இலங்கை வடபுலத்தில், தென்மராட்சியில் விநாயகர் – சின்னம்மா தம்பதியரின் புதல்வனாக 1933 ஆம் ஆண்டு பிறந்து, தனது மாணவப் பருவத்திலேயே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கி, பாடசாலை ஆசிரியராக , அதிபராக பணியாற்றி , பின்னாளில் தென்னாபிரிக்காவிலும் கல்விச்சேவையாற்றியிருக்கும் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள், கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் இலக்கிய மற்றும் ஆன்மீகப்பணிகளில் ஈடுபட்டவர்.
இம்மாதம் 11 ஆம் திகதி கனடாவில் மறைந்திருக்கும் கவிஞர் கந்தவனம் அவர்கள் தமது 91 வயதில் விடைபெற்றுள்ளார்.
அவருடன் எனக்கு நெருக்கமான இலக்கிய உறவு இல்லையாயினும்,
அவர் பற்றிய நினைவுகள் நெஞ்சில் பசுமையாக வாழ்கின்றது. நினைவுகளுக்கு மரணம் இல்லை அல்லவா..?
ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், எங்கள் நீர்கொழும்பூரில்
இயங்கிய இந்து வாலிபர் சங்கத்தில் மூன்று நாட்கள் தமிழ் விழா நடந்தது. அப்போது அதன்
அருகே அமைந்திருந்த விவேகானந்தா வித்தியாலயத்தில் ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய
கல்லூரி ) நான் ஐந்தாம் தரத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.
அந்தத் தமிழ்விழாவில் உரையாற்றுவதற்காக
கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும்
தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் வந்திருந்தனர்.
இரவு நிகழ்ச்சியில் மூன்று நாடகங்களும் இடம்பெற்றன. எனக்கு நாடகம் பார்க்க விருப்பம். பேச்சாளர்கள் பகல்பொழுதில் இலக்கிய உரை நிகழ்த்தினார்கள்.
எனக்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை.
நாடகங்களை மாத்திரம் பார்த்தேன்.
அந்த நாடகங்களை எழுதி,
இயக்கியிருந்தவர் குரும்பசிட்டியிலிருந்து வந்திருந்த கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை. இவருடன் வருகை தந்திருந்த மேலும் சில எழுத்தாளர்கள்,
அறிஞர்களின் பெயர்களை ஆறு தசாப்தங்களுக்குப் பின்னரும் நான் நினைவில் வைத்து சொல்வதற்குக்
காரணம், பின்னாளில் நானும் ஒரு எழுத்தாளனாகவும்,
அதே இந்து வாலிபர் சங்கத்தின் உறுப்பினராகவும், செயலாளர் – நிதிச்செயலாளர் பதவியில்
அங்கம் வகித்தமையினாலும்தான் என்று கருதுகின்றேன்.
அந்த மூன்று நாள் தமிழ்
விழா பற்றிய செய்திகளைக்கூறும் சங்கத்தின்
ஒரு பதிவேட்டு நூல், பின்னாளில் சங்கத்தின்
பொன்விழா காலத்தில் வெளிவந்தது. அப்போது நான்
அவுஸ்திரேலியாவிலும், கவிஞர் வி. கந்தவனம்
அவர்கள் கனடாவிலும் இருந்தோம்.
குறிப்பிட்ட தமிழ் விழாவில் உரையாற்றியவர்தான் கவிஞர் விநாயகர் கந்தவனம். இவருடன் வருகை தந்து உரையாற்றியவர்கள்: எஸ். பொன்னுத்துரை, மஹாகவி உருத்திரமூர்த்தி, இளம்பிறை ரஃமான், இரசிகமணி கனக செந்திநாதன், சு. வேலுப்பிள்ளை, ஏ. ரி. பொன்னுத்துரை.
எனது பத்துவயதுப் பராயத்தில் ஒரு மாணவனாக நான் அன்று மேடையில் பார்த்த அறிஞர் – கல்விமான் – கவிஞர் வி. கந்தவனம் அவர்களை அதன்பின்னர், 1975 ஆம் ஆண்டில்தான் எனது இலக்கிய பிரவேச காலத்தில், யாழ். குரும்பசிட்டியில், இரசிகமணி கனகசெந்திநாதன் வீட்டில் சந்தித்தேன்.
அதன்பின்னர் அவரைப் பார்க்கும்
சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. எனினும், அவரது எழுத்துக்களை ஊடகங்களிலும் , உரைகளை காணொலிகளிலும், படைப்புகளை புத்தக வடிவத்திலும் பார்க்க முடிந்தது.
முற்றிலும் கத்தோலிக்க
மக்கள் செறிந்து வாழும் ஒரு கடற்கரையோர பிரதேசத்திலிருந்து வந்து, தமிழ் இலக்கியம் படைக்கத் தொடங்கியிருந்த என்னை அவர்
1975 ஆம் ஆண்டு வியப்போடு பார்த்த காட்சி இன்றளவும் மனதில் நிழலாடுகிறது.
அவருடை மனக்கண்ணிலும் அந்த இந்து வாலிபர் சங்கத்தின்
கட்டிடம், அதன் முன்னாலிருந்த அரசமரம், அதன் கீழிருந்த நாகதம்பிரான் சிலை, முன்புறம் அமைந்திருந்த ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், அருகிலிருந்த வித்தியாலயம் யாவும் பதிந்திருந்தது.
அத்தகைய சூழலை அவர் பெரிதும்
ரசித்து, நினைவுபடுத்தி என்னுடன் உரையாடினார்.
கந்தவனம் அவர்கள், வடபுலத்தில் யாழ். இலக்கிய வட்டத்துடன் நெருக்கமான
உறவு கொண்டிருந்தவர். ஆசிரியப்பணியில் ஈடுபட்டவாறு
தொடர்ந்தும் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தவர். அத்துடன் அவர் ஈழகேசரி காலத்தில் எழுதத்
தொடங்கிய படைப்பாளி.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில்,
இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன் ஆகியோருக்குப்பின்னர் வந்த அடுத்த தலைமுறை
எழுத்தாளர்.
அவரது காலத்தில் எழுதிக்கொண்டிருந்த பலர் மரபு சார்ந்த தமிழ்
புலமைகொண்டிருந்தனர். அவர்களிடத்தில் கம்பனும், வள்ளுவரும், இளங்கோவும், பாரதியும், நாவலரும், விபுலானந்தரும் உலாவிக்கொண்டிருந்தனர். அதே காலப்பகுதியில் இடதுசாரி சிந்தனைகளுடன் மார்க்ஸீயம் சார்ந்து நவீன தமிழ் இலக்கியம் படைத்தவர்கள் முற்போக்கு முகாமிலிருந்தனர்.
இந்த முற்போக்கு இலக்கிய
முகாமில் நான் இணைந்திருந்த அக்காலப்பகுதியில் கவிஞர் கந்தவனம் அவர்கள் தென்னாபிரிக்காவுக்கு
சென்றுவிட்டார். தொடர்புகளும் அற்றுப்போயிருந்தது.
பின்னர் கனடா சென்றுவிட்டார்.
ஈழத்து இலக்கிய
வளர்ச்சி என்ற கனக. செந்திநாதன்
எழுதிய நூலிலும் ( 1964 ) கந்தவனம் இடம்பெற்றுள்ளார். நவாலியூர் சொக்கநாதன், கவிஞர் ஈழவாணன் ஆகியோருடன் இணைந்து சிட்டுக்குருவி
என்ற கவிதை நூலையும் வெளியிட்டவர். இந்நூலின்
இரண்டாம் பதிப்பு சிட்னியில் வதியும் எழுத்தாளர் மாத்தளை சோமுவின் முன்முயற்சியினால்,
தமிழகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது.
பல வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் எழுத்தாளர் நடேசன்
நடத்திய உதயம் மாத இதழின் சார்பில் ஒழுங்கு செய்யப்பட்ட உதயம் ஆண்டுவிழாவில் சிட்டுக்குருவி நூலின் வெளியீட்டு அரங்கினையும் ஏற்பாடு செய்திருந்தோம்.
குறிப்பிட்ட
சிட்டுக்குருவி நூலின் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கந்தவனம் இவ்வாறு
எழுதுகிறார்:
அதனைத் தொடர்ந்து எமக்கு அழைப்புகள் அதிகமாயின. மலைநாட்டில் பல கவியரங்கங்களிலே மூவரும் பங்குபற்றிக் கவிதை இரசனையை வளர்த்ததோடு பல சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் விதைத்தோம்.
பெயரில்
வெளியிட்டோம். “
இலக்கியப்பணிகளை மேற்கொண்ட கவிஞர் கந்தவனம் அவர்கள், பல வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் அயர்ச்சியின்றி இயங்கியவர். கடந்த 11 ஆம் திகதி பேசுவதையும் எழுதுவதையும் நிறுத்திக்கொண்டார்.
No comments:
Post a Comment