விக்னேஸ்வரன் குழுவினர் புதுடில்லியில்

 December 1, 2023

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன் தலைமையில் – புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் அரசியல்வாதிகள் அடங்கிய குழுவினர் புதுடில்லியில் சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஓர் அரச மட்ட சந்திப்பு அல்ல – மாறாக, புதுடில்லியில் உள்ள அரசியல் அவதானிகள், புத்திஜீவிகளுடனான சந்திப்பாகவே தெரிகின்றது.
இவ்வாறான சந்திப்புகள் முக்கியமானவை.
ஏனெனில், இந்தியாவின் தலையீட்டை ஈழத் தமிழர் கோரும் விடயம் பரவலான இந்திய அவதானத்தைப் பெற வேண்டும்.
ஆனால், இவ்வாறான சந்திப்புகளின் எவ்வாறான விடயத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் இருக்க வேண்டியது அவசியம்.
விக்னேஸ்வரன் சில விடயங்களை தெளிவாக முன்வைத்திருக்கிறார் என்றே தெரிகின்றது. அதாவது, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவான – அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்னும் விடயம் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த ஆண்டு ஆறு தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன.
யுத்தம் முடிவுற்றதன் பின்னரான பத்து ஆண்டுகளில் இந்தியாவின் தலையீட்டை தமிழ்த் தேசிய கட்சிகள் வெளிப்படையாகக் கோரிய முதல் சந்தர்ப்பமாக அது அமைந்தது.
ஆனால், அந்த நகர்வை தமிழ் கட்சிகள் முறையாக முன்னெடுக்கவில்லை.
அடுத்து மூன்று கடிதங்களை அனுப்பி முதல் கடிதத்தின் கனதியை பெறுமதியிழக்கச் செய்தன.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மக்கள் முறைப்பாட்டுக்கான வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் இந்தியாவின் தலையீட்டை கோரி கடிதமொன்றை அனுப்பியிருந்தது.
சிவில் சமூகமொன்று இந்தியாவின் தலையீட்டை வெளிப்படையாகக் கோரிய முதல் சந்தர்ப்பமாக அது அமைந்திருந்தது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவான 13ஆவது திருத்தச் சட்டத்தை தொடாமல் இந்தியாவின் உதவியை கோருவது புத்திசாதுர்யமான அணுகுமுறையல்ல.
ஆனால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி), ஆறு தமிழ் கட்சிகளின் முயற்சியை பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
தாங்கள் அவ்வாறான கடிதமொன்றை அனுப்பினால் தமிழரசு கட்சி குழப்பமடையும் என்றே முன்னணி எதிர்பார்த்தது.
அவர்களின் நோக்கம் வெற்றியும் பெற்றது.
கஜேந்திரகுமார் தரப்பின் இலக்கு ஒன்று தான்.
13ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பது – அதன் மூலம் இந்தியாவின் தலையீட்டை பலவீனப்படுத்துவது.
ஆனால் தற்போது, விக்னேஸ்வரன் தலைமையில் புலம்பெயர் பிரதிநிதிகளும் இணைந்து இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் கோரிக்கையை புதுடில்லி ஊடக சந்திப்பில் தெரிவித்திருப்பது இந்தியாவின் தலையீட்டைக் கோரும் தமிழ்
கட்சிகளின் நகர்வில் அடுத்த கட்டமாகவே நோக்க வேண்டும்.
உண்மையில், இதனை யுத்தம் முடிவுற்றதன் பின்னர் சம்பந்தன் முன்னெடுத்திருக்க வேண்டும்.
ஆனால், சம்பந்தன் இந்தியாவை நோக்கிச் செல்வதைத் திட்டமிட்டு தவிர்த்தே வந்தார்.
மிலிந்த மொறகொட இந்தியாவுக்கான தூதுவராக பெயர் அறவிக்கப்பட்ட பின்னர், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒரு மூலோபாய ஆவணமொன்றை கையளித்திருந்தார்.
சிக்கலுக்கு உள்ளாகியுள்ள இந்திய – இலங்கை உறவை கட்டியெழுப்புவதுதான் அந்த அறிக்கையின் அடிப்படை.
அந்த அறிக்கையில் ஈழத் தமிழ் மக்களின் பிரச்னை தொடர்பில் இந்தியாவின் கரிசனைகள் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டிருந்தன.
மொறகொடவை பொறுத்தவரையில் இலங்கையின் அரசியல் விவகாரம் ஓர் உள்நாட்டு பிரச்னை.
அதில் இந்தியாவின் தலையீடு தேவையற்றது.
மொறகொட 13ஆவது திருத்தம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல என்னும் கருத்தையும் பொதுவெளியில் தெரிவித்திருந்தார்.
கோட்டாபயவால் நியமிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்புக்கான ஆலோசனை குழுவின் பரிந்துரையின் அடிப்படையும் 13ஆவது திருத்தம் தேவையற்றது என்பதுதான்.
அத்துடன், மாகாண சபை முறைமையும் தேவையற்றது.
சம்பந்தனும் இலங்கையின் உள்விவகாரத்தை கொழும்புடன் பேசுவதன் மூலம் மட்டுமே வெற்றிகொள்ள முடியுமென்னும் அடிப்படையிலேயே செயல்பட்டார்.
இலங்கையின் பிரச்னையை உள்நாட்டுக்குள் தீர்த்துக் கொள்ள முடியாமல் போனமையின் விளைவாகவே இந்தியாவின் தலையீடு நிகழ்ந்தது என்பதுதான் வரலாறு.
இந்த வரலாற்று உண்மையை மறந்து ஈழத்தமிழர்களால் முன்னோக்கி பயணிக்க முடியாது.   நன்றி ஈழநாடு 



No comments: