அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக கலாநிதி த.கலாமணி அவர்களைத் தொடர்பு கொண்டு எடுத்திருந்தேன்.
அந்தப் பகிர்வின் ஒலிவடிவம் இதோ
தமிழ்விசை என்னும் இணையத்தளத்தில் வெளியான வி.வி.வைரமுத்து அவர்கள் குறித்த பதிவை நன்றியோடு மீள் இடுகையாகத் தருகின்றேன்.
கூத்திசை நடிகர். இசையமைப்பாளர்
பிறந்தது: காங்கேசந்துறை - தமிழீழம்
வாழ்வு: பெப்ரவரி 11, 1924 - ஜூலை 8, 1989
ஈழத்தின் இசை நாடக வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மாபெரும் கலைஞராகத் திகழ்ந்தவர் அமரர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் அன்று மட்டுமல்ல இன்றும்கூட ‘அரிச்சந்திரா” நாடகமென்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது வைரமுத்து அவர்கள்தான்!. கலைஞர்கள் பல நாடகங்களில் பல பாத்திரங்களில் நடிப்பார்கள். ஆனால் அரிச்சந்திரனாக நடித்தால் மட்டும் அவர்களை நடிகமணி வைரமுத்து அவர்களுடன் ஒப்பிட்டே பார்ப்பார்கள். அப்படியாக மக்கள் மனங்களில் எல்லாம் அரிச்சந்திரனாகவே வாழ்ந்து மறைந்தவர் இவர்.
இவர் நடித்த ‘அரிச்சந்திரா மயானகாண்டம்” நாடகம் மட்டும் 3000க்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டு பெரும் சாதனையை நிலை நாட்டியிருப்பதோடு இலங்கை வானொலியிலும் பல தடவைகள் ஒலிபரப்பப்பட்டிருப்பதும் இலங்கையில் தயாரான நிர்மலா” என்னும் திரைப்படத்தில் இன் நாடகத்தின் ஒரு சிறு காட்சி இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நாடகமே இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் ஒளிபரப்பு செய்த முதல் தமிழ் நாடகமும் ஆகும்.
எவ்வளவுதான் புகழ் உச்சியில் இருந்தபோதும் சிறிதேனும் தலைக்கனம் இல்லாத அர்ப்பணிப்பு மிக்க கலைஞர் நடிகமணி அவர்கள். பாடி நடிப்பது மட்டுமல்ல! மிருதங்கம் ஆர்மோனியம் வயிலின் ஜலதங்கரம் போன்ற வாத்தியங்களை இசைப்பதிலும் வல்லவராய் இருந்ததோடு இலங்கை வானொலியில் கர்நாடக இசைக் கச்சேரிகளும் செய்திருக்கின்றார்.
சிறந்த நாடக நெறியாளரான இவர் கலைப்பணிமீது கொண்ட பற்றால் தான் பணிபுரிந்து வந்த ஆசிரியத் தொழிலைத் துறந்து ‘வசந்தகான சபா” என்னும் நாடக மன்றத்தை ஆரம்பித்து சரித்திர புராண இதிகாச நாடகங்களை தத்ரூபமாக நடித்து மக்கள் மனங்களில் பதியவைத்திருந்தார்.
கலையரசு சொர்ணலிங்கம் ஜயா அவர்களே இவருக்கு நடிகமணி என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருந்தார். பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் எழுதிய நாடக தீபம் என்னும் நூலில் ‘தமிழ் நாடகத்தின் மரணிக்காத குரல்” என்று வைரமுத்து அவர்களுக்கு புகழாரம் சூட்டியிருக்கின்றார். அது மாத்திரமல்ல பேராசிரியர் திரு வித்தியானந்தன் அவர்கள் ‘கலைக் கோமான்” என்னும் விருதையும் பேராசிரியர் திரு கைலாசபதி அவர்கள் நவரச திலகம்” என்னும் விருதையும் தென்னிந்திய தமிழ் மூதறிஞர் திரு.மா.பொ.சிவஞானம் அவர்கள் நாடக வேந்தன்” என்னும் விருதினையும் முன்னாள் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் நடிப்பிசைச் சக்கரவர்த்தி” என்னும் விருதினையும் பாசையூர் சென்றோக் படிப்பகத்தினர் ‘முத்தமிழ் வித்தகர்” என்னும் விருதினையும் வழங்கி வைரமுத்து அவர்களைக் கௌரவப் படுத்தியிருக்கின்றார்கள். இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் 2004ம் ஆண்டில் இவருக்கு “கலாநிதி” பட்டத்தை வழங்கி கௌரவித்திருந்ததும் நடிகமணி அவர்களின் கலைப்பணிக்குக் கிடைத்த மேலதிக சிறப்பாகும்.
ஈழத்து நூலகத்தில் மேலும் படிக்க
நாடக தீபம்
நடிகமணி வி.வி.வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும்
வைரமுத்து வாழ்க்கைக் குறிப்புக்கள் நன்றி: தமிழ் விசை
படம் உதவி : தமிழ் விக்கிப்பீடியா
ஆவணக் கோப்பு நன்றி : நூலகம்
No comments:
Post a Comment