கை கொடுத்த தெய்வம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 சாரதா படத்தின் மூலம் இயக்குநராகி , குறுகிய காலத்தினுள்


இயக்குனர் திலகம் என்ற பட்டத்தை பெற்றவர் கே எஸ் கோபாலகிருஷ்ணன். இந்த இயக்குனர் திலகம் முதல் தடவையாக நடிகர் திலகத்தையும், நடிகையர் திலகத்தையும் இணைத்து இயக்கியப் படம்தான் கை கொடுத்த தெய்வம். எம் எஸ் வேலப்பன் என்பவர் படத்தை தயாரித்திருந்தார். ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு பேசுவது மோசமான செயல் ,அது அவளை மட்டும் அன்றி முழு குடும்பத்தையும் நிர்மூலம் ஆக்கி விடும் என்ற உண்மையை உணர்த்தும் விதத்தில் படத்தின் கதை அமைந்திருந்தது.


செல்வந்தரான மகாதேவனுக்கு இரண்டு மகள்கள். மூத்தவள்

கோகிலா நல்லவள், இளகிய உள்ளம் கொண்டவள் ஆனால் வெகுளி. இவளுடைய அப்பாவித்தனமான நடத்தையும், பேச்சும் பலருடைய ஏளனத்துக்கும் , கண்டனத்துக்கு ஆளாகிறது. இவளுடைய வெகுளித்தனத்தை அறிந்து கொள்ளும் வரதன் என்ற ரௌடி அவள் நடத்தை கெட்டவள் என்றும் , தனக்கும் அவளுக்கும் தொடர்பிருப்பதாகவும் ஊரில் புரளியை பரப்புகிறான். ஊராரும் அதனை நம்புகின்றனர். இதனால் அவமானம் தாங்க முடியாமல் அவளின் அண்ணன் ரவி ஊரை விட்டே போய் விடுகிறான். தங்கை சகுந்தலா கவலைப் படுகிறாள். மகாதேவனோ மனம் உடைந்து போய் விடுகிறார்.

அமிர்தராஸ் நகருக்கு சென்று தெருவில் மயங்கி விழும் ரவிக்கு , ரகு உதவுகிறான். தொழிலும் பெற்று கொடுக்கிறான். இருவரும் உற்ற நண்பர்களாகின்றனர் . ஆனாலும் ரவி தன்னுடைய குடும்பப் பின்னணியை அவனிடம் மறைகிறான். ரகுவின் பெற்றோர் அவனுக்கு பெண் பார்த்து அவனை ஊருக்கு வரவைக்கிறார்கள். கோகிலாதான் அவர்கள் பார்த்த பெண். ஊருக்கு வரும் ரகு கோகிலாவின் வெள்ளை மனதை புரிந்து கொள்கிறானா , அவளுக்கு கை கொடுக்கிறானா என்பதே மீதி படம்.

படத்துக்கு கை கொடுத்த தெய்வம் என்ற பேருக்கு பதில் கை கொடுக்க முயன்ற தெய்வம் என்று பேரிட்டிருக்கலாம் . ஏன் என்றால் படத்தின் முடிவு அப்படி !


படத்தின் கதையும், முடிவும் எப்படி இருந்தாலும் நடித்தவர்களுடைய திறமையை பாராட்டித்தான் ஆக வேண்டும். அதிலும் சிவாஜி, எஸ் எஸ் ஆர், சாவித்திரி , எஸ் வி ரங்காராவ் இவர்கள் நால்வரும் நடிப்பில் போட்டி போடுகிறார்கள். சிவாஜி மிகை இல்லா நடிப்பை வழங்க, எஸ் எஸ் ஆர் உணர்ச்சிகரமாக காட்சியளிக்க, சாவித்திரி தன் முகபாவத்தாலும், வெகுளித்தனமும், துடுக்குத்தனமும் ஒருங்கே சேர்ந்த வசனத்தாலும் பாத்திரமாகவே மாறி பிரமாதப் படுத்துகிறார். ரங்காராவ் கிடைத்த வேடத்தை சர்வ சாதாரணமாக நடித்து விடுகிறார். இவர்கள் தான் படத்தின் நான்கு தூண்கள்!

படத்தின் ஆரம்ப கட்சியில் சிவாஜியின் அறிமுகமே அருமை. முதல்

வசனமே நான் தமிழன் என்று கூறி சிவாஜி அறிமுகமாவது அற்புதம். அதே போல் எம் ஆர் ராதா கன்னத்தில் விடும் அறை அருமை. ரங்காராவ் குமுறும் போதும் கொந்தளிக்கும் போதும் நெஞ்சை பிசைகிறார். மூன்று மணி நேர படத்தில் நாயகனும், நாயகியும் சந்தித்து கொள்வது கடைசி முக்கால் மணி நேரம்தான் . அதுவே அவர்களுக்குள் புரிந்துணர்வை ஏற்றப்படுத்தி விடுகிறது.

கே ஆர் விஜயா இளமையாக அழகுப் பதுமையாக வருகிறார். புஷ்பலதாவுக்கு கனமான வேடம். இருவரையம் நடிப்பில் குறை வைக்க கே எஸ் ஜி விடவில்லை.


படத்தில் எம் ஆர் ராதா இருக்கிறார். வழக்கமான வில்லன் வேடம் வழக்கமான நடிப்பு. எஸ் வி சகஸ்ரநாமம் வக்கீலாக வருகிறார். ராகம் பாடுவதில் காட்டும் ஆர்வத்தை சட்ட நுணுக்கத்தில் காட்ட தவறி விட்டார். இவர்களுடன் வி நாகையா, ஆர் பாலசுப்ரமணியம்,புஷ்பவல்லி, கரிக்கோல் ராஜு, ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்துக்கு இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. அமரக்கவி பாரதியின் சிந்து நதி இன்னிசை நிலவினிலேயே பாடல் எம் கர்ணனின் ஒளிப்பதிவில் அருமையாக படமாக்கப்பட்டது. கண்ணதாசனின் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ பாடலில் சிவாஜியின் நடிப்பு சூப்பர். இரண்டு பாடல்களும் டீ எம் சௌந்தரராஜன் குரலில் கணீர் என்று ஒலித்தன.

ஊருக்கே பெரிய மனிதரான மகாதேவன் ஒரு ரௌடியின் அடாவடித்தனத்தை அடக்க முடியாமல் திணறுகிறார். அண்ணன்காரனோ ஊரை விட்டு ஓடியே விடுகிறான். பெண் பார்க்க வரும் ரகு கன்னத்தில் விடும் ஓர் அறையில் ரௌடி வரதனை அடக்கி விடுகிறான்!

இன்று பார்க்கும் போது டி எஸ் மகாதேவன் எழுதிய படத்தின் கதையும் முடிவும் பழமை வாய்ந்ததுதான். ஆனாலும் நடித்தவர்கள் அதனை சமாளித்து விடுகிறார்கள். கே எஸ் கோபாலகிருஷ்ணனின் வசனங்கள் சிறப்பாக அமைந்தன. சீரான முறையில் படத்தையும் இயக்கியிருந்தார். 1964க்கான இந்திய பிராந்தியத்துக்கான சிறந்த சிறந்த படமாக இப் படம் தெரிவாகி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது. பின்னர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் படமாகின. 

No comments: