உலகச் செய்திகள்

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்–பைடனின் போட்டி உறுதி

மாலைதீவில் இந்தியாவின் ‘வெளியேற்றம்’ ஆரம்பம்

காசா உயிரிழப்பு 31,000 ஐ கடந்ததுத் பேச்சுவார்த்தை இழுபறியுடன் நீடிப்பு

காசாவில் போர் நிறுத்தம் இன்றி ரமழான் ஆரம்பம்

ஏழு ஒஸ்கார்களை அள்ளிய ‘ஓபன்ஹைமர்’ திரைப்படம்

காசாவில் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீதான இஸ்ரேலின் மற்றொரு தாக்குதலில் 25 பேர் பலி



அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்–பைடனின் போட்டி உறுதி

March 14, 2024 8:07 am 

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது முன்னாள் போட்டியாளரான டொனால்ட் டிரம்ப் வென்றுள்ளனர்.

நான்கு மாநிலங்கள், அமெரிக்க நிலப்பகுதி ஒன்று மற்றும் வெளிநாட்டில் வாழும் ஜனநாயக கட்சியினர் நேற்று முன்தினம் (12) வாக்களித்த முன்னோடித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியீட்டியுள்ளார்.

இதன்போது பைடன் தமக்குத் தேவையான 1,968 பேராளர்களைப் பெற்றுவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. சில மணி நேரத்துக்குப் பின் டிரம்ப் அவருக்குத் தேவையான 1,215 பேராளர் எண்ணிக்கையை அடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களுமே இம்முறை தேர்தலிலும் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்த கோடை காலத்தில் இடம்பெறவுள்ள கட்சி மாநாடுகளில் இருவரும் வேட்பாளராக போட்டியிடுவது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் 70 ஆண்டுகளில் முதல் முறையாகவே முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தை வென்ற பின் பைடன் அறிக்கை வெளியிட்டார். அதில், டிரம்ப்பின் பிரசாரங்கள், வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் கொண்டவை என்றும் அவை அமெரிக்காவின் அடித்தளத்தையே மிரட்டக்கூடியவை என்றும் குறைகூறினார்.

வேட்பாளர்கள் உறுதியாகிவிட்டதால் மிக நீண்டகாலத் தேர்தல் பிரசாரமாக இது அமையப் போகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.   நன்றி தினகரன் 




மாலைதீவில் இந்தியாவின் ‘வெளியேற்றம்’ ஆரம்பம்

March 13, 2024 1:02 pm 

மாலைதீவில் இருந்து முதல் கட்டமாக 25 இந்திய துருப்புகள் வெளியேறியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்து பவழத்தீவில் நிலைநிறுத்தப்பட்ட 25 இந்திய துருப்புகள் கடந்த மார்ச் 10 ஆம் திகதி வெளியேறியதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டின் மிஹாரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டெம்பரில் பதவிக்கு வந்த ஜனாதிபதி முஹமது முயிசு, மாலைதீவில் நிலைகொண்டிருக்கும் இந்திய துருப்புகளை வெளியேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பில் இந்தியாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மாலைதீவில் இருக்கும் 89 இந்திய துருப்புகள் மற்றும் உதவிப் பணியாளர்களை மே 10 ஆம் திகதிக்கு மீளப்பெறுவதற்கு இந்தியா இணங்கியது.

இந்தியா தனது வெளியேற்றத்திற்கு தயாராகி வரும் நிலையில் மாலைதீவு கடந்த வாரம் சீனாவுடன் இராணுவ உதவி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

முயிசு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியது தொடக்கம் இந்தியா மற்றும் மாலைதீவுக்கு இடையே முறுகல் நீடித்து வருகிறது.   நன்றி தினகரன் 

 



காசா உயிரிழப்பு 31,000 ஐ கடந்ததுத் பேச்சுவார்த்தை இழுபறியுடன் நீடிப்பு

- காசாவில் தற்காலிக துறைமுகம் அமைக்க அமெரிக்க கப்பல் பயணம்

March 11, 2024 8:51 am 

காசாவில் 156 ஆவது நாளாகவும் நேற்றும் (10) இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில் அங்கு உயிரிழப்பு 31 ஆயிரத்தை தாண்டியுள்ளதோடு போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சிகளும் இழுபறியுடன் நீடித்து வருகிறது.

அங்கு மனிதாபிமான நெருக்கடியும் மோசமடைந்திருக்கும் சூழலில் காசா காசா கரையில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான உபகரணங்களை ஏற்றிய அமெரிக்க இராணுவ கப்பல் ஒன்று மத்திய கிழக்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.உதவிக் கப்பலான ஜெனரல் பிரான்க் எஸ். பெசோன், விர்ஜினிய மாநிலத்தில் உள்ள இராணுவத் தளம் ஒன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை பயணத்தை ஆரம்பித்துள்ளது. காசாவுக்கு கடல் வழியாக உதவிகளை விநியோகிக்க மிதக்கும் துறைமுகம் ஒன்றை கட்டப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்த நிலையிலேயே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அங்கு பஞ்சம் ஒன்று ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது என்று ஐ.நா எச்சரித்துள்ளது. இதில் உதவிகள் செல்லாது அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு காசாவில் பச்சிளம் குழந்தை ஒன்றும் இளம் பெண் ஒருவரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்திருக்கும் நிலையில் அங்கு பட்டினிச்சாவு 25 ஆக உயர்ந்துள்ளது.

காசாவுக்கு தரைவழியாக உதவிகள் செல்வதை இஸ்ரேல் தடுத்து வரும் சூழலில் இந்தப் பகுதிக்கு தரை மற்றும் வான் வழியாக உதவிகளை விநியோகிப்பது அபாயகரமாக மாறியுள்ளது. உதவி வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கொள்ளைகள் இடம்பெற்ற நிலையில் உலக உணவுத் திட்டம் உதவி விநியோகத்தை நிறுத்தியுள்ளது. வானில் இருந்து போட்ட உதவிகளில் பாராசூட் சரியாக இயங்காத நிலையில் உதவிப் போதிகள் மேலே விழுந்து கடந்த வெள்ளிக்கிழமை ஐந்து பேர் உயிரிழந்ததாக காசாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 1,000 அமெரிக்கத் துருப்புகளின் உதவியோடு காசாவில் தற்காலிக முகாம் ஒன்றை கட்டுவதற்கு 60 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்றும் காசா கரைக்கு அந்தத் துருப்புகள் கால் வைக்காது என்றும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.

எனினும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்கு அத்தனை காலம் காத்திருக்க முடியாது என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேநேரம் சுமார் 200 தொன் உதவிகளை ஏற்றிய கப்பல் ஒன்று சைப்ரஸ் துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க அனுமதிக்காக காத்துள்ளது. கடல்வழியாக காசாவுக்கு உதவிகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அறிவிப்பை அடுத்து தயார்படுத்தப்பட்ட இந்தக் கப்பல் இன்று (11) பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெயின் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இந்தக் கப்பலில் அமெரிக்க தொண்டு நிறுவனம் வழங்கிய உதவிகள் அடங்குகின்றன. எனினும் அமெரிக்காவின் தற்காலிக துறைமுகம் இன்னும் தயாராகாத சூழலில் இந்த கப்பல் துறைமுகம் ஒன்று இல்லாத காசாவில் எவ்வாறு கரையொதுங்கும் என்ற கேள்வி நீடித்து வருகிறது.

தொடர்ந்து நம்பிக்கை

மறுபுறம் முஸ்லிம்களின் ரமழான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகள் சாத்தியமில்லாத நிலையை எட்டி இருக்கும் சூழலில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தது. மொசாட் தலைவர் டேவிட் பார்னி கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸை சந்தித்திருந்தார். இந்நிலையில் பர்ன்ஸ் தொடர்ந்தும் பிராந்தியத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டுள்ளார்.

‘இடைவெளிகளை குறைத்து உடன்படிக்கைகளை எட்டும் முயற்சியாக மத்தியஸ்தர்களுடன் எப்போதும் தொடர்புகொண்டு மற்றும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறோம்’ என்று மொசாட் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் வார இறுதி பேச்சுவார்த்தைக்காக மீண்டும் ஒரு முறை தமது குழுவின் பிரதிநிதிகள் கெய்ரோ செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்று ஹமாஸ் வட்டாரம் ஒன்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஜனவரி தொடக்கம் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கின்றன. கடைசியாக கடந்த நவம்பரில் ஒரு வார போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோது ஹமாஸ் பிடியில் இருந்த 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதோடு இஸ்ரேல் சிறையில் இருக்கும் அதன் மூன்று மடங்கான பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்திருந்தது.

எனினும் போரை முடிவுக்குக் கொண்டவருவது அல்லது காசாவில் இருந்து தமது துருப்புகளை வாபஸ் பெறும் உத்தரவாதத்தை வழங்க இஸ்ரேல் மறுத்து வருவதாக ஹமாஸ் குற்றம்சாட்டுகிறது.

மறுபுறம் ரமழானில் பிராந்தியத்தில் வன்முறையை தூண்டுவதற்கு ஹமாஸ் முயற்சிப்பதாக மொசாட் குற்றம்சாட்டியுள்ளது. ஹமாஸை தோற்கடித்தால் மாத்திரமே போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து வரும் பைடன் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த சனிக்கிழமை அளித்த பேட்டியில், ரமழானுக்கு முன் உடன்படிக்கை ஒன்றை எட்டுவது இன்னும் சாத்தியம் என்று கூறியபோதும் அது எவ்வாறு என்பதை குறிப்பிடவில்லை.

இதில் காசாவில் தொடரும் சண்டையில் இஸ்ரேலியப் பிரதமரின் அணுகுமுறையை பைடன் சாடியுள்ளார். ‘இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு இஸ்ரேலுக்கு உதவவில்லை… இஸ்ரேலை காயப்படுத்துகிறார்,’ என்றார்.

இஸ்ரேலைத் தற்காக்கும் உரிமை நெதன்யாகுவுக்கு இருந்தாலும் ஹமாஸுக்கு எதிரான சண்டையில் அப்பாவிகள் உயிரிழப்பதை அவர் கருத்தில் கொள்ளவேண்டும் என்று பைடன் கூறினார். என்றாலும் இஸ்ரேலை தொடர்ந்தும் அமெரிக்கா தற்காக்கும் என்றும் பைடன் அந்தப் பேட்டியில் வலியுறுத்தினார். இந்த பேட்டியின்போது முரண்பாடான கருத்துகளை வெளியிட்ட பைடன், காசாவின் தெற்கு நகரான ரபா மீது இஸ்ரேல் படையெடுத்தால் அது நெதன்யாவுக்கான ‘சிவப்பு எச்சரிக்கையாக இருக்கும்’ என்று குறிப்பிட்டபோது, உடன் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். இங்கு சிவப்பு எச்சரிக்கைகள் இல்லை என்றும் இஸ்ரேலை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்றும் கூறினார்.

இந்நிலையில் ரமழான் மாதத்தை ஒட்டி ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே வெளியிட்ட அறிவிப்பில், பலஸ்தீனர்கள் தமது சுதந்திரத்தை மீட்கும் வரை தொடந்து போராடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் கடந்த சனிக்கிழமையும் அரச எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன. சில ஆர்ப்பட்டக்காரர்கள் நெடுஞ்சாலை ஒன்றை மறித்த நிலையில் பொலிஸாரால் அவர்கள் அகற்றப்பட்டனர். காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நடத்திய பேரணி ஒன்றும் அங்கு இடம்பெற்றது. பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரியே அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

‘வலியும் கோபமம் எனது இரத்தத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது’ என்று காசாவில் இருந்து கடந்த நவம்பரில் விடுவிக்கப்பட்ட பதின்ம வயதான அகம் கோல்ட்ஸ்டைன் குறிப்பிட்டார்.

தொடரும் படுகொலைகள்

கடந்த ஆறு மாதங்களாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போர்து 31,045 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 72,654 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் கொல்லப்பட்ட சுமார் 72 வீதமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

‘கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் காசா பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு எதிராக நிகழ்த்திய ஏழு பழுகொலை சம்பவங்களில் 85 பேர் உயிர்த் தியாகம் செய்திருப்பதோடு 130 பேர் காயமடைந்துள்ளனர்’ என்று சுகாதார அமைச்சு டெலிகிராம் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டது.

இந்த உயிரிழப்புகளில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த 25 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதில் நுஸைரத் அகதி முகாமில் உள்ள இடம்பெயர்ந்தவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 13 பெண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஸீனா என்ற ஐந்து மாத பெண் குழந்தையும் ஒமர் என்ற ஆறு வயது சிறுவனும் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா போர் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் தெற்கு லெபனானில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் சனிக்கிழமை இரவு நடத்திய வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தின் ஐவர் கொல்லப்பட்டு மேலும் ஒன்பது பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 





காசாவில் போர் நிறுத்தம் இன்றி ரமழான் ஆரம்பம்

தொடரும் தாக்குதலில் மேலும் 67 பேர் பலி

March 12, 2024 8:49 am 

போர் நிறுத்த முயற்சிகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் முற்றுகைக்கு மத்தியில் காசாவில் நேற்று (11) புனித ரமழான் ஆரம்பமானதோடு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே இம்முறை நோன்பு ஆரம்பமாகியுள்ளது.

ரமழான் மாதத்திற்கு முன்னர் ஆறு வாரங்கள் கொண்ட போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சிகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் முன்னெடுக்கப்பட்டபோதும் அவை வெற்றி அளிக்கவில்லை. இதற்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ரமழானுக்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்; தொடர்ந்து நீடித்தது. காசா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். அபூ ஷமலாவுக்கு சொந்தமான வீட்டின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் பெண்களே கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

மறுபுறம் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா நகரில் இடம்பெற்ற இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் மேலும் மூவர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு காசா நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்ட அஷூர் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டில் இருந்து சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 67 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 106 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 31,112 ஆக அதிகரித்திப்பதோடு மேலும் 72,760 பேர் காயமடைந்துள்ளனர்.

‘ஐந்து மாதமாக நோன்பு’

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் கடுமையான கெடுபிடிக்கு மத்தியிலும் காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் பட்டினிக்கு மத்தியிலும் பலஸ்தீனர்கள் நேற்று புனித ரமழான் மாதத்தை ஆரம்பித்தனர்.

ஜெரூசலத்தில் உள்ள பழைய நகரின் குறுகலான வீதிகளில் ஆயிரக்கணக்கான பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான அல் அக்ஸா பள்ளிவாசலில் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்தப் பள்ளிவாசலுக்கு ரமழான் மாதத்தில் கட்டுப்பாடு விதிப்பது பற்றி எச்சரித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு அளவு எண்ணிக்கையான வழிபாட்டாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார்.

‘இது எமது பள்ளிவாசல் என்பதோடு நாம் அதனை பாதுகாக்க வேண்டும்’ என்று ஜெரூசலம் வக்ப் சபை பணிப்பாளர் நாயகம் அஸாத் அல் காதிப் தெரிவித்தார். ‘அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பெரும் எண்ணிக்கையானவர்கள் நுழைய முடியுமாக இந்த பள்ளிவாசலில் முஸ்லிம்களின் இருப்பை நாம் பாதுகாக்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கமான ரமழானை வரவேற்பதற்கு பழைய நகரில் அலங்காரங்கள் செய்யப்படுகின்றபோதும் இம்முறை அவை காணப்படவில்லை. காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படைகள் அல்லது குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் சுமார் 400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையானவர்கள் தெற்கு நகரான ரபாவின் பிளாஸ்டிக் கூடாரங்களில் சுருக்கப்பட்டு உணவுப் பற்றாக்குறை மற்றும் பட்டினிக்கு மத்தியிலேயே இம்முறை ரமழான் ஆரம்பமாகியுள்ளது.

‘நாம் ஐந்து மாதங்களாக நோன்பு இருப்பதால் ரமழானை வரவேற்பதற்கு எந்த தயார்படுத்தலையும் செய்யவில்லை’ என்று ஐந்து வயது குழந்தையின் தாயான மாஹா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இங்கே உணவு இல்லை, சில பொதியிடப்பட்ட உணவுகளே இருப்பதோடு அரிசி மற்றும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் நம்ப முடியாத அதிக விலையில் விற்கப்படுகின்றன’ என்று ரபாவில் இருந்து சாட் செயலி வழியாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அவர் தெரிவித்தார்.

இம்முறை ரமழான் மாதம் வலி நிறைந்த தருணத்தில் வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது ரமழான் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொடூரமான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், பாதுகாப்பான மனிதாபிமான மற்றும் நிவாரண வழித்தடங்களை நிறுவுவதும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும் என்று சவூதி அரேபிய மன்னர் சல்மான் வெளியிட்ட ரமழான் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா தலைவர் தனது ரமழான் செய்தியில், காசாவில் பயங்கரத்தை சந்தித்துள்ள அனைவருக்கு ஆதரவு மற்றும் ஒருமைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் காசாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிய கப்பல் ஒன்று புறப்படுவதற்கு தயாராக தொடர்ந்து சைப்ரஸில் காத்துள்ளது. ஓபன் ஆம்ஸ் என்ற இந்தக் கப்பல் அதே பெயருடைய ஸ்பெயின் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

200 தொன் உணவுப் பொருட்களை ஏற்றிய இந்தக் கப்பல் புறப்பட்டு இரண்டு நாட்களில் காசாவில் குறிப்பிடப்படாத கடற்கரை பகுதியை அடைய திட்டமிட்டுள்ளது. மறுபுறம் உதவி விநியோகத்திற்காக காசா காரையில் தற்காலி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான பணியை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

காசாவில் பட்டினிச்சாவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அங்கு பஞ்சம் ஒன்று ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தப் பேச்சு

ரமழான் மாதத்தை அமைதியாக கழிப்பது மற்றும் காசாவில் தொடர்ந்து பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவித்து அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் இருந்து பலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை எட்டும் பேச்சுவார்த்தை முன்னேற்றம் இன்றி ஸ்தம்பித்துள்ளது.

மேலும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டபோதும் அதற்கான திகதி மற்றும் விபரங்கள் வெளியாகவில்லை.

தற்போது கட்டாரில் வசித்து வரும் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே வெளியிட்ட தொலைக்காட்சி உரை ஒன்றில் கூறியிருப்பதாவது, ‘உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியாததற்கான பொறுப்பு ஆக்கிரமிப்பாளர் (இஸ்ரேல்) உடையது என்பதை நான் தெளிவாகக் கூறிகொள்கிறேன். எவ்வாறாயினும் நாம் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்வோம்’ என்றார்.

இந்நிலையில் ரமழானின் முதல் பாதியில், குறிப்பாக முதல் பத்து நாட்களுக்குள் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு இராஜதந்திர அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்த பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.   நன்றி தினகரன் 





ஏழு ஒஸ்கார்களை அள்ளிய ‘ஓபன்ஹைமர்’ திரைப்படம்

March 12, 2024 8:12 am 

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருது விழாவில் ‘ஓபன்ஹைமர்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஒஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ரொபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிபர் லெம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வென்றுள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்தப் படம் இந்த ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகளில் மொத்தம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஓபன்ஹைமர் படம் ஏழு பிரிவுகளிலும், மற்ற படங்கள் ஆறு பிரிவுகளிலும் விருதுகளை வென்றன.

இதற்கு முன்னர் ஒஸ்கார் விருதுகளில் கிறிஸ்டோபர் நோலன் 8 முறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், இப்போதுதான் முதல் முறையாக சிறந்த இயக்குனருக்கான விருதையும், சிறந்த படத்திற்கான விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், சிறந்த நடிகைக்கான தனது இரண்டாவது ஒஸ்கார் விருதைப் எம்மா ஸ்டோன் ‘புவர் திங்ஸ்’ திரைப்படத்தின் மூலம் வென்றார்.   நன்றி தினகரன் 




காசாவில் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீதான இஸ்ரேலின் மற்றொரு தாக்குதலில் 25 பேர் பலி

March 16, 2024 9:16 am 0 comment

போர் நிறுத்தத்திற்கு புதிய முன்மொழிவை சமர்ப்பித்தது ஹமாஸ்

காசா நகரில் உதவிக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கானவர்கள் மீது இஸ்ரேலிய துருப்புகள் மீண்டும் ஒருமுறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 25 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் போர் தொடரும் நிலையில் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தம் ஒன்றுக்கான புதிய முன்மொழிவை மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பித்துள்ளது.

காசா நகரில் குவைட் சுற்றுவட்டப்பாதையில் உதவிப் பொருட்களுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த வேளையிலேயே கடந்த வியாழக்கிழமை (14) மாலை இஸ்ரேலிய துருப்புகள் அவர்களின் மீது நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதே பகுதியில் சில மணி நேரங்களுக்கு முன்னரும் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்ட நிலையிலேயே புதிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதனை ‘முன் திட்டமிடப்பட்ட படுகொலை’ என்று காசா சுகாதார அமைச்சு வர்ணித்துள்ளது.

காசாவில் உதவிகள் செல்வதை முடக்கி இருக்கும் இஸ்ரேல், அங்கு உணவுக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.

உணவு லொறியின் வருகைக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய படைகள் ஹெலிகொப்டர்கள், டாங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கூட்டத்தின் மீது நேரடியாக சூடு நடத்தியதாக கூறுவதை இஸ்ரேலிய இராணுவம் மறுத்துள்ளது.

‘மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கும் இடம் ஒன்றில் வியாழக்கிழமை மாலை பல டஜன் காசா மக்கள் இலக்கு வைக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி சரியானதல்ல’ என்று அரபு ஊடகத்திற்கான இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் அவிசாய் அட்ராயி, எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவிசாய் கூறியுள்ளார்.

காசா நகரில் குவைட் சுற்றுவட்டப்பாதையில் மக்கள் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்காகி இருப்பாக வடக்கு காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளரான முஹமது குராப் குறிப்பிட்டுள்ளார்.

உணவு லொறி ஒன்றுக்காக காத்திருந்த மக்கள் மீது ‘ஆக்கிரமிப்பு படை நேரடியாக சூடு நடத்தியுள்ளது’ என்று அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

பலரும் சுடப்பட்ட நிலையில் இருப்பதை கண்டதாக அங்கிருக்கும் ஏ.எப்.பி. செய்தியாளரும் விபரித்துள்ளார்.

காசா போர் தற்போது ஆறு மாதங்களை தொட்டிருப்பதோடு அங்குள்ள மக்கள் தொகையில் கால் பங்கினராக குறைந்தது 576,000 பேர் பஞ்சத்தின் விளிம்பை தொட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிடுள்ளது. காசாவுக்கு மேலும் உதவிகளை அனுமதிக்குமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

காசா எல்லைக் கடவைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்ரேல், போர் வெடித்தது தொடக்கம் ஒரே ஒரு வாயிலை மாத்திரம் திறந்து வைத்துள்ளது. அங்கு கடுமையான சோதனைகள் மற்றும் கெடுபிடிகளுக்கு பின்னரே உதவி வாகனங்கள் காசாவுக்குள் நுழைய முடியுமாக இருப்பதாக ஐ.நா நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில் கடல் வழியாக உதவிகளை விநியோகிப்பதற்கு சைப்ரஸில் இருந்து முதலாவது உதவிக் கப்பல் ஒன்று காசாவை நோக்கி பயணித்திருப்பதோடு காசாவில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் வானில் இருந்து காசாவுக்கு உணவு உதவிகளை போட்டு வருகின்றன.

எவ்வாறாயினும் தரை வழியான உதவி விநியோகமே செயல்திறன் மிக்கதாகவும் பொருத்தமானதாகவும் இருப்பதாக தொண்டு அமைப்புகள் கூறுகின்றன.

கடந்த மாதம் தென்மேற்கு காசா நகரில் ரஷீட் வீதியில் உணவு உதவிக்காக கூடிய பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 118 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இதேவேளை 200 தொன் உணவு உதவியுடன் காசா பயணித்திருக்கும் உதவிக் கப்பல் தற்போது காசா கடற்கரை தெரியும் தூரத்தை எட்டி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஸ்பெயின் தொண்டு நிறுவனமான ஓபன் ஆர்ம் அமைப்பின் இந்தக் கப்பல் அரிசி, மாவு, பருப்பு வகைகள், பொதியிடப்பட்ட உணவுகளை நிரப்பியவாறே காசா பயணித்துள்ளது.

காசாவில் துறைமுகக் கட்டமைப்பு ஒன்று இல்லாத சூழலில் அங்கு இறங்கு துறை ஒன்றை அமைப்பதற்கும் இந்த கப்பல் பயணித்துக்கான ஏற்பாடுகளை செய்த அமெரிக்க தொண்டு நிறுவனமான ‘வேர்லட்; சென்ட்ரல் கிச்சன்’ அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

காசாவில் இடைவிடாது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,500ஐ நெருங்கி இருப்பதோடு மேலும் 71 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

புதிய முன்மொழிவு

இந்நிலையில் ஆயுள் தண்டனைக்கு முகம்கொடுத்திருக்கும் 100 பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது உட்பட போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றை ஹமாஸ் அமைப்பு மத்தியஸ்தர்கள் மற்றும் அமெரிக்காவிடம் வழங்கியுள்ளது.

இஸ்ரேலிய சிறையில் இருக்கும் 700–1000 பலஸ்தீனர்களை விடுவிப்பதற்கு பகரமாக ஆரம்பத்தில் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் நோயுற்ற இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஹமாஸ் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பெண் வீராங்கனைகளும் உள்ளடங்குகின்றனர்.

மத்தியஸ்தர்களுக்கு ஹமாஸ் முன்வைத்திருக்கும் புதிய போர் நிறுத்த முன்மொழிவு தொடர்ந்து ‘யதார்த்தமற்ற கோரிக்கைகளை’ அடிப்படையாகக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பிலான விடயம் போர் அமைச்சரவைக்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சரவைக்கு நேற்று கையளிக்கப்பட்டதாக அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வரும் சூழலில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான வேறுபாடுகளை கலையும் முயற்சியில் மத்தியஸ்தத்தில் எகிப்து மற்றும் கட்டார் ஈடுபட்டு வருகிறது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும், அந்தப் பகுதிக்கு உதவிகளை விரைவுபடுத்துவதற்கும், தெற்கு மற்றும் மத்திய காசாவில் இடம்பெயர்ந்திருக்கும் பலஸ்தீனர்களை வடக்கிற்கு செல்வதற்கு அனுமதிப்பதற்கும் எகிப்து முயற்சித்து வருகிறது என்று அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

‘காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது தொடர்பில் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், போர் நிறுத்தம் ஒன்றின் மூலம் பெரும் அளவான உதவிகளை வழங்க முடியும்’ என்று எகிப்து பொலிஸ் கல்லூரியில் பேசிய சிசி கூறினார்.

எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபா பகுதி மீது இஸ்ரேல் திட்டமிட்டிருக்கும் போர் நடவடிக்கையின் ஆபத்துக் குறித்து சிசி மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்தார்.

ராபவில் இருக்கும் நான்கு படைப்பிரிவுகளையும் அழிக்க அங்கு படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பது குறித்து நெதன்யாகு கடந்த பெப்ரவரியில் குறிப்பிட்டிருந்தார்.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான தாக்குதல் பாரிய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் என்று சர்வதேச அளவில் கவலை வெளியிடப்பட்டு வருகிறது.

காசாவில் இஸ்ரேலிய தரைப்படை இன்னும் நுழையாத பகுதியாக ரபா இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவந்து அங்குள்ள இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறப்பட்டு, தெற்கில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் வடக்கிற்கு செல்ல அனுமதிக்கும் வகையில் ஹமாஸ் முன்னதாக போர் நிறுத்தம் முன்மொழிவுகளை செய்தது. எனினும் நெதன்யாகு அதனை நிராகரித்ததன் காரணமாகவே கடந்த சில வாரங்களில் போர் நிறுத்தம் ஒன்றை எட்ட முடியாமல் போயிருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் 40 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பரிந்துரை கடந்த பெப்ரவரியில் பாரிஸ் பேச்சுவார்த்தையின்போது ஹமாஸ் அமைப்புக்கு அளிக்கப்பட்டது. எனினும் அதற்கு ஹமாஸ் முழுமையாக உடன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவிலும் கூட, கைதிகள் பரிமாற்றத்திற்குப் பின்னர் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கான திகதிக்கு இணக்கம் எட்டப்பட வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. அதேபோன்று காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறும் காலக்கெடுவையும் அது கோரியுள்ளது.   நன்றி தினகரன் 





No comments: