன – விடப்போவதில்லை என்று வீரவசனங்கள் பேசப்பட்டன – ஆனால்,
இறுதியில் இருந்ததும் இல்லாமல் போன கதையானது. ஒரு சிறிய நிலத்துண்டு மட்டுமே, கன்னியா வெந்நீர் ஊற்றில் இந்துக்கள் வசமிருக்கின்றது.
இப்போது வெடுக்குநாறி விவகாரத்தை முன்வைத்து, கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படும் வரையில் போராட்டங்கள் தொடருமென்று சத்தம் போடப்படுகின்றது.
பிறிதொரு பிரச்னை வருகின்ற போது, வெடுக்குநாறியும் காலப்போக்கில் காணாமால் போய்விடும். கடந்த பதின்நான்கு வருடங்களாக, தமிழர்களின்எதிர்ப்பு அரசியல் இந்த அடிப்படையில்தான் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால் இவ்வாறான எதிர்ப்பினால் எதனையாவது தடுத்து நிறுத்த முடிந்ததா என்றால் – பதில் பூச்சியம்.
இந்த விடயத்தை ஓர் இலங்கை தழுவிய இந்துக்களின் பிரச்னையாக கையாளுமாறு நாம் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றோம். முதலில், வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து, முஸ்லிம் சமூகத்தின் பிரச்னைகள் தொடர்பில் பேசியிருந்தனர் ஆனால், அவர்கள் அனைத்து முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளாக இருந்தனர். முஸ்லிம்களின் பிரச்னை என்று வருகின்ற போது, கட்சிகளை கடந்து சிந்திக்கின்றனர்.
அவ்வாறான அணுகுமுறையே தமிழ் மக்களுக்கும் தேவை. இதனை வெறும் தமிழ் தேசிய எல்லைக்குள் மட்டும் சுருக்கக் கூடாது. – ஏனெனில் நாமோ, தமிழ் தேசியம் மதம் கடந்தது என்று விளக்கமளிப்பவர்கள்.
எனவே மதம் சார்ந்த ஒரு பிரச்னையை கையாளுகின்றபோது, எதற்காக நாம் தமிழ் தேசிய போர்வையை போர்த்திக் கொள்ள முயற்சிக்கின்றோம்.
இந்து மக்களின் பிரச்னை தொடர்பில் பேசுகின்றவர்கள், மதத் தலைவர்கள், ஆதீனங்கள் டக்ளஸ் தேவானந்தா தொடக்கம் சிவநேசதுரை சந்திரகாந்தன் வரையில் அணுக வேண்டும்.
இந்தப் பிரச்னையில் அவர்களது ஆதவை கோர வேண்டும். ஏனெனில் இது அனைவருக்குமான பிரச்னை. இதற்குமப்பால், மலையக தலைவர்களது
ஆதரவை கோர வேண்டும்.
இதனை தேசியரீதியிலான மத சுதந்திரம் தொடர்பான பிரச்னையாக மாற்ற வேண்டும். அப்போதுதான், பௌத்த
மதபீடங்களும் இந்த விடயத்தில் சாதகமாக சிந்திக்கும் நிலைக்கு
வரும்.   நன்றி ஈழநாடு 

No comments: