மஞ்சு சில வருடங்களாக புற உலகில் இருந்து ஒதுங்கி இருக்கின்றாள். எந்தவொரு நிகழ்விற்கும் அவள் விரும்பிப் போவதில்லை. யாருடனும் பழகுவதுமில்லை.
கொழும்பில் மகன், மருமகள், பேரப்பிள்ளையுடன் இருந்த காலங்களில் அவள் தனிமையை
உணர்ந்ததில்லை. மகனுக்கு சின்சினாட்டிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்வதற்குச்
சந்தர்ப்பம் கிடைத்தபோது அவள் கொஞ்சம் கலங்கிப் போய்விட்டாள். மகனின் எதிர்காலம் கருதி,
வற்புறுத்தி அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள். அதன் பின்னர் ஊருக்குத் திரும்பி,
போரினால் சிதிலமடைந்திருந்த தனது வீட்டைத் திருத்தி அங்கேயே தங்கிக் கொண்டாள். தனது
அந்திமகாலம் அங்கேயே கழிய வேண்டும் என்பது அவள் விருப்பம். பொழுதுபோக்குக்காக சனி,
ஞாயிற்றுக்கிழமைகளில் அக்கம்பக்கத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் படிப்புச் சொல்லிக் குடுப்பாள்.
ஒருநாள் மதியம், “எயிற்றி ரூ பட்ச் கெற்றுகெதர் வைக்கப் போகின்றோம்” என்று சொல்லியபடி
நந்தனும் முரளியும் அவளின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அவளும் நந்தனும் எல்லாப்
பிரச்சினைக்குள்ளும் இலங்கையில் தான் இருக்கின்றார்கள். முரளி கனடாவிலிருந்து ஒன்றுகூடலை
ஒழுங்கு செய்யவென வந்திருந்தான்.
“இது ஒரு காலங்கடந்த ஒன்றுகூடல் எண்டு நான் நினைக்கிறன். இருபது இருபத்தைஞ்சு
வருஷத்துக்கு முந்திச் செய்திருக்க வேணும் முரளி…”
நாற்பது வருடங்கள் கழித்து ஒரு ஒன்றுகூடல் தேவையா என்பது மஞ்சுவின் மனதில் பெருங்
கேள்வியாக எழுந்தது. முரளி தலைக்குள் கையை வைத்துக் கோதினான்.
“செய்யக்கூடிய நிலையிலையா அப்ப நாடு இருந்தது. யுத்தம் முடிஞ்ச கையோடை செய்திருக்க
வேணும். எங்கை… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சோலியள். ஒவ்வொரு நாட்டிலையும் போய் ஒளிஞ்சிருக்கிற
ஆக்களைத் தேடிப்பிடிச்சு ஒண்டாக் கொண்டுவாறதெண்டா சும்மா லேசுப்பட்ட காரியமா?” என்றான்
நந்தன்.
“ஆர் ஆர் வருகினம்? வாற ஆக்களின்ரை லிஸ்ற் இருக்கோ?”
பொக்கற்றுக்குள்ளிருந்து கசங்கிய கடதாசி ஒன்றை எடுத்து மஞ்சுவிடம் நீட்டினான்
நந்தன்.
“இதை நீங்களே வைச்சிருங்கோ. இது ஒரு முழுமையான லிஸ்ற் இல்லை. இப்பத்தான் ஒவ்வொருத்தராச்
சேர்த்துக் கொண்டு வாறம். முதலிலை சயன்ஸ், மற்ஸ் மாத்திரம் செய்வோம் எண்டு யோசிச்சம்.
பிறகு ஆற்ஸ், கொமேர்ஸ் எல்லாரையும் சேர்ப்போமெண்டு முடிவெடுத்திருக்கிறம்.”
“ஒன்றுகூடலுக்கு வாறதுக்கு எனக்குப் பெரிசா ஆர்வம் இல்லை.” என்றாள் மஞ்சு.
அவர்கள் இருவரும் போனதும், மஞ்சு பெயர் லிஸ்றை எடுத்து விரித்துப் பார்க்கத்
தொடங்கினாள். லிஸ்ரில் சேந்தனின் பெயர் இருந்தது.
•
சேந்தனை ஆறாம்வகுப்புப் படிக்கும் போதுதான் மஞ்சு முதன்முதலாகச் சந்தித்தாள்.
அயல்கிராமப் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கான போட்டிப் பரீட்சையில் தெரிவாகி,
மஞ்சு படிக்கும் புகழ் பூத்த பாடசாலைக்கு வந்திருந்தான் சேந்தன்.
அவனை மஞ்சு முதன்முதலாக சந்தித்தபோது அவன் கால்களில் செருப்புகள் இருக்கவில்லை.
தான் சப்பாத்து அணிந்து அவன் அருகில் இருக்கும்போது மனதுக்கு சங்கடமாக இருந்தது அவளுக்கு.
பாடசாலையில் சீருடைகள் பற்றிய கட்டுப்பாடுகள் அப்பொழுது எதுவும் இருக்கவில்லை. அவரவர்
நினைத்த மாதிரி பாடசாலைக்கு வந்து போனார்கள். சேந்தன் பாடசாலைக்கு நடந்து வருவான்.
மஞ்சு அவளது அப்பாவுடன் ஸ்கூட்டரில் வருவாள்.
ஒருநாள் சேந்தன் வைத்த கண் வாங்காமல் மஞ்சுவின் கால்களைப் பார்த்தபடி இருந்தான்.
வெள்ளைச்சப்பாத்துகள். அதுக்குள்ளால் முளைத்து மொழுப்பான அவள் மஞ்சள் கால்களைப் பற்றி
நிற்கும் வெள்ளைநிற காலுறைகள். மயங்கி நிற்கும் அவனது பார்வை மஞ்சுவுக்கு கூச்சத்தை
உண்டுபண்ணியது.
மறுநாள், தான் சிறிது சிறிதாகச் சேர்த்த பணத்தில் ஒரு சோடி ஆண்களுக்கான செருப்புகள்
வாங்கியிருந்தாள் மஞ்சு. யாருமில்லாத வேளையில் அவற்றை சேந்தனின் காலடியில் போட்டாள்.
`வீட்டிலே பேசுவார்கள்’ என்று
சொன்ன சேந்தன் அதை ஏற்க மறுத்துவிட்டான். மறுவாரம்
சேந்தனே புதுச்செருப்புகளுடன் வந்ததைக் கண்ட மஞ்சுவின் மனம் குதூகலித்தது. சேந்தன்
சுத்தமான ஆடைகள் அணிந்தாலும் இடையிடையே கிழிந்தும் கசங்கியிருப்பதையும் அவதானித்த மஞ்சு
கவலை கொண்டாள். அவன் ஒரு நோஞ்சானாகவும், தான் கொழுகொழுவென்று ஊதிப்பருத்து இருப்பதும்
அவள் மனதை ஏதோ செய்தது.
சேந்தன், முதல் தவணைப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்று முதல் மாணவனாக
வந்திருந்தான். வழமையாக முதல் இரண்டு இடங்களிற்குள் வரும் மஞ்சு மூன்றாமிடத்திற்குத்
தள்ளப்பட்டிருந்தாள். அன்று முழுவதும் சேந்தனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சு.
படிப்பில் எப்பிடித்தான் போட்டி போட்டாலும் சேந்தனின் இடத்தை ஒருபோதும் மற்றவர்களால்
பிடிக்க முடியவில்லை.
ஒருமுறை பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞானக் கட்டுரைப் போட்டிக்காக சேந்தனும் மஞ்சுவும் பிறிதொரு பாடசாலைக்குச் சென்றார்கள்.
அங்குதான் அவர்கள் முதன் முதலாக மனம் திறந்து பேசினார்கள்.
“என்னுடைய அப்பா வங்கியில் மனேஜராக இருக்கின்றார். அம்மா ஆரம்பப்பள்ளி ஆசிரியை.
எனக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி இருக்கினம்” மஞ்சு சொல்ல,
“என்னுடைய குடும்பம் பெரிசு. மொத்தம் எட்டுப்பேர்கள். அப்பா தோட்டம் செய்கிறார்.
அவரின்ரை உழைப்பு குடும்பத்தைக் கொண்டிழுக்கவே போதாது.” என்றான் சேந்தன்.
அதன்பிறகு பதினொராம் வகுப்புப் படிக்கும்போது நடந்த சம்பவமொன்று அவர்கள் இருவரையும்
மேலும் நெருங்க வைத்தது. ஒருநாள் சேந்தன் மதிய இடைவேளையில் வீட்டிற்குச் சென்று உணவருந்திவிட்டு
பாடசாலை வந்தபோது, மஞ்சு மேசையில் கவிழ்ந்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தாள்.
அவள் மதிய இடைவேளையில் வீட்டிற்குப் போவதில்லை. உணவருந்திவிட்டு மேசை மீது கவிழ்ந்து
படுத்துக் கொள்வாள். சக மாணவன் ஒருவன் அவளைப் பார்த்து, ‘மஞ்சு மேசைக்குப் பால் குடுக்கின்றாள்’
என்று சொல்லிவிட்டான். இதை அறிந்த சேந்தன் கொந்தளித்துப் போனான். அப்படிச் சொன்னவனுடன்
சண்டையிட்டான். அவனைப் புரட்டிப் புரட்டி எடுத்தான். விவகாரம் உருப்பெருத்து அதிபர்
வரை போனது.
பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை நெருங்கியது. எல்லாரும் விழுந்து விழுந்து
படிக்கத் தொடங்கினார்கள். பரீட்சைகள் முடிந்து சோஷல் வந்தது. சோஷல் வலு திறமாக நடக்க
வேண்டும் என்று எல்லாரும் தீவிரமாக வேலை செய்யத் தொடங்கினார்கள். சோஷலுக்குப் பொறுப்பாக
ஆசிரியர் மாணவர்கள் கொண்ட ஒரு குழு தெரிவு செய்யப்பட்டது. சோஷலுக்கு வர விரும்புவவர்களின்
பெயர்கள் நோட்டீஸ் போர்ட்டில் வந்தபோது சேந்தனின் பெயரை அதில் காணவில்லை. சேந்தனுடன்
மனம் விட்டுக் கதைப்பதற்கான கடைசிப்புள்ளியையும் இழந்துவிடுவேனோ என மஞ்சு பயந்தாள்.
சோஷலுக்குப் பொருத்தமான ஆடைகள் தன்னிடம் இல்லை என்று சேந்தன் சொன்னான். நந்தன் தன்னிடமிருந்த
மேலதிகான கோர்ட் சூட் ஒன்றை சேந்தனுக்குக் குடுத்திருந்தான். மஞ்சு தனது அப்பாவின்
ரைகளில் இரண்டைப் பத்திரப்படுத்தி சேந்தனுக்காக வைத்திருந்தாள். கலை நிகழ்ச்சிகள்,
வேடிக்கைகள், அட்டகாசங்கள், பல்சுவை உணவுகள் என சோஷல் களைகட்டியது. பெண்கள் சேலையுடனும்,
ஆண்கள் கோர்ட் சூட் அணிந்தும் அமர்க்களப்படுத்தினார்கள். சேந்தன் கடைசியில் சோஷலுக்கு
வரவில்லை. மஞ்சு மனம் உடைந்து போனாள்.
இரண்டு பேருக்குமே ஒரே பல்கலைக்கழகம் கிடைத்துவிட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்
என மஞ்சு கற்பனை செய்தாள். கடைசியில் கணிதப்பிரிவில் சேந்தனுக்கு மாத்திரமே பல்கலைக்கழக
அனுமதி கிடைத்தது.
சேந்தன் பல்கலைக்கழகத்திற்குப் படிக்கப்போய், ஆறு மாதங்கள் கழித்து விடுமுறையில்
வீடு திரும்பியிருந்தபோது `மஞ்சுவிற்கு திருமணம்’ முடிந்துவிட்டது என்ற செய்தி கேட்டு
பதறிப் போனான். மஞ்சுவுக்கும் கணவனுக்குமிடையே வயதில் பெரும் இடைவெளி இருந்தது. அவளுடன்
படித்த எவரையுமே தன் திருமணத்திற்கு மஞ்சு கூப்பிடவில்லை. அவள் திருமணம் முடித்தவுடன்
கணவருடன் திருக்கோணமலை என்ற இடத்திற்குச் சென்றுவிட்டாள். சோஷலுக்கு சேந்தன் வந்திருந்தால்
எல்லாமே தலைகீழாக மாறியிருக்கும் என நினைத்தாள் மஞ்சு.
மஞ்சு திருமணம் முடித்து சரியாகப் பத்து வருடங்களில் சேந்தனின் திருமணம் நடந்தது.
அப்போது மஞ்சு விதவையாகிப் போய்விட்டாள்.
•
ஒன்றுகூடல்
கட்டட வளாகத்திற்குள் ஒரே பரபரப்பு. கார்களும் ஓட்டோக்களும் வருவதும் போவதுமாக
இருந்தன. சில வாகனங்கள் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டும் இருந்தன.
ஒன்றுகூடலுக்காக அவரவர் விரும்பிய ஆடைகளுடன் வந்திருந்தார்கள். எல்லாரும் ஒரே
நேரத்தில் கதைப்பதும் சிரிப்பதுமாக இருந்தார்கள். பின்னணியில் எண்பதுகளில் வெளிவந்த
சினிமாப்பாடல்கள் மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா,
இலண்டன், ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர் என்று பல இடங்களிலிருந்தும் பழைய மாணவர்கள்
வந்திருந்தார்கள். ஒரு சிலர் நாற்பது வருடங்களின் பின்னர் சந்தித்துக் கொள்கின்றார்கள்.
வாழ்க்கைப் பயணத்தில் – அதன் ஆரம்ப காலங்களில் தோன்றிய முகங்களில் பல இடையே மறைந்தும்,
பின் முதுமைக் காலங்களில் மீண்டும் அவை துளிர்த்தும் கொள்கின்றன. இடைப்பட்ட காலத்தில்
உயர்கல்வி, வேலை, திருமணம், பிள்ளைகள், வாழ்க்கைப் போராட்டம், அரசியல் சூழ்நிலை – என்பவை
வாழ்வைப் புரட்டிப் போட்டுவிடுகின்றன.
பாடசாலையை விட்டுப் பிரிந்த அடுத்த வருடம்---எண்பத்தி மூன்றில்--- நாட்டில்
பெரும் இனக்கலவரம் வெடித்தது. அடுத்தடுத்த வருடங்களில் அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.
தொண்ணூறில் பாடசாலையைச் சுற்றிய கிராமங்களில் வசித்த அனைவருமே ஊரைக் காலி செய்துவிட்டு
- நாட்டிற்குள்ளும், வேளியேயும் என பிரிந்து போனார்கள். இரண்டாயிரத்து ஒன்பதில் இனப்பிரச்சினை
ஒரு முடிவுக்கு வந்து, மக்கள் ஊர் திரும்புவதற்கு அனுமதிக்கப்படார்கள். ஆனால் இற்றைவரைக்கும்
எந்தவொரு ஊரையுமே பழைய நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை.
ஒன்றுகூடல் என்று தெரிந்த நாளிலிருந்து நண்பர்களிடையே மீண்டும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.
மின்னஞ்சல்கள் பறந்தன. கால நேரமின்றி தொலைபேசி அழைப்புகள், `டிங் டொங்’ என்ற வாட்சப்
அழைப்புகள். நந்தனும் முரளியும் இந்த ஒன்றுகூடலுக்காகப் பல வழிகளில் கஸ்டப்பட்டு உழைத்தார்கள்.
ஹோல் வாசலுக்கு உட்புறமாகப் போடப்பட்டிருந்த மேசையில் சில துண்டுப்பிரசுரங்கள்
வைக்கப்பட்டிருந்தன. உயர்தரம் பயின்ற மாணவர்களின் பெயர்கள் வகுப்பு வாரியாக எழுதப்பட்டும்,
அதன் கீழ் விழாவிற்கு சமூகமளிக்க வாக்குறுதி தந்தவர்களின் பெயர்களும், இறுதியாக இறந்துபோனவர்கள்
/ காணாமல் போனவர்கள் பெயர்களும் அதில் இருந்தன.
குத்துவிளக்கு ஏற்றி, இறந்தவர்களுக்கான மெளன அஞ்சலியுடன் விழா ஆரம்பமானது.
“ஒன்றுகூடலுக்கெண்டு பல திட்டங்கள் தயாரித்தோம். கடைசியா பலரின் வேண்டுகோளுக்கிணங்க
அவை கைவிடப்பட்டன” நந்தன் தனது ஆரம்ப உரையில் கவலையுடன் சொன்னான். மேலும் - மொத்தம்
நூற்றிமூன்று மாணவர்கள் பயின்ற இடத்தில் நாற்பத்தொன்பது மாணவர்கள் மாத்திரமே சமூகளித்திருந்ததையும்
சுட்டிக் காட்டினான். ஒவ்வொருவருக்கும் தலா ஒரு நிமிடம், தம்மைப்பற்றிச் சொல்வதற்கு
வழங்கப்பட்டிருந்தது. சிலர் அது போதாதென முணுமுணுத்தார்கள். சிலர் தமது பெயரை மாத்திரம்
சொல்லி, ஒரு செக்கனிலே விலகிக் கொண்டார்கள். அறிமுகம் முடிய நிகழ்ச்சிகள் களை கட்டத்
தொடங்கின. பாட்டுக்குப் பாட்டு, குட்டி நாடகம், சோடி நடனம் எனப் பல நிகழ்வுகள் அரங்கேறின.
பின்னணியில் ஒரு இசைக்குழுவினர் தமது கருவிகளைத் தட்டிப் பார்த்து சரிசெய்து கொண்டிருந்தனர்.
மஞ்சு ஓட்டோ ஒன்று பிடித்து வருவதற்குப் பிந்திவிட்டது, அவள் வரும்போது ஆற்ஸ்
வகுப்பில் பயின்ற பரதன் மேடையில் பாடிக்கொண்டிருந்தான். சிலர் போதையேறி ஆடிக்கொண்டும்
இருந்தார்கள். `சும்மாவே உடம்பைத் தூக்கி நடமாட
முடியாமல் கிடக்கு. அதுக்குள்ளை உந்த நாசத்தையும் குடிச்சா... மஞ்சு புறுபுறுத்துக் கொண்டாள். பரதன் அந்நாளில்
ஒரு ரி.எம்.எஸ். இன்று இறுதிக்கட்டத்தில் இருக்கும் ஒரு மனிதனின் `சேடம்’ போல் இருந்தது
அவன் பாட்டு.
மஞ்சுவைக் கண்டதும், பெண் சிநேகிதிகள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒருசிலர்
மஞ்சுவைப்பற்றிக் கிசுகிசுக்கவும் செய்தார்கள்.
`ஒரு காலத்திலை மஞ்சுவும் சேந்தனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினவைதானே!’
`பாவம் மஞ்சு…. வெடிங் முடிஞ்சு
ஏழு வருஷங்களில ஹஸ்பனை இழந்திட்டாள்.’
`ஸ்கூலுக்குப் பிள்ளையை விட்டிட்டு வேலைக்குப் போகேக்கைதான் அக்சிடென்ற் நடந்ததாம்.’
’நல்லகாலம்… ஹஸ்பண்ட் போட்ட இன்சூரன்ஸ் பணம் இருந்ததாலை வாழ்க்கைக்கு உதவிச்சு.
மகனைப் படிப்பிக்கும் மட்டும் தன்னை ஒடுக்கிக் கொண்டு, கொழும்பில் ஒரு வாடகை வீட்டில
இருந்தாள். மண்ணெண்ணை அடுப்பிலேதான் சமையல் எல்லாம் செய்தாள்.’
மஞ்சு ஒரு ஓரமாக நின்று ஆடுபவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றாள். முதன்முதலாக
நடக்க எத்தனிக்கும் குழந்தை ஒன்றினைப்போல, சில பெண்களும் ஆண்களும் காலைத் தூக்கி வைப்பதும்
விடுவதுமாக இருந்தனர்.
“மஞ்சு… உமக்கொரு ஆளை அறிமுகம் செய்யவேணும்” நந்தன் மஞ்சுவைக் கூட்டிக்கொண்டு,
ஆடிக்கொண்டிருந்தவர்களை விலத்தியபடி உள்ளே சென்றான்.
“மஞ்சு… இவன் தான் சேந்தன்”
சேந்தன் கைகளை விசுக்கி விசுக்கி, இடுப்பை நெளித்து ஆடியபடி நின்றான். மஞ்சு
நிமிர்ந்து சேந்தனைப் பார்த்தாள். இவ்வளவு உயரத்திற்கு வளர்ந்திருப்பான் என அவள் நினைக்கவில்லை.
நீலநிற கட்டம் போட்ட சேர்ட், தோதாக மினுமினுத்துப் பளிச்சிடும் ஜீன்ஸ், அன்றுதான் பொலிஷ்
செய்யப்பட்ட சப்பாத்துகள் என பளிச்சிட்டான் சேந்தன். தான் ஒரு கசங்கிப் போன சீலையில்
வந்துவிட்டதற்காக மஞ்சு வெட்கப்பட்டாள்.
“சேந்தன்… இது யாரெண்டு தெரியுதா? மஞ்சு...”
“அப்படியா!” அதிசயித்தான் சேந்தன். தன்னைத் தாழ்த்தி மஞ்சுவின் உயரத்திற்குக்
குறுக்கிக் கொண்டான். கொழுகொழுவென்று பளிச்சிடும் முகம், அளவான மீசை. எண்ணெய் பூசி
வாரிவிட்ட தலைமயிர் கூட இன்னமும் நரைக்கவில்லை. திடீரென்று சேந்தனைக் கட்டிப்பிடித்த
மஞ்சு அவனது கன்னத்தில் ஒரு `இச்’ பதித்தாள். கழுத்திலே தொங்கிக் கொண்டிருந்த கட்டம்
போட்ட வர்ணங்களிலான சேந்தனின் `ரை’ மஞ்சுவின் சேலையைத் தழுவியது. பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு மஞ்சுவின்
அந்தச் செய்கை திகைப்பைக் கொடுத்தது. பதறிப் போனார்கள் அவர்கள். “வாருங்களேன் ஆடுவோம்”
மஞ்சுவின் கைகளைப் பற்றுவதற்கு முயற்சித்தான் சேந்தன். அவனின் வாய் போதையினால் நாற்றமடித்தது.
“சத்தத்துக்குள்ளை நீங்கள் கதைக்கிறது ஒண்டுமாக் கேக்கேல்லை. வாருங்கோ வெளியிலை
போய் நிண்டு கதைப்பம்.” இருவரும் ஆடுபவர்கள் மத்தியிலிருந்து விலகி வெளியே வந்தார்கள்.
“நீங்கள் பாடசாலையை விட்டவுடனேயே மறி பண்ணிட்டியள் என்ன? சின்ன வயசிலை பெண்பிள்ளையளைக்
கலியாணம் செய்து குடுக்கிறவையைச் செருப்பாலை அடிக்க வேணும்.”
சேந்தனின் வார்த்தைகள் மஞ்சுவை நெருப்பாகச் சுட்டன.
“உங்களுக்கு இப்ப எத்தினை பிள்ளையள்? ஹன்பண்ட் இப்பவும் வேலை செய்கின்றாரா அல்லது
ரிட்டையர் ஆகிட்டாரா?”
மஞ்சுவைக் கதைப்பதற்கு சேந்தன் விடவில்லை. அவளுக்கும் பேசுவதற்கு ஒன்றும் வரவில்லை.
சேலைத் தலைப்பால் முகத்தை ஒருதடவை துடைத்துக் கொண்டாள். சற்றுத் தூரத்தில் நின்ற நந்தனைச்
சத்தம் போட்டுக் கூப்பிட்டாள்.
“நந்தன்… நான் வீட்டுக்குப் போகவேண்டும்.”
மஞ்சு நந்தனைக் கூப்பிட்டதும், சேந்தன் மீண்டும் ஆடுவதற்காக உள்ளே போய்விட்டான்.
ஏதோ விருப்பத்தகாத செயல் நடந்துவிட்டது என்பதை நந்தன் புரிந்து கொண்டான்.
“சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்.”
“இல்லை நந்தன். நான் உடனை போகவேணும்.”
மஞ்சுவை வெளியே கூட்டிச் சென்ற நந்தன், அங்கு நின்ற கார்களில் ஒன்றை மஞ்சு வீட்டிற்குப்
போவதற்காக ஒழுங்கு செய்தான். காருக்குச் சமீபமாகக் குந்தியிருந்த ஒருவர் சாப்பாடு ஒவ்வாமை
காரணமாக வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். ஒன்றுகூடலுக்கு வந்திருந்த அவரை மஞ்சுவால்
அடையாளம் காண முடியவில்லை. ஒத்துவராத சாப்பாட்டை உடல் உதறித் தள்ளுகின்றது. ஒவ்வாதவற்றை
உடம்பு மாத்திரமா வெளியேற்றும், மனமும் தான் துரத்தும். மஞ்சு காரின் பின்புறம் ஏறிக்
கொண்டாள்.
கார் வளாகத்தை விட்டு வெளியே புறப்படுகின்றது. சந்தியின் அருகே அமைந்திருக்கும்
சிற்றுண்டிச்சாலையில் நாலைந்துபேர்கள் இருந்து உணவருத்திக் கொண்டிருந்தார்கள். கார்
கிழக்குப்புற பிரதானவீதி வழியே வேகமெடுத்தது.
மஞ்சுவுக்கு சேந்தன் பள்ளிக்கூடத்தில் இருந்த இளமைத்தோற்றமே இன்றும் மனதில்
நிலைகொண்டிருந்தது. செருப்பில்லாமல் கசங்கிய ஆடைகளுடன் சஞ்சரித்த அவன் முகமே அவளுக்கு
என்றும் பிடித்திருந்தது. இன்று அது எப்படியெல்லாமோ காலவோட்டத்தில் மாறிப் போய்விட்டது. வாழ்க்கை என்ற பயணத்தில், காலம் சில நினைவுகளைத் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றது. அதைச் சுமப்பதும் சுமக்காமல் விடுவதும் அவரவரைப்
பொறுத்தது.
`என்னுடைய கணவர் என்னுடன் வாழ்ந்த காலங்கள் சொற்பம் தான். ஆனா என்னை மிகவும்
அன்பாக நேசித்தார்.’
`சேந்தன் இத்தனை காலங்களில் ஒரு தடவையேனும் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லையே!
என்னைப் பற்றி ஒன்றுமே அவனுக்குத் தெரிந்திருக்கவில்லையே!’
மஞ்சு அமைதியாக, கார்க் கண்ணாடிக்குள்ளால் இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தூரத்தே சுடலைக்குள் பிரேதம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது.
ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது எது? பணமா, கல்வியா? அதற்கும் மேலாக ஏதோவொன்று
இருப்பதாகவே மஞ்சுவுக்குத் தோன்றியது.
“அம்மாவுக்கு சேந்தன் ஐயாவைத் தெரியுங்களா? அவர் தான் இந்தக் காரை ஒரு மாதத்துக்கு
வாடகைக்கு எடுத்திருக்கிறார்.” மஞ்சுவின் மெளன நிலைகண்ட சாரதி அவளிடம் பேச்சுக் குடுத்தான்.
“ஓ… அப்ப அவர் மனிசி பிள்ளையளோடை வந்திருக்கிறார் போல?”
“ஒமோம். ஒரு பையன், ஒரு பொண்ணு. அம்மா அக்கவுண்டனா வேலை பாக்கிறாவாம். நாட்டைச்
சுத்திப் பாத்து என்யொய் பண்ணப் போயினம்.”
கார்ச்சாரதியின் கதையைக் கேட்ட மஞ்சுவிற்கு எரிச்சலாக இருந்தது.
“தம்பி… காரை நிப்பாட்டுங்கோ… நான் இதிலையே இறங்கிக் கொள்ளுறன். வீடு பக்கத்திலைதான்”
பதட்டத்துடன் சொன்னாள் மஞ்சு.
சாரதி காரை ஓரங்கட்டிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரே வெளி, இருட்டு.
அருகே குடிமனைகள் இருப்பதாகத் தெரியவில்லை.
“அம்மா… நாயள் வேறை குலைக்குது. வீடு வரைக்கும் கொண்டு வந்து விடுகின்றேனே!”
சொல்லியபடியே பின் இருக்கையைத் திரும்பிப் பார்த்தான். காருக்குள் மஞ்சு இருக்கவில்லை.
தூரத்தே இருட்டுக்குள் ஒரு உருவம் போவது அவனுக்குத் தெரிந்தது.
•
No comments:
Post a Comment